அண்ணா களஞ்சியம்

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்


நாடு

¤ பட்டம் பெற்றிடுவோர் குறிக்கோளற்று கிடந்திடின் நாடு குலையும். எதிர்காலம் எழில் உள்ளதாக அமையாது. குறிக்கோளற்ற நிலையே மனக்குழப்பம், கொதிப்பு, அதிர்ச்சி, ஆர்பரிப்பு, ஒழுங்கற்ற செயல்கள், ஊறுவிளைவிக்கும்போக்கு, கலாம் விளைவித்தல், கட்டுக்கு உட்பட மறுத்தல் ஆகியவை எழக்காரணமாகிறது என்ற கருதுகிறேன்.

¤ விடுதலை என்பது ஒரு நாட்டை பிறிதோர் நாட்டார் பற்றிக் கொண்டுள்ள தளையை நீக்குவது மட்டுமல்ல. நமது நாட்டிலேயே, நமது உணர்வில், செயலில், சிந்தனையில் நெறியில் சமூகத்திரல் பூட்டிவிடப்பட்டுள்ள தளைகளிலிருந்து நம் மக்களை விடுவிப்பதாகும்.
(அகமும் புறமும் - 14.01.1966)

¤ அடைய வேண்டியது தனி அரசு!
பெற வேண்டியது முழு உரிமை!
ஒழிக்கப்பட வேண்டியது வடநாட்டு ஏகாதிபத்தியம்!
விலகவேண்டியது தில்லிப் பேரரசின் பிடியிலிருந்து!
(தம்பிக்கு 8-ம் பகுதி - பக்கம் 25)

¤ தங்கத்தால் செய்த கூண்டு என்றாலும்
தத்தை சிறையை விரும்புவதில்லை!
இரும்பை ஒடித்திடும் ஆற்றலில்லை என்பதையும் அறியாமல் சிறகடித்த வண்ணமல்லவா இருப்பது காண்கிறோம்.
(தம்பிக்கு 5-ம் பகுதி - பக்கம் 25)

¤ நாடு என்பது வெறும் பூகோளப்படமல்ல - அங்கு வாழும் மக்களின் உணர்ச்சித் தொகுப்பு. நம் எல்லோருடைய அறிவாற்றலின் ஒட்டுமொத்தமெ நாட்டின் உடமை.

¤ நாடு இதுவென்று எடுத்து இயம்புவதற்கே புலமைத் தேவைப் படுகிறது. உண்மை புதைப் பொருளாகிக் கிடைக்கிறது. நம் வரலாறு தேய்ந்து போய் உருவமற்று கிடக்கிறது.

¤ பாலைவனம் சோலைவனமாகவேண்டும். அங்கு பசுங்கிளிகள் பாடிடவும் வேண்டும். இது வெறும் கவிதையாகவே என்றென்றும் இருந்திடக் கூறப்பட்டதன்று. செயல்படுத்திக் காட்டமுடியும் என்ற உறுதியை நாம் அனைவரும் பெற்றிடத் தரப்பட்டதே, இதுபோன்ற கவிதைகள்.

¤ சொல்லுகிறபடி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கும், சொன்னபடி செய்யக்காணோமே ஏன்? என்று கேட்கும் விழிப்புணர்ச்சி மக்களுக்கும் ஏற்படவேண்டும்.

¤ பூகோளப்படி இந்தியா ஒரு நாடாக இருக்கலாம். ஆனால் பூகோளத்தை, விஞ்ஞானமும், இன எழுச்சியும் மாற்றி இருப்பதை யார் மறுக்க முடியும்? பூகோளத்துடன் விஞ்ஞானம் இணையவில்லை எனில் சூயஸ் கால்வாய் ஏது?

¤ இயற்கைச் செல்வம் இத்தனை பெற்றிருந்தும். இன்பத் தமிழகத்தில் இன்னல் கட்டிக் கொண்டிருக்கக் காரணம் என்ன?

¤ வந்தோரை வாழவைக்கும் வளத்திருநாடே, இருந்தோரை தாழ வைக்கலாமா?

¤ பொன்னும் மணியும், கொழுத்த வீரமும், தியாகமும் உலவிய தேசம்; வாழ்க்கையே ஒரு விருந்தாக இருந்த வேளை, அந்தக் காலத்தில் திராவிடம் தனி, அந்த திராவிடத்தைத்தான் மீண்டும் உருவாக்கப் பாடுபடுகிறோம். பாடுபடுவது குற்றமா?

¤ திருவள்ளுவர் பிறந்த நாட்டுக்கு உரியவர்கள் நாம். அவர் வாழ்ந்த மண்ணில் வாழத் தக்கவர்கள் நாம் என்பதை பேச்சினால் அல்ல, செயலினால் மெய்பித்துக் காட்ட வேண்டும்.

¤ வற்றாது வளங்கொழிக்கும் ஆறுகளைக் கொண்டோ வானோங்கிய மலைகளைக் கொண்டோ ஒரு நாட்டை மதிப்பிட முடியாது. மக்களின் மன வளத்தைக் கொண்டே மதிப்பிட முடியும்.

¤ வீடு எங்கனமோ அங்ஙனம்தான் நாடு இருக்கும்.

¤ ஒரு மொழியே பேசும் ஒரு நாட்டவரிடையே பல வகைப்பட்ட பிளவுகளும், சச்சரவுகளும் காணப்படும்

¤ பல மொழிகள் பேசும் பல நாட்டவரையும், ஒரு பொது மொழி கற்பதனால் ஒற்றுமையாக்கிவிடுதல் என்பது முடியாததாகும்.

¤ கொடியேற்றுவதிலும், கோலாகலமாக விழா கொண்டாடுவதிலும் தேசப்பற்று இல்லை. உழைப்பை நாட்டுக்குக் கொடுப்பதில்தான் உண்மையான தேசப்பற்று இருக்கிறது.

¤ கொலையும், களவும், சூதும், குடியும் நிரம்பிய இடம் நாடு அல்ல; காடு; காடு கூட அல்ல; அங்கு மது விற்பதற்காக ஒரு ஏற்பாடு இல்லை. கொடுமையை மறைத்திட பட்டாடை இல்லை. பாதகத்தை செய்தும் தம்பித்துக் கொள்ள பணம் எனும் ஆயுதம் இல்லை.

¤ தாயகத்தை தருக்கர் தாக்கிடும்போது, நாட்டு பாதுகாப்புக்காக நாட்டு உரிமைப் பாதுகாப்புக்காக போரிடும் படையினர் காட்டிடும் வீரம், எழுச்சியை அடிப்படையாகக் கொள்கிறது.

¤ தமிழகம் உலகின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் அஒது யாருடைய வேட்டைக்காடாகவும் இருந்திட ஒரு நாளும் ஒருபடமாட்டோம்.

¤ சுயாட்சி எங்கள் பிறப்புரிமை. இதனை தடுக்கவே, தகர்க்கவோ எவர்க்கும் உரிமையில்லை. இது எங்கள் போர் முழக்கம். விடுதலை பெறும் வரையில் இப்பாசறைப் பாட்டு ஒலித்துக் கொண்டேதான் இருக்கும்.

¤ நாங்கள் ஒரே உலகத்தை விரும்புகிறோம். ஒரே அரசாங்கத்தை விரும்புகிறோம். எனினும் நாங்கள் எங்கள் தேசிய எல்லைகளை மறக்கத் தயாராக இல்லை.

¤ நான் ஒரு தேசியக் கொள்கைக்காக வாதாடுகிறேன். குறுகிய மனப்பான்மைக்காக அல்ல. கட்சிக் கொள்கைக்காக அல்ல. என்னுடைய பெருமைக்குரிய நாட்டிற்கு சுயநிர்ணய உரிமை கேட்கிறேன். அதன் மூலம் அந்நாடு உலகத்திற்கு தன் பங்கை செலுத்த விரும்புகிறது. அரசியல் சட்டத்தில் தரப்பட்டுள்ள அதிகார வரம்பும் வகையும் மாற்றி அமைக்கப்பட்டால்தான் மாநில அரசு முழு வளர்ச்சி பெற முடியும் மக்களின் வாழ்வைச் செம்மைபடுத்த முடியும் என்றால் இந்த நோக்கத்துடன் அரசியல் சட்டத்தைத் திருத்தத் தயக்கம் காட்டக் கூடாது.

¤ அஞ்சா நெஞ்சு படைத்த இலட்சியவாதிகள்தான் நாட்டிற்குக் கிடைக்கக்கூடிய ஒப்பற்றச் செல்வங்கள் ஏனெனில் பணம் வெறும் இரும்புப் பெட்டியில்தான் தூங்கும்! ஆனால் இந்தச் செல்வங்களோ மக்களின் இதயப்பெட்டிகள் தோறும் நடமாடுவார்கள்.

¤ திருவள்ளுவர் பிறந்த நாட்டுக்கு உரியர்கள் நாம்; அவர் வாழ்ந்த மண்ணிலே வாழத் தக்கவர் நாம் என்பதை பேச்சினால் அல்ல - செயலினால் மெய்பித்துக்காட்டவேண்டும்.

¤ ஒரு நாட்டின் நிலையானச் செல்வம் எந்த நாட்டில் ஓங்கி எழுந்துள்ள கட்டிடங்களல்ல - அவை இடிந்துவிடக் கூடியவை! இயற்கை வளமும் அல்ல - அதுவும் அழிந்துவிடும்! அரசியல்வாதிகளுமல்லர் - அவர்களம் மாறிவிடக் கூடியவர்கள்! பொறியியல் வல்லாரும், மருத்துவ நிபுணர்களும், கல்வியறிவாளர்களும்தான் நாட்டின் உண்மையானச் செல்வங்கள்.

¤ ஒரு நாடு சீர்பெற்று இயங்கவேண்டுமானால், மக்கள் மனவளம் படைத்தவர்களாக இருக்கவேண்டும். மனவளம் படைத்தவர்களாக மக்கள் இருக்கவேண்டுமென்றால் அந்நாட்டில் கலாச்சாரம், பண்பாடு, நாகசீகம் சிறந்து விளங்கவேண்டும். இவைகள் சிறந்து விளங்கவேண்டுமானால் அந்நாட்டில் உள்ள மொழி சிறந்ததாக இருக்கவேண்டும். இவை அத்துனையும் ஒருங்கமைந்த உயர்ந்த மொழி நம் மொழி - தமிழ் மொழி. அம்மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே சீரும், சிறப்புமுறப் பாராண்டது.

ஒற்றுமையை வளரும் பசுஞ்செடிக்கு நிகராகக் கருது, ஒர சீராக தண்ணீர் விட்டு பேணி வந்தால் மட்டுமே அது வளரும். அதைவிட்டு தண்ணீரும, வெந்நீரும் மாற்றி மாற்றி ஊற்றினால் செடியின் நிலை என்னாகும்?
இந்தியா ஒன் றுபட்டிருக்கவேண்டும். அதன் வலிவு வெல்லற்கரியதாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறோம். இந்த ஒற்றுமையை ஏற்படுத்துவதெப்படி? சட்டத்தின் மூலமாகவோ, கட்டளையின் மூலமாகவோ குடியரசுத் தலைவரின் உத்தரவின் மூலமாகவோ ஒற்றுமையை ஏற்படுத்திவிட முடியாது. ஒற்றுமை என்பது உள்ளம் சம்பந்தப்பட்ட ஒன்றாகும். நமது எண்ணங்கள் ஒன்றிணைந்திட செயல்படவேண்டும். வெறும் உதட்டளவு பேச்சினால் ஒற்றுமை வந்துவிடாது.

பிச்சைக்காரர்கள் இருந்தால் அங்கே, திருடர்கள் கொள்ளையடிப்போர் முதலியோர் இருப்பார்கள் என உறுதியாக நம்பலாம். ஒரு சித்திரத்தில் கண்களை மட்டும அழகாக அமைத்துவிட்டு பிற அங்கங்களை அழுகுபடுத்தாமல் விட்டுவிட்டால், அந்த சித்திரம் எப்படி சோபிக்காதோ அது போல் ஒரு நாட்டிலே ஒரு சிலரை மட்டும் மகிழ்ச்சியை அனுபவிக்க விட்டு விட்டு, மற்றவர்களை துக்கப் படும்படி செய்துவிட்டுவிட்டால், அந்த நாடு செழிப்பான நாடு என்று சொல்ல முடியாது.

கொடுங்கோல் ஆட்சி எந்நாட்டில் நடைபெறுகிறதோ, அந்நாடு நோயினால் பீடிக்கப்பட்டிருக்கின்றது என்று பொருள்.

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai