அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்
கல்வி

பகுதி:  1  2

எழுத்தாளர்களின் வகைகள்

வரலாற்று எழுத்தாளன்
ப்யூசி பாலஸ் காலம் முதற்கொண்டு புகழ் பெற்ற குதிரையே அலெக்சாண்டர் ஏறி வந்த குதிரை! ப்யூசி பாலஸ் என்றறிந்த இவர் வரலாற்று எழுத்தாளன்.

புராண எழுத்தாளன்
குதிரையே நீ வாழி! எம்பிரானின் அருளை மாணிக்கவாசகப் பெருந்தகைக்கு அளித்த பரியே நீ வாழி! இவர் புராண எழுத்தாளன்.

பணம் பறிகொடுத்த எழுத்தாளன்
தாலியறுத்த நீலியே! குடிகெடுத்த பேயே! மூளியே. . . போ. . . போ. . . இல்லை! கிண்டி ரேசில் இவர் பணம் பறிகொடுத்த எழுத்தாளர்.

சாதாரண எழுத்தாளர்
குதிரை வேகமாக ஓடும். நாலு கால் பிராணி நான்கு கால்கள் - மயிரடர்ந்த வால் - கொம்பு இல்லை. இவர் சாதாரண எழுத்தாளர்.

சறுக்கு எழுத்தாளர்.
மோட்சமாவது நரகமாவது ஒன்றுமில்லை என்று கூறுவார். அடுத்த அடியிலேயே சறுக்கிவிடுவார் அருளே மோட்சம்! மறுளே நரகம்! இவர் சறுக்கு எழுத்தாளர்.

முறுக்கு எழுத்தாளர்!
நாம் கூறுகிறோம். அறிவாளி ஏற்கலாம். ஏனையோர் விட்டுவிடலாம்! இவர் முறுக்கு எழுத்தாளர்.

அலை எழுத்தாளர்!
அடுக்கடுக்காக நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே போவார் இவர் அலை எழுத்தாளர்.

தலை எழுத்தாளர்!
அவன் தலையெழுத்து அப்படி! விதி அவனைச் சதி செய்துவிட்டது. இவர் தலை எழுத்தாளர்.

விலை எழுத்தாளர்!
இன்னின்ன ரேட்டுக்கு இப்படி இப்படி எழுதுவது. இவர் விலை எழுத்தாளர்.
(தொகுப்பு: சி.என்.ஏ.பரிமளம்)

» சுருக்கெழுத்தாளர், பொறுக்கெழுத்தாளர், கிறுக்கெழுத்தாளர், முறுக்கெழுத்தாளர், சருக்கெழுத்தாளர், தருக்கெழுத்தாளர், நறுக்கெழுத்தாளர், உருக்கெழுத்தாளர் என்று பல ரக எழுத்தாளர்கள் உள்ளனர். சிலர் சுருக்கி எழுதிவிடுவார்கள், இவர்கள் சுருக்கெழுத்தாளர். சிலர் ஏடுகளிலே உள்ளவற்றையும் பிறர் எழுதியுள்ளதையும் படித்து பொறுக்கி எழுதுவார்கள். சிலர் கிறுகுத்தனமாக எழுதுவார்கள். நாம் கூறுகிறோம், மறுப்பவரைக் கண்டு அறிவாளர் சிரிக்க என்று எழுதுவர், முறுக்கெழுத்தாளர். சருக்கெழுத்தாளர் இருக்கின்றனரே அவர்கள் எழுத்திலிருந்து எண்ணத்தைக் கண்டுபிடிக்கச் சென்றால் படிப்பவர் சருக்கி விழுவர்.

» நாம் எழுதியிருப்பதன் உண்மையை உணர, மனப் பக்குவம் வேண்டும், அப்பக்குவம் பிறக்க நம்பிக்கைத் தேவை. நம்பிக்கையூட்ட நாதன் அருள் தேவை. நாதன் அருள் பெற பூர்வ புண்ய வாசனைத் தேவை என்று தீட்டுவார் தருக்கெழுத்தாளர். வசை மொழியின் வளத்தை காட்டுவார் நறுக்கெழுத்தாளர். பல ஏடுகளை உருக்கி ஊற்றுவார் உருக்கெழுத்தாளர்.

. . . தமிழகத்தில் தலை எழுத்தாளர் உள்ளனர். சிரிக்காதே, பரதா! நமது விதி வேறே ஒரு நல்ல வேலைக் கிடைக்காமல் எழுத்தாளனனானோமே என்ற நினைப்புள்ளவர்கள் இருக்கிறார்கள். மனதில் தோன்றியதையெல்லாம் தீட்டுவோம்; யாருக்கு எது தேவையோ அதை எடுத்துக் கொள்ளட்டும் என்று எழுதித்தள்ளும் அலை எழுத்தாளர் உண்டு. சீதையின் முகத்திலே பூர்ண சந்திரனையும், அனுமானின் வாலில் அண்டத்தின் சக்தியையும் கண்டு மக்களுக்குக் கூறும் கலை எழுத்தாளர் உள்ளனர். இன்னின்ன ரேட்டுக்கு இப்படி இப்படி எழுதித்தருவது என்ற விலை எழுத்தாளர்கள் உயிருடன் ஊசலாடுகின்றனர். சித்திர நடையாலும், சித்திரங்களாலும் படிப்போரின் சிந்தையை கவர்ந்து தமது கட்சிக்கு ஆள் பிடிக்கும் வலை எழுத்தாளர்கள் வாழ்கின்றனர். ஆனால் உண்மையை உரைப்போம், இல்லாததை உணர்ந்து இடர் விளைவித்த எழுத்தாளார்களின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்போம் என்ற கருத்துடன் உள்ள நிலை எழுத்தாளரின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.

» இந்த எழுத்தாளர்களின் தொகை, பழமையைச் சாடி, புதுமையை நாடும் எழுத்தாளர்கள், ஜாதியை ஒழித்து நீதியை நிலை நாட்டும் நோக்கமுடைய எழுத்தாளர்கள், மடமையை மாய்த்து கொடுமையை கலைத்து, சிறுமையைச் சாய்த்து, மக்களின் பெருமையை, வாழ்வின் அருமையை விளக்கும் எழுத்தாளர்கள். கோபுர அளவு குவிந்திருக்கும் பழைய குப்பையை தமது சிந்தனை எனும் சண்டமாருதத்தால் அழித்தொழிக்கும் எழுத்தாளர்கள். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அரண் அமைத்துப் பதுங்காது, எவர் எப்படிச் சொல்லியிருந்தால் எனக்கென்ன, என் கருத்து என்று எடுத்துரைக்கும் எழுத்தாளர், எண்ணிக்கையில் பெருகவேண்டும் வளம் பெறவேண்டும். அவர்களால் அநீதியை அகற்ற முடியும், அறியாமையை அழிக்க முடியும், ஆணவத்தை இடிப்பொடித்து ஈனவாழ்வை உருக்குலைத்து, ஊரார் எண்ணத்திலே புதிய முறுக்கேற்றி, ஐயம் அகற்றி ஒப்பற்ற ஓர் வெற்றியைக் காட்ட முடியும். ஆனால் அவர்கள் எண்ணத்திற்கு முதலிடமும், எழுத்திற்கு இரண்டாமிடமும் மக்களுக்கு முதலிடமும், தமது மனைக்கு இரண்டாவது இடமும் தரும் இயல்பு பெறவேண்டும். மந்தை மனப்பான்மை வயிறு நிரப்ப உதவும். புது வழி காண அது போதாது.
(எழுத்தாளர் மாநாடு 16.11.1944)

» பல புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள மட்டுமல்ல; ஏற்கனவே நமது மக்களுக்குத் தெரிந்திருக்கிற பல விஷயங்களை மறந்து போகச் செய்வதற்குப் பலப் புத்தகங்கள் தேவை. நமது மக்களுக்கு கைலாயக் காட்சிகள், வைகுந்த மகாத்மியம், வரலட்சுமி நோன்பின் மகிமை, நாரதரின் தம்புரு, நந்தியின் மிருதங்கம், சித்ராபுத்திரரின் குறிப்பேடு, நரக லோகம், அட்டைக்குழி, அரணைக்குழிகள், மோட்சத்தின் மோகனம், இந்திரச் சபையின் அலங்காரம், அங்கு ஆடிப்பாடும் மேனகையின் அழகு இவையெல்லாம் தெரியும்; ஆறுமுகம் தெரியும்; அவர் ஏறும் மயில் தெரியும், அம்மை வள்ளிக்கும், அழகி தெய்வயானைக்கும் ஏசல் நடந்தது தெரியும், நத்திதுர்க மலை எங்கே? தெரியாது என்பர், நிதி மந்திரியின் பெயர் என்ன? அறியோம் என்பார்கள். காவிரியின் பிறப்பிடம்? கவலைக் கொள்ளார். பாலாற்றில் நீர் ஏனில்லை? சொல்லத் தெரியாது. நூல் ஆலைகள் எவ்வளவு உள்ளன? கணக்கு அறியார். தாராபுரம் எந்த திசையில் இருக்கிறது? தெரியாது. தாமிரபரணி எத்தனை மைல் நீளம் ஓடுகிறது? திகைப்பர், பதிலறியாமல். அவர்கள் வாழும் மாவட்டத்தின் அளவு என்ன? தெரியாது என்பர். மாநகரத்தின் வருமானம் என்ன? அறியார்கள். அறிந்துகொள்ளவும் முயலமாட்டார்கள். அனுமந்த் பரபாவம் தெரியும், அரசமரத்தைச் சுற்றினால் என்ன பயன் கிடைக்கும் என்பதுக் கூடத் தெரியும். பேய், பில்லி, சூன்யம் பற்றியக் கதைகள் கூறத் தெரியும். அவர்கள் ஏறிச் செல்லும் ரயிலை கண்டுபிடித்தது யார் என்பது தெரியாது. அதிலேறிச் செல்லும் இடத்திலே அவர்கள் தரிசிக்கப்போகும் கருணாநந்த ஸ்வாமிகளின் கால் பட்ட தண்ணீர் கர்ம நோய்களைப் போக்கும் என்ற கதை பேசத் தெரியும்.
இது நம் மக்களின் மனவளம். இவர்களில் பெரும்பாலோர், இவர்களைக் கொண்டுள்ள நம் நாடு, அழிவுச்சக்தியில் அணுகுண்டு உற்பத்தியும், ஆக்க வேலைச் சக்தியில் சந்திர மண்டலத்திற்குச் சென்று வரும் ஆராய்ச்சியும், நடத்திக்கொண்டுவரும் உலகிலே ஓர் பகுதி, சரியா? நாட்டின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட யாரும் இந்நிலை சரியென்று கூற மாட்டார்கள். சரியல்லதான். ஆனால் என்ன செய்வது என்று கேட்பர்? வீட்டிற்கோர் புத்தகச் சாலை அமைக்கவேண்டும். மக்கள் மனதிலே உலக அறிவு புக வழி செய்ய வேண்டும். அவர்கள் தங்கள் நாட்டை அறிய, உலகை அறிய, ஏடுகள் வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள் கூட அல்ல, அடிப்படை உண்மைகளையாவது அறிவிக்கும் நூல்கள் சிலவாவது வேண்டும்.
(வானொலி பொழிவு - வீட்டிற்கோர் புத்தகச் சாலை - 1948)

» நமது பூகோள அறிவு பதினான்குலோகத்தைக் காட்டியது, அந்த நாட்களில், நமது மார்க்க அறிவு நரபலியைக் கூடத் தேவை என்று கூறிற்று, அந்த நாட்களில். நமது சரித்திர அறிவு பதினாயிரம் ஆண்டு ஒரு மன்னன் ஆண்டதாகக் கூறி வைத்தது. நமது பெண் உரிமையைப் பற்றிய அறிவு, காமக் கிழத்தி வீட்டுக்கு நாயகனைக் கூடையில் வைத்துக் தூக்கிச் சென்ற பத்தினியைப் பற்றி அறிவித்தது. நமது விஞ்ஞான அறிவு நெருப்பிலே ஆறும், அதன் மீத ரோமத்தால் பலமும் இப்பதாக அறிவித்தது.
அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஆதாரமாக இருந்த ஏடுகளை இந்த நாட்களிலே நாம் வீட்டில் புத்தகச் சாலையில் சேர்ப்பது, நாட்டு நலனுக்கு நிச்சயமாக கேடு செய்யும்.
(வீட்டிற்கோர் புத்தகச்சாலை)

» நான் பயில்கின்றேன்; ஆய்கின்றேன், நான் தேர்வு செய்கின்றேன்; ஓர்கின்றேன்; நான் சிந்தனைச் செய்கின்றேன். இவையெல்லாவற்றின் விளைவாக நான் ஒரு கருத்தை உருவாக்க முயலுகின்றேன். அதில் என்னாலியன்ற பொது அறிவைச் சேர்க்கின்றேன்.
(அண்ணாமலைப் பேருரை- 18.11.1967)

» பல்கலைக் கழகத்தின் தலையாயப் பணி, அறிவாற்றலை பெற விரும்புவோருக்கு, அதனை அதன் உண்மையான அளவிலும் நோக்கிலும் அளிப்பதும், உலகின் கருத்துக்கள், குறிக்கோள்கள் ஆகியவற்றின் தனியாண்மையினைக் காப்பதுமாகும்.
(மதுரை பல்கலைக்கழகம்)

புத்தகச்சாலை
வீட்டிற்கோர் புத்தகச் சாலை வேண்டும். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருட்களுக்கும், போக போக்கியப் பொருட்களுக்கும், தரப்படும் நிலை மாறி, புத்தகச் சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை. அந்தத் தேவையை பூர்த்தி செய்ததானதும் முதல் இடம் புத்தகச் சாலைக்கே தரப்படவேண்டும்.
(வீட்டிற்கோர் புத்தகச் சாலை - பொழிவு - 1948)

பகுதி:  1  2

 

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai