அண்ணா களஞ்சியம்

இனம்
| மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்
மதம்
பகுதி:
1

பகுதி: 1 2 3 4 5 6

சங்கராச்சாரியார் கூறுகின்றார். யுத்தம் முடியும் (இரண்டாவது உலகப் போர்) வரையிலாவது பகவான் நாமாக்களைச் சொல்லவேண்டுமென்கிறார்.

இதிலிருந்து இரண்டு எண்ணங்கள் எழும். ஒன்று இதுவரை பகவானைத் தொழவில்லை என்பது; மற்றொன்று இடருற்றபோது, ஈசனை வாழ்த்தினால் போதும் என்பது. இரண்டும் எத்துனை மடமையின் சிகரம் என்பதை நாம் விவரிக்கத் தேவையில்லை. மக்கள் இதுவரை பகவானை மட்டுமல்ல, அவரது பிரதிநிதியென்றுரைக்கும் பரபிரம்ம சொரூபிகளையும் தொழுது வந்தனர்; தொழுகின்றனர். கண்ட பலன் என்ன? இதோ குண்டு வீச்சு கடலில் கொந்தளிப்பு!! உள்ளத்தில் பதபதைப்பு!! இதுவரை தொழாதவர் போலவும், இன்றேனும் தொழுது பாருங்கள் என்று கெஞ்சும் முறையிலும் சங்கராச்சாரி பேசுவதன் சூதை உணருங்கள். சண்டை நேரத்திலே மக்கள் உடமையையும், உயிரையும், ஊரையும், உற்றாரையும் காப்பாற்றும் வேலையிலிருந்துவிட்டு கோயிற் பெருச்சாளிக்குக் கொழுப்பேற்றும் வேலையைச் செய்ய மறந்துவிட்டால், ஆரிய இனம் இளைக்குமே என்றெண்ணி போர் முடியுமட்டேனும் ஆண்டவனைத் தொழுவீராக என்று கூறினார்.
(கட்டுரை - சங்கராச்சாரி பதவி - 19.04.1942 - தற்கொலை)

பத்தர்களுக்காவது கஷ்டம் ஏற்பட்டபோது எல்லாம் அவன் செயல் எனும் ஆறுதலும், கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்ற நம்பிக்கையும், அரசன் அன்று கொன்றால் தெய்வம் நின்று கொல்லும் என்ற எண்ணமும் துணை செய்தன. புராணங்களின்படி இத்தகைய பக்தர்களின் கஷ்டத்தைப் போக்க பரமசிவன் ரிடபமேரியோ, கருடனேரியோ, வந்து ரட்சித்துவிடுவார். நாட்டு விடுதலைக்கோ, உரிமைக்கோ, மக்கள் விடுதலைக்கோ, மானத்துக்கோ போரிட்ட வீரர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்தபோது அவர்களுக்கு அந்த லோகம் தரும் ஆறுதலும் கிடையாது. அரன், அரி, ஏசு வந்து வந்து வரமளிப்பதுங் கிடையாது. இந்து மார்க்கத்தில் தவிர ஏனைய இஸ்லாமிய, கிருத்துவ மார்க்கங்களில் கடவுள், கதை ஏந்தியோ, சக்தி தாங்கியோ, சக்கரம், சூலம், கோதண்டம் முதலிய ஆயுதங்களுடனோ இருப்பதில்லை. எனவே பக்தர்கள் பாடுபட்டால் வாகனமேறி வந்து, சக்கரத்தை ஏவி பாவியின் சிரசைத் துன்டிக்கச் செய்து, பக்தனே மெச்சினேன் உன் திறத்தை! பரமபதம் வா என்று அழைப்பதில்லை. ஏசுவிடம் முறையிட்டால் என்ன சொல்வார்? என்னை சிலுவையில் அறைந்ததை அறியாயோ! என் கொள்கைக்காக உனக்கு கஷ்டம் விளைவித்தால், யார் என்ன செய்ய முடியும்! கொள்கையிலே உறுதியிருந்தால் சுடுநெருப்பும் குளிரும், என்றுதான் கூறமுடியும். முகமதுவிடம் முறையிட்டால் அவர் மச்ச கூர்ம அவதாரம் எடுக்கப் போவதில்லை, மெக்கா, மதினா பாதையிலே என் மீது வீசப்பட்ட கற்கள் கொஞ்சமல்ல! உலகம் உன் கொள்கையின் உயர்வை உணர்ந்து பின்பற்றும் வரையிலே, உன்னைத் துன்பந்தான் தழுவும், அதை சகிக்கவே வீரம் என்று சன்மார்க்கம் போதிப்பார்! நம் நாட்டு நாயன்மார்கள் பக்தர், ஆழ்வாராதிகள் ஆகியோருக்கு, நஞ்சிட்டால் ஆண்டவன் அருளால் நஞ்சு அமுதமாக மாறும். வெளி உலகிலே இப்படி நேரிட்டதில்லை. சாக்ரடீசுக்கு தந்த விஷம், திராட்சை ரசமாக மாறிவிடவில்லை! உயிரை இழந்தால் நெருப்பிலே தள்ளுவர், தாமரையாக மாறும் தணல் நீரிலே தள்ளுவர், மாளிகையாகிவிடும் நமச்சிவாயா என்றதும். நஞ்சு அறுசுவை உண்டியாகும். நாராயணா என்றதும் கம்பம் வெடிக்கும், கர்ஜனையுடன் சிங்கம் வரும். அது, இங்கு, இந்து கற்பனைக்கு இடமளித்த இளித்தவாயர்களின் இருப்பிடத்திலே! உறுதி உழைப்பு என்பவற்றை நம்பிய உலகிலே வீரர்கள் வெந்துயர் உற்ற போது, இத்தகைய அற்புதங்கள் நடக்கவில்லை. ஆபத்து ஆபத்தாகவே இருந்தது. ஆகவே சிறைச்சாலையும், சிங்காரச் சாலையாக இராமல், ஆறுதல் அளிக்க அவனருள் உண்டு என்ற பற்று இல்லாமல், அற்புத நிகழ்ச்சிகளும் இல்லாமல், உழன்று, உருமாறி உழைத்த உத்தமர்கள், உலகுக்கு செய்திருக்கும் உன்னதமான தொண்டு மறக்கற்பாலதோ! (கட்டுரை - சிறைச்சாலை என்ன செய்யும் - 27.09.1942)

ராபர்ட் கிளைவ் காலத்திலே, இலட்சார்ச்சனைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தினோமே, கண்டதென்ன? கிளைவின் கல்லரை மீது இந்தியாவை வென்ற வீரன் என்று பொறிக்கப்பட்டிருக்கிறது. அந்த பிரிடிஷ் வல்லரசை இன்று ஜப்பான் சில இடங்களிலே தோற்கடித்தது. அர்ச்சனைகளின் பலனாலா? யாக யோகம் செய்தா? அவை ஆத்மார்த்தத் துறையின் பணிகள். பரலோக யாத்திரைக்குப் பிறகு பலன் வேண்டிச் செய்யப்படும் பழமைகள்!
கட்டுரை - இலட்சார்சனை - 15.03.1942)

சிறுத்தையின் புள்ளி, செந்நாயின் வெறி, குரங்கின் குறும்பு, பூனையின் துருக்கு குணம் போகாது என்பார்கள். ஆரியர்களின் குணாதிசியமும் அது போன்றதே.
(கட்டுரை - தேன் சுரக்கப்பேசி - 26.04.1942)

வினை, எழுத்து, விதி, சோதனை இவைகள் தூளாயின தெரியுமோ, சம்மட்டியும் அரிவாளும் ஆளும் ரஷ்ய நாட்டிலே அன்று எழுதியதை லெனின் அழித்துக் காட்டினார். அவதியுற்றோரை, வாழச் செய்தார். அருள் மொழியால் அல்ல. தேவாலயஞ்சுற்றி அல்ல; தமது தீரத்தால் வீரத்தால் நெஞ்சுறுதியால்!!

பாதிக்குதே பசி என்றுரைப்போரும், அது உன் பாவம் என்று பதிலுரைப்போரும் அங்கு இல்லை. மத ஓடத்திலேறிய மாந்தரே இனி பலி பீடத்தில் சாய்ந்தீரே. ஆம்! வைதீக பீடத்திற்கு நீங்கள் இங்கு பலியானீர்கள். வாழ்வெனும் கடலைக் கடக்க மதமெனும் ஓடமேறினீர். பார்பனீயம் எனும் சண்ட மாருதம், அந்த ஓடத்தை வைதீகம் எனும் பாறை மீது மோதச் செய்தது. இந்த பலிபீடத்தில் சாய்ந்தீர். இரத்தந்தோய்ந்த அந்த பலிபீடத்தை மனக்கண் படைத்தோர் காணமுடியும். அந்த பலி பீடத்தில் சாய்ந்தவரின் தொகை கணக்கினில் அடங்காது!
(கட்டுரை - இந்து இட்லரிசம் - 29.03.1942)

கலை மக்களின் அறிவுக் கொலைக் கருவியல்லவே! மக்களின் மாண்புகளை வளரச் செய்யும் வாய்ப்பு! அறிவை துலங்கவைக்கும் சக்தி! ஆனந்தபுரிக்கு அமைந்ததோர் வாசல்! பண்பு எனும் பயிருக்கு நீர்! வாய்மை எனும் மரத்துக்கு வேர்! கற்றோருக்குக் கரும்பு! இளைத்தோரையும் எஃகு உள்ளத்தோராக்கும் மருந்து! காலத்தை மீட்கும், காலத்தைப் புதுப்பிக்கும் வன்மையும் கொண்டது. கலை இனத்தின் சிறப்புக்கோர் சித்திரச்சாலை! வஞ்சனைக்கு வலையல்ல! ஆபாச அலையாகாது! மூடத்தனம் குடிபுகும் வளையாக, உலுத்தர் அழைத்துக்கொள்ளும் உளையாக, பரம்பியல்பினருக்கோ, புற்றாக, சீலமற்றோரின் சிந்தனைச் சேறாக இருப்பின் அத்தகைய கலை, அதனைக் கற்கும் மக்களின் அறிவை நிச்சயம் கொலை செய்து, வஞ்சக வலையில் விழச்செய்துவிடும், என்பதனை எவர் மறுக்க முடியும்?
(கட்டுரை - முத்தமிழ் கற்றோரே - 02.08.1942)

இல்லறவாசிகள் நியாயமான செலவு போக மீந்த பணத்தை விஷம் எனக் கருதவேண்டும் என்கிறார் வேத விற்பன்னர். வெகு நன்று. நாம் இல்லறவாசிகள், இன்னின்னவற்றையே நியாயமாச் செலவாகக்கொள்ளவேண்டும் என்று குறிப்பிடத் தயார். விஷம், அவர்களிடம் கூடாது என்று விளம்பத் தயார். ஆனால் ஸ்வாமிகள் தங்கள் விஷம் என்ன? தங்களுக்கு உலகமே மாயை, என்கின்ற தத்துவாசிரியருக்கு, துறவிக்கு, மடம் ஏன்? சொத்து சுகம் எதற்கு? பணம் பரிவாரம் ஆகுமா? விஷம் என்று எந்தப் பணத்தை குறிப்பிடுகிறீரோ, அதனை தாங்கள் பருகியபடியேதானே இருக்கிறீர்கள்? மற்றவர்களாவது ஓரளவுக்கு உழைத்து, தமது திறமையையும் காட்டி பொருள் ஈட்டுகின்றனர். தாங்கள் உழைப்பதுண்டா? உடலில் உழைப்பு தரும் ஓய்ச்சல் என்ற அனுபவம் தங்கட்குத் தெரியுமா? உழைத்தும் பயனில்லை என்ற நிலையில் உண்டாகும் சலிப்பு என்ற அனுபவம் தங்களுக்குண்டா? பசியை நீரறிவீரா? பஞ்சத்தில் அடிப்பட்டதுண்டா? இல்லையே, உழைக்காமல், ஊரார் உழைப்பில் உபாதானம் பெறுகிறீர். தங்கள் வாழ்க்கையின் வசீகரம், தங்கள் திறமையினால் கிடைத்ததுமல்ல! பிறரின் மடத்தனத்தால் தங்கட்கு கிடைப்பது. இத்தகைய வாழ்வில் இருப்பது நியாயமா? பிறருக்கு நீதி புகட்டும் பெரியோய், உமது வாழ்க்கையின் நியாயம் யாது என்றுரைக்க முடியுமா என்று சங்கராச்சாரியாரை நாம் அறைகூவி அழைத்துக் கேட்கிறாம். அவரோ அவரது அதிகாரம் பெற்ற வேற யாரேனுமோ கூறட்டும் கேட்போம். வாழ்க்கைக்கு நியாயமான செலவு போக மிகுவதை ஏழைகளுக்குத் தரவேண்டும் என்று மொழிகிறார். இவர் துறவியினுடைய நியாயமான செலவு போக, மேலும் பணம் குவிப்பானேன்! இவரது இன்றய வாழ்க்கை நியாயமான செலவினங்கள் கொண்டதுதானா?
(கட்டுரை - சங்கராச்சாரி பதவி தற்கொலை - 19.04.1942)

வரட்டுத் தவளை கத்துவது வான் மதியின் போக்கை மாற்றாது இடிந்த மண்டபத்தில் இருட்டு நேரத்தில் முரட்டுக் கள்வரே புகுவர். பாழடைந்த மாளிகையில் பறக்குமாம் வௌவால். சரிந்த சுவற்றில் வளை அமைத்து வாழுமாம் பாம்பு! குப்பை மேடே தேடும் குக்கல்! குழியிலே நெளியும் தேள்! அதுபோலவே ஆபாசக் கருத்துக்களில், அறிவுக்குப் புறம்பான புராணங்களில், இழுக்கைத் தரும் இதிகாசங்களில், புல்லரும், சுயநலமிகளும் புகுந்து கொண்டிருப்பர். இந்து என்பது அவர் இட்டுக்கொண்டப் பெயர். அது நமக்கப் பொருந்துமா?
(கட்டுரை - சீறும் சில்லரைகள் - 28.06.1942)

உண்மையை உரைக்க அஞ்சுபவன் கோழை மட்டுமல்ல, நாட்டுக்கு துரோகி மக்களை மடத்தனத்தில் ஆழ்த்தும் பாதகன் என்பேன்
(கட்டுரை - ஆறுமுகமும் அழுகுரலும் - 12.07.1942)

வானத்திலே மயில் ஆடிடக் கண்டேன் என்று கூறிடுபவனை, என்னவென்று கூறுவீர்கள். வாடைவீசினால் குடியன் என்றோ, இல்லையேல் மூளை குழம்பியவனென்றோ கூறுவர். ஆனால் துர்பாக்கிய மிகுந்த இந்த நாட்டிலே, இல்லாததை உண்டென்பவன், ஞானி. இருப்பதை மாயை என்பவன் வேதாந்தி. இயற்கைக்கு மாறானதை இயம்புவன் கலா நிபுணன். பகுத்தறிவுக்கு ஒவ்வாததை கூறுபவனை பரமபாகவதன். பகற் கொற்ளையிடுபவனைக் குரு என்றும் கூறும் பாமரத்தன்மையிருக்கிறது. இதை வளர்த்து பயனடையும் கூட்டம் ஒன்றுண்டு. அதன் ஆதினத்தில் எது நடப்பினும் இசை, நடனம், இலக்கியம், நாடகம், சினிமா, பத்திரிக்கை பிரசங்க மேடை ஆகிய எதுவாயிருப்பினும், அவற்றின் மூலம் மக்களிடையே பழமை பரவவும் பரவுவதன் மூலம் மனம் பாழ்படவும் பாழ்பட்டதன் விளைவாக பராரியாகவுமான நிலைமைகளை நீடிக்கச் செய்வதையே கைங்கரியமாக செய்து வருகிறது முன்னேற்றத்தை மூலையில் தள்ளி மடத்தனத்துக்கு மாலையிட்டு உலக முன்னணியிலே ஒதுக்கிடம் பெற்றுக் கிடக்கும் இந்நாட்டுக்கு, இக்கூட்டம் செய்துவரும் கேடு போல், உலகில் எக்காலத்திலும் எங்கும் நடந்ததில்லை என்ற குன்றின் மீதேறி கூறலாம்.
(கட்டுரை - சேலம் வாரீர் - 10.01.1943)

ஐயர் பார்த்த ஜோதிடம் அவருக்குத் தட்சணைத் தந்ததேயன்றி, ஜோதிடம் கேட்டவருக்கு பலன் தரவில்லையே என்று யோசிக்கிறீர்களா? இல்லையே வழியிலே குழியிருப்பது தெரிந்தும், அவ்வழி நடப்பவனை, விழியற்றவன் என்றுரைப்பர். உங்களின் கருத்து குருடானதைக் கூறினாலே கடுங்கோபங் கொள்கிறீர். தெரிந்தும் தெளிவு கொள்ள மறுக்கிறீர்.
(அடுத்தவீட்டு அகிலாண்டம் - சிறுகதை - திராவிடநாடு - 10.01.1943)

அன்புதானே சிவம் என்று கேளுங்கள். ஆமாம், அன்பு வேறு, சிவம் வேறு என்றுரைப்பர் அறிவிலார். அன்பே சிவம் மலருக்கு மணம் போல் உள்ளதப்பா அது என்று உருக்கமாகப் பேசுவர். அவர்கள் அணிந்துள்ள அந்த தங்க ஓடு போர்த்துக் கொண்டுள்ள உத்திராட்சர மாலைக்கு வாயிருந்தால் சொல்லும் அன்பின் யோக்யதையை! சமணரிடம் காட்டிய அன்பு தெரியாதா என்று கேட்கும். சைவம் பல தெய்வ வணக்கத்தை ஆதரிக்குமா என்று கேட்பின், சிவநேசர் சொல்வார், முழுமுதற்கடவுளை மட்டுமே ஏற்கும் சைவம் என்று கூறுவார். ஆனால் மரத்தடிப் பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போடுவதை நிறுத்தமாட்டார். மலையுச்சி முருகனுக்கும் தூப தீபம் நடத்துவார் . தேவி பூசையும் விடமாட்டார். தத்துவம் வேறு, நடைமுறை வேறு இருக்கும்.
(கட்டுரை - சிவ நேசருக்கு - 10.01.1943)

நாலு தலைச்சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று தலைச்சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறுதலை சாமி, ஆறுமுகச்சாமி, ஆளிவாய்ச்சாமி பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள் காக்கை மீது பறக்கும் கடவுள், தலை மீது தைய்யலைத் தாங்கி நிற்கும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் ரசமனுபவிக்க நடுநிசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே! நாம் இந்து என்று கூறிக்கொண்டால், இவைகளை நமது தெய்வங்கள் என்று ஒப்புக்கொண்டு தொழவேண்டும். இந்தச் சேதியைக் கேட்டால் உலக நாகரீக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிட கேவலமானவர்கள் என்று கேலி செய்வாரே. இந்த கண்ராவிக்கு என்ன செய்வது? இத்தகைய ஆபாசத்தை நாம் தலையில் தூக்கிப்போட்டுக்கொள்ள, நமக்கு மனம் எப்படித்துணியும்? ஆகவேதான் நாம் இந்து அல்ல என்று கூறுகிறோம்!
(கட்டுரை - ஆரிய மாயை - 26.09.1943)

பகவான், வைர நாமம், கெம்பு சிரி - சூரணம் அணிந்து அபஸ்தங்களில் நவரத்ன இழைப்பு வேலைப்பாடுகளும் இடையில் தங்க அரைஞாணும், மார்பிலே தங்க பூணுலும் வித விதமான ஒளி வீசும் ஆபரணங்களும் அணிந்திருக்கக் கண்டு சடாரி சாய்க்கும் அய்யரின் காதிலே வைரக் கடுக்கன் ஜொலிப்பதையும், சகஸ்ரநாம அர்ச்சனை செய்யும்போது, மலரை வீசும் கரத்திலே டால் அடிக்கும் மோதிரத்தையும், வெள்ளி வட்டிலில் பகவத் பிரசாதத்தைக் கண்டு பக்தி ரசத்தை உண்டு வருகிறீர்கள்.
ஒரு கை, உலர்ந்த உதடு, ஒடிந்து போன கால், ஈ மொய்க்கும் புண், ஈளை கட்டிய குரல், ஏங்கித் தவிக்கும் உருவம் கோபுர வாசலிலே குமுறி கையை நீட்டி, மகராசா என்று உங்களைக் கூப்பிட காண்கிறீர்கள். உள்ளே உலக இரட்சகர், ஒய்யார உடையுடன், சிங்கார நகையுடன், சீமானாக இருக்க அவன் படைப்பிலே ஒன்று சீந்துவாரற்று, செத்திட நேரமின்றி பிச்சை எடுத்திடக் காண்கிறீர்கள். அவன் ஜோதியை உள்ளே கண்டீர்கள். அவன் ஆலய வாயிலிலே, சோக ஜெகத்தின் சேதியைக் கூறும் பராரியைக் கண்ணால் கண்டும் என்ன செய்தீர்கள்? கருத்துக்கு ஒரு விநாடியாவது வேலை கொடுத்தீர்களா? கொடுத்திருந்தால் உலகம் இப்படியா இருக்கும்?
(கட்டுரை - கண்ணால் கண்டும் - 10.01.1943)

பகுத்தறிவு
இனத்தை தாழ்த்தும் கருத்துரைகளை நாங்கள் கண்டிக்கவே பெரியபுராணத்தையும் கண்டிக்கிறோம். அந்த புராணத்திலே வரும் அடியவர்களின் கதையினால் ஏற்படும் கடவுட் கருத்துரைகள், எவ்வளவு அறிவீனமாக இருக்கிறது என்பதைப் பாருங்கள். பக்திக்காக அடியவன் ஏதும் செய்வான் என்று அவன் பெருமையை கூறப் பெரியபுராணம் எழுதப்பட்டதென்றால், ஆண்டவன் இத்தனை கடுமையும், கொடுமையும், நிரம்பிய சோதனைகள் செய்தார் என்று கூறுவது, கடவுள் இலக்கணத்துக்கே இழிவைத் தராதோ என்று கேட்கிறேன். உலகிலே எந்த நாட்டிலேயும், எந்த பக்திமானுக்கும் நேரிடாத சோதனை இங்கு மட்டும் நேரிடக் காரணம் என்ன? ஆண்டவனுக்குமா இந்த நாட்டிடம் ஓர வஞ்சனை மற்ற எங்கும் நேரிடாத நிகழ்ச்சி, துர்பாக்கிய மிகுந்த இந்நாட்டிலே மட்டுந்தானே நடந்திருக்கிறது. பிள்ளை கறி கேட்பதும் பெண்டையை அனுப்பச் சொல்லிக் கேட்பதும் கண்ணை பறித்துக் கொடுக்கச் செய்வதுமான கடவுட் சோதனைகள், இங்கு மட்டுமே உள்ளன. காரணம் என்ன? இவைகளைப் படித்து நம்பும் மக்களின் மனப்பான்மை எவ்வளவு கொடுமை என்பதைக் கண்டே, நாங்கள் பெரியபுராணத்தைக் கண்டிக்கிறோம். இத்தகைய புராணங்களால் மக்களின் அறிவு பாழ்படுவதைக் கண்டே நாங்கள் அப்புராணங்களைக் கண்டிக்கிறோம். எனவே கலை, இடம், இனம், காலம் என்பவற்றிற்கேற்ப உளது. ஆரிய கலை வேறு, திராவிட கலை வேறு. ஆரியக்கலை நம்பொணாக் கருத்துக்களும் ஆபாசமும் நிரம்பியிருப்பதுடன், திராவிட இனத்தை அடக்கவும் பண்பை அழிக்கவும் பயன்பட்டுப் பாமரரின் மனதை பாழாக்குகிறது என்ற குற்றச்சாட்டுகளைக் கூறி கம்பராமாயணத்தையும், பெரியபுராணத்தையும் கண்டிக்கிறோம், கொளுத்துக என்று கூறுகிறோம்.
(09.02.1943 - பொழிவு - தீ பரவட்டும்)

பகுதி: 1 2 3 4 5 6

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai