அண்ணா களஞ்சியம்

இனம்
| மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்
மதம்
பகுதி:
5

பகுதி: 1 2 3 4 5 6

நாலரை கோடி ரூபாய்கள் கோயில்களிலே இன்று முடங்கியுள்ளது. எல்லா வலிவுள்ள ஆரோக்யமான மனிதனது கைகால்களைக் கட்டி, முடமாக்கி வைத்திருப்பது போலத்தானே; நாட்டில் நடமாட வேண்டிய பொன்னையும் பொருளையும் கோவில்களில் அணி, மணிகளாகப் பூட்டி வைத்திருப்பது? இந்தப் பணத்தைக் கொண்டு அந்தந்த ஆண்டவர் பெயராலேயே பள்ளிகளும், மருத்துவ விடுதிகளும் தொழிற்சாலைகளும் ஏன் கட்டக் கூடாது? இதனால் பணமும் நாட்டில் பரவும், மக்கள் துயரும் தீருமே!
(சித்தூர் தி.மு.க. மாநாடு - 11.07.1954)

அமெரிக்கா செல்வபுரியல்லவா? அமெரிக்காவில் ஏசுநாதருக்குத் தங்கத்தேர் செய்யமுடியாதா? இத்தலியில் செய்ய முடியாதா? இது வரையில் நம்மை ஆண்ட பிரிடிஷ் ஏகாதிபத்யம் நினைத்தால் ஏசுநாதருக்கு கருட வாகனம் செய்யமுடியாதா? செல்வமில்லையா அவர்கள் நாட்டில்? நம் நாட்டில்தான் தங்கத்திலே கருட வாகனங்கள், தங்க யானைகள், வெள்ளி ரிஷபங்கள் எல்லாம்! பல கோயில்களில் வைரமாக முத்தாக, பச்சையாக, நவரத்தினங்களாக நகைகள் இழைத்து வைத்திருககிறார்கள். இந்திய அரசாங்கத்தார் இந்தியாவை அடமானம் வைத்து, உலக பாங்கியிலிருந்து கடன் வாங்கப்போகிறார்கள்.
(அறநிலையங்கள் - சொற்பொழிவுகள் - 24.03.1949)

உயுருள்ள பாம்பின் மேல் படுத்துககொண்டு கடலிலே அறிதுயில் செய்யும் மகாவிஷ்னுவுக்கு வாகனமேன்? சிவனார் புலிதோல் தவிர எனக்கு வேறு ஒன்றும் தேவையில்லை என்கிறார். அப்படியிருக்க சிவனாருக்கு வாகனமேன்? தங்க யானை ஏன்? வெள்ளி ரிஷபமேன்? இரவிலே வெள்ளி ரதம் புறப்படுகிறதென்றால், தீவட்டிப் பிடிப்பவர்கள் தேவைப்படுகிறார்கள். திருட்டு நடைபெறாமல் இருப்பதற்கு போலீஸ்காரர்கள் எனும் சி.ஐ.டி.க்கள் வேறு இது மட்டுமா? இதைப் பார்வையிட ஒரு மந்திரி - இவையெல்லாம் பஞ்சம் மிகுந்த இந்த நாட்டில் தேவைப்படுகின்றன. மாதாகோவிலில் நாலு பக்கமும் காலல் ஏதாவது வைத்திருக்கின்றார்களா? வெட்ட வெளியில் ஏதாகிலும் காவல் அங்கே தேவைப்படுகிறதா? இல்லையே!
(அறநிலையங்கள் - சொற்பொழிவு - 24.03.1949)

பாங்கியில் ஓர் 5 ஆயிரம் ரூபாய் வீணாக முடங்கிக் கிடப்பதைவிட அதே பணத்தைக்கொண்டு 5000 ரூபாய்க்கு சரக்கு எடுத்து அதனால் லாபம் சம்பாதிக்கத்தான் வியாபாரிகள் விரும்புவார்கள். அப்பொழுதுதான் முடக்கமின்றி பொருளாதாரம் பெருகும் அதே போல் நம் நாட்டில் பலகோயில்களில் லட்சக்கணக்கான ரூபாய்கள் நகைகளாகவும் நிலங்களைகவும் வாகனங்களாகவும் கிரிடங்களாகவும் மக்களுக்கு ஒரு சிறிதும் பிரயோஜனமில்லாமல் முடங்கிக் கிடப்பதை எடுத்து பல ஆலைகளையும், பல தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தலாமே. இந்தியாவில் வாழும் 40 கோடி மக்களம் வேலை செய்து பிழைக்கலாமே! நாட்டின் பொருளாதார வளமும் பெருகுமே! வேலையில்லா திண்டாட்டமும் ஒழியுமே!
(அறநிலையங்கள் - சொற்பொழிவு - 24.03.1949)

கலை புரட்சி மூலம், இன எழுச்சி - இன விடுதலை கோருவதேயாகும்
(தீ பரவட்டும் - 1943)

தமிழர்கள் இந்துக்களல்லர். தமிழருக்குத் தனி நெறியுண்டு என்றாலும் இவ்விரு மார்க்கங்களைத் (சைவம், வைணவம்) தமிழர்கள் தம்மை இந்துக்கள் என்று கருதி வருகின்றனர். நெறியைவிட்டு ஆரிய நெறியாகிய இந்து மார்க்கத்தைக் கொண்டு, தம்மை இந்துக்கள் என்று கருதிக்கொள்வதால், தமிழரகள் தாங்கள் தனி இனம் என்பதை மறந்து, இந்துக்களில் ஓர் பகுதி என்று எண்ணி தன்மானத்தையும், தன்னரசையும் இழந்தனர்.
(தீ, பரவட்டும் - 1943)

ஒருவனுக்கு ஒரு மனைவிக்குமேல் கூடாது என்று 25 ஆண்டுகளுக்கு இன்னர் கல்லடிப்படப் பேசினோம். இப்பொழுது என்ன ஆயிற்று? சட்டமே வந்துவிட்டது. முருகன் கடவுளாக இருக்கிற காரணத்தால், அவருக்கு விதிவிலக்கு ஏற்பட்டிருக்கிறது. முருகக் கடவுள் மனிதராக இருந்தால் இன்று சர்க்காரால் தண்டிக்கப்பட்டு சிறையிலே தள்ளப்பட்டிருப்பார்!
(தி.மு.க. மாநாடு - சென்னை - 03.06.1950)

ஏ, மனிதனே, டாடா கம்பெனியில் தயாராகுகிற ஆணியை அடித்து, ஜெர்மனியில் அச்சாகிற சரஸ்வதி படத்தை மாட்டி ஜப்பான் அனுப்புகுற கற்பூரத்தைக் கொளுத்தி அழகு பார்க்கும் பைத்தியக்காரா! இங்கே எழில் நிரம்பியிருக்க, இங்கேயே எல்லாம் கிடைக்கும்போது எல்லாவற்றிர்க்கும் மேல்நாட்டை எதிர்பார்க்கிற தமிழா, நீ நாட்டை ஆள முடியுமா? என தமிழனைப் பார்த்து நில மங்கை நகைக்கிறாள்!
(தி.மு.க. மாநாட்டில் - சென்னை - 21.01.1950)

சுவர் இருந்தால்தானே - செப்பனிட்டால்தானே சித்திரம் எழுத முடியும்? பாசி நீக்கப்பட்டால்தானே பருக முடியும், எத்தகைய தண்ணீரானாலும்? தூசி துடைக்கப்பட்டால்தானே ஒளி வீச முடியும், எவ்வளவு உயரிய மணியானாலும்? உருக்கி வார்க்கப்பட்டால்தானே உபயோகமாகும், வெட்டியெடுக்கப்பட்ட எந்த தங்க கட்டியானாலும்? சமுதாய சீர்கேடுகளும், மத மூட நம்பிக்கைகளும், நீக்கப்பட்டால்தானே தக்க பொருளைதார, அரசியல் முன்னேற்றமும், அமைப்பும் காணமுடியும்? அமைத்திடவும் இயலும்?
(தி.மு.க. மாநாட்டில் - சித்தூர் - 1954)

சுதந்திரம், காகிதப் பூவாக இல்லாமல் மணமுள்ள பூவாக இருக்கவேண்டுமானால் மாற்று கட்சிகள் யாவும் வந்த சதந்திரத்தை அனுபவிக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்படவேண்டும்.
(வேலூர் - 03.01.1954)

பகுதி: 1 2 3 4 5 6

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai