அண்ணா களஞ்சியம்


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்


பொதுவாழ்வு
பகுதி: 1

பகுதி: 1 2

» கடும் விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டோர், காரிருட்சிறையில் ஆயுட்காலம் முழவதும் தள்ளப்பட்டோர், கல்லால் அடித்துத் துரத்தப்பட்டோர், சிலுவையில் அறையப்பட்டோர், சிறுத்தைக்கு இறையாக்கப்பட்டோர், கழுத்து நெறிக்கப்பட்டோர், கனலில் தள்ளப்பட்டோர், கண்டதுண்டமாக்கப்பட்டோர், நாட்டு மக்களாலேயே துரத்தி அடிக்கப்பட்டோர், நாதியற்றுப்போனோர் என்று இவ்விதமாகத்தான் இருக்கும், சமூகப் புரட்சிப் பணியிலே ஈடுபட்டவர்களின் வாழ்க்கை வரலாறுகள். அவர்களெல்லாம் இன்று அறிஞர் உலகின் அணிமணிகளாயினர், நம்மையும் பின் சந்ததி மறவாது. (மரண சாசணம் - 26.05.1946)

» பொது வாழ்பு ஒரு கட்டுக் கோப்புக்குள்ளே மட்டும்தான் இருக்க முடியும் என்பதல்ல உண்மை. பொது வாழ்வில் இருக்கக் கூடியவர்கள், இருக்கத்திறமும் வசதியும் பெற்றவர்கள், அந்த மனப்போக்குள்ளவர்கள் அனைவரையும் கட்டுக்கோப்புக்கள் கொண்டுவந்து சேர்ப்பது, கட்டுக்கோப்புக்கும், கட்சி, கடமை - அதாவது கட்சியின் பெரும்பான்மையினரின் கடமை. பொது வாழ்விலுள்ளவர்கள் இதனை அறிந்தால், இடந்தேடும் போக்கு குறையும். இடம் போய்விடுமோ என்ற அச்சம் ஒழியும்.

» உழைப்பவனைத் தேடிப் பிடித்தால்தான் உன்னதமான கட்டுக்கோப்பு உண்டு - கிடைப்பவனைக்கொண்டு நடத்தும் போக்கு பலனளிக்காது.

» அது போலவே, பொது வாழ்வுக்கு எதேனும் ஒரு கட்டுக்கோப்பு இருந்தாகவேண்டும். எனவே இடத்தைப் பிடித்தாகவேண்டும் இடையூறு இருப்பினும் என்ற மனப்போக்கு, பொதுவாழ்வினருக்கு மாறவேண்டும். அப்போதுதான், கட்டுக்கோப்புக்குள் சென்று, பூஜா உணர்ச்சி குறைவாகவும் இருந்ததலொழிய இந்த மனப்பான்மை கட்சியிலுள்ள பெரும்பாலோருக்கு உண்டாகாது. இந்நிலை உண்டாகாவிட்டால் கட்டுக் கோப்புகள் எப்போது சரியும் என்பது தெரியாதபடி அடி, ஆடிப்போகும். சில கட்டுக்கோப்பு கடைசீ வரை இருக்கும், தஞ்சாவூர் அரண்மனைப்போல! இதனை உணருவதற்கு இன்னொரு முக்கியமான விஷயம் தெரியவேண்டும் - தெளிவாக, கட்சி ஒருகட்டுக்கோப்புதான் - ஆனால் எதன் மீது கட்டுக்கோப்பு? ஒருவரின் கைத்திறமையாக இருக்கலாம். அதற்கு வழி வகுத்தது இன்னொருவரின் சிந்தனைத் திறமையாக இருக்கலாம். ஆனால் கட்டுக்கோப்பு நிற்பது திறமையின் மீதல்ல சில அடிப்படைக் கொள்கைகளின் மீது! இதனைத் தெளிவாக்கிக்கொண்டால், கட்சி முக்கியமா, கொள்கை முக்கியமா என்று ஏற்பட்டுவிடுவதும் - இது வரையில் தெளிவாகாதது இது. தனிப்பட்ட ஒரு ஆள் எவ்வளவுதான் அறிஞராக இருந்தாலும், வீரராக இருந்தாலும், கட்சி பெரிதே தவிர, தனிப்பட்ட ஆனல்ல. கட்சிதான் எமக்கு முக்கியம். அதற்கே எமது மரியாதை. அதனால்தான் கட்சியிலே பேச்சாளராக, எழுத்தாளர்களாக இருந்தவர்களுக்கு நாங்கள் மரியாதைக் காட்டினோம். அவர்கள் கட்சியைப் புறக்கணித்தால் நாங்கள் அவர்களைப் புறக்கணித்துவிடுவோம் - எனப் பேசக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதாவது கட்சிப் பற்று தெளிவாக இருக்கிறது. இது நல்லது, ஆனால் போதாது.

» பொது வாழ்வு, பொன் காய்க்கும் இடமுமல்ல, புன்னகை பூந்தோட்டமுமல்ல! அது போலவே அது பாலைவனமுமல்ல!

» ஏற்றப்படாத விளக்கு உள்ள இடம்! அதற்கு எண்ணெய்யும் திரியும் தேடியாகவேண்டும். பக்குவமாக ஏற்றி அது படர்ந்து போகாமல் பார்த்துக்கொண்டால்தான் ஒளி கிடைக்கும்.

» ஒளி முன் நிற்கும்போது களிப்புதான் - ஆனால் அந்த ஒளியினால் மயங்காது இருக்கும் மனப்பான்மை இருந்தால் மட்டுமே, பொது வாழ்விலேயும் தூய்மை இருக்க முடியும். அதிலுள்ளவர்களுக்கு மனமுறிவூ ஏற்படாமலியங்கும், பொது வாழ்விலே அவன் மகாவீரன், என்று வேறோர் கும்பல் கூறிக்கோண்டிருப்பதை மறந்துவிட்டால், மன மயக்கம் அதிகமாகும். அதிகமானால் புகழுரையைக் கேட்டாலொழிய திருப்தி ஏற்படாது எந்தப் புகழுரையைக் கேட்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து இடம்பிடிக்கவேண்டும். பிடித்த இடத்தை இழக்காமல் இருக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். பிறகோ பொது வாழ்வில் உள்ள வெளிச்சம் இருக்கிறதே, அதனுடைய ஆதிக்க கர்த்தாக்களின் தயவுக்காகவே வாழவேண்டிய நிலை ஏற்படும்.

. . . பொது வாழ்வில் உள்ள இந்த வெளிச்சம் மயக்கமூட்டும் ஒளி, இதனால் மகிழவே கூடாது என்பதல்ல - அது முடியாத காரியம் - இதனால் மயக்கமடைந்துவிடக்கூடாது. அந்த மயக்கம் வராமலிருக்கத்தான், புகழுரை கேட்கும்போது, தூற்றுபவர் உள்ளனர் என்பதை மறவாமலிருக்கவேண்டும். அது மட்டும் போதாது. புகழ்பவர்களில் பலர் இதற்கு முன் நம்மை புகழ்ந்ததில்லை என்பதையும் இதற்குமும் அவர்களே வேறு பலரை புகழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் மறக்கக் கூடாது. அதுவும் போதாது, புகழ்பவர்களே, பிறகு இகழ்வார்கள், என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் மன மயக்கம் ஏற்படாது.
(கட்டுரை - பேபிள் வேண்டாம் - 30.03.1947)

» பொதுப் பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை பணப் பெட்டியை நிரப்பும் வழியாக உபயோகிப்பவன் மக்களால் வெறுக்கப்படுவான். அவன் எவ்வளவு அருமையான கொள்கைகைகளைக் கூறினாலும் அது செம்பாகுமே தவிர பொன்னாக மதிக்கப்படமாட்டாது.
(பொது வாழ்வு ஒரு பொன்னேடு)

பகுதி: 1 2

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai