அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம் உவமை நயம்

உவமை நயம்

பகுதி: 1

பகுதி: 1 2 3 4

» சமுதாயத்தில் ஆயரிமாயிரம் ஆண்டுளாக உருக்கி ஊற்றப்பட்டிருக்கும் பழக்க வழக்கம் சமூகத்தை ஒரு சறுக்கு மரமாக்கிவிட்டடது. அதில் தம்மிற்டப்படிச் செல்ல விரும்பிச் சருக்கி விழுந்து சாய்ந்தவர் கோடி, கோடி. (கபோதிபுரக் காதல் - 1939)

» உறியடி உற்சவத்திலே, கம்பத்தில் களிமண்ணும் எண்ணெயும் கலந்து பூசிவிட்டு, உயரத்திலே சிறு பண மூட்டையை எடுத்துக் கொள்ளச் சிலரை அமர்த்துவார்கள். களிமண்ணும், எண்ணெயும் கலந்த கம்பத்திலே, சான் ஏரினால் முழம் சறுக்கும். அது மட்டுமா? ஏறிக்கொண்டிருக்கையில், சிலர் கீழே இருந்து, கம்பத்தின் மீதும், ஏறுபவர் மீதும் தண்ணீரை வாரி வாரி இறைப்பர். அது ஒரு விளையாட்டு, பகவான் பெயரால் நடப்பது. அது போல நெசவாளரை வியாபாரம் எனும் சறுக்கு கம்பமேறி அதன் மேல் கட்டப்பட்டுள்ள வருவாய் எனும் பண முடிப்பை எடுத்துக் கொள்ளச் சொல்வதுடன் உறியடி ஏறுபவன் மீது நீர் இறைப்பது போல, நெசவாளர்களின் மீது தசரதன் தயவும் பொழியப்பட்டு நெசவாளர்களின் வாழ்க்கை உறியடி ஏறுபவன் படும் வேதனையை விட அதிகம் நிறம்பியதாக இருக்கிறது. (சரோஜா ஆறணா, சிறுகதை- 25.04.1943 - திராவிட நாடு இதழ்)

பெண்
ஒரு குடும்பத்தின் மணிகணிலே ஒன்று மாணிக்கமாக்கப்பட்டு மற்றொன்று மண்ணாங்கட்டியாக்கப்படுகிறது. சொத்து சுதந்திரம் ஆணுக்கு. சமையற்கட்டில் வேகவும், சயனசிரகத்தில் சாயவும் பெண்.
( புலித்தோல் போர்வை 04.04.1943)

பழமை புதுமை
பழமை புதுமை என்ற இரு சக்திகளுக்கும் போர் நடக்கிறது. எழுத்தாளர்களின் பேனா முனைகளே அப்போரில் உபயோகமாகும் கருவிகள். (எழுத்தாளர் மாநாடு 26.11.1944)

எழுத்தாளர்கள்
எழுதுவது குழந்தை பிறப்பது போல்! கருவுறுவது போன்றது எண்ணம்! கருவுக்கு ஆண் - பெண் இருத்தல் போல எண்ணமும் பிறக்க காலமும் நோக்கமும் கூடவேண்டும். பிறகே எழுத்து! எழுத்தாளர் என்றால் இந்த இலட்சிய புருசனாக இருக்க வேண்டும்! (எழுத்தாளர் மாநாடு, திராவிட நாடு - 26,11,1944)

சட்டம்
சட்டம் ஓர் இருட்டறை! அதில் வக்கீலின் வாதம் ஓர் விளக்கு! அந்த விளக்கு ஏழைகளுக்கு கிடைப்பதில்லை! (வேலைக்காரி - நாடகம் - 1945)

பெண்
நிலவுக்கென்று தனி ஒளி இல்லை அதுபோலவே பெண்களுக்கென்று தனி வாழ்வில்லை அண்ணன், தம்பி, அப்பா, கணவன், மகன், பேரன் என்று இப்படித்தான் இரவல் வெளிச்சத்தில் வாழவேண்டியிருக்கிறது!
(ரங்கோன் ராதா - புதினம் - 1945)

ஆணிடம் சிக்கியப் பெண்
பல்லியிடம் சிக்கிக் கொண்ட பூச்சியப் பார்த்திருக்கிறேன். உடலில் ஒரு பாகம் பல்லியின் வாயில் சிக்கிவிடும். பூச்சிக்கு அது தெரிந்துவிடும். மரணத்தின் பிடியில் இருப்பதுதான் தெரியுமே தவிர அதிலிருந்து மீண்டு கொள்ளும் வலிவு இராது. அந்த நிலையில் தன்னால் தப்பித்துக் கொள்ள முடியுமா? அதற்கு தகுந்த சக்தி இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எண்ணிக் கொண்டிருக்க முடியும்? எப்படியாவது வாயின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக துடிக்கும், நெளியும். தலையை தூக்கும் பல்லியன் வாயிலிருந்து வெளிப்படுவதற்காக தன்பலத்தை முழுவதும் உபயோகித்துப் பார்க்கும். உவ்வொரு துடிப்பும் பூச்சியின் வலிமையை நாசமாக்கவும், உயிரை போக்கவும் பயன்படுமே ஒழிய விடுதலைக்கு வழியாக முடியாது, பல்லிக்குபூச்சியைக் கொல்லும் வேலையும் மிச்சமாகும். தன் பிடியை இறுக்கிக் கொண்டு பல்லி அசைவு அற்று இருக்க வேண்டியதுதான். பூச்சி போராடுவதாக கருதிக் கொண்டு சுவரிலே மோதுண்டு தானகச் சாகும். பிறகு பல்லி அதனைத் தின்றுவிடும். அது போன்ற நிலையில் நான் இருந்தேன். (சங்கோன் ராதாவில் - 1945)

பெண்
வெங்காயம் காய்கறிகளுடன் சேர்க்க சுவையான்ன பயன் தரும் உணவாகிறது. வெங்காயத்தை நறுக்கும் போதோ நம் கண்களிலிருந்து நீரைக் கொண்டு வருகிறது. எரிக்கிறது. பெண்ணும் அப்படித்தான்! அன்புடன் நடத்தினால் இனியவளாகிறாள். சிறிது சின உணர்வை தூண்டிவிட்டாலோ எழுப்பிவிட்டாலோ ஆணை எரித்தே அழிக்கிறாள். ஆண் அழுதுதான் தீர வேண்டும். ( ரங்கோன் ராதா - 1945)

நிழல் படம்
யாரோ ஒருவன் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். வெய்யில் அவன் முகத்தில் பட்டது. அதைக் கண்டு ஒரு நகப்பாம்பு படமெடுத்து அவன் பக்கத்திலே வெயில் படாதபடி குடைபிடித்தது என்று சொல்வார்களே அதைப்போல் இருந்தது தங்கம் எனக்கு உபகாரம் செய்தது. (ரங்கம்-தங்கம், அக்காள்-தங்கை, தங்கம்-சக்களத்தி) (ரங்கோன் ராதா - புதினம் - 1944)

கரி, தரும் பயிற்சி
கரி, தன் குட்டிக்கு வீரமும், திறமும் வருவதற்காக, துதிக்கையால் குட்டியை இழுத்தும் தள்ளியும், தட்டியும், கொட்டியும் பயிற்சி தரும் என்கிறார்கள். தி.மு.கழகத்திற்கு அத்தகைய பயிற்சியைத்தந்திருக்கிறது. திராவிடர் கழகம் பயிற்சி போதவில்லையோ என்று ஒருவேளை எண்ணிக்கொண்டு மறுபடியும் பயிற்சி தரமுன்வரக்கூடும். (வாழ்க வசவாளர்கள் - திராவிடநாடு - 02.12.1951)

» பாலு பாசூரத்தால் அம்மாவை வென்றான். பார்வையாலும் பண்ணாலும் என் விதவைத்தனத்தை கொன்றான். பாலுவின் போர்முறைக்கும் என் கணவரின் தம்பி கையாண்ட முறைக்கும் எவ்வளவோ வித்யாசம்! பாலிலே மோர்த்துளி தெளித்தான் பாலு! அவர் பால் செம்பை கீழே உருட்ட வரும் பூனை போன்றவர்! பூனையை விரட்டிவிட்டேன். மோர்த்துளி தெளிக்கப்பட்டதை கண்டுகொள்ள முடியவில்லை.
(தசாவதாரம் - புதினம் - 1945)

» பணக்காரன் குளம் குட்டைக்குச் சமமானவன். முதலாளி ஊற்றுக்கு சமமானவன். மழை பெய்தால்தான் குளம் குட்டைகளில் நீர் இருக்கும். இன்றேல் வறண்டு விடும். ஆனால் ஊற்றோ என்றும் நீர் சுரந்துகொண்டே இருக்கும் இத்தகைய பேதம் இருக்கிறது பணக்காரனுக்கும், முதலாளிக்கும்.
(பணத்தோட்டம் - 1946)

» இன்றைய சமுதாயம் வழுக்கு நிலம் போன்றது. வழக்கு நிலத்திலே ஒருவன் எத்துணைக் காலம் விழிப்போடு நடக்க முடியும்? கனத்த காற்றடித்தால் அவன் வழுக்கி விழுவது திண்ணம். ஆகவே அவன் வழுக்கு நிலத்தை செம்மை படுத்துவதுதான் மனத்திற்குகந்த மார்க்கம். அதுதான் என்றும் வழுக்கி விழாதிருக்கும் வழி (நல்ல தீர்ப்பு - பொழிவு - 1945)

மூர்த்தி: அமிர்தம், நீ குடத்தைத் தூக்கிகிட்டு வளைந்து வளைந்து நடப்பாயே, அது மாதிரி வளைந்து வளைந்து பேசுரே!
அமிர்தம்: பாரத்தை சுமக்க முடியாமல்தான் அப்படி நடக்கிறேன். அதே போல நெஞ்சிலும் பாரம் இருந்தால் நாக்கு வளையத்தானே செய்யும்? (வேலைக்காரி நாடகம் - 1946)

» அளவுக்கு மீறி தண்ணீர் வந்தால் ஆற்றிலிருந்து, வாய்க்காலில் திருப்பிவிட்டு வெள்ளத்தின் வேகத்தை குறைக்கிறோமல்லவா? உள்ள உணர்ச்சியும் அப்படித்தான். அடக்கி வைத்திருக்க வைத்திருக்க எங்கெங்கோ பாயும், மேயும். கட்டுக்கு கொண்டு வந்து, பக்கம் பார்த்து திருப்பி, கொதிப்பேறாதபடி குறைத்து முறைப்படுத்தினால் மோதுதலும், தாக்குதலும் குறையும். இது நிகழும் போது தெரிவதில்லை.
(சாது - சிறுகதை - 16.11.1947, திராவிடநாடு - கிழமை இதழ்)

புத்தறிவு
ரயிலேறி ராமேசுவரம் போவதும் ரோட்டரிவிஷினில் ரமணர் நூல் அச்சாவதும் ரேடியோவில் சங்கராச்சாரி பேசுவதும் காமிரா கொண்டு கருட சேவையை படம் பிடிப்பதும் டெலிபோன் மூலம் தெப்ப உற்சவ நேரத்தை விசாரிப்பதும் இவை போன்றவை இங்கு நித்ய நிகழ்ச்சிகள் அல்லவா? இது சரியா? பல்துலக்கப் பயன்படும் பசை பாத்திரம் துலக்க பயன்படுத்தனால், கல் உடைக்கும் கருவியைக் கொண்டு கனியைத் தாக்கினால், புலி வேட்டைக்குறிய துப்பாகியைக் கொண்டு எலியைக் கொல்லக் கிளம்பினால் என்ன எண்ணுவர்? என்ன கூறுவர்? அது போல புத்தறிவு தரும் சாதனங்களைக் கொண்டு பழைய வாழ்க்கையை நடத்த முற்படுபவர்களைப் பற்றி என்ன எண்ணுவது? என்ன கூறுவது?
(ரயிலேறி - திராவிட நாடு - 21.12.1947)

நிலைமை
நாடாள்பவர் எது பேசினாலும் தாங்கிக் கொள்ள வேண்டி ஏற்படுகிறது. பூங்காவில் அமர்ந்திருக்கும்போது புள்ளினம் எச்சமிட அது சட்டையில் வீழ்ந்து கெடுக்கிறது. என்ன செய்ய முடிகிறது! எழுந்து செல்கிறோம் வேறு இடந் தேடி. எச்சமிட்டு நம்மை வேறிடம் செல்ல செய்ததால் அந்த புள்ளினம் நம்மை விரட்டிய வீராதி வீரன் என்ற விருது பெறவா தகுதி அடைகிறது? (ஆணை பிறந்தது 26.06.1960)

தூற்றல்
மலத்தில் இருந்து எருகிடைக்கிறது அந்த எருவிட்டால் மணங்கமழும் பூஞ்செடி மலருகிறது. உள்ளத்தை மலமாக்கிக் கொண்டவர்கள் தூற்றலை நம்மீது தூக்கி எரிகிறார்கள் அந்த தூற்றல் எரு நமக்கு வெற்றி என்ற மல்லிகையைத் தரும்.

பண்பாளன்
எருமைகன் சேற்றில் புரளும் அதனைக் கண்டும் ஆறறிவினர் அருவியில்தான் நீராடுகின்றனர். கழுகு அழுகிய பிணத்தை கொத்தித்தின்கிறது. கிளி கொவ்வை கனியைதான் விரும்புகிறது. புளித்த காடியை பருகுவான் குடிகாரன். செவ்விளநீர் தேடுகிறான் பண்பாளன். எவர் எத்தகைய மொழி பேசிடினும் தம்பி நீ கானம் பாடிடும் வானம்பாடியாகவே இருந்திடல் வேண்டும். (17.07.66)

» உழுது நீர் பாய்ச்சி, களை எடுக்கா முன்னை பச்சைப் பயிர் பார்க்க முடியுமா? சென்னெல் தேட இயலுமா? நாம் எங்கே, நம் நாட்டு களைகளைப் போக்கினோம்! இல்லையே!! அதோ தீண்டாமை - கள்ளி, இதோ வைதீக காளான்! அங்கே சனாதனச் சேறு! அதிலே நெளிகிறது பழமைப் புழு! மாயாவாத மடுவிலே, வேதாந்த முதலைகள்! நாடு இந்த காரணத்தால், நாம் கொண்டாடும் திருநாள் முழு விழாக்கோலத்துடன் இல்லை! புன்னகையும், பெருமூச்சும் மாறிமாறி தோன்றும் நிலைதான்!
(பொங்குக இன்பம் - 14.01.1948, திராவிட நாடு - கிழமை இதழ்)

வாலிபம்
வாலிபர்கள் உரிமைப் போர்படையில் ஈட்டி முனைகள். அவர்தம் உள்ளத்தில் புரட்சிப் புயல் இருக்கும். பகுத்தறிவு பகலவனின் ஒளிப்பட்டு விஷப் பூச்சிகள் போன்ற சுய நல கருத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கும். பழமையின் பிடியிலிருந்து மக்களைப் பக்குவமாக விடுவித்து புதுமையின் சோபிதத்தைக் காட்டி புத்துலகு அமைக்கவேண்டும். புத்தலக சிறிபிகள் ஆக வேண்டும் வாலிபர்கள்.
(வானொலி பொழிவு - 1948, இன்றைய வாலிபர் தேவை)

மனிதன்
வாழ்வு அளிக்கும் நிதி களங்கமற்ற நல்ல பெயர், கண்ணியம்தானே ஒழிய வேறல்ல. இவை இல்லாவிடில் மனிதன் வர்ணம் பூசிய களிமண்தான் (வெள்ளி முளைத்தது - 25.09.1949)

» பெண் என்றாலே காய்ச்சிய இரும்பு என்று எண்ணிக்கொள்கிறார்கள். தங்கள் விருப்பம் போல அடித்து, வடித்துக் கொள்ளலாம் என்று எண்ணிவிடுகிறார்கள்!
(புதிய நாயனார் - சிறுகதை - 1950, திராவிட நாடு கிழமை இதழ்.)

பகுதி: 1 2 3 4

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம் உவமை நயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai