அண்ணா களஞ்சியம்


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்


பெண்

¤அடக்கம் இருக்கவேண்டும் (பெண்களுக்கு). ஆனால் அசடாக இருக்கக் கூடாது. புத்தி இருக்கவேண்டும், ஆனால் போக்கிரித்தனம் இருக்கக் கூடாது. அழகு இருக்க வேண்டும். ஆனால் ஆளை மயக்கும் நோக்கம் இருக்கக் கூடாது. படிப்பு இருக்கவேண்டும். ஆனால் படாடோபம் இருக்கக் கூடாது. சகஜமாகப் பழகவேண்டும். ஆனால் சந்து பொந்து திரியும் சுபாவம் கூடாது.
(ரங்கோன் ராதா - புதினம் - 1942)

¤ அழகு ஓர் ஆபத்தான ஆயுதம்! ஆனால் பெண்களுக்குச் சரியான சமத்துவமும், சுதந்திரமும், பண்பும், வசதியும் கிடைக்கும் வரை அவர்கள் இந்த ஒரே ஆயுதத்தை உபயோகித்தே தீரவேண்டியவர்கள் ஆகிறார்கள். அந்த நிர்பந்தம் நீங்கிய பிறகுதான், அழகு ஆயுதமாகவோ ஆபத்தாகவோ இராமல், இன்பக்காட்சியாக, இருதய கீதமாக இருக்க முடியும்.
(ரோமாபுரி ராணிகள் லீலா வினோதம் - 22.03.1942)

¤ ஒரே குடும்பத்தின் மணிகளிலே ஒன்று மாணிக்கமாக்கப்பட்டு, மற்றொன்று மண்ணாங்கட்டியாக்கப்படுகிறது. சொத்து சுதந்திரம் ஆணுக்கு! சமையலறையில் வேகவும் சயனக்கிரகத்தில் சாயவும் பெண்!
(புலித்தோல் போர்வை - கட்டுரை - 04.04.1943)

ரங்கோன் ராதா
நிலவுக்கென்று தனி ஒளியில்லை. அதுபோல நமக்கென்று தனி வாழிவில்லை. அண்ணன் அப்பா, புருடன், மகன், பேரன் என்று இப்படித்தானே இரவல் வெளிச்சத்தில் வாழ வேண்டியிருக்கிறது. ஆடவர்களிடமிருந்து நம் வாழ்வுக்கு ஒளி தேடுகிறாம். எனவே அவர் இஷ்டப்படி எந்தெந்த சமயத்தில் எந்தெந்த அளவுக்கு வெளிச்சம் தருகிறார்களோ, அந்த அளவுக்குத்தான் நாம் பிரகாசிக்க முடியும்.

¤ ஒரு பெண்ணின் விபசாரம் சாத்தியமானது ஒரு ஆணினால்தானே?

¤ கற்பின் மீது கவலை பிறக்கும்படி ஆடவர் யாவருக்குமே அறிவு இன்ஜெக்சன் கொடுக்கவேண்டும்.

¤ ஆண்களின் கல் மனத்தினால், அவதிக்காளான அபலைகளைக்கொண்டு நீதி வழங்கச் சொன்னால், நாணயஸ்தர், கண்ணியமானவர், தர்மவான் என்றெல்லாம் புகழப்படுபவர்கள், கடுந் தண்டனை பெறவேண்டி நேரிடும். என்ன செய்வது, ஆண்களிடமே நீதி வழங்கும் உரிமை விடப்பட்டிருக்கிறது. குற்றவாளிக்கே நீதிபதி உத்யோகம்.
(1943)

ஆணிடம் சிக்கியப் பெண்
பல்லியிடம் சிக்கிக் கொண்ட பூச்சியைப் பார்த்திருக்கிறேன். உடலில் ஒரு பாகம் பல்லியின் வாயில் சிக்கிவிடும். பூச்சிக்கு அது தெரிந்துவிடும். மரணத்தின் பிடியில் இருப்பதுதான் தெரியுமே தவிர அதிலிருந்து மீண்டு கொள்ளும் வலிவு இராது. அந்த நிலையில் தன்னால் தப்பித்துக் கொள்ள முடியுமா? அதற்கு தகுந்த சக்தி இருக்கிறதா இல்லையா என்பது பற்றி எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? எப்படியாவது வாயின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக துடிக்கும், நெளியும். தலையை தூக்கும் பல்லியின் வாயிலிருந்து வெளிப்படுவதற்காக தன்பலத்தை முழுவதும் உபயோகித்துப் பார்க்கும். ஒவ்வொரு துடிப்பும் பூச்சியின் வலிமையை நாசமாக்கவும், உயிரை போக்கவும் பயன்படுமே ஒழிய விடுதலைக்கு வழியாக முடியாது, பல்லிக்கு பூச்சியைக் கொல்லும் வேலையும் மிச்சமாகும். தன் பிடியை இறுக்கிக் கொண்டு பல்லி அசைவற்று இருக்க வேண்டியதுதான். பூச்சி போராடுவதாக கருதிக் கொண்டு சுவரிலே மோதுண்டு தானாகச் சாகும். பிறகு பல்லி அதனைத் தின்றுவிடும். அது போன்ற நிலையில் நான் இருந்தேன்.
( ரங்கோன் ராதாவில் - 1945)

¤ திருமணத்துக்கு வேறொருவரின் தரகும், வர்ணணையும், ஏற்பாடும் நடப்பதே தமிழ்நாட்டில் வழக்கமாகிவிட்டது. மணமக்கள் அதற்குமுன் ஒருவரையொருவர் சந்தித்திருக்கமாட்டார்கள். சந்திப்பதே அழகல்ல என்பதே சமுதாயத்தில் இன்றுள்ள கருத்து. யார் வீட்டுப் பெண்ணையோ யார் வீட்டுப் பிள்ளைக்கோ, யாரோ இடையில் இருந்து, எதை எதையோ கவனித்து, ஏற்பாடு செய்து எரி ஓம்பி, எவரும் அறியா மந்திரத்தை, யாரோ ஒரு பார்ப்பனர் ஓதிக்கொண்டே இலையிலே என்னென்ன பண்டம் இருக்கிறது என்பதிலும் இடுப்பிலே எவ்வளவு தட்சிணை ஏறிற்று என்பதிலும் கவனத்தைச் செலுத்த, கொட்டு முழக்குடன் கூடி திருமணத்தை முடித்துவிடுகிறார்கள். பின்னர் (திரு) அழகும் இருப்பதில்லை (மணம்) நல் வாடையும் இருப்பதில்லை, பெரும்பாலான குடும்பங்களிலே! புகுத்தப்பட்ட இடத்தில் புதைந்து! என்று முடிகிற நேரந்தவிர, இருக்கும் உயிரும் உடலுமென வீணையும் நாதமுமென விளக்கும் ஒளியுமென வாழ்வதாகக் கூறுவதற்கில்லை. மனப்பொருத்தம், உடல் பொருத்தம், நிலமை பொருத்தம் போக கவனிக்கப்படாமல் நடத்தப்படும் திருமணம் கடைசீ வரையில் சிறைதானே!
(கட்டுரை - சிங்காரச்சிறை - 28.12.1947)

¤ கள்ளன் எந்த வீடும் நுழைவான் காமுகன் கதியற்ற கன்னிமாடமாகப் பார்த்து நுழைவான். பெண்களால் அவ்விதமான ஆண்களின் சுபாவத்தை தெரிந்துகொள்ள முடியும்.

¤ அழகு ஒரு ஆபத்தான ஆயுதம், அதனால் ஆசைப்படுபவர்கள் ஆண்கள், ஆள்பவர்கள் பெண்கள்.

¤ கணவனை இழந்த காரிகைதான் என்றாலும், கணவன் இறந்தான் என்று அழுது புலம்பாமல் இன்னும் சிறிது காலம் பிழைத்திருக்கலாம், மறுவாழ்வு வாழலாம் என்று நினையாமல் நீதிக்குப் போராடிய பத்தினித் தெய்வம் கண்ணகி

¤ தங்களுக்கு வரப்போகும் கணவன் அழகாக இருக்கவேண்டும். அதோடு அன்புடையவனாக நடந்துகொள்ளவேண்டும். நல்ல குணவானாக பண்புள்ளம் படைத்தவனாக விளங்கவேண்டும். குடும்பத்தில் அக்கரையுடையவனாகத் திகழவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்




முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai