அண்ணா களஞ்சியம்


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

அரசியல்
பகுதி: 1

பகுதி: 1 2 3 4

»அரசியலின் முலம் நாம் வேண்டுவது சில்லறைப் பதவிகளையல்ல, சிங்கார வாழ்வையல்ல. நமது இனத்தின் விடுதலையை நாம் விரும்புகிறோம். அதற்கே அரசியலை நாம் துணை கொள்கிறாம். அதன் பொருட்டே அரசியலில் பணியாற்றுகிறோம்.
(கட்டுரை - வீரர்வேண்டும் (விடுதலைப் போர்) - 10.09.1944)

மேடைப்பேச்சு
»காலட்ச்சேபமல்ல, இனிமை எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்யும் நாவாணிபம் அல்ல. வாய் பொத்திக் கேட்கும் மக்கள் மத்தியிலே நடத்தும் உபதேசமல்ல; அருள்வாக்கல்ல. பேசுபவர்கள் கேட்பவர்களைவிட மேதைகள் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையுமல்ல. கேட்பவர் இன்ன பொருள் பற்றி பேசிடுக என்று பணித்திட பேசுபவன் அதுபோலவே நடத்தும் வசன சங்கீதமல்ல. வாழ்க்கை தொடர்புள்ள பிரச்சினைகள் பற்றி மக்கள் குழப்பமான கருத்து கொண்டிருந்தால் மருட்சியை நீக்குவது. மக்கள் கவலையற்று இருந்தால் பிரச்சினையின் பொறுப்பை உணரச் செய்வது.
(பொழிவு - வானொலி - 1948)

»ஆள்பவர், ஆளப்படுபவர் எனும் இருசாராருக்கும், மேடைப் பேச்சு ஒரு சமயம் வாளாக, பிறிதோர் சமயம் கேடயமாக, ஒரு சமயம் விளக்காக, வேறோர் சமயம் தீப்பந்தமாகப் பயன்படுகிறது . . .

. . . . பேசாமலிருப்பது வேண்டுமானால் சிரமம் - சிந்தனையை அடக்கி சும்மா இருப்பது அரிது - பேசுவது எளிது - பேசுவதை ஒழுங்குக்கும், முறைக்கும் கட்டுப்படுத்துவதுதான் மேடைப் பேச்சு.

. . . . மலர் கொண்டு மாலைத் தொடுத்தலிலே கைத்திறன் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் கைத்திறன் முழுதும் காட்டி காகிதப் பூமாலை தொடுத்தால் பயன் என்ன? மாலைக்கு முதற்பொருள் மணமுள்ள மலர். அதுபோல பேச்சுக்கு முதற்பொருள் சுவையும் பயனும் உள்ள கருத்துக்கள். மாற்றான் வீட்டுத் தோட்டத்தில் பூத்திடினும் மல்லிகைக்கு மணம் உண்டல்லவா? ரசிக்கத்தானே செய்வோம். அது போலவே பேசுபவரின் கருத்து பயன் தருமாயின், கேட்பவரின் கூட்டுறவு எத்தன்மையதாக இருப்பினும் ஏற்றுக்கொள்வர்.
(மேடைப் பேச்சு)

»அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும் அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை அனுபவப்பட்டுவிட்டவர்கள், வெகு சுலபத்தில் அதனைக் கைவிடத்துணியார். என்றும் தன்னிடத்திலேயே அதிகாரம் சிரஞ்சீவியாக நிலைத்திருக்கப் பார்த்துக்கொள்வதில் மிக்க கவலை எடுத்துக்கொள்வர். அதிகாரம் தரும் மயக்கத்தில் சிக்கிக்கொண்டவர்களுக்கு கூட்டுத் தோழர்கள் நண்பர்கள் இடத்தும் கூட பகைமை கண்டு மிறள்வர். இந்நிலையில் ஒரு சிறு எதிர்ப்பு தன் சொல்லுக்கு ஒரு மாற்றுச் சொல் போக்கை மாற்றிக்கொள்வது முறை எனும் வேண்டுகோள் எதுவும், தனது கையிலுள்ள அதிகாரத்தை அபகரித்துக் கொள்ளும் நோக்கத்தோடு எழுந்தவை என்றே நம்பிக்கொள்வர். எனவே முன்கூட்டியே இத்தகைய நிலமை ஏற்படாமல் இருக்கத் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள முனைவர். இந்தப் போக்கு கோட்பாடு அரசியலில் பெரியதோர் நோயின் அறிகுறியாகும். மக்கள் ஆட்சி முறைக்கு இது முற்றும் புறம்பானது. இதனை முளையிலே நசுக்கி ஒழிக்கவேண்டியது மக்களாட்சி முறையில் நம்பிக்கைக் கொண்டவர்களின் நீங்காக் கடமையாகும்.
(கட்டுரை - இரட்டை நாவினர் - 28.12.1947)

புரட்சி
» புரட்சி என்பது இயங்கும் சக்தி. அதைப் பொசுக்கிட யாராலும் ஆகாது. புரட்சி என்பது மக்களின் போராடும் சக்தியின் வழி வருவது. புரட்சி வாலிபத்தின் கூறு. பகுத்தறிவாளர் ஆயுதம். பழமை விரும்பிகள், புரட்டர்கள், ஏதேச்சாதிகாரிகள், சர்வாதிகாரிகள் ஆகியோருக்கு நஞ்சு!
(இலட்சிய வரலாறு - 1946)

» எப்படி தனிப்பட்ட ஆளைவிட கட்சி பெரிது என்பது உண்மையோ, அதேபோல அதைவிட அதிகமான முக்கியத்துவம் வாய்ந்த வேறோர் உண்மையும் உண்டு. அது என்னவெனில் கட்சியை விடக் கொள்கையே முக்கியம், கட்சி கொள்கையை மறந்தோ, அல்லது நடைமுறைக்கு அதனைக் கொண்டு வராமலோ, கொண்டுவருவதற்கு விதமாக இராமல் குன்றியோ கிடக்குமானால், அந்தக் குறையை நீக்க முயற்சி எடுக்கும் வழிவகையும் இல்லையானால் அப்போது கட்சியைவிடக் கொள்கைதான் மேல்! கட்சியை விட்டுவிட்டாகிலும் கொள்கையைக் கைப்பிடிக்கவேண்டும். கொள்கை முக்கியமே ஒழிய கட்சியல்ல, என்று கூறும் நெஞ்சுரம் ஏற்படவேண்டும். அது வளர்ச்சிக்கு வழி! பிற முறைகள், வழிபாடு முறை! பலனளிக்காது!
(கட்டுரை - லேபிள் வேண்டாம் - 30.03.1947)

மாயமான் வேட்டையில் மாடமாளிகைக்காரர்கள்
திராவிட இன உனர்ச்சிக்காக எடுத்துக் கொண்ட முதல் முயற்சி முறியடிக்கப்பட்டது. மக்களுக்கு ஆர்வம் ஏற்படாமல் போனதால் அல்ல. நமது தலைவர்கள் அரசியலை மட்டுமே கவனித்து சமுதாயத்தில் தலையிடுவதைத் தவறு என்று எண்ணியதால். ஒரு இருபதாண்டுகள் மாயமான் வேட்டையில் மந்திரிப் பதவி அமைப்பதில், அதாவது சுயநல வேட்டைக்கு அதன் விளைவாக, சதியாலோசனைகளுக்குச் செலவிடப்பட்டன. அந்தக் காலத்திலே மாளிகை சதியாலோசனை மண்டபங்களாயின! ஆள் தூக்கிகள் அரசியல் சூத்திரதாரிகளாயினர்! பதவி தேடுவார், அரங்கமேறினர்! பரங்கிக்கும் கொண்டாட்டம். மக்கள் இந்தக் காரியம் தங்களுக்கு அல்ல என்பதைத் திட்டமாகத் தெரிந்துகொண்டு கட்சியைக் கண்டிக்கவே தொடங்கினர். மாளிகைகளிலே சதிச் செயல்கள், கட்டுக்கடங்கா நிலைபெற்று, ஒரு தலைவர் இன்னொரு தலைவரை வீழ்த்துவதையே தொழிலாகக்கொண்டு ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டு, கும்பலாகச் சாய்ந்தனர். அந்த அதிர்ச்சியிலே, ஆரம்பத்திலே ஆர்வத்துடன் கிளம்பிய திராவிட இன உணர்ச்சி மங்கிற்று. மடியவில்லை. அந்த உணர்ச்சி, என்றுமே மடிந்ததில்லை - அடிக்கடி மங்கி இருக்கிறது - ஏனெனில், அந்த உணர்ச்சி, உள்ளத்தின் பேச்சு - அரசியல் வெட்டுக்கிளிகள் கூச்சல் அல்ல.
(இலட்சிய விளக்கம் - 29.06.1947)

» பொறுமை ஒரு நளினக் கலை இதனை அதிகாரத்திலுள்ளோர் என்றும் பேசத் தவறுவதில்லை. இங்கு மட்டுமல்ல எந்த நாட்டிலும். முடிவென்ன? ஆண்டவன் பலம், படைபலம், அனைத்தும் மக்கள் விழிப்புணர்ச்சியின் முன் தலைகாட்டாமல் தவிடுபொடியாகி மக்கள் ஏவல்படி அதிகாரம் பணிந்ததுதான் முடிவு.
(,இரட்டை நாவினர் - 25.12.1947)

இறங்கிய அரசியல்
படித்தவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதனால்தான், கற்றறிவாளர்கள் அரசியலில் கருத்து செலுத்தாமையால்தான் யார் யாரோ அரசியலில் ஈடுபட்டு தாம் படித்த அளவுக்கு - தமக்குத் தெரிந்த தரத்துக்கு அரசியலை இறக்கிவிட்டார்கள்.

பாசமும் - பாசீசமும்
குற்றச்சாட்டுகள், பகட்டான பேச்சு, வாக்குறுதி பறந்தது, பதவி வேட்டை, லஞ்சத்தில் பங்கு, கள்ள மாக்கெட் வரவு, அதிகார மோகம், என இதழ்கள் தூவியுள்ள குற்றச்சாட்டுகளை ஜனநாயக வளர்ச்சி உள்ள எவரும் தாங்கிக் கொள்ள முடியாது. பச்சையாக கண்டித்தும் சகித்தும் கொள்ளுகின்றனர். ஆச்சரியம் அதிலே இல்லை. இவ்வளவு குற்றச்சாட்டுகளுக்கு உரியவர்களை கயவர்களை நாடு சகித்துக் கொண்டிருக்கிறதே அதுதான் ஆச்சர்யம். ஆனால் அதற்கு காரணம்? பாசம்! பாசம் பொல்லாத நோய்; எளிதில் போவதில்லை.
(திராவிட நாடு - 23.11.1947) கிஅதிகாரம் ஒரு போதை! பருகப் பருக இனிக்கும். அதில் சொக்கி விழாதவர் மிகச் சிலரே. அதிலும் அரசியல் அதிகாரம், அதிகமான போதைத் தரும். அதைப் பருகுவோர், பரமானந்தமடைந்து பாதம் பூமியில் சரியாக படியாதபடி தாண்டவமாடுவர். அதைத்தான் அறிஞர்கள் அரசியல் கோமாளி கூத்தென்பர். அந்த போதையின் பயனாக எதேச்சதிகாரமும், சர்வாதிகாரமும் ஏற்படும். தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டனாகிவிடமாட்டானா? அதைப்போல தனக்கொரு எதிரியும் இல்லை என்ற மனப்பான்மை கொண்டுவிட்டால், கேட்கவாவேண்டும். அவர்தம் திருவிளையாடல் யாராயினும் சரி எனக் கூறி, எதற்கெடுத்தாலும் கச்சை கட்டி நிற்பர். இதுவே அதிகார வெறி எனப்படுவது.
(எதேச்சாதிகாரம், திராவிடநாடு - 27.06.1948)

» ஆளும் கட்சியில் வளரும் சர்வாதிகாரத்தை கண்டிப்பது ஆளும் கட்சி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை அம்பலப்படுத்துவது. ஆளும் கட்சியின் அமுலில் ஏற்படும் அல்லல் அவதியை எடுத்துக்காட்டுவது. ஆளும் கட்சியின் சட்டதிட்டங்களும் நிர்வாக முறைகளும் ஏழைகளை எவ்விதத்தில் கெடுக்கிறது என்பதை எடுத்துரைப்பது. ஆளும் கட்சி என்னென்ன விதமான இதமளிக்கும் சட்டம் செய்திருக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்டுவது, உரிமையையும், உடமையையும் பறிகொடுக்கும் போக்கில் ஆளுங்கட்சி நடந்து கொள்ளும்போது, கண்டிப்பது, எதிர்த்து கிளர்ச்சி நடத்துவது, இவை போன்றவைதான் எதிர்கட்சிகளுக்கு இருக்க வேண்டிய இலட்சணங்கள் என்று நான் படித்த - அதிக அளவு படிக்கவில்லை, ஆனால் படித்தவரையில் கவனத்துடன் படித்திருக்கிறேன். அரசியல் விளக்க ஏடுகளில் காணப்படுகின்றன.
(அறை கூவுகிறார் அமைச்சர் - திராவிட நாடு - 23.09.1956)

பொதுவாழ்வு
தம்பி, நான் ஏட்டிலே (அந்தோனி ஜான்) சந்தித்த துறவியை நாட்டிலே காண விழைகிறேன். நாம் துறவிகளாகிவிட வேண்டும்! குடும்பம் இருக்கும், குடிகெடுக்கும் எண்ணம் இருக்காது. துணைவி இருப்பாள், நம் தொண்டுக்கு துணை புரிய, குழந்தைகள் இருக்கும், அன்புக்கான அரிச்சுவடியை உணர்த்த! தொழிலில் ஈடுபடுவோம் வாழ்க்கை நடத்த! மடம் தேடாமல் தாவடம் அணிந்து சடம் ஆகாமல் காவி தேடாமல் தொண்டாற்றும் துறவியாக அன்புக்கு இடமளித்து அற நெறியை நாட்டிலே புகுத்தி தொண்டாற்றும் துறவியாக, மோட்ச சாம்ராஜ்யத்தில் இடம் பிடிக்க அல்ல.

பகுதி: 1 2 3 4

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai