அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம் உவமை நயம்

உவமை நயம்

பகுதி: 4

பகுதி: 1 2 3 4

நமது குறிக்கோளும் நாம் திரட்டும் வலிவும்!
தேங்காயை தேவாலயத்துக்கு எடுத்துச் சென்று உடைத்து அர்ச்சனை செய்யச் சொல்லி, ஒரு மூடியை அச்சகருக்குக் கொடுத்துவிட்டு, இன்னொரு மூடியை வீட்டுக்குக் கொண்டுசெல்பவர்களும் உண்டு.

இன்னும் சிலர் வீடடு விசேடத்தின்போது திருஷ்டி கழிப்பதாகக் கூறி, நடுவீதியில் - சூறைக்காய் உடைப்பதுபோல - உடைப்பார்கள். அதைப் பொறுக்கச் செல்பவர்களில் சாமர்த்தியம் உள்ளவனுக்கு நல்ல தேங்காய் கிடைக்கும்; மற்றவர்களுக்கு வெறும் ஓடுதான் கிடைக்கும்.

இன்னொரு விதமும் உண்டு - தேங்காயைத் தாய்மார்களிடம் கொடுத்தால் அதை உடைத்துப் பதமாகத் திருகி எந்தப் பண்டத்தில் சேர்த்தால் இனிப்போடு சுவை தரும் என்பதறிந்து பக்குவமாகச் சேர்த்துப் படைப்பார்கள்.

கட்சிகளும் அப்படித்தான்; பயன் படுத்துகிற விதத்தையொட்டித்தான் பலனும் இருக்கும்.

மூன்றாவது சொன்னேனே, அந்த விதத்தைச் சேர்ந்ததுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.

சில கட்சிகள், தங்களுக்கிருக்கும் செல்வாக்கை சூறைக்காய் உடைக்கிறதைப்போல பயன்படுத்தி வருகின்றன. உடைக்கும்போது சிலருக்கு மண்டைகளும் உடைகின்றன; சாமர்த்தியமுள்ளவனுக்கு தேங்காய் கிடைக்கிறது; நோஞ்சலாயுள்ளவன் ஓட்டை எடுத்துக்கொண்டு போகிறான்.
திராவிட முன்னேற்றக் கழகம், தன் செல்வாக்கை அவ்வப்போழுது பலப்பரீட்சை நடத்தாமல், பலாத்காரத்தில் இறங்காமல், ஒருவரோடு இன்னொருவர் மோதிக் கொள்ள உதவாமல் பயன்படுத்தவேண்டும்.

வலிமையை எந்தப் பெரிய நோக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டுமோ அதற்குப் பயன்படுத்தவேண்டும். தி.மு.கழகம் தன் வலிமையைக் கண்ணுங்கருத்துமாகப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். சமயம் வரும்போது இதை பயன்படுத்துக்கொள்ளத் தவறமாட்டோம். ஆனால் சூறைக்காயாகவும் ஆக்கிவிடமாட்டோம்.

மாசெனத் தூற்றியோர் மனம் மாறிவிட்டனர்!
நமக்கு மிகமிக சகிப்புத் தன்மை வேண்டும்; வளர்ந்திருக்கின்ற சக்தியைக் கட்டிக்காக்கத் திறமை பெற்றாகவேண்டும்.

காங்கிரஸ்காரர்கள் நம் பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமலே நம்மைத் தாக்கிப் பேசினால், அவர்கள்மீது கோபம் வருவதைவிட, என்னைப்பற்றி நானே வெட்கப்படுவேன் - எவ்வளவு பன்னிப்பன்னிச் சொல்லிவும், எவ்வளவு ஆதாரங்களை - விளக்கங்களை அழகாக எடுத்துரைத்தும், அவர்கள் புரிந்துகொள்ளும் அளவுக்கு நாம் சொல்ல முடியவில்லையே; அதனால்தான் அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கருதுகிறேன்.

என்னை ஒரு கொட்டடியிலும், ஈழத்தடிகளை ஒரு கொட்டடியிலும், அருணகிரி அடிகளை ஒரு கொட்டடியிலும், பெரியாரை பெல்லாரி சிறையிலும் அடைத்து வைத்திருந்தபோது, கனவாவது கண்டிருப்போமா - இதே ஆச்சாரியார் இப்படி இந்தியை நம்முடன் சேர்ந்து எதிர்ப்பார் - என்று? அல்லது அவர்தான் எண்ணியிருப்பாரா? மும்முனைப் போராட்டத்தின் போது இதே ஆச்சாரியார்தான், ஈ, எறும்புபோல இவர்களை நசுக்கி விடுவேன் என்று கூறினார். இவர்கள் இயக்கத்தைப் பழங்கதையில் சேருமாறு செய்துவிடுவேன் என்றார். அப்படிப் பேசியவர்தான் அண்மையில் மைலாப்பூரில் ஒரு கூட்டதில் பேசுகையில் 1990 வரை இந்தித் திணிப்பை ஒத்தி வைக்கவேண்டும் என்னும் சுப்பராயனின் கோரிக்கையை பிய்த்தெறிந்து இருக்கிறார். அவருடைய பேச்சு முழுவதையும் நீங்கள் பத்திரிகையில் படித்திருக்க முடிந்திருக்காது. நான், நண்பர் ஒருவர் மூலம் அவரது அந்தப் பேச்சை டேப்ரிகார்டு செய்துவரச் செய்து கேட்டேன். அவர் பேச்சில், இந்தித் திணிப்பை ஒத்திவைக்கவேண்டும் என்று சுப்பராயன் போன்றவர்கள் சொல்லுவது முறையல்ல உதாரணமாக, ஒரு கிழவி, என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று ஒரு வாலிபனிடம் வந்து கேட்டார், இப்பொழுது வேண்டாம், இன்னும் 10 ஆண்டு கழித்துப் பார்த்துக்கொள்ளலாம் என்று வாலிபன் பதில் கூறுவதுபோல இருக்கிறது இந்தக் கோரிக்கை! என்ற பேசியிருக்கிறார்.

இந்த அளவு வந்த அவர் வசிஷ்டர் வாயால், பிரம்மரிஷி பட்டம் விசுவாமித்திரனுக்கு கிடைத்தது போல, ஆச்சாரியார் வாயால், இந்தி இப்பொழுதுமட்டுமல்ல, எப்போதுமே வேண்டாம். அது உத்தியோக மொழியானால், தமிழர் உருபடவே முடியாது, என்று பேசுவார் என யார் எதிர்பார்த்தார்கள்?

நமக்கும் அவருக்கம் அதிக உறவு கிடையாது, ஒரே ஒரு நாள் அவரைச் சந்தித்தேன். அவ்வளவுதான், நான் சந்தித்ததும், பெரியார்கூட ஏதேதோ சந்தேகப்பட்டார். புராணத்திலே ரிஷிபிண்டம் இராத் தங்காது என்பார்களே, அதைப்போல, நானும் அவரும் சந்தித்த உடனே அவர், இந்தி கூடாது என்ற பேசுகிறார். காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது என்பார்களே, அதைப் போல நடந்துவிட்டது.

1,000 பேரைச் சிறையில் தள்ளியவர் ஏன் மாறினார்? கிறித்துவக் கல்லூரியில் அவர் பேசுகையில், மனிதன் தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளக் கூட உரிமை இல்லையா? என்று கேட்கிறார். அதே முறையில்தான், இன்று யார் யார் சுயநலத்துக்காக நம் கருத்தை ஐயப்பாட்டுடன் - அச்சத்துடன் கவினிக்கிறார்களோ, அவர்களெல்லாம் நம்முடன் நெருங்கிவரப் போகிறார்கள். அதற்கு நம்மிடம் கட்டுப்பாட்டு உணர்ச்சிவேண்டும்.

விசித்திரங்களில் ஒன்று!
பொதுவாழ்வில் ஈடுபட்டவர்கள் நடிக்கவும், நடிகர்கள் பொதுவாழ்வில் ஈடுபடவுமான சூழ்நிலை உண்டாகிவிட்டது, இதற்குக் காரணம் நான்தான். நாடகத்தின் மூலமாகத்தான் முன்னேற்றத்தைக் காணமுடியும் நாட்டில் என்பதால்தான் இதைச் செய்யவேண்டியதாயிற்று.

வேகமாக ஓடித் தேவைப்படும் இடத்தில் கொண்டு போய்விடும் குதிரைக்குக் கொடுக்கப்படும் கூலியை இதுவரையில் வண்டிக்காரனே வாங்கி அனுபவித்தான். தனக்குத் தேவையானதைத் தேடிக்கொண்டான் என்பது மட்டுமல்ல, குதிரைக்காக வாங்கப்படும் கொள்ளையும் அவனே சமைத்துச் சாப்பிட்டுவிட்டான். பரிதாபத்துக்குரிய குதிரைகள் பகுத்தறிவற்ற ஜந்துக்களாக இருப்பதால் அவை இளைத்து நோஞ்சான்களான போதும் எதிர்த்துக் கேட்க முடியவில்லை. ஆனால் இதே நிகழ்ச்சி ஒரு அரசியல் கட்சியிலும் நிகழ்ந்தால்? மிருகங்களால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனல் மனிதர்களால், அதுவும் மானமுள்ளவர்களால் எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்? அந்த ஏமாளிகள் பணங் கிடைக்கவில்லை என்று ஏங்கவில்லை - நினைத்தால் ஆயிரக்கணக்கில் தாங்கள் காலடியில் கொண்டுவந்து கொட்டச் செய்யும் சமர்த்தும் சாமர்த்தியமும் அவர்களுக்கு உண்டு. புகழ், பெருமை, முகஸ்துதி இவற்றில் பங்கில்லையே என்று கலங்கவில்லை - இவையெல்லாம் எதிர்பார்ப்பதற்கு மேலாகவே நாட்டிலே கிடைத்தது. ஆனால் அவர்கள் உழைப்பு ஒத்துக்கொள்ளப்படவில்லை - வாழ்வைப் பலியிட்டு வதைப்பட்டவர்கள் மேல் நம்பிக்கை உண்டாகவில்லை. எப்படியோ முளைத்து, எதற்காகவோ சேர்ந்து வாழ்ந்து ஜீவன்கள்மேல் ஏற்பட்ட நம்பிக்கைகூட இந்த இரக்ங்கத்தக்க தியாகிகள் மேல் ஏற்படவில்லை. அவர்கள் உழைததார்கள் வாழமுடியாதவர்களாக! பொறுக்கமுடியாத நிலைவந்ததும் உதறித் தள்ளிவிட்டு வெளியேறினர்.

சினிமாத் துறையில் சேர்ந்து பணத்தைக் குவித்துக் கொள்ளுகிறார்கள் - பளப்பளப்பான வாழ்வு நடத்துகிறார்கள் - பவுடர் மோகினிகளோடு சேர்ந்து சுற்றுகிறார்கள்.

கருத்து வேறுபட்டால், எதிர்க்க வேறு காரணம் இல்லாமல் கதறிக் கொண்டிருக்கும் கள்றாவி உருவங்களைப் பற்றியல்ல நான் குறிப்பிடுவது. கையாலாகாதவர்கள் குலைக்கத்தான் செய்வார்கள்! ஆனால், கருத்தும் கொள்கையும் குறிக்கோளும் ஒத்திருநதும், உயருகிறார்களே என்ற பொறாமையால் உளறிக்கொட்டும் உதவாக்கரைகளைப்பற்றியே குறிப்பிடுகிறேன்.

இத்தகையோர் இன்னம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள், பணம், பத்திரிகை, பக்தர்கள் பலத்தால் விழியிலே பழுதிருப்பது வேறு - விழிகளே இல்லாதிருப்பது வேறு.

 

பகுதி: 1 2 3 4

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம் உவமை நயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai