அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம் உவமை நயம்

உவமை நயம்

பகுதி: 2

பகுதி: 1 2 3 4

ஒரு ஆடவனும் அவன் ஆருயிர் காதலியும் சரசமாடுவதை வேறோர் பெண் காண நேரிட்டால் வெட்கித் தலை குனிந்து கண்களை மூடிக்கொள்ள மாட்டாளா? அதேபோலத்தான் சந்திரன் எனும் மணாளன், அல்லிப்பூவான தன் மனையாளுடன் விளையாட ஆரம்பிக்கிறான். சந்திரன் உதித்ததும் அல்லி மலருகிறதல்லவா? காதல் விளையாட்டுதானே அது! அல்லியும் சந்திரனும் இப்படி சரசமாடுவதைக் கண்டதும் தாமரைக்கு வெட்கம், கண்களை மூடிக்கொள்ளுகிறாள். அதோ ஒரு மேகக் கூட்டம் வெண்மை நிறத்துடன், மறுவினாடி பழுப்பேறுகிறது, மெள்ள, மெள்ள அணி, பனி பூண்ட ஆரணங்கு ஜடைபாரம் தாங்காமல், இடைதுவள நடைபயிலும் அழகுடன் உலவுகிறது. உள்ளத்தைச் சிலிர்த்திடும் மென் காற்று வீசுகிறது. உடனே கருமுகில் ஆகிவிடுகிறது. சூல் கொண்ட மேகம் மழை முத்துக்களை உதிர்த்திட அவைதமை ஏற்று தாலாட்டுகின்றன, தருக்களும் செடிகொடிகளும். தம்பி ஓங்கி வளர்ந்திடும் மரங்களும், பலன் பல தரும் தருக்களும் கீழேயும்தான் காண்கிறோம். மலை மேலும் தான் உள்ளன. ஆனால் மகத்தானதோர் வித்யாசம் இருந்திடக் காண்கிறோம். கடிமணம் புரிந்தவன் காதலைச் சொரிந்தும், கன்னல் மொழியை வழங்கியும், இன்ப வாழ்வு நடத்திடுவதால் எழில் குலுங்கிடக் காட்சி தரும் ஏந்திழையின் முகத்திலே காணப்படும் விளங்கொணாததோர் தகத் தகாயம் இந்தத் தருக்களிலும் செடிகொடிகளிலும் புல் பூண்டு, உதிர்ந்து கிடக்கும் சருகுகளிலும் கூட காண்கிறேன். இங்கே நாம் எப்போதும் காணும் தருக்களிடம், கடமை தவராது கணவனின் பராமரிப்பிலே இருக்கும் பாவையரிடம் காணப்படும் பொறுப்பு தெரிகிறது. இங்கு தம்பி! கண்ணாளன் பொழிந்திடும் காதலால் காரிகை கொண்டிடும் பொலிவு தெரிகிறது. இலையில், மலரில், செடியில், கொடியில்.
(போலீஸ், போலீஸ் - திராவிட நாடு - 06.11.1955)

அழிவு
கடலிலே கொந்தளிப்பு! பேய் காற்று வீசுகிறது, பெருமரங்கள் சாய்கின்றன. வேரறுந்து; தோப்புகள் சிதறுகின்றன! பெருமழை பெய்கிறது. இருள் கப்பிக்கொள்கிறது. வயலெல்லாம் ஏரிகளாகி, ஏரிகளெல்லாம் கடலாகி, வாய்க்கால்களெல்லாம் ஆறுகளாகி, ஆறுகளெல்லாம் அழிவு தருவனவாகி எங்கும் வெள்ளக்காடாகிறது!
(உன்னால் முடிவும் - திராவிட நாடு - 11.12.1955)

வீரன்
தம்பி! காட்டிலே வேட்டையாடி, கொன்ற புலியின் தோலினைக் காட்டி மகிழ்பவனைத்தான் வீரன் என்று உலகம் ஏற்குமே தவிர, காரக் கருவாட்டைப் பக்குவமாக வைத்து பொறியில் விழச் செய்து, நான் கொன்ற எலியின் வால் காணீர் என்று கூறுபவனையா, உலகு மதிக்கும்? புலித்தோலுக்கும், எலி வாலுக்கும் உள்ள வேற்றுமை, ஒரு வீரனுக்கும் ஒரு வீணனுக்கும் உள்ள வேறுபாட்டினையன்றோ விளக்குகிறது!
(புலித்தோலும் எலி வாலும் - திராவிடநாடு - 19.02.1956)

செஞ்சிக்கோட்டை செல்பவரை எல்லாம் தேசிங்கு ராஜா என்றா கூறுவது!! இங்கே இந்தக் கோட்டையிலும் கதர் சட்டையில் இருக்கிறவர்களை எல்லாம் காங்கிரஸ்காரர் என்று கூறுவதற்கில்லை.
(ஆலிங்கனமும் அழிவும் - திராவிடநாடு - 05.05.1957)

முதல் சிறைவாசம்
நாலு மாதம் என்றார் மாஜிஸ்டிரேட்!! (இந்தி எதிர்ப்பில் அண்ணாவின் முதல் சிறைவாசம்) நாலு மாதம் என்று லேடி டாக்டர் கூறிடுவது கேட்டு மகிழும் ஆரணங்கு போலானேன்.
(சிறை அனுபவங்கள் - திராவிடநாடு - 31.07.1955)

தோல்வி
தர்மபுரியில் கழகம் தோற்றுவிட்டது என்ற உடன் மல்லிகைக் கொடியின் முளை ஒடிந்திருப்பதைக் காணும்போது மணிமாடச் சுவரிலே வெடிப்பு ஏற்பட்டுள்ளதை பார்க்கும்போது பட்டுச் சட்டையில் ஒரு சொட்டு மசி விழுந்திருப்பதைக் காணும்போது வீரன் கரத்திலே ஒரு வேட்டு வீழ்ந்திருப்பது தெரியும்போது. திருக்குறள் ஏட்டிலே மசிக்கூடு கவிழ்ந்தது காணும்போது எப்படி பதறுவார்களோ கழகத் தோல்வியைக் கேட்டு.
(இதயம் வென்றிட - 09.05.1955)

ஓட்டுரிமை
உலைக் கூடத்தான் அமைத்து தருவது வாள் ஆயின் அந்த வாள் அவன் தலை கொய்திடும் வலிவு பெறுகிறதல்லவா. மனிதன் குளம் வெட்டுகிறான். இடறி விழுந்தால் உயிரையே குடிக்கிறதல்லவா! தேன் பருகுகின்றோம் சில துளி உடலில் இருப்பின் எறும்பு மொய்த்து கடிக்கிறதல்லவா? அது போலவே தனிமனிதனின் ஓட்டுரிமையால் அமைக்கப்படும் அரசும், பயனுணர்ந்து செயலாற்றும் திறமையற்றவர்களிடம் சிக்கிவிட்டால், உயிர்காக்கவேண்டிய அரசு உயிர் கொல்லும் அரசாக நாட்டையே நடுங்கச் செய்கிறது.
(அகமும் புறமும் - 14.01.1966)

பெரிய மனிதர் - சிறிய குணம்
குற்றாலம் சென்று குழாயடியில் குளிப்பதுபோல், திருக்குளத்தில் இறங்கி பாசியை எடுத்து வருவதுபோல், சந்தனத்தை கரைத்து மாட்டுத் தொழுவத்தில் தெளிப்பதுபோல், கரும்பை கொண்டு வந்து அடுப்பெரிப்பது போல், இசைப்புலமை பெற்ற பிறகு கோட்டான் போல் கூவிட முனைவதுபோல், யானை மீது அம்பாரி அமைத்து அமர்ந்து பூனை பிடிக்க செல்வதுபோல், உடைவாளை வீசி உருளை கிழங்கை வெட்டுவதுபோல், பூந்தோட்டம் சென்று ஊமத்தும் பூ கேட்டதுபோல், கழநியை உழுதுவிட்டு கள்ளிச் செடியை நடுவதுபோல், சாமியார் ஆகிவிட்டு மாமியார் வீட்டுக்குச் சாப்பிடச் செல்வதுபோல், இளநீர் பருகிட மறுத்து கழுநீர் குடிக்க துடிப்பதுபோல், தங்கத் தாம்பாளத்தில் தவிடு கொட்டி வைப்பதுபோல் பெரும் பதவியில் அமர்ந்திருக்கும் பெருந்தலைவர் இழிமொழி பேசுவது.
(மரண அடி கொடுப்பாராம் - காஞ்சி - 25.09.1966)

சக்தி
தம்பி! தண்ணீரைத் தேக்கிவைத்து வேகமாக கீழே விழச் செய்துவிடும்போது ஏற்படும் சக்தியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கிறார்கள். கொடுமைக்கு ஆளாகும் மக்கள் வடிக்கும் கண்ணீர் வெள்ளம் ஒருநாள் மாபெரும் அழிவுச் சக்தியை பெற்றெடுக்கிறது.
(பெரிய புள்ளிகள் - 05.06.1960)

அரசியல்
ரசம் கலையாத கண்ணாடி முன் நின்று பார்த்தால்தான் முகம் சரியாகத் தெரியும். ஜனநாயகப் பண்பு கெடாத நிலை, ஆளுங்கட்சிக்கு இருந்தால் தான் எதிர்க் கட்சியின் தரம் தெரியும்.
(விழாவும் விளக்கமும - 28.04.1957)

செயல்
தென்னை தருவதுதானே என்பதால் கள் விரும்பத்தக்கதாகிவிடாது. அதுபோலத்தான் தம்பி, செயல் வீரதீரமிக்கது என்பதால் மட்டுமே பாராட்டப்படத்தக்கது, போற்றப்படத்தக்கது என்று கூறிவிடமுடியாது.
(முள்ளு முனையிலே - 17.04.1960)

வெள்ளம்
பெருமழை பெய்து தெருவெல்லாம் தண்ணீர் ஆரென ஓடுமபோது பாதையிலே இருந்த ஆபாசங்கள் அடித்துக்கொண்டு போகப்பட்டு தெரு துப்புரவாவதுபோல் நேருவின் பவனியால் ஏற்படும் உற்சாக வெள்ளம், காங்கிரசாட்சியினால் ஏற்பட்டுள்ள அல்லலை, அவதியை, அதிருப்தியை, அவலட்சணத்தை, எதிர்ப்பை எரிச்சலை ஒரே அடியாக தள்ளிக்கொண்டு போய்விடும், எங்கும் காங்கிரஸ் காட்சியின் மதிப்பும் செல்வாக்கும் ஓங்கி தழைத்திடும் என்று எண்ணிக்கொள்கிறார்கள்.
(கண்ணீரும் பன்னீரும் - 25.09.1955)

கண்ணாடி பொருத்தப்பட்ட பலகணி அருகே நண்பனை அழைத்துச்சென்று என்ன தெரிந்தது என்று கேட்டான். வெளியிலே உள்ள தோட்டம், மலர்கள், வண்டி வாகனங்கள், நடமாடுவோர் எல்லாம் தெரிகிறது. கண்ணாடி ஜன்னல்தானே தெரிவதற்கென்ன என்றான். முகம் பார்க்கும் கண்ணாடி முன் நிறுத்தி என்ன தேரிகிறதென்றான். நான் தெரிகிறேன் என்றான் நண்பன்.

நண்பா இரண்டும் கண்ணாடிகள். வெளியே உள்ளது எல்லாம் காணமுடிகிறது ஒன்றின் மூலம்! மற்றொன்றிலோ ரசம் பூசப்பட்டிருக்கிறது. ரசம் வெள்ளியில் தயாரிக்கப்படுகிறது. பார்த்தாயா ஒரு கண்ணாடியில் சிறிது வெள்ளி தடவியதும் வேறெதுவும் தெரியவில்லை. உன்னைத் தவிர! அதுபோலத்தான் உன்னிடம் பணம் குவிந்துவிட்டதால் உன்னைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை. பணம் கண்களை மறைக்கிறது!
(பெரிய புள்ளிகள் - திராவிடநாடு - 05.06.1960)

கூவம் ஏன் கெடு நாற்றம் கிளப்புகிறது என்று அறிந்தோரைக் கேட்டேன். நல்ல நீரோட்டம் இல்லாததால், சரியான முறையில் துப்புரவு செய்யப்படாததால் அடைப்புகள் ஏற்பட்டுவிட்டதால் நாற்றம் அடிக்கிறது என்கிறார்கள். பேச்சிலே கூவம் ஏற்படக் காராணம் என்ன என்பதை விளக்கவா வேண்டும்! சிந்தனை வழி அடைபட்டுப்போயிருப்பது எல்லாக் கருத்துக்களையும் அறிந்து உண்மையைக் காணவேண்டும் என்று எண்ணம்கொள்ளாமல், ஒரே இடத்தில் தமது சிந்தனையைக் கட்டிப்போட்டு வைத்து, உயிரூட்டம் இல்லாமல் செய்துவிடுவது, அலட்சியம் அகம்பாவம் போன்ற அழுக்குகள் படிந்து, அதற்குத் தேவையான தெளிவை பாழ்படுத்திவிடுவது ஆகியவைகளே, பேச்சு கூவம் ஆகிவிடக் காரணம்.
(மற்றொரு கூவம் - திராவிடநாடு - 04.09.1960)

கொல்லி மலையோ, மகன் வரவுக்காக சுவைமிகு உணவைச் சமைத்துவிட்டு சில்லிட்டுப்போகும் நிலையிலும், மகன் வீடு வராததால், காத்திருக்கும் தாய்போல் இருந்துவரக் காண்கிறேன்.
(கொல்லிமலைச் சாரலிலே - திராவிடநாடு - 23.10.1960)

பார்க்க பச்சை பசேலென்று இருக்கிறது. மலரும் கனியும் குலுங்குகிறது. சுவையும் பயனும் அளிக்கிறது, மரம். அதை காயவிட்டு விறகு ஆக்கிவிட்டால் கவர்ச்சி அடியோடு போய்விடுகிறது. பிறகு நெருப்பெரிக்க மட்டுமே பயன்படுகிறது. நெருப்பில் விறகைப் போடும்வரையில் பயம் இல்லை. விறகு நெருப்பாகிவிட்டாலோ, தொடக்கூட அச்சம், பட்டால் தொல்லை, சுட்டால் புண் ஏற்பட்டுவிடுகிறது.
பச்சையாகத்தான் இருந்தது. ஒடித்து நாசமாக்கி, உலரவிட்டு விறகாக்கி பிறகு நெருப்பாக்கிவிட்டு, தீ சுடுகிறதே பெரு நெருப்பு சூழ்ந்து கொண்டதே என்று கூறுவதில் என்ன பயன்?
பிரான்சு மக்கள் இதயம் எல்லா பண்புகளும் பூத்துக்குலுங்கும் இடமாகத்தான் இருந்தது. அந்த இதயத்தில் பண்பு வற்றிப்போகிற அளவுக்கு கொடுமை புரிந்தான். விறகாகிவிட்டது - பச்சை கொடி!
(இதயம் இரும்பானால் - 1960)

தூற்றல்
மலத்தில் இருந்து எருகிடைக்கிறது. அந்த எருவிட்டால் மணங்கமழும் பூஞ்செடி மலருகிறது உள்ளத்தை மலமாக்கிக் கொண்டவர்கள் தூற்றலை நம்மீது தூக்கி எரிகிறார்கள். அந்த தூற்றல் எரு நமக்கு வெற்றி என்ற மல்லிகையைத் தரும்.

பண்பாளன்
எருமைகள் சேற்றில் புரளும். அதனைக் கண்டும் ஆறறிவினர் அருவியில்தான் நீராடுகின்றனர். கழுகு அழுகிய பிணத்தை கொத்தித் தின்கிறது. கிளி கொவ்வை கனியைத்தான் விரும்புகிறது. புளித்த காடியை பருகுவான் குடிகாரன். செவ்விளநீர் தேடுகிறான் பண்பாளன். எவர் எத்தகைய இழி மொழி பேசிடினும் தம்பி நீ கானம் பாடிடும் வானம் பாடியாகவே இருந்திடல் வேண்டும்.
(17.07.1966)

எச்சம்
நாடாள்பவர் எது பேசினாலும் தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்படுகிறது. பூங்காவில் அமர்ந்திருக்கும்போது புள்ளினம் எச்சமிட, அது சட்டையில் வீழ்ந்து கெடுக்கிறது. என்ன செய்ய முடிகிறது! எழுந்து செல்லுகிறோம். வேறு இடம் தேடி எச்சமிட்டு நம்மை வேறிடம் செல்லச் செய்ததால் அந்தப் புள்ளினம் நம்மை விரட்டிய வீராதி வீரன் என்று விருது பெறவா, தகுதி அடைகிறது!
(ஆணை பிறந்தது - 26.06.1960)

ஊழல்
பாலை பூனை குடித்துவிட்டது என்ன செய்வது? இது தெரியாமல் குழந்தை அழுகிறதே, கொஞ்சம்கூட புத்தியில்லாமல் என்று கூறிக்கொண்டே குழந்தையை முதுகில் அறைந்து விட்டு, அது வீறிட்டு அழ ஆரம்பித்ததும், பாலை குடித்த பூனை மியாவ் மியாவ் என்று கத்துவதை காட்டி, பாப்பா அழாதே! அதோ, கேள் பூனை பாடுகிறது! அதை கேட்டுக் கொண்டே தூங்கு! கண்ணல்ல தூங்கம்மா, தூங்கு என்று தாய் பேசினால் எப்படி இருக்கும்! அப்படி இருக்கிறது ஒவ்வொரு ஊழலைப் பற்றியும், சர்க்காரை நடத்துகிறவர்கள் சமாதானம் சொல்லும் போக்கு.
(கைராட்டை காவேரி - திராவிடநாடு - 02.04.1961)

பகை உள்ளம்
பகை உள்ளம் உலைக் கூடம்போல் இருக்கும். தீப்பொறிதான் வெளிவரும்.
(குன்றின் மேலிட்ட விளக்கு - 06.08.1961)

தாயன்பு
வினை பொருள்கள் யாவும் விதையாக ஒருபோது இருந்தவை. நிலம் தன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருந்ததனை, எத்துனை பாங்காக வளரச் செய்து நமக்கு அளித்துள்ளது கவனித்தாயா? தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அதை கவரப்படாமலும், அழிக்கப்படாமலும் பாதுகாப்பு அளித்து, பிறகு முளைவிட்டபோது, வெளியே சென்றிட இடமளித்து, தான் பெற்ற குழந்தையை உலவ இடம் கொடுத்து அதே போது, பாதுகாப்புக்காக தன் ஆடையால் ஒரு குழவியை ஒரு குறிப்பிட்ட அளவு இடம் வரையில் மட்டுமே உலவிடத் தக்க விதமாக பிணைத்து வைக்கும் தாய் போல, செடியும், கொடியும், பயிரும் தன்னுள் இருந்து வெளிக்கிளம்பிட இடமளித்து, அதேபோது வேர்களை இறுகப் பிடித்துக் கொள்வதன் மூலம் நெடுவழியும் கெடுவழியும் போய்விடாதபடியும் தடுத்துவைக்கிறது.
(தேனில் தோய்த்த பழம் - திராவிடநாடு - 1962)


பகுதி: 1 2 3 4

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம் உவமை நயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai