அண்ணா களஞ்சியம்

இனம்
| மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்
மதம்
பகுதி:
3

பகுதி: 1 2 3 4 5 6

மதவிஷயமாகவுங்கூட நாங்கள் கூறுவது என்ன? மக்களுக்குள் ஜாதியைக் கற்பித்து பேதத்தை உண்டாக்கும். ஏற்பாட்டை, மதமென்றும் மாண்புடையதென்றும் கூறி அதனை கண்டித்தாலே மகாபாவம் என்று மிரட்டினால் எதற்கும் காரணம் கேட்கும் - எதையும் ஆராய்ந்து பார்க்கும் இந்தகாலத்திலே யார் மருளுவார்கள்? அதிலும் உருவமற்ற ஆண்டவனை உள்ளன்போடு வணங்கி ஒருவரை ஒருவர் தாழ்த்தாமல் ஒன்றே குலம் என்ற தத்துவத்தோடு வாழுகின்ற இஸ்லாமியர்களைக் கண்ட பிறகு, ஆண்டவன் சன்னதியைக் கள்ளர் குகை ஆக்காதீர்கள் என்று பூசாரிகளைக் கடிந்துரைத்த ஏசுநாதரின் வரலாற்றைப் படித்த பிறகு புனிதமான எண்ணமும் ஆசையும் தேவையேத் தவிர நீரில் மூழ்குவதும், நீண்ட தூரம் செல்வதும், ஆரியப் புரோகிதரின் ஆணைக்கு அடங்குவதும், ஆண்டவனை அடைய மார்க்கங்களல்ல என்ற அறிவுரையை, சுக போகத்தைத் துறந்து ஆராண்யத்தில் அலைந்து அறிவின் எல்லைக்கண்டு அவனிக்கு எடுத்துரைத்த புத்த பிரானின் வரலாற்றைப் படித்த பிறகு, எப்படி நம்முடைய பழையகால ஏற்பாடாகிய பார்ப்பன பலிபீடமாகிய இந்து மதத்தை ஏற்றுக்கொள்ளமுடியும்? இதைத்தான் நாங்கள் எடுத்துச் சொல்கிறோம். அதிலும் நம்முடைய சமுதாயம் இன்றுள்ள இழிநிலையை மாற்ற மறுமலர்ச்சியே மருந்து என்று தெரிந்து, அந்தப் பணியில் இறங்கினோமே தவிர, போட்டி மதம் ஸ்தாபித்து புதுப்பூசாரிகள் ஆகவேண்டும் என்பதற்காக அல்ல.
(மறுமலர்ச்சி - சிரம்பரம், 01.07.1945)

ஏன் பல இலட்சக்கணக்கானவர், சிங்கப்பூர் மலாய், நெட்டால் முதலிய நாடுகளுக்கு தத்தம் பெண்டு பிள்ளைகளோடும் தன்னந்தனியராகவும், தாம் பிறந்த நாட்டைவிட்டு அல்லல்பட்டு, அரை வயிறு கஞ்சிக்காவது வழிகிடைக்காதா என்ற வாட்டத்தோடு போகின்றனர்? இறைவனைப்பாடும் இலக்கியக் கர்த்தாக்கள், பகலவனைப் பாடும் பண்டிதர்கள் காதலைப்பாடும் கலைவாணர்கள், இயற்கை எழிலையும், நட்பின் மேன்மையும், நாடறியச் செய்யும் நாவலர்கள், பண்டைப் பெருமையைப் பாடும் புலவர்க குழாங்கள், பாமன் திருவிளையாடலைத் திருத்தமாய் பதிப்பிக்கும் திருகூட்டத்தார் அய்யன் உலா, அம்மை அந்தாதி பாடி, எல்லாம் வல்ல எம்பெருமானை ஏத்தியேத்தித் தொழும் பணியிலே ஈடுபட்டும் யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற அடியை அழைத்து இழைத்து பாடிச் சுவைக்கும் பக்திமான்கள் மற்றுவெராவது இந்த நாட்டிலே செல்வம் கொழித்திருக்க எம் பெருமானுக்கு எல்லையற்ற திருக்கோலங்கள் எழுப்பப்பட்டு அன்றாடம் ஆறுகால பூசை தவறாது நடத்துவர், அதற்கென மலைபோல் செல்வம் முடங்கிக் கிடக்க, இத்தனைக் குடும்பங்கள் மண்ணோடு மண்ணாய் பசியால் வாடி மடிகின்றனவே என்பதை நினைத்ததுண்டா? நெஞ்சில் ஈரம் இருந்து கை வைத்துச் சொல்லத் துணிவுண்டா? அவ்வேழை மக்களின் பரிதாப நிலையைப் பாடினதுண்டா?
(நாடும் ஏடும் - பொழிவு, 1945)


. . . . தற்காலத்திலேயுள்ள குண்டு, துக்குண்டு முதலியனவெல்லாம் பழையகால வாயுவாஸ்திரம், அக்கியாஸ்திரங்கள்தான் என்று வீண் பெருமை பேசுகின்றனர். அத்தகைய அஸ்திரங்கள் அந்தக் காலத்தில் இருந்தனவோ? இல்லையோ? என்பது ஒரு புறமிருக்கட்டும். அவை நமக்குத்தெரியா. ஆனால் இக்காலத்தில் இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால் நாம் நமது அன்றாட வாழ்க்கையில் அவைகளைக் காணலாம், எங்கு? ஏழை பாட்டாளிகளின் வீட்டில்! ஏழை பாட்டாளி நாளெல்லாம் உழைத்த நலிந்து மாலையில் ஆயாசம் தீர அமுத ரசத்தை(கள்ளை) பருகி ஆனந்தமாக உள்ளே நுழைந்து அவன் தனது மவியை அறையும் அறைதான் அக்கியாஸ்திரம், அதைப்பெற்று அவள் அழுவதால் வழியும் கண்ணீர் நமக்கு வருணாஸ்த்திரத்தின் வனப்பை நினைவுக்குக் கொண்டுவருகிறது. அதைக் கண்டு கக்குடியன் விடும் பெருமூச்சு வாயுவாஸ்திரமாகும். இத்தகைய அஸ்திரங்களைத்தான் அன்றாட வாழ்க்கையில் காண்கிறோம். தீக்குண்டு அக்னியாஸ்திரத்தைக் கண்டு உண்டாக்கியது என்று கூறுவது அறியாப் பாலகரும் எள்ளி நகையாடத்தக்க ஏமாற்றுவித்தை. புதியவனை எல்லாம் நம் நாட்டு பழம்பெறும் பொக்கிஷங்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவை என்று பேசிப் பூரிப்பதிலே பெருமை ஏதாவது உண்டா? இல்லை முக்காலும் இல்லை. இதனால் வீண் வீராப்பு பெருகுகிறது. மதி தேய்ந்து மந்தமடைகிறது. அறிவு அசட்டைச் செய்யப்படுகிறது. பழையவனவற்றில் பெருமை உண்டு. புதியவனவெல்லாம், பழமையைக் கண்டுதான் செய்தவை என்றாலும் இவை இன்று எங்கே? எங்கே, எங்கே என்று கேட்கிறேன். அந்நியநிடம் சோரம் விட்டு அண்ணாந்து ஆர்பாட்டம் செய்கிறாயே, அது உனக்குப் பெருமையா? சிறுமையா? உள்நாட்டில் இருந்து என்று உரத்து, உரத்துப் பேசுகிறாயே அந்த வீரம் இன்று எங்கே? எங்குபோய் ஒளிந்தது. சமத்துவம் பண்டைய ஏடுகளிலே சரமாரியாகப் பரவிக்கிடக்கின்றதென்றாயே அந்த சமத்துவம் இன்று நாட்டிலே சல்லடைபோட்டு சலித்துப் பார்த்தாலும் சல்லிக்காசு பெறுமான அளவுகூட அகப்படவில்லையே. பழமை வீரம் பேசுவது பயனளிக்குமா என்று ஆராய்ந்து பாருங்கள்.
(நாடும் ஏடும் - பொழிவு, 1945)

கிருத்துவனுக்கோ ஒரே ஒரு பிதா, பரமண்டலத்தில் உண்டு. இஸ்லாமியனுக்கோ ஒரே கடவுட், அதுவும் உருவமற்ற அரூபி. ஆனால் நமக்கோ மூலக் கடவுளர் மூவர். அவருக்குக் குடும்பங்கள் பல. அதிலும் நிரந்தரக் குடும்பங்கள் சில, தற்காலிகக் குடும்பங்கள் பல. உதாரணமாக சிவனாருக்கு, பார்வதியும், கங்கையும் நிரந்தரக் குடும்பங்களாகும். தற்காலிகக் குடும்பங்களோ தாருகாவன ரிஷி பத்தினிகளைப்போல் சமய சந்தர்பங்களுக்க ஏற்றவாறு இருக்கும். ஏன் இதைக் கூறுகிறேன்? நமக்கும் கிருத்துவனுக்கும், இஸ்லாமியனுக்கும் கடவுள் உணர்ச்சியில், தன்மையில் உள்ள வேற்றுமையைக் காட்டத்தான். நம்முடைய கடவுட்தன்மை கயமைத்தனமாக உள்ளது. கபோதித்தனமாக உள்ளது என்பதை உறுத்திக்காட்டத்தான். இவ்வித கயமைத்தனத்தையும், கபோதிக் குணத்தையும் விடுத்து, கடவுள் சர்வவியாபகன், உருவமற்ற அரூபி, அருளுடையவன் என்று மட்டும் ஏன் கூறலாகாது? இதற்கு புராணம் ஏன்? மதன் ஏன்? மக்களிடையே சாதி ஏன்?
(நல்ல தீர்ப்பு - 19.02.1945)

மதம் என்பது இந்த உலக வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அதன் கவனமெல்லாம் மறு உலகத்தைப் பற்றியதுதான். அதுதான் அப்படியென்றால் தற்கால சமுதாய ஸ்தாபனங்களோ, மக்களின் சமதர்மத்தை அழித்து தீங்குவிளைவிப்பனவாக இருக்கின்றன. ஜாதிப்பிரிவு முறை, பாலிய விவாகம் கூட்டுக் குடும்ப நிர்வாக வழக்கம், தர்ம திட்டம் முதலியவையாவும் ஜனங்களின் சமுதாய முன்னேற்றத்திற்கும் தொழில் அபிவிருத்திக்கும் முட்டுக் கட்டையாயிருந்து வருகின்றன.
மதஸ்தாபனங்களில் நடைபெற்றுவரும் தர்ம கைங்கரிய முறைகளால் ஜனங்களில் அநேகரிடம் சோம்பல் வளர்வதற்கு இடமேற்பட்டுவிடுகிறது. அத்தகைய தர்மஸ்தாபனங்களும் சிறந்த நோக்கமும் பரோபகாரக் கொள்கையும் பெரிதும் பாராட்டத் தக்கவைதான். ஜனசமூகமும் சர்க்காரும் அத்தகைய தர்ம நிர்வாகங்களை ஏற்றுக்கொள்ளும்வரையில் அவைகளால் நல்ல பலன் ஏற்படும் என்பதில் தடையில்லை. ஆனால் தற்கால தர்மஸ்தாபனங்கள் தப்பு வழிகளில் உபயோகிக்கப்படுகின்றன. மதத்தின் பெயரைச் சொல்லி திடகாத்திரமுள்ளவர்கள் இலாபமடைகிறார்கள். ஜனங்களில் மட நம்பிக்கையாலும் ஏமாந்த தன்மையாலும் சோம்பலுள்ளவர்களே நன்மையடைகிறார்கள். உண்மையில் தேவைப்பட்ட அநேகர் கவனிப்பாரற்று இருக்கிறார்கள்.
(புராணம் போதை தரம் லேகியம் - 03.02.1946)

ஜாதி
ஜாதி முறை சமுதாய பிற்போக்கிற்கும் தொழில் மந்தத்திற்கும் பிரதான காரணமாயிருக்கிறது. ஜாதி கொள்கையில் ஒருவித கேவலமான இறுமாப்பு இருக்கிறது. அதனால் சிலர் பயனற்ற இறுமாப்புக்கொள்கின்றனர். பலர் சிறுமையும் அதைரியமும் அடைகிறார்கள். ஆகவே இத்தகைய நிலைமையில் உழைப்புக்குள்ள உண்மை மதிப்பு போய்விடுகிறது.
(03.02.1940)

பகுதி: 1 2 3 4 5 6

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai