அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம் உவமை நயம்

உவமை நயம்

பகுதி: 3

பகுதி: 1 2 3 4

சிந்தைக்கு விந்தை!
நம்முடைய சர்க்காரின் போக்கு என் சிந்தைக்கு விந்தையாகவே இருக்கிறது. பொங்கல் விழாவுக்கு சி.ஐ.டி.களை அனுப்புகிறார்களே நம் சர்க்கார். பதவிப் பானையிலே, ஆணவ நீரை ஊற்றி அறியாமை அரிசியைப் போட்டு, கோபத் தீயிலே பொங்கலிடுகிறார்கள் சர்க்கார். அதிலிருந்து பொங்கலா கிடைக்கும்? நாங்கள் ஜனநாயகப் பானையிலே அன்பெனும் நீர் ஊற்றி, அறிவுச் சோறாக்கி இனிய பொங்கலைத் தருகிறோம். மக்கள் ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.

தொட்டில் - கல்லறை
சிறையில் உள்ள பாதாம் மரத்தினுள் மற்ற இலைகளும் உதிர்ந்து மொட்டையாகி விட்ட அந்த நிலையிலும் மொட்டையாகிவிட்ட அந்த மரம் இந்த நிலையில் தன்னை உலகம் விரும்பாது என்பதால் மேலும் மறுபடியும் துளிர்க்க தொடங்கிவிட்டது. மரத்திலேயே கல்லறையும் தெரிகிறது தொட்டிலும் தெரியத் தொடங்குகிறது
(கைதி எண் - 06.05.1964)

சுடு சொல்
ஏளன மொழி எரிச்சலூட்டும். எரிச்சல் நம்மை சுடுசொல் வீசிடுவோராக்கும். சுடுசொல் வீசிடினோர் நாம், சோர்வகல மது அருந்திட முனைவோன் இறுதியில் தானே மதுக்குடமாகிடுதல் போல சுடு சொல் வீசிட முனைந்துவிட்டால் தெளிவு, கனிவு, அறம், அன்புநெறி நேர்மை யாவும் பட்டுப் போய்விடும். நாடு நம்மை கைவிட்டு விட்டு இவனும் காட்டானத்தான் இருக்கிறான், ஆந்தை அலறுவதை ஆயிரம் முறை கேட்டிடுனும் குயில் தன் குரலேசையை மாற்றிக் கொள்கிறதா? வேரெவரோ ஏளன மொழியில் பேசுகிறார், ஏசுகிறார் என்பதற்காக இவர்கள் வெகுண்டு அதே மொழியை மேற்கொள்ளுவதா! மேற்கொள்ளுகிறார் எனின் இவர்கள் அவர்கள் போன்றோர் என்பதன்றி வேறென்ன கூற முடியும் என்று தீர்பளித்துவிடும்!
(இடைவெளிக்கு பிறகு - 26.07.1964)

பேதை
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு வள்ளுவர் கூறியுள்ளார்! கூறி? ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று இந்நாளில் பாதியார் கூறி காட்டவேண்டியதாயிற்று! அதற்குப் பிறகும் ஜாதிப்பிடிப்பும் பித்தமும் நீங்கியபாடில்லையே! பேழையில் பொருளை அடைத்து பேதையொருவன் அதன் மீதே பட்டினி கிடந்த நிலையில் சாய்ந்திருக்கிறான், என்றால் அப்படி ஒரு கதை சொன்னால் வியப்படைகிறோம். அறிவுப் பேழை இங்கு - ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு! எனினும் பேதம், பிளவு, மதியற்ற போக்கு, குருட்டு பிடிவாதம், முரட்டுவாதம், சே! தம்பி இதனை எண்ணும்போது உள்ளபடியே வெட்கம் விலாவினை குத்திடுகிறது.
(காஞ்சி - 14.01.1965)

மெய்யும் - பொய்யும் கிட்டதட்ட குயிலும் காகமும் போல் என்று கொள்ளலாம்.
(வெந்த புண்ணில் - 18.04.1965)


பணம் ஒரு சிலரிடம் போய் குவிந்து கொள்வதற்கான வழியை அமைத்துக் கொடுத்துவிட்டு சோஷலிசம் பேசுவது கன்றுக் குட்டி இறந்த பிறகு, வைக்கோலால் செய்த உருவத்தின் மீது, அதன் தோலைப் போர்த்தி வைத்து, அதைக் காட்டி பசுவை ஏய்த்து, பால் கறந்திடும் தந்திரம் போன்றதாகும்.
(தம்பி - அனுபவி ராசா - 21.08.1966)

குழந்தையை இடுப்பேற்றி
குளிர்மதியை கண்ணேற்றி
மலருக்கு மணமூட்ட
மையலூட்டும் பருவத்தாள் வான் சுகத்திலும் வையகமே சிறந்ததென
வாயில், மொழியால்
கண் வழியாய் காட்டிடும்
காளையர் நெஞ்சிலே
கனலேற்றி நடக்கின்றாள்
பட்டப்பகலில்


பயில்வான் வீட்டுக்காளை அச்சமின்றி ஊரிலுள்ள பயிரை வயிறு புடைக்க மேய்ந்துவிட்டு அழிக்கும் செயல் போன்றது ஆளும் நாயகர்கள் பொது மக்களிடம் தேர்தல் நிதி திரட்டல்.
(பயில்வான் வீட்டுக் காளை - 11.07.1965)

ஏழ்மை ஒரு நோய்! அது யாரை பிடித்துக் கொள்கிறதோ அவன் மட்டுமல்ல அவனைச் சூழ உள்ளவர்களையும் அவன் உலவும் சமூகத்தையே பிடித்துக்கொள்வது, ஒட்டுவார் ஒட்டி!
(சிறகுவிரித்து ஆடுவதெல்லாம் மயிலாகுமா? - 14-08-1966)

செல்வம் சிலரிடம் சென்று குவிந்துவிடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது. அது கொண்டவனையும் அழித்திடும், சமூகத்தில் வலிவற்றோரையும் அழித்திடும்.
(14.01.1969)

அலை எப்போதும் ஓய்வதில்லை. கடல் அலைகள் என்றும் இருந்துகொண்டே இருப்பதுபோல தி.மு.கழகத்தின் உணர்ச்சியும் நாட்டிலே ஓயாது பரவிக்கொண்டே இருக்கும்.

தி.மு.கழகத்தில் ஓட்டை விழுந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இது நாயனத்தில் விழுந்துள்ள ஓட்டை. எந்த ஓட்டையை அடைத்துக்கொண்டு எந்த ஓட்டையை திறந்துவிட்டால் சங்கீதம் வருமென்று எனக்குத் தெரியும்.

சேலம் ஒகேனக்கல் அருகே, ஆடு தாண்டும் அளவுள்ள காவேரி, பிறகு அகண்ட காவேரியாகிறதே, வேறு ஜில்லாவில் அது போல் இடபேதம் இயல்பு பேதத்துக்குள்ள பல காரணங்களில் ஒன்று ஒரு இடத்தில் கோபத்தை காட்ட முடிவதில்லை. ஆனால் கோபமே ஏற்படவில்லை என்று பொருளில்லை. அது பிறகு கொதித்துக் கிளம்புகிறது வேறோரிடத்தில்.
(சாது - 1947 - சிறுகதை)

எஃகு தயாரிக்க வேண்டிய முயற்சி மிகப் பெரியது. இரும்பைக் காய்ச்சி ஊட்டமும் அழுத்தமும் ஏற்றி எஃகு தயாரிக்கப்படுகிறது. பின்னர் அந்த எஃகு எதையும் தாங்கும் ஆற்றலும் வலிமையும் பெறுகிறதா. வளைவதில்லை; முறிவதில்லை. அது போலவே தம்பிகள் எதையும் தாங்கும் இதயமுடைய எஃகு கம்பிகளாக உருவாகவேண்டும்; விளங்கவேண்டும்.
(எண்ணப் பிணைப்பு இதயக் கூட்டு! வண்ணக்கலவை! - 19.03.1961)

வைரத்திலுள்ள ஒளியிலே, சிலப்பகுதியை வேறாகப் பிரித்து எடுத்துச் செல்லமுடிகிறதா - பட்டை தீட்டி ஒளியேற்றியவன் வைரத்தை விட்டுவிட்டுச் செல்வானாகில் நான் பட்டை தீட்டியதால் கிடைத்த ஒளியை என்னுடன் எடுத்துச் செல்வேன் என்றா கூறமுடியும்? அது போலத்தான் கூட்டு முயற்சியின் விளைவாக ஏற்படும் எழுச்சியிலிருந்து எந்த ஒரு அளவையும், எவரும் தனியாக்கி எடுத்துச் செல்ல முடியாது.
(இந்தியர் ஆகின்றனர் - 28.05.1961)

விடுதலை இயக்கம்
கடல் நீரில் எப்படி உப்புத் தன்மை ஒரு சேரக் கலந்து காணப்படுகிறதோ, காற்றிலே எங்ஙனம் இயங்கவைத்திடும் ஆற்றல் ஒரு சேரக் கலந்து இருக்கிறதோ, அஃதே போல் விடுதலை இயக்கம் அதிலே தங்களை ஒப்படைத்துவிட்டுள்ள அனைவருடைய கூட்டு சக்தி பதவி ஒன்றாகிக் கலந்து போயுள்ள நிலை பெற்றுவிடுகிறது.
(இந்தியர் ஆகின்றனர் - 28.05.1961)

பூசை அறைக்குள்ளே இருப்பதாலேயே புலி சாதுவாகவா மாறிவிடும்? கதராடை அணிந்து கொண்டதாலேயே காதகர்கள் இரட்சகர்களாகவா மாறிவிடுகிறார்கள்? தங்கப் பூண் போட்டத் தடியால் தலையில் அடித்தால் வலி எடுக்காமல் மகிழ்ச்சியா பிறக்கும்? வாழ்வை அழிப்பதைத் தொழிலாகக் கொண்டவர்கள் வந்தேமாதரம் பாடிவிட்டால் கொடுமைகளை மறந்துவிடவா முடியும்? (குன்றின் மேலிட்ட விளக்கு - 06.08.1961)

மாட்டின் கழுத்திலே கட்டப்பட்ட மணியைக் கொண்டு மாட்டின் விலையை மதிக்கமாட்டார்கள். அந்நிலையில் மாட்டின் கழுத்தில் மடிப்பில் ஒட்டிக்கொண்டு கிடக்கும் உணியைக் காட்டி பத்து ரூபாய் சேர்த்துக் கொடு என்று மாட்டுக்குடையோன் கேட்டால் கைகொட்டியல்லவா நகைப்பார்கள்! அது போல காங்கிரசுக்க கிடைத்துள்ள பதவியைக் கண்டே, மயங்க மறுக்கும்போது, ஒட்டிக்கொண்டுள்ள உணிபோல, ஆளுங்கட்சியாகக் காங்கிரஸ் மாறின பிறகு, அதிலே குடிபுகுந்த குணாளர்களைக் கண்டா மருளப் போகிறோம்?
(முதல் பந்தி - 20.08.1961)

வானத்துக் கருமேகம் மழை முத்தாய் மாறுவதேன்? எவர் பொருட்டு? யார் அழைப்பு? யாது பயன் கருதி? கொடியாட செடியாட களியாட மலராட ஆடை விலகியாட வீசிடும் காற்றதுவும் என்ன பயன் கண்டு இவ்வேலை செய்கிறது?
கதிர் தந்து கொண்டிருக்கும் பயில் வளர்ந்து, யாரிடம் பயன் கண்டு மகிழ்கிறது. பழம் தந்த மரமதுவும் பரிசு என்ன பெறுகிறது. ஒன்றும் கானோம்!
சேராகி வைக்கிறோம், நீர் பெய்து, செடிகொடியும் பயிர் வகையும் இருக்குமிடம்தன்னில்! ஏனய்யா எனக்கிந்த சகதியிடம் எனக்கேட்கும்போதென்னைக் கொள்ளாமல் சேறு தந்த நமக்கு செந்நெல் மணியதனைப் பயிர்தரக் கண்டோம். செந்தேன் சுவை கொண்ட பழம் தந்து மரமதுவும் நம்மை கூறிடுது இன்று இது போதும் நாளை வா! மேலும் பெற, என்று நாமோ என்ன செய்கின்றோம்? கொடுத்தது என்ன கொண்டது என்ன எனும் கணக்கினை மறக்கின்றோம் முற்றும். நமக்குள் ஒருவருக்கொருவர் கொடுப்பது கொள்வது எனும் முறையில், இந்நிலையா கொள்கின்றோம்! அடேயப்பா எத்தனை எத்தனை கணக்குகள், வழக்குகள், காபந்துகள், வல்லடிகள். ஏமாளியோ நான் ஏழு கொடுத்து ஆறு பெற! என்றெல்லாம் கேட்கின்றோம். தூவிய விதையினுக்கு நாம் என்ன தந்தோம். தம்பி, மண்ணுக்குள் போட்டு முடிவிட்டோம் மரித்தவரை செய்வதுபோல். பின்னர் நீர் தெளித்து வருகின்றோம். விதையோ நமக்குத் தாயன்புக்கு அடுத்தபடி எனத்தக்க உள்ளன்பு தருகிறது. பெறுகிறோம், நாம் ஒரு கணக்கும் பார்க்காமல்!
(தேனில் தோய்ந்த பழம் - 14.01.1962)

விடுதலை இயக்கம்
காய்கறி நறுக்கி எடுத்து கொதிநீரில் வேகவைத்து சுவை கூட்டியான பிறகே, பச்கை காய்கறி, பண்டமாகிறது, உண்டு மகிழ! மரண வாயில் போய், போய் வந்த பிறகே தாய், பிள்ளைப் பேறு காண்கிறாள். கீழ் மண் மேலாக உழுது கிளரிய பிறகே போட்டது முளைக்கிறது.
விடுதலை இயக்கம் மட்டுமென்ன, வாய்ப்பந்தலிட்டு, வார்த்தை கொடிபடரச் செய்து பறித்தெடுத்திடும் காயோ?
(சூடும் சுவையும் - 10.06.1962)

 

பகுதி: 1 2 3 4

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம் உவமை நயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai