அண்ணா களஞ்சியம்


இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்


பொதுவாழ்வு
பகுதி: 2

பகுதி: 1 2

» விஞ்ஞானம் இந்த நாட்டில் மதிப்பற்றிருப்பதுபோல் வேறு எந்த நாட்டிலும் மதிப்பற்றிருக்காது. இதோ நான் பேசுகிறேன். என் முன் ஒலிபெருக்கி இருக்கிறது. அது நான் பேசுவதைப் பெரிதாக்கி நாலாபக்கத்திலும் உள்ள பலரும் கேட்கும்படி செய்கிறது. அது எப்படி வேலை செய்கிறது என்று கூறிப்பாருங்கள். மேட்டூர் அணையை எப்படி கட்டியிருக்கிறார்கள் என்ற கூறிப்பாருங்கள், கப்பல் கனமிருக்கும்; அது எப்படி கடலில் மிதக்கிறது என்று கூறிப்பாருங்கள் அல்லது எந்த ஒரு விஞ்ஞான சாதனத்தைப் பற்றி கூறிப்பாருங்கள் ஆச்சர்யமாகக் கேட்கமாட்டார்கள். அவைகளில் அதிசயமிருப்பதாகவும் அவர்களுக்குத் தோன்றாது. அப்படி கொஞ்ச நேரம் கேட்டாலும், அதை மறுகணமே மறந்துவிடுவார்கள். ரேடியோவைப்பற்றிக் கூறுங்கள் . . . டெலிவிஷனைப் பற்றிக் கூறுங்கள் ஏதோ கேட்பார்களே ஒழிய, அதிலே ஆச்சர்யம் இருப்பதாக நினைக்கமாட்டார்கள். கூறும்போது அப்படியா என்று சொல்வார்கள். அவ்வளவுதான். இவ்வளவையும் கேட்டுவிட்டு திடீரென்று சொல்வார்கள். நீங்கள் இதிலெல்லாம் ஆச்சர்யம் இருப்பதாக சொல்கிறீர்கள், என்ன ஆச்சர்யம் இருக்கிறது?

» அங்கே ஒரு வேப்ப மரங்க, அதன் மகிமை காயெல்லாம் கசக்காமல், தித்திக்குதுங்க. ஜனங்கள் கூட்டம் கூட்டமாகப் போறாங்க என்று கூறுவார். விஞ்ஞானத்திடம் இப்படி ஏன் அவர்களுக்கு மதிப்பிருப்பதில்லை? காரணம் எந்த விஞ்ஞான சாதனத்தையும் இவர்கள் சிரமப்பட்டுக் கண்டுபிடிக்கவில்லை.
(பொழிவு - நிலையும் நினைப்பும்)

» வெடித்துக் கிடக்கும் வயல், பட்டுப்போன நிலையில் உள்ள மரம், உலர்ந்துகொண்டு வரும் கொடி, வற்றிக்கொண்டு வரும் குளம், இவைபோல சமுதாயத்தின் நிலையும், நினைப்பும், நடவடிக்கையும் ஆகிவிடும்போது, இந்த அவல நிலையைப் போக்கியாக வேண்டுமென்ற ஆர்வமும், போக்க முடியும் என்ற நம்பிக்கையும், போக்கக்கூடிய அறிவாற்றலும் கொண்ட ஒரு சிலர் முன்வருகிறார்கள் அறிவுப் பண்ணைக்குப் பணியாற்ற. அவர்களை நாடு வரவேற்பதில்லை, மாச்சர்யத்தை வாரி வீசும். துணை புரிவதிலை, தொல்லை தரும். எனினும் அந்த ஒரு சிலர் ஓயாது உழைத்து, சலிப்பு, கோபம், வெறுப்பு, பகை எனும் உணர்ச்சிகளுக்குப் பலியாகிவிடாமல் புன்னகையும் பெருமூச்சும் கலந்த நிலையில் பணிபுரிந்து, பட்மரம் துளிர்விடும்வரை, படர்ந்து போக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடும் வரையில் பாடுபட்டு வெற்றி கண்டு மறுமலர்ச்சியை உண்டாக்கி வைக்கிறார்கள்.
(நாடகத்தில் மறுமலர்ச்சி - வானொலி பொழிவு - 1948)

» வாழ்கை என்பது தானும் வாழ்ந்து மற்றவர்களை வாழவைப்பதுதான் வாழ்க்கை. ஆனால் இன்று பத்து பேர் கெட்டால்தான் தன் வாழ்க்கைச் செம்மை பெறும் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. இநத் வழியிலேதான் சமூக அமைப்பும் இருக்கிறது. - பொருளாதார நிலையும் இருக்கிறது.
(இலக்கியமும் வாழ்க்கையும்)

» மனம் விசாலமானதாகவும் அதற்குள்ள நுழைவு வாயில் தாராளமான போக்குவரத்திற்கு ஏற்றபடியும், இல்லாத காரணத்தால்தான் கொள்கை புகவும், வெளியேறவும் போராட்டமே நடைபெறவேண்டி ஏற்பட்டுவிடுகிறது. மனம் குகைபோன்ற அமைப்பும் நிலையும் கொண்டிருக்கும்வரையில் இநத் கோர நிலமை இருக்கும். மனம் விசாலமாக வேண்டும். நுழைவு வாயில் நெருக்கடி ஏற்படும்படியான நிலமை இருக்கக்கூடாது. மக்கள் தமது மனத்தை விசாலப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் புதுப்புது கொள்கைகள் இடந்தேடிக்கொண்டு வந்தபடிதான் இருக்கும். விசாலம் அதிகமாகாவிட்டால் இட நெருக்கடி, நுழைவுச்சண்டை ஏற்படும்.
(ஏதென்ஸ் நகரில் அன்றொரு நாள் - கட்டுரை - 22.02.1948)

» உரத்த குரலோன் காட்டிய வழியில் நடந்தோம், அரசியலில்.
கம்பன் காட்டிய வழி சென்றோம், சமூகத் துறையில்.
பூரனதி காட்டிய வழிநடந்தோம், அருள் பெரும் நெறியில்.
எத்தன் காட்டிய வழி நடந்தோம், பொருளாதரத் துறையில்.
எனவே எவ்வழியும் சரியாக இல்லாதது, வழியற்று, வகையற்றுப்போனோம் - அதைக் காணும் வழியற்ற நிலையிலும் நம்மில் பலர் இருக்கிறோம். மற்றும் சிலர் நிலமையைக் கூற மொழியற்று முயலானோம்.
(புதிய பாதை - கட்டுரை - 14.01.1951)

» ஏழ்மையின் காரணமாக நல்லவன் தீயவனாகிறான். அவனை அந்த கதிக்கு ஆளாக்கிவிடுவது சர்கார்தான். பாரதியாரின் கோபம், இந்தப் பிரச்சினையில் அளவு கடந்து சென்று, உலகையே அழித்துவிடலாம் என்ற அளவுக்கு ஆத்திரத்தோடு முழக்கமிடச்செய்தது. தனிவொருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்துவிடுவோம் என்றல்லவா பாடினார்.
பாரதியின் கோபம் உலகத்தோடு நின்றது. வள்ளுவரோ, ஆண்டவனிடமே சென்று அச்சமூட்டுகிறார். பிச்சை எடுததுத்தான் ஒருவன் பிழைத்தாக வேண்டும் என்ற நிலை இருக்குமானால் அப்படிப்பட்ட உலகு இயற்றியானை ஒழித்துக் கட்டுவோம் என்றே கூறுகிறார்.
உலகையோ, உலகியற்றியவனையோ ஒழித்துக்கட்டுமளவுக்கு ஆற்றல் வேண்டியதுகூட இல்லை. குற்றம் பிறப்பதும், குணம் சிறப்பதும் சுற்று சார்பை பொறுத்து இருக்கிறது என்ற உண்மையை ஊராள்வோர் உணர்ந்து, மனிதனுடைய சுற்று சார்பு செம்மை படத்தக்க வகையில் காரியமாற்றினாலேயே போதும் - குற்றம் பெருமளவு குறைந்துவிடும்.
(குற்றவாளி கூண்டுக்கு வெளியே - சிறுகதை)

» ஒழுக்கம் பொது நீதி, ஆனால் அது இடத்துக்கிடம் ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றது. எல்லா மக்களுக்கும் ஒழுக்கம் ஒரே படித்தாயில்லை. பெண்ணுக்கு ஓர் ஒழுக்கம் சொல்கிறோம். ஆண் அதைக் கடைப்பிடிப்பதில்லை. ஏழைக்கு ஓர் ஒழுக்கம் சொல்கிறோம். பணக்காரன் அதைக் கடைபிடிப்பதில்லை.
(பொழிவு - சொல்லும் பயனும் - 04.08.1951)

» நம் மனம் ஒரு மியுசியம் போல் இருக்கிறது. எது கொள்ளத்தக்கதோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள். எது தள்ளத்தக்கதோ அதைத் தள்ளிவிடுங்கள்.
(பொழிவு - சொல்லும் பயனும் - 04.08.1951)

» மகன் பேசும் ஆங்கிலத்தை கேட்டு வியப்படையும் தந்தை, மேலதிகாரி பேசும் அங்கிலத்தைக் கேட்டு ஆச்சர்யப்படும் ஊழியர் நம் தமிழகத்திலே அதிகரித்ததும் தானாகவே, தாய் மொழிக்கு ஒரு தாழ்நிலை ஏற்பட்டதை நாம் கண்கூடாக காணவில்லையா?
(செக்கோஸ்லோவாகியா - 06.09.1949)

» வாழ்வு அளிக்கும் நிதி களங்கமற்ற நல்ல பெயர் - கண்ணியம்தானே ஒழிய வேறல்ல. அவை இல்லாவிடின் மனிதன் வெறும் வர்ணம் பூசிய களிமண்தான்.

» அவனை வறுமை கொட்டிக் கொண்டே இருந்தால் அவன் என்ன செய்யமுடியும்? திருடுகிறான்.
. . . இப்படி நிலமைகள் ஆகாதிருக்கவேண்டுமானால், சமூகத்தின் அடிப்படை ஆபத்து, வறுமை என்ற தெளிவும் அதனைக் களைந்தெறியும் திட்டமும், ஆட்சியாளர்களிடம் இருத்தல் வேண்டும். உபதேசம் செய்வதாலும், சட்டத்தைக் காட்டிச அச்ச மூட்டுவதாலும், குற்றங்களைக் களைந்துவிட முடியாது. சுற்ற சார்பை செம்மைபடுத்தவேண்டும். ஏழை குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படும்போது, உண்மை குற்றவாளி வேறு இடத்தில் இருக்கிறான் என்பதுதான் பொருள். குற்றம் புரிய வேண்டிய நிலையில் அவனைக் கொண்டு சேர்த்த சூழ்நிலையை மாற்றாதிருக்கும் உண்மை குற்றவாளி இருக்கிறான் வேறு இடத்தில்.
(குற்றவாளி கூண்டுக்கு வெளியே - 02.10.1953)

» சேற்றிலே இறங்கிச் செந்தாமரையைப் பறித்து வந்து மாளிகையிலே தருகிற கூலியிடம், செந்தாமரையின் அழகா தெரியும், சேற்றின் நாற்றம்தானே அடிக்கும்! அவனைச் சேற்றிலே இறங்கச்செய்து, அவன் பறித்து வந்த செந்தாமரையை கண்டு மகிழ்வதுடன் அவன் நாற்றம் பிடித்தவன் என்று அவனை ஏசுவதும், விரட்டி அடிப்பதும் நடைபெறுகிறது!
(இருளில் ஒளி - திராவிடநாடு இதழ் - 20.11.1955)

இளைஞர்
» இளைஞர் உலகின் மனப்பாங்கு காலக்கண்ணாடி! எழுச்சியின் எழில்மிகு சித்திரம்! உரிமைப் போர் முரசொலி! விடுதலை விருத்தம்! வாழ்வு எனும் வாவியிலே சுயநலம் எனம் நச்சு கலக்கப்படாத நிலை! குடும்பம் எனும் கோல் கொண்டு துழவிசேற்றை தள்ளி நீரை பாழாக்கா பருவம்! சுயநலமும் சுகபோக பித்தும் எருமையேன, புகுந்து இதயத் தாமரையைத் துளைத்தும் பாழாக்கிடாத பருவம்! சந்தனக் காட்டை கடந்து மணத்தை மணந்து இன்பம் எனும் குழவியை பெற்றெடுத்துத் தரும் தென்றல் போல, சுருதியும் தானமும் அமைத்து, சொற்ச்சுவையும், பொருட்சுவையும் இழைத்து கேட்போர்க்க களிப்பூட்டுவதோடு கருத்தோடும் இசை போல உள்ளது வாலிப பருவம்! எக்கு கம்பிகள்! செயல் வீரர்கள்! எத்தரை வீழ்த்திடக் காலம் தந்த ஈட்டி முனைகள்! சுராதத்தை அழிக்கும் சுரங்க வெடிகள்! பழமையெனும் நீர் மூழ்கி கலத்தை வீழ்த்தும் டார்பிடோக்கள்! வைதீகப்புரி மீது பகுத்தறிவு குண்டுகளை வீசும் வீரவிமானிகள்!
(திருமுகம் - திராவிடநாடு - 14.01.1955)

» வாழ்க்கை ஓர் சுதந்திரமானச் சொல் ஆனால் சுகந்தேடிகள் இதைப்பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை! பிறந்தோம் பிறர் இருக்கின்றனர்உழைக்க, வந்ததை வைத்து உடல் அலுக்காமல் வாழ்வோம். அதுதான் நாம் பிறந்ததின் பயன் என்ற ஊதாரிக் கொள்கை அவர்கள் உள்ளங்களில் ஊரிப்போயிருப்பதால்! இது வாழ்க்கையின் ஓர் நிலை. மாயப் பிரபஞ்சமிது, பொல்லாதது, மானிட வாழ்விது நில்லாது. காயமே இது பொய் காற்றடைத்த பை என்ற குருட்டு வேதாந்தம், இருட்டுக் கொள்கை, மக்களுடைய மனதிலே இடம் பிடித்து, அமர்ந்து அட்சி நடத்தும் காரணத்தால், பலருக்கு வாழ்க்கை என்பது பற்றி சிந்திக்கும் நினைவு கூட ஏற்படுவதில்லை. இது பிறிதொருநிலை வாழ்க்கை என்ன, இது எப்படியேற்பட்டது, நாம் எல்லாம் யார்? மனிதன். மனிதவர்க்கம் என்றெல்லாம் கூறுகிறோமே அப்படி என்றால் என்ன, என்பது பற்றி எண்ணியதுகூட இல்லை பலர். இது வேறோர் பக்கம்.
(1957)

பாமரர்
» வகை அறியாதவர் அல்ல பாமரர் காலம் வரட்டும் என்று காத்திருக்கும் பொறுமைசாலிகள். அறிவற்றவர்கள் அல்ல மக்கள் ஆத்திரத்தை அடக்கிக்கொள்ள கற்றவர்கள்! பிடி சாம்பலாகிப் போனவர்கள் அல்ல அந்த மக்கள்! நீறு பூத்த நெருப்பாகி நிற்பவர்கள்!
(ஐந்து கால் பசு - திராவிடநாடு - 16.10.1960)

மகிழ்ச்சி
» மகிழ்ச்சி மயக்கம் மன்னுயிரைத்தான் மாய்க்கம் என்று கூறினால் அல்லம் நம் தமிழர் எனினம் மகிழ்ச்சியே வினை. வேறு செயல் வேண்டாம் என்றிருத்தல் நன்றன்று வினை வித்து! மகிழ்ச்சி விளைவு! அந்த விளைவு அவ்வளவும் தின்று தீர்த்துவிட்டால் பின் வினைக்கு வித்து ஏது எனவே விளைவு அளிக்கும் சுவையினை உண்டு, மகிழ்ந்திருப்பதுடன் இருந்திடாது வித்து எடுத்து வைத்து, மீண்டும் வினை மேற்கொள்ளவேண்டும். அங்ஙனம் முறை வகுத்துக்கொண்டால்தான், வாழ்வில் வளம் காண வகை கிடைக்கும். தெடர்ந்து, மகிழ்ச்சி, மயக்கமாகுதல் கூடாது! மது மாந்திடும் மந்தி போன்றதன்று மனித குலம்! மகிழ்ச்சி, புது முயற்கிகட்கு ஊக்குவிக்கும் மாமருந்து, மதுவன்று!
(தம்பிக்கு திராவிடநாடு - 14.1961)

வினை - விளைவு
» ஒரு விளைவு, மறு வினைக்கு துவக்கம், மகிழ்ச்சி, வினையின் இறுதி முடிவல்ல! வினைப்பயன்! புதிய வினைக்கு அழைப்பு! புதிர் அல்ல, புண்யம் பேசிடுவோர் கூறிடும் தத்துவமும் இஃதல்ல பொருள் பதிச்த உண்மை. தமிழருக்கு இது புதிதுமன்றி! (இல்லறம் இன்பப்பூங்கா திராவிடநாடு - 14.02.1961)

» ஏமாற்றம், திகைப்பு, துடிப்பு, வறுமை, ஏக்கம், பேராசை, சூது, மோசடி, காமக்களியாட்டம் எனும் பல காட்டு மிருகங்கள், அவனைத் தாக்கித் தாக்கி பிய்த்து, கடித்துக் கடித்து பென்று தின்று கீழே துப்பிவிட்டன.
(புதிய பொலிவு - 1956)

எட்டு நாட்கள்
» வாழ்வு! என்ன பொருள் அதற்கு உண்டு, உலவி, உறங்கி எழுந்து, மீண்டும் உண்டு உலவிடும் வேலையை ஒழுங்காகச் செய்யும் யந்திரமா மனிதன்? ஆதிக்கக்காரன் அடி பணிந்து ஆர்பரிப்போன் பாதம் பற்றி, குற்றவேல் செய்து கும்பியை நிரப்பிக்கொண்டு, கொத்தடிமையாகிக் குடும்பம் சமைத்துக்கொண்டிருப்பதா வாழ்வு? அவன் எப்படி எண்ணவில்லை. வாழ்வு! ஒரு பெரும் பொறுப்பு, ஒரு அரும் வாய்ப்பு உண்மையை அறிய, அறிந்ததின் வண்ணம் ஒழுக, பிறக்கும் அந்த ஒழுக்கத்தை அளிக்க. அம்மட்டோ! அந்த ஒழுக்கத்தை அழிக்கும் அழுக்கருடன் போரிட்டு, அற்பமல்லாததை விரட்டி ஒட்டி அறத்தை நிலைநாட்ட பாடுபடுதல் வேண்டும். வாழ்வு அதற்கான ஒரு வாய்ப்பு! இந்தக் குறிக்கோள் அற்று இருப்பது வாழ்வல்ல என்று அவன் கருதினான். அவன் போல் ஒரு சிலரே எண்ணினர். ஒரு சிலருக்கே அந்த சீரிய கருத்து இருக்க முடியும். அந்த ஒரு சிலராலேயே உலகு மெள்ள, மெள்ள மாண்பினைப் பெறுகிறது.

உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்றார் சான்றோர். உயர்ந்தோர் என்று அந்த உளப்பண்பு உணர்ந்த அறங்கூறும் பெரியோன் குறிப்பிட்டது ஜாதியை அல்ல - குணத்தை - அறிவை ஆற்றலை!
(06.05.1956)

சாகாமலே, உயிரற்றவர்களாகிவிட்டவர்களும் உண்டு!
செத்து, உயிரோட்டம் தருபவர்களும் உண்டு!
(21.08.1960)

பழந்தமிழர்கள் கடவுள் பக்தியில் அழுத்தமான நம்பிக்கை வைத்துக்கொண்டிருந்ததால்தான், சிறந்து விளங்கிய வாழ்க்கையின் தரம் குறைந்தது!
ஆகவேதான் அந்த காலத்தில் பெரும்பாலும் கடவுட்கதைகளாகவே இயற்றப்பட்டன!
அந்த காலத்தில் வாழ்ந்த ஆடவன் இலக்கிழத்தி, காமக்கிழத்தி, பரத்தை என்று மூன்று பெண்களை வைத்திருந்ததான். . . .
. . . கள் குடிப்பது துது என்று சொல்லப்படுகிறது. பழந்தமிழர்கள் குடிப்பதையே பெருங்கலையாகக் கொண்டிருந்தனர். இதற்குச் சான்றுகள் சங்க இலக்கியத்தில் ஏராளமாக இருக்கின்றன!

பெற்றவர்களைக் காட்டிலும் வளர்த்தவர்களுக்குப் பெருமை அதிகம் கிடைக்கும். பெற்றுப் போட்டுவிடலாம். வளர்ப்பதில்தான் பெருமை இருக்கிறது.
(சட்டமன்ற பொழிவு)

தெளிவு, துணிவு, கனிவு.
உன் மனதை வட்டிடும் எந்தப் பிரச்சினையானாலும் தெளிவு கிடைக்கும் அளவுக்குச் சிந்திக்கவேண்டும். கசடு அற தெளிவு கிடைத்ததும் அதனின்று எழும் ஓர் உன்னதமான வலிவே துணிவு ஏற்பட்டதும் ஓர் துடிப்பு உணர்ச்சி இயல்பாக எழும். அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் . . .
. . . கனிவு இருத்தல் வேண்டும் . . .
அந்தக் கனிவு எந்த இதயத்தையும் தொடவல்லது. (நெடுநெல்வாடை நின்ற பிறகு - கடிதம் - 10.04.1960)

சேற்றிலே இருந்திடினும் செந்தாமரை, செந்தாமரைதான்! ஆனால் செந்தாமரை இருந்ததாலேயே அந்தச் சேறுமா சந்தனமாகிவிடும்!

பகுதி: 1 2

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai