அண்ணா களஞ்சியம்


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்


மொழி
பகுதி:
1

பகுதி: 1 2

 

» தமிழ் நாட்டைப் போல் வேறு எந்த நாட்டிலும் அந்த நாட்டின் மொழியல்லாத வேறு மொழியிற் சங்கீதம் பாடுவதைக் கேட்கமுடியாது. ஒவ்வொருவரும் தங்கள், தங்கள் தாய் மொழியிலேயே எல்லா கலைகளையும் வளர்ச்சி செய்து வருகின்றனர். இல்லாத கலைகளையும் புதிதாக ஆக்கி வருகின்றனர். தமிழரைப் போல, தாய் மொழிக் கலை உணர்ச்சியற்றவர்களை எந்த நாட்டிலும் காண முடியாது.
(தமிழரின் மறுமலர்ச்சி - 03.11.1940)

தமிழ் மொழிக்கு ஏற்றம் தருவோம்
எல்லா இடங்களிலும் தமிழ் ஏற்றம் பெறுகிறது என்பது, நமக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு என்பதையே காட்டுகிறது. தமிழ் மக்களுடைய எதிர்காலம் ஒளிமயமானது. ஒளி தரத்தக்க வாழ்க்கையைத்தான் நாம் அமைப்போம்! மக்கள் அகத்திலும் புறத்திலும் ஒளிமயமான வாழ்வு உருவாகும்! நம்முடைய ஊணோடும் உயிரோடும் இரண்டறக் கலந்துவிட்ட தமிழ் மொழிக்கு உரிய ஏற்றத்தைத் தருவோம்.

எழுத்தாளர்கள்
எழுதுவது குழந்தை பிறப்பதுபோல்! கருவுறுவது போன்றது எண்ணம்! கருவுக்கு ஆண் பெண் இருத்தல் போல எண்ணமும் பிறக்க காலமும் நோக்கமும் கூட வேண்டும். பிறகே எழுத்து! எழுத்தாளர் என்றால் இலட்சியப் புருஷனாக இருக்கவேண்டும்.
(எழுத்தாளர் மாநாடு - கட்டுரை - 26.11.1944)

» தமிழ் எவ்வளவு சிறப்பான மொழி என்பதை தமிழனிடத்திலேயே, தமிழன் எடுத்துச் சொல்லவேண்டி நேரிட்டிருப்பதை அவமானத்தின் அறிகுறி என்றே நான் கருதுகிறேன். (கடிதம் - 03.07.1960)

» இலக்கியங்கள் ஏடுகள், மக்களின் மார்கெட்டிலே மலிந்து நடமாடவேண்டுமானால் இலக்கியம் கோபுர உச்சியிலிருந்து, குப்பை மேட்டுக்கு வரத் தயாராக இருக்கவேண்டும். கற்றோரும், மற்றோரும், பண்டிதரும், பாமரரும், பணக்காரனும், ஏழையும், படித்துணரும் பாங்கிலே, எளிய நடையிலே, இயல்பான இயற்கைக் கருத்தைக் கூறும், கருத்தைக் கவின்பெறச் செய்யும் கருத்துக்கள் நிரம்பியும் அமைய வேண்டும். ஆனால் நம் நாட்டு இலக்கியச் கர்த்தாக்கள் செய்துள்ள இலக்கியச் சேவை இதற்கு நேர் மாறானது. அதனை பண்டிதரும் பகுத்தறிய முடியாத பண்புடனே சமைத்துள்ளனர். சிற்றறிவினர் சிந்தனையில் சிந்திக்கவும் கூடாத சிறப்புற்று விளங்குகின்றன இந்நாட்டு ஏடுகள்.
(நாடும் ஏடும் - மொழி - 1945)

பேச்சு
பேச்சு கருத்தின் தொகுப்பு. கருத்து சிந்தனையின் விளைவு. சிந்தனை காண்பன - கேட்பவற்றிலே தொடர்ந்து ஏற்படும் ஆர்வம். ஒரே பொருள் காண்போர்க்கு வெவ்வேறு கருத்தைத் தூண்டி அதற்கேற்ற முறையில் பேச்சு பிறக்கச் செய்யும்.
வேப்பிலை வைத்தியர், பூசாரி என்னும் இருவருக்கும் வேறு வேறான எண்ணம் தருவது போல்.
(பொழிவு - 1948)

» எந்த மொழியும் ஏற்றம் பெற்று வாழவேண்டுமானால், மக்களின் மதிப்பைப் பெற்று வாழவேண்டுமானால், அம்மொழி அரசாங்க அலுவல் மொழியாகவும் அமைதல் வேண்டும் என்பது அரிச்சுவடி! தமிழ் இவ்வளவு வளம் பெற்றதாகத் திகழ்வதற்குக் காரணம், முன்னாளில் முடியுடை மூவேந்தர்களும் தமிழையே துரைத்தன மொழியாகக் கொண்டிருந்ததனர். அதனால் புலவர் கூடிடும் மன்னறங்களிலும் பூவையர் ஆடிடும் பூம்பொழில்களிலும், போர்களத்திலும், உழவர் மனையிலும், தமிழே முதலிடம் பெற்றிருந்தது. யவனத்துக்கும், பிற நாட்டுக்கும், தமிழர்கள் வாணிபம் செய்யச் சென்றனராமே, கலங்களில், அந்தக் கலங்களிலே தமிழ் பேசியன்றோ சென்றனர். அந்தத் தமிழுக்கு ஆட்சி மொழியாளரின் மொழி என்கின்ற உரிமை நிலை இருந்ததால்தான் உயர்நிலை கிடைத்தது. ஊராள்வோருக்கு உரிய மொழி வேறு, மக்களுக்குள்ள மொழி வேறு என்ற நிலை இருப்பின் எம்மொழிச் சிறக்கும் - எம்மொழி உயரும்?
(இந்தியும் தமிழ் மகனும் - கட்டுரை - 21.05.1950)

ஆனால் . . . ஆகவே
ஆனால் என்ற சொல் இழுப்பு, வழுக்கல், திகைப்பு, தினறல், அச்சம், தயை, தாட்சண்யம் போன்ற மனப் போக்கின் விளைவாக முளைப்பதாகும்.

ஆகவே எனும் சொல் உறுதிப்பாடு, செயல்படுதிறன், எழுச்சி, முயற்சி போன்ற போக்கிலே மலர்வதை உணரலாம்.
(ஆனால் ஆகவே - கடிதம் - 17.09.1956)

அகம் - புறம்
அகம் என்பது உணர்ந்து மகிழ்வது! புறம் என்பது பகிர்ந்து மகிழ்வது! (அகமும் புறமும் - கடிதம் - 14.01.1966)

» நமக்குக் கிடைத்திருக்கின்ற தாய் மொழி பிற மொழிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கின்ற நேரத்தில் பிற மொழியாளர்களெல்லாம் பார்த்து, இவ்வளவு எழிலுள்ள மொழியா உங்களுடையது? இவ்வளவு ஏற்றம் படைத்த இலக்கியமா உங்களிடத்தில் உள்ளது? இவ்வளவு சிறந்த இலக்கணத்தையா நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்? ஈராயிரம் ஆண்டு காலமாகவா இந்த மொழி சிதையாமல், சீர்குலையாமல் இருந்து வருகிறது? என்று ஆவலுடன் சிலரும் ஆயாசத்துடன் பலரும், பொறாமையோடு சிலரும், பொச்சரிபாலே பலரும், கேட்கத்தக்க நல்ல நிலையிலே தமிழ் மொழிக்ககாக போராடுவதற்காக தமிழர் மன்றத்திலே தமிழன் பேசவில்லை - ஆனால் தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே, பிற மொழியை நுழைக்கின்ற பேதமை, தமிழ் மொழி இருக்கின்ற நேரத்திலே பிற மொழியை ஆதிக்க மொழியாக்குகின்ற அக்ரமம் இவைகளைக் கண்டித்து, அந்த அக்கிரமத்தை நீக்குவதற்கு வழி என்ன என்று உங்களை கேட்க இந்த மாநாடு கூட்டப்பட்டிருக்கிறது.
(இந்தி எதிர்ப்பு மாநாடு - திருவண்ணாமலை - 1957)

» ஒரு விளைவு மறு வினைக்குத் துவக்கம். மகிழ்ச்சி வினையின் இறுதி முடிவல்ல! வினைப்பயன் புதிய வினைக்கு அழைப்பு! புதிர் அல்ல! புண்யம் பேசிடுவோர் கூறிடும் தத்துவமும் இஃதல்ல! பொருள் பதிந்த உண்மை! தமிழருக்கு இது புதிதுமன்று!
(இல்லம் இன்பப் பூங்கா - கடிதம் - 14.01.1961)

» தமிழ் ஆட்சி மொழியாகவேண்டுமென்று கூறினால் சிக்கல் வருமென்கிறார்கள். தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும்! நீதிபதி அவர்கள் வழக்கு மன்னறத்தில் தமிழிலேயே தீர்ப்பு எழுதி படிக்க வேண்டும். அந்த நாளை நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

. . . ஒரு திங்களுக்கு முன் துரைத்தனத்தார் கூட்டத்தில் பேரூர்தி நிலையம் என்று ஒருவர் பேசும்போது கூறினார். உடனே காங்கிரஸ்காரர் ஓர் உறுப்பினர் எழுந்திருந்து பேரூர்த்தி நிலையம் என்பது - இது என்ன தமிழா? இது யாருடைய வாயில் நுழையும் என்று கூறினார். நான் பேசுகிறபோது குறிப்பிட்டேன். இது நுழைகின்ற வாய் நிறைய இருக்கின்றன. முத்துச்சிதரல்
இந்திய மொழிகளில் இந்தி மட்டுமே ஆட்சி மொழி என்ற தகுதியை பெறுமேயானால், இந்தியாவின் ஒற்றுமை மிக விரைவில் சீர்குலையும்.

» தமிழ் மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாகும்வரை, எனக்கு உண்மையாக திருப்தியே கிடையாது.

» இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது - இந்தியை தாய்மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும் இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது.

» மொழி உணர்வுக்கு மதிப்பு அளிக்கப்படுவது உண்மையாயின், ஒரு மொழி எத்தனை சதவிகிதத்தினரால் பேசப்படுகிறது என்ற ஆராய்ச்சியே அநாவசியமானது.

» முதலாளித்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்க இன்னொன்றும் செய்யலாம். தனிப்பட்ட எவரும் நான் படித்த காலத்தில் தீபஸ்தம்பம் என்று சொல்லுகிறபோது, அதிலே எத்தனை கம்பீரம் இருந்தது. அதைச் சொல்லிப்பார்ப்பதிலே ஒரு மகிழ்ச்சி இருந்தது. தன் மகனிடத்திலே தீபஸ்தம்பம் என்றால் என்னப்பா அது என்கிறான்! லைட்ஹவுஸ் பெயர் தீபஸ்தம்பம் என்றால் அவன் சிரித்து கலங்கரை விளக்கமா என்று கூறுகிறான். தீபஸ்தம்பம் என்றால் அவனுக்குப் புரியவில்லை. கலங்கரைவிளக்கம் என்றால்தான் புரிகிறது. இது நான் கற்றுக்கொடுத்ததல்ல - காலம் கற்றுக்கொடுத்தது. இது எப்படி ஏற்பட்டது? இதுதான் மறுமலர்ச்சி வாயிலாக ஏற்பட்ட மொழி உணர்ச்சி!

» இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடுவதை நாம் பார்க்க முடியும். தமிழில்தானே வாதாடினாள் கண்ணகி. அவள் கூறிய வாதங்கள் ஆங்கில மொழியால் அல்ல. வேறு எந்த மொழியாலும் அளிக்க முடியாது. அரசர்கள் ஆணைகளை தமிழில்தானே செய்தார்கள். நாம் புதிதாக எதையும் செய்யவேண்டியதில்லை. இழந்ததைப் பெற்றால் போதும்.

» தமிழ் இலக்கியங்களிலே, வௌவால் மனப்பான்மை என்று ஒன்றை குறிப்பிடுகிறார். மாமரத்திலே தலைகீழாய் தொங்கிக் கொண்டிருக்கும். வௌவால், புளியம்பழத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்குமாம். அதுபோல அது வரை நாம் மாமரத்தில் தொங்கிக்கொண்டு புளியம்பழத்தை நினைத்துக் கொண்டிருந்தோம். இப்பொழுதுதான் நாம் தொங்கிக்கொண்டிருப்பது மாமரம் என்பதை உணர்ந்து மாம்பழத்தை நினைக்க ஆரம்பித்திருக்கிறோம். வௌவால் மனப்பான்மையிலிருந்து விலகி கிளி மனப்பான்மைக்கு வந்திருக்கிறோம். எதையும் கொத்திப்பார்த்து சுவையை அறிவோம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். முழுச்சுவையையும் உணரும் மனப்பான்மை நம்மிடம் வளர்ந்துவருகிறது.

வாழ்க தமிழர்கள் வளமெல்லாம் பெற்று!
வாழ்க தமிழர்கள் வையகம் வாழ்ந்திட!
வாழ்க தமிழ் அறம் தாரணி தழைத்திட!
வாழ்க தமிழ் மொழி இனிமை பொங்கிட!

» நாட்டின் ஒற்றுமைகக்காக உன்மொழி, உன் மரபு அழிந்திடலாம். பிற மொழியின் ஆதிக்கத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது அறிவுள்ள எவரும் ஏற்க முடியாதது. தன்மானமுள்ள எவரும் எதிர்த்தாக வேண்டியது. இதனை இலட்கியமென்றோ திட்டமென்றோ கூறுவது இலட்சியம் என்பதற்கே களங்கம் தேடுவதாக முடியும்.

» இசை இன்பம் தரவேண்டுமென்றால், அது கேட்போரின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ள வேண்டுமானால், யார் முன்னால் பாடல் பாடப்படுகிறதோ, அதை அவர்கள் புரிந்து கொள்ளக் கூடியதான மொழியில் இருக்கவேண்டும். இது அறிவுத் துறையின் அரிச்சுவடி!

» முக்கனி, கனி வகைகயில் சிறந்து விளங்குகின்றன. மொழிகளில் சிறந்து விளங்ககிறது முத்தமிழ்.


இலக்கியம் மனிதனது அறிவை வளர்க்கிறது!
மனிதனுக்குத் தெளிவை ஏற்படுத்துகிறது!
நன்மைத் தீமைகளை எடுத்துக்காட்டுகிறது!
மனிதனது சிந்தனையைக் கிளறிவிடுகிறது!

» மொழி வழியேதான், எத்தகைய கருத்துக்களும் முதலில் பரவுகின்றன.

» மக்களிடையே எத்தகைய மனமாற்றமும், எண்ணத் தெளிவும், கருத்துக்களும் பரவிட, எளிதில் பரவிட, மொழி முதற்கருவியாக விளங்குகிறது.

» தமிழ்மொழி காக்கப்படுவதனைப் பொறுத்தே தமிழரில், பல்வேறு கட்சியினருக்கும் தத்தமது கொள்கை வெற்றிபெற, இன்றில்லவிட்டால் ஒரு நாள் வாய்ப்பு கிடைக்க முடியும் என்பதிலே உள்ள அழுத்தமான நம்பிக்கையே ஆகும்.

» உலகின் எந்தக் கோடியில் தமிழன் இருந்தாலும், இங்குள்ள தமிழ் உணர்சியுடனும், எழுச்சியுடனும் இருக்கின்றான். அந்தத் தமிழ் உணர்ச்சியை யார் முயற்சி செய்தாலும், எவ்வளவு உயரத்தில் இருப்பவர்கள். முயற்சி செய்தாலும், எவ்வளவு வலி பெற்றவர்கள் முயற்சி செய்தாலும், தமிழ் உணர்ச்சி அழியாதது அழியவும் விடமாட்டோம்.

» எரிபொருள் ஆக்கத்தக்க தருக்களே யாவும். ஆனால் நறுமணம் தரவல்லது சந்தனம் ஒன்றே ஆகும். அதேப் போல் பயன்தர மொழிகள் பல உண்டு. மணம் பெறத் தமிழே வேண்டும் என்கிறோம்.

» தமிழ் மொழிக்கு பாட்டு மொழி என்ற அடைமொழி உண்டு; தமிழ் இசைக்கு ஏற்ற மொழி.

» பயிற்று மொழி, பாட மொழி, ஆட்சிமொழி, இணைப்பு மொழி என்ற சொற்றொடர்கள் வேகமாக உலவிடக் காண்கிறோம். தாய் மொழித் தகுதிக்கு ஈடாக வேறு எந்தத் தகுதியையும் ஒருவர் பெற்றிடத் தேவையில்லை.

» தமிழ் இசை பக்திக்கு மட்டுமன்றி, தமிழர் பண்பாடு, வரலாறு, மாவீரர் காதை, வரலாற்றுச் சம்பவம் உலக நிகழ்ச்சிகள், புதிய உண்மைகள், எழுச்சி ஆகியவற்றை ஊட்டவேண்டும்.

» வேரிலே கொதி நீர் ஊற்றும் காதகர்கள் இருக்கும் போது, இதழின் அழகு பற்றிப் பேசி மகிழ்வது பலன் தராது! எனவே தமிழ் மொழிக்கு, தமிழ் பண்பாட்டுக்கு ஆபத்து என்பதை அஞ்சாது எடுத்துரைக்க முன் வருதல் வேண்டும்.

» தமிழில் என்ன இருக்கிறது என்று சிலர் கேட்கக் கூடும். ஒன்றை மட்டும் எடுத்துக்காட்டாகச் சொல்ல விரும்புகிறேன். ஜாதி என்ற சொல்லே தமிழிலில்லை. அதன் முதல் எழுத்தான ஜ தமிழ் எழுத்தில்லை. சாதியை ஏற்றுக் கொண்டது போலவே ஜவை, ஏற்றுக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

» தமிழ் உணர்வு உள்ளத்தில் இருந்தால் கவிதை கட்டாயம் வரும்.

» கவிதையின் அளவு கோல் என்னைப் பொறுத்தவரை உணர்ச்சிதான்.

» ஒலி கெட்டும், ஒளிமங்கியும் இருத்தல் மட்டுமல்ல; மொழியே கீழ்நிலைக்கு தாழ்நிலைக்குத் தள்ளப்பட்டுக் கிடக்கிறது.

» செந்தமிழ் செம்மை பெற அறிவாற்றல் என்னும் சூல் முதிரும் நல்முத்துக்களை உருவாக்கிட வேண்டும். இவ்வாற்றல் கூட்டு முயற்சியினால் மிகுந்த சிறப்பெய்தும். இருள் நீங்கி ஒளி காண்போம்.

» ஓசைநயத்தில் இயல்பாகவே அமைந்து பொருள் செறிந்து பொலிவு தருபவையே தேவை. பொருளும் பொலிவும் வலிந்தகன்று கொண்டு வருவன மொழிக்கு நாமே நம்மையும் அறியாமல் செய்துவிடும் தீங்காகும்.

» மக்கள் என்று சொல்லாமல், மகாஜனங்கள் என்று சொல்வதால் என்ன குற்றம் ஏற்பட்டுவிட்டது என்று கேட்கிறார்கள். குற்றம் ஏதும் வந்துவிடவில்லை. தமிழர்கள் தமிழை மறந்துவிட்டனர் என்கின்ற பழியைப் பிற்காலம் நம் மீது சுமத்தும் அவ்வளவுதான்.

» தமிழ், தமிழ்ப்பேச்சு, தமிழ் எழுத்து, தமிழ்ப்புலவர், தமிழ்ப் புத்தகங்கள் என்றால் ஏதோ வேறு வழியற்றவன், விதியற்றவன் தமிழைக் கட்டியழுகிறான் என்றிருந்த காலம் மாறி, இன்று தமிழன், தமிழ் மொழி, தமிழினம், தமிழகம், தமிழ்த் திருநாடு என்றெல்லாம் பேசப்படும் நிலை, தமிழினம், தமிழைப் போற்றிடும் நிலை, தன்மானம் கொண்டுள்ள நிலை, உண்டாகித்தானே இருக்கிறது. (09.02.1952)

» ஆற்றொழுக்கு நடையில் சொற்செறிவும் பொதிந்து கிடக்கும் தீந்தமிழை பிறமொழி கலக்கி நாசப்படுத்தும் கனவான்களே விலகிப்போங்கள்.

» தமிழரின் மறுமலர்ச்சியே தமிழில் ஏன் பிறமொழி கலக்கவேண்டும் என்று கேட்கச் சொல்லிற்று.

» இயல், இசை, கூத்து, தமிழின் முப்பிரிவுகள், தமிழின் தனிச் சிறப்பை, தனிப்பண்பை, உணர்த்திடும் பிரிவுகள். முத்தமிழ், முக்கனிகள். மா, பலா, வாழை என்ற முக்கனி போன்றவை, இயல் இசை கூத்து தமிழுக்கு. (09.02.1952)

» தமிழ்மொழி காலத்தால் மிகமிகத் தொன்மையானது இலக்கண, இலக்கிய விதிகளையும், வரைமுறைகளையும் செவ்வனே கொண்டது. தூய - தூய்மையான, துல்லியமாக எண்ணங்களை வெளிப்படுத்தும் சொல் வளம் மிக்கது.

» தமிழ் இனியது. அழகியது, ஆற்றல் மிக்கது சொற் சுவையும், பொருட்ச்சுவையும், நாகரீக நயமும் நேர்த்தியும் கொண்டது, சீரிளமைத் திறமிக்கது.

» தமிழ் மொழி இயற்றமிழ் இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற முப்பிரிவை உடையது. இவற்றுள் இசை என்பது இயற்றமிழிலும் உண்டு; நாடகத் தமிழிலும் உண்டு. தமிழே இசை வடிவில் அமைந்தது.

» தமிழ் என்றால் தமிழ் மக்கள். தமிழ் மக்கள் அனைவரையும் குறிக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுபவர்கள் தமிழ்ப் பகைவர்கள்; தமிழ்க்கலை விரோதிகள்; தமிழரின் எதிரிகள்.

» இலக்கிய வளமிக்க மொழி - நமது தமிழ்மொழி! இதில் ஒரு சிறிதும் ஐயங்கொள்ளத் தேவையில்லை.

» நம் தாய் மொழியாம் தமிழ் ஒரு உயர் தனிச்செம்மொழி. இது உலகில் வேறு எந்த இனத்துக்காவது தாய்மொழியாக இருந்திருந்தால், இத்தனைக் காலத்துக்குள், அது உலகப் பொது மொழியாக ஆகியிருக்கும்.

» மரத்தில் இருந்து எடுப்பது ரப்பர் பால். நம் மனதிலிருந்து எடுப்பது தமிழ்ப்பால். ரப்பர் பாலை எடுக்க மரங்களை சீவிச் சிரமப்படவேண்டும். ஆனால் தமிழ்ப்பாலை எடுக்க மனதைத் தடவினால் போதும்.

» இந்தியைப் பெரும்பான்மையினர் பேசுவதால் அதுவே ஆட்சி மொழி என்கிறார்கள்! தேசியப் பறவையாக மயிலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்களே அது ஏன்? எங்கும் வியாபித்திருக்கும் காக்கையையல்லலா இவர்கள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்!

» தாய்மொழிப்பற்று யார் தடுத்துலும் யார் மறுத்தாலும் அடங்கி விடாது. பொங்கித்தான் வழியும், தேசியத்தைப் பேசி தாய்மொழிப்பற்றைக் குறைத்துவிட முடியாது.

 

பகுதி: 1 2

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai