அண்ணா களஞ்சியம்

இனம்
| மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்
மதம்
பகுதி:
2

பகுதி: 1 2 3 4 5 6

மார்க்கம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது - மக்களை அறிவுத் தெளிவுபடுத்துவது - மக்களை ஒற்றுமைப்படுத்துவது - அரிய பந்தங்களை ஏற்படுத்துவது - நல்ல தோழமையை வளர்ப்பது - சிறந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது. எது மதம் எனச் சொன்னால், அது மக்களை மத மதப்பில் ஆழ்த்தும்; அதற்கு போலீஸ் தேவைப்படும். மார்க்கநெறியில் நின்றால் மக்கள் அன்பு வழியில் ஒன்றுபடுவார்கள்
(மிலாதுநபி விழா - சொற்பொழிவு)

மார்க்கங்கள் நிலைத்திருக்க வேண்டுமேயானால் மாண்பு பெற வேண்டுமானால், அவை சமுதாயத்திற்குப் பயன்படவேண்டும்.

கிருத்துவர் எனில் ஒரே ஆண்டவன், ஏசு, ஓர் வழிகாட்டி, பைபிள் என ஓர் வேதம். இசுலாமியர் எனில், நபிகள் நாயகத்தை வழிகாட்டியாகவும், குரானை வேதமாகவும் கொண்டு உருவமற்ற ஏகதெய்வத்தை வழிபடுவோர் என்று கூறலாம். இந்து என்றாலோ யாதைக் குறிப்பது, எவ்விதம் விளக்குவது? இனமென்பதா, மதமென்பதா, இயல்பு என்பதா?
(திராவிடநாடு 26.06.1942)

அர்ச்சனை தமிழில் வேண்டும் என்று இன்று கூறுகிறார்கள். சரி என்ற ஒப்புக்கொண்டால் அத்துடன் நிற்குமா? அர்ச்சகர்கள் ஏன் தமிழர்களே இருத்தல் கூடாது என்று கேட்பர். அத்துடன் நில்லாது, ஆலயத்தில் அவரவர் சென்று தொழுகை நடத்தலாமே இதற்கு அர்ச்சகர் என்றொரு தரகர் எதற்கு என்று கேட்பார்கள் - பித்தம் வேகமாக வளரும். இது அர்ச்சகர்களின் எண்ணம். அவர்கள் எண்ணுவது அடியோடு தவறு என்று கூறிவிடமுடியாது காற்று அப்படித்தான் அடிக்கும்.
(அர்ச்சனை - கட்டுரை, 03.05.1955)

பிறமதங்களிலே அற்புதம் அதிகம். அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்தில் அடிப்படை உண்மைகள் அதிகம்; அற்புதங்கள் குறைவு.
(மிலாது நபி விழாவில் - உரை)

யார் என்ன சொன்னாலும், எவ்வளவு முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் பொதுவாக மதத்தில் நம்பிக்கை குறைந்து வருகிறது. இதை நான் சொல்லுவதால் வருந்துவதில் பலனில்லை சற்று ஆராயவேண்டும்.

கருத்தை உபதேசிப்பவர்கள் உபதேசித்தப்படி நடந்துகாட்டவேண்டும். உபதேசிக்க என்று ஒரு கூட்டம். உபதேசித்தப்படி நடப்பதற்கென்று ஒரு கூட்டம் இருக்கக் கூடாது. நபிகள் நாயகம் சொன்னார், சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார். அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான், உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.
(மிலாதுநபி விழா - உரை)

நாம் யாருக்கும் மேலல்ல! யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது, தாயையும் ஆகாது, சேரியும் கூடாது, அக்ரகாரமும் ஆகாது, யோக யாக புரட்டுகள், புரோகித பித்தலாட்டம், மனுக்கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரி நிகர் சமமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படி தம்மை இந்து என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடம் தரும்? எப்படித்தான் துணியும்? இந்து மதம் என்பதிலே உள்ளக் கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதைமுறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவைகளை அலசிப்பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் இந்து என்று கூறிக்கொள்ள மனம் இடம் தரும்? பாம்பை எடுத்து படுக்கையில் விட்டுக்கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டுபோய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களைவிட்டு மதிகெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீளாமார்க்கம் தேடுவதைவிட்டு, மாளவழி தேடிக் கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்ப மிடுவரா? கண் தெரியும்போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு, திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத்திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கிப் போய்ச் சேரார்! இழிவைத் தேடார்!!
(ஆரிய மாயை - கட்டுரை)

நமக்கு நாலு; ஆறு நாற்பத்தெட்டுக் கண் படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன்! உண் வேண்டாத சாமி! ஊரார் காசை கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல், அலங்காராதிகள், அப்பம், பாயசம், அகாரவடிசல் கேட்காத சாமி! அங்கே இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை உண்டியல் என்று கூறி அக்ரகாரத்தை கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும்! நம்மிடமிருந்து தியானத்தைப் பெறட்டும். அருளைத் தரட்டும் நம்மிடமிருந்து தட்சினைப் பெற்று தக்பாசூரர்களக்கு தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிபடுத்தவே நாம் நம்மை இந்து அல்ல என்று கூறுகிறோம்.
(ஆரிய மாயை - கட்டுரை - 26.01.1943)

ஆள் நடமாட ஓர் உலகம். ஆவி உலவ மற்றோர் உலகம். இந்திரன் இருக்க ஓர் உலகம். நான் தங்க ஓர் உலகம், மேலே ஏழு, கீழே ஏழு, எனப் பதினான்கு உலகங்களாம். அதல, விதல,சுதல தராதல, இராசாதல, மகாதல பாதாளம் என ஏழாம்! பூலோக, மகாலோக, சத்யலோக என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டாம், ஓட்டிலே, நமக்கு இவை வேண்டாம் நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும் நான் செய்யும், புன் செய்யும், சாலையும், சோலையும், வாவியும், நதியும் மக்களுக்கு சுபீட்சமும் இருக்கட்டும். காமதேனும், கற்பக விருட்சமும் ரம்பையும், ஊர்வசியும் உலவும் உலாம் வேண்டாம். நாமிருக்கும் நாட்டிலே நாம் கீழ் ஜாதி என்ற கொடுமை இன்றி நாமார்க்கும் குடியல்லோம் என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்திலேதான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.
(ஆரிய மாயை - கட்டுரை - 26.04.1943)

சோம விரதத்துக்கு புராணம் கற்பிக்கும் மகிமை உண்மையானது என்றால், பாரத கண்டத்திலே கணவனை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறியிருக்கமாட்டார்களே.

அதைப் போலத்தான் இந்தப் புராணிகர்களின் நிலமையும், சோமரார விரதத்தின்போது பூஜைக்குரியவர்களென்று சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள, பார்பனர்களிலே எத்தனை விதவைகள். அவர்களுக்கு சோமவிரதம் அனுஜ்டிக்கத் தெரியாதா?
(நமப்பார்வதிபதயே - கட்டுரை - 07.05.1944)

இடைக்கால கவிகளும், அதற்குப் பின்னால் ஏற்பட்ட அநேக கவிகளும், காலமெனும் சிறையில் தங்களைத் தாங்களே ஒப்படைத்துவிட்டார்கள். அவர்கள் அதனின்று வர முயன்றால் அதைச் சுற்றி மதமெனும் மண்டபச் சுவரை எகிறி குதிக்கவேண்டும். சாத்திரமென்னும் சப்பாத்தி வேலிகளை தாண்டவேண்டும். ஆதலால்தான் அந்தக் கவிகளுக்கு ஆண்டவனின் அவதார லீலைகள் பற்றியும் கயிலைக்கும் திருப்பதிக்குமுள்ள தொடர்பை பற்றியும், தேவாதி தேவர்கள் பற்றியும், தேவாதி தேவன் கௌதமர் ஆஸ்ரமத்திலே நேர்ந்த ஆபாசங்கள் பற்றியும், எழுத எண்ணம் பிறந்ததே ஒழிய, காடுகளைப்பற்றியோ, மாடுகளைப்பற்றியோ, மலைகளைப்பற்றியோ, கவிதைகள் சொல்லவில்லை.
செய்யவில்லையா அடாது! காலைக் கதிரவனைப் பற்றியும் மாலை மதியம் பற்றியும் பாட்டுகளில்லையா? இதோபாரும் என்று சொல்லலாம். இருக்கின்றன. ஆனால் வைதீகமெனும் குறுக்குச் சங்கிலியுடனே பிணைக்கப்பட்டிருக்கின்றன.
(ஏ, தாழ்ந்த தமிழகமே! - பொழிவு - 20.09.1945)

சிவனே, அப்பா உனது பாதாரவிந்தம் எப்போது கிடைக்கும் என்று சிலைக்கு முன் கதறுகிற ஒருவரிடம், ஒரு வேளை பரமசிவன் போல் யாராவது வந்து பக்தா பயப்படாதே, எழுந்தரு! உனது சிவனேசத்தைக் கண்டு உளம் பூரித்தேன். இன்று முதல் நீ என்னுடன் இரண்டற கலந்து கொள்ளலாம் வா என்று அழைத்தால் போவதற்கு அவர் தயாராயிருப்பாரா, என்று கேட்கிறேன். என்ன சொல்வார் அப்பொழுது, பிதாபோல் தாங்கள் காட்சியளித்தது போதும் என்பார். அப்போதுதான் பரிட்சை எழுதிக்கொண்டிருக்கும் தன் மகன் பி.ஏ.யில் முதல் வகுப்பில் பாசாக வேண்டாமா, என நினைப்பார். தன் ஒரே மகளுக்கு நல்ல இடத்தில் மணமுடித்து வைக்கவேண்டுமே என்று நினைப்பார். போன வருடம் பாங்கியில் போட்ட 9 ஆயிரம் எப்போது 10 ஆயிரமாகும் என்று எண்ணுவார். ஈசனைப்பற்றிய எண்ணம் தோன்றாது. உண்மையிலேயே அவர் பக்தியில் அர்த்தமிருக்கிறதா? மாயவாழ்க்கைப் பேசுவதில் நிஜம் இருக்குமா? என்றால் இல்லை. இவைகளெல்லாம் மக்களை மயக்கி அவர்கள் உழைப்பிலே வாழ்வதற்காக, நயவஞ்சகர்களால் வகுக்கப்பட்ட சூழ்ச்சியான வழிகள். மக்கள் இதை நம்பி இந்த வழியில் போய்த் தடுமாறுகிறார்கள்.
(ஏ, தாழ்ந்த தமிழகமே - பொழிவு - 20.09.1945)

மாய வாழ்வு, விதி, அந்த லோகம் என்பவைகளெல்லாம் புரட்சி மனப்பான்மையைத் தீய்த்துவிட்டன.
இல்லாவிட்டால் 150 ஆண்டுகளாக இவ்வளவு பெரிய நாடு பரந்ததொரு விஸ்தீரணத்தைக் கொண்ட நாடு பலப்பல புராணப் பெருமைகளைக் கொண்ட நாடு, அந்நியனுடைய ஆட்சியிலே இருந்ததாகக் கேட்வி பட்டிருக்கிறீர்களா? அல்லது பார்த்திருக்கிறீர்களா? மேல் நாடுகளில் 25 ஆண்டுகளுக்கு ஒரு தடவை புரட்சி என்று படிப்போம். இங்கு ஏதாவது புரட்சி உண்டா? என்றால் இல்லை. இன்றில்லாது நாளையாவது ஏற்படுமா? வங்கத்தில் பஞ்சம் ஏற்பட்டது, பட்டினியால் பல இலட்சம் பேர் பலியானார்கள். அந்தப் பிணத்தை நாயும், நரியும் இழுத்தன என்ற இந்தக் காட்சி, என்ற இந்த நிலை மேலை நாடுகளிலே, வேறு நாடுகளிலே மட்டும் ஏற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும். அப்பொழுதே புரட்சி நடந்திருக்கும். ஆனால் துர்பாக்கியமான இந்த நாட்டிலே அது கிடையாது. ஏன் ஏற்படவில்லை? இல்லை. புரட்சி மனப்பான்மையையே நமது கவிதைகளும், காவியங்களும் அடக்கிவிடுகின்றன, அதனால்தான்.
(ஏ, தாழ்ந்த தமிழகமே! - 20.09.1945)

பகுதி: 1 2 3 4 5 6

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai