அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்


சமுதாயம்
பகுதி: 9

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

காமம் பிடித்தவனுக்கு கண்மண் தெரியாது என்பார்கள். காமம் பிடித்தவனுக்கு மட்டுமல்ல யாருக்கு எந்த எண்ணம் வெறிபோல் பிடித்துக்கொண்டாலும் அவர்களுக்கு மற்றவை கண்ணுக்குத் தெரியா.
(கைக்கு எட்டியது - சிறுகதை - 1943)

இதென்ன விசித்திரச் சங்கிலி! ஏழ்மை, அறியாமை - ஒன்றுக்கு மற்றொன்று தாய் - ஒன்றுக்கு மற்றொன்று குழந்தையுமாகிறது.
(நான் மனிதனானேன் - சிறுகதை - 1946)

ஏழை என்பதற்காக சட்டம் இரக்கம் காட்டுமா? ஏதோ பணக்காரன் என்றாலாவது சட்டம் அச்சப்பட்டு ஏதாவது ஒரு சந்து, பொந்து காட்டும் அவன் தப்பித்துக்கொள்ள.
(குற்றவாளி கூண்டுக்கு வெளியே, சிறுகதை - 1955)

இளைஞர் உலகின் மனப்பாங்கு! காலக்கண்ணாடி! எழுச்சியின் எழில் மிகு சித்திரம்! உரிமைப் போர் முரசொலி! விடுதலை விருத்தம்! வாழ்வு எனும் வாவியிலே சுயநலம் எனும் நச்சு கலக்கப்படாத நிலை! குடும்பம் எனும் கோல் கொண்டு துழாவிசேற்றை தள்ளி நீரை பாழக்கா பருவம்! சுயநலமும் சுக போக பித்தும் எருமையென, புந்து இதயத் தாமரையைத் துளைத்தும் பாழாக்கிடாத பருவம்! சந்தனக் காட்டை கடந்து மணத்தை மணந்து இன்பம் எனும் குழவியை பெற்றெடுத்துத் தரும் தென்றல் போல சுருதியும் தாளமும் அமைத்து, சொற்ச்சுவையும், பொருட்சுவையும் இழைத்து கேட்போர்க்கு களிப்பூட்டுவதோடு கருத்தோடும் இசைபோல உள்ளது! வாலிப பருவம், எஃகு கம்பிகள்! செயல் வீரர்கள்! எத்தரை வீழ்த்திடக் காலம் தந்த ஈட்டி முனைகள்! சுராதத்தை அழிக்கும் சுரங்க வெடிகள் பழமையெனும் நீர் மூழ்கி கலத்தி வீழ்த்தும் டார்பிடோக்கள் வைதீகப்புரி மீது பகுத்தறிவு குண்டுகளை வீசும் வீரவிமானிகள்.
(திருமுகம் - திராவிடநாடு - 14.11.1955)

முழுவயிறு கானாதோர், முதுகெலும்பு முறிய பாடுபடுவோர், வாழ்வின் சுவைகானார், வலியோரின் பகடைக் காய்கள் - ஓடப்பர் ஆகிய இவரெல்லாம் தருகின்ற வரிப்பணமே, கோட்டையாய், கொடிமரமாய், பாதையாய், பகட்டுகளாய், அமுல் நடத்தும் அதிகாரிகளாய், அறிவு பெற அமையும் கூடங்களாய் திகழ்கின்றன.

கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்து அளித்தல் என்பவை பாராட்டத்தக்க பண்புகள் என்ற நிலை மாறி இவையே மனித குலத்தின் வாழ் முறைகள் என்றாக வேண்டும்.
(மனிதனும், மிருகமும் - 16.05.1965)

மாணவர்கள் யார்? அவர்கள் நம் இரத்தத்தின் இரத்தம். அவர்கள் நம் குடும்பத்துப் பிள்ளைகள். அவர்கள் நம் எதிர்காத்தின் உருவங்கள். அவர்கள் ஒன்றை விரும்புகிறார்கள் என்றால் என்னால் நிறைவேற்றிக் கொடுக்க முடியும் என்பதை மெய்பித்துக் காட்டவேண்டியது ஜனநாயகக் கடமை என்று கருதுகிறேன்.

முகத்தில் புன்னகையும் அகத்தில் நம்பிக்கையும், செய்கையில் சுத்தமும், சிந்தனையில் தன்னலம் கருதாத் தன்மையுமிருந்தால் போதுமானது.

துணிச்சல் வாதம் என்பது ஒரு முனைவாள். விட்டில் பூச்சியின் துணிச்சலால்தான் அது சாகடிக்கப்படுகிறது.

கோயில்களுக்குள் இருக்கும் சாமிகளுக்கு சக்தி உண்டோ, இல்லையோ, கட்டிடக் கலையின் சித்திர வேலைப்பாடு, ஒவியனின் கைதிறனைப் புகழ்பாடுகிறது.

சாதியும் ஜனநாயகமும் ஒன்றாக இருக்க முடியாது. மூடநம்பிக்கையும் விஞ்ஞானமும் ஒன்றிணைந்து வாழ முடியாது. பல ரூபதிலுள்ள கொடுங்கோன்மைகளும், சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம் என்ற கருத்துக்களும் ஒத்திருக்கவே முடியாது.

உழைப்பே செல்வம்; உழைப்பவர்கே உரிமை, உழைப்பாளிக்கே உலகம் உரியது.

கேடுகள் முளைக்கும்போது, அவற்றினை எதிர்த்து வீழ்த்தி, நல்லனவற்றைப் பாதுகாத்துத் தீரவேண்டும். அது மட்டும் போதாது. கேடுகள் மீண்டும் எழாதபடி பாதுகாப்பு ஏற்படுததிக்கொண்டாகவேண்டும்

நமக்குள்ள பொறுப்புகளை உணராமல், கடமைகளை நிறைவேற்றாமல், உரிமைகளைப்பற்றி மட்டும் உரத்த குரலில் வலியுறுத்திக்கொண்டிருந்தால், அந்த நிலை நம்மை பிணக்கிலும், ஏமாற்றத்திலும்தான் கொண்டுபோய்விடும்.

கடல் நீரிலே கன்னல் சுவையைக் காண முடியாது. காட்டுக் கூச்சலிலே கல்யாணி இராக ஆலாபனத்தைக் கேட்க முடியாது.

நெஞ்சிலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி.

மௌனமாக இருப்பவனை ஊமையென் று கருதுவதும், சண்டையிலே ஒருவன் சேராததாலேயே அவனுக்குச் சக்தியில்லை என்று எண்ணுவதும் முட்டாள்தனமாகும்.

உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன். வாழ்த்துக்குரியவன்! அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையோடச் செய்வதாகும்.

பாட்டாளிகள் போராட்ட முயற்சியின் இடையிலே ஓர் நாள், ஓய்வு பெற்று நின்று, சென்றகால வருங்காலக் கணக்கைப் பார்க்கும் திரு நாளே இம்மேநாள். சென்ற காலங்களில் மகத்தான வெற்றியைக் காண முடியாவிட்டாலும், கண்ட சிறு சிறு வெற்றிகளை நினைந்து மகிழ்ந்து, உள்ளத்தை ஊக்குவித்துக்கொள்ளவும், வருங்காலத்தில் ஆற்ற வேண்டியச் செயல்களை எண்ணிச் செயலாற்றும் நெறியிலே உறுதிகொள்ளவும் இம்மேநாள் பயன்படுகின்றது.

பாட்டளிகளுடைய கடமை, சமுதாயத்திற்கு நன்மை செய்வதிலே இருக்கிறது. அவர்களுடைய கண்ணியம் தங்களுடைய சக்தியைப் பாழ்படுத்திக்கொள்ளாததிலே இருக்கிறது. அவர்களுடைய கட்டுப்பாடு தங்களுடைய ஒற்றுமையை உடைப்பதற்கு யார் எந்த மாதிரி முயற்சி எடுத்துக்கொண்டாலும் ஒரு துளியும் இடம் கொடுக்காத தன்மையிலே இருக்கிறது.

போற்ற வேண்டியவை உண்மை - உழைப்பு - உயர்வு; பின்பற்ற வேண்டியவை கனிவு - பணிவு - துணிவு; பேணப்படவேண்டியவை கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு.

மலர் மாலை மதயானை முன் வீசப்பட்டு அதன் காலில் மிதிபடுவதுபோல, நல்ல பேச்சுக்கு பொல்லாத காலம் வருவதுண்டு. முகர்ந்து, ரசித்து கூந்தலில் செருகி, இன்புற்று மகிழும் மாதரிடம் மலர் சென்று பெருமையும், பயனும் பெறுவதுபோல, நல்ல பேச்சு, சுவையும், பயனும் கண்டறிந்து பெறக் கூடியவரிடம் போய்ச் சேர்வதும் உண்டு.

கிராம மக்களுக்கு உலக அறிவு ஊட்ட கண்காட்சி நடத்தப்படவேண்டும். கிராம மக்களுக்கு உலக அறிவை ஊட்டவில்லையென்றால், அது நாட்டை வாழவைக்காது.

மனதில் மாசு, மதவெறி, சாதி, சுயநலம், ஆணவம் இவற்றை மக்கள் விட்டொழிக்கவேண்டும். அப்போதுதான் நம் நாடு முன்னேறும்.

விவாகரத்து உரிமை இருந்தால், பொருத்தமற்ற மணங்கள் தவறுதலாக நடந்துவிட்டாலும் பின்னர் அதைத் திருத்திக்கொள்ள வழிவகை பிறக்க முடியும். பிடித்த மற்றவர்கள் காலமெல்லாம் கூடி வாழ்வது என்பது நடவாத காரியம்தானே. எனவே பிடித்த மற்றவர்கள் விவாகரத்துகோரி விடுதலை பெறும் உரிமையைப் பெறுவது நன்மைதானே.

பற்றாகுறை மிரட்டுகிறது. அகவிலை அலைக்கழிக்கிறது. கள்ள வாணிபம், கொள்ளை இன்பம் குறுக்கு வழிகள் கலப்படம் போன்ற கேடுகள் நாட்டை பாழ்படுத்துகின்றன. கொடி பறக்கிறது கோலாகலமாக கூடவே இக்கொடுமைகளும் நெளிகின்றன; அடக்குவார் யார் என்று கேட்டபடி.

தான் காத்துவைத்துள்ள பொற்குவியல்தனைக்கொண்டு தானேயா அணிகலனைச் செய்து நிலமாது பூட்டிக்கொள்கிறாள்? இல்லை! மற்றையோர் பெற்றிடத் தருகின்றாள்.

அழகு அழகு என்கிறோமே, எது உண்மையான அழகு? இதுதான் அழகு என்று இதுவரை இலக்கணம் வரையறுக்கப்படவில்லை.

பகுதி: 1 2 3 4 5 6 7 8 9 10

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு
பொருளாதாரம்
|
பெண் | சமுதாயம்



முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai