அண்ணா களஞ்சியம்

இனம்
| மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்
கல்வி

பகுதி:  1  2

» ஏழை மக்களின் வாழ்வெனும் பாலைவனம் சோலைவனமாக்கிடவேண்டும். வருங்காலக் சந்ததிகளாவது வளமெல்லாம் பெற்று வாழ்ந்திட வழிவகை செய்திடுவது பட்டதாரிகளின் முதற் கடமையாகிறது.

» மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல அறிவை வளர்த்துக்கொண்டு பலன் பெறவேண்டும்.

» இன்று நாட்டில் அறிவுக்களஞ்சியமாகவும், கருத்துக் கருவூலங்களாகவும் விளங்குபவை, பல்கலைக்கழகங்களே! சிந்தனைத் தெளிவு - மதினுட்பத்திறன் - சேவையுள்ளம் - ஆகியவற்றின் தூதுவர்களாய் திகழ்ந்திடும் வருங்காலக் குடிமக்களை தயாரித்திடும் பொறுப்பு, பல்கலைக்கழகங்ளையே சாரும்; எனவே பல்கலைக்கழகங்களின் பொருப்பு பெரிது.

» பெரிய கல்வி நிபுணர்களெல்லாம் கருதுவது, இப்போதைய தேர்வு முறைக்கும், மாணவர்களின் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பதுதான். இப்படி நான் சொல்லுவதால் மாணவர்களை தேர்வைப் பற்றி கவலைப்படவேண்டாம் என்று சொல்லுவதாகப் பொருளல்ல. மாணவர்கள் தரத்தை தேர்வுகள்தான் நிரூபிக்கும் என்று உலகம் ஒத்துக்கொண்டிருக்கும் வரையில் தேர்வில் வெற்றியடையப் பாடுபடவேண்டும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்விகளைக் கேட்கும்போது பயனுள்ளவைகளைத்தான் கேட்கவேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களின் ஐயங்களை நீக்கத் தயங்கக் கூடாது. ஏனென்றால் இப்பொழுது காலமே கேள்விக்குறியாக மாறியுள்ளது! போதனை முறையில் இல்லாத சந்தேகங்கள் சிந்தனை முறையில் சந்தேகங்களாக எழுந்துள்ளன. அந்த அளவுக்கு ஏராளமான பிரச்சினைகள் வளர்ந்துள்ளன. பாடதிட்டங்களை திருத்தி அமைக்கவேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன். பகுத்தறிவு தரும் பாடங்களே அமையவேண்டும்.

» கல்விச்செல்வம் காலத்தால் அழியாதது. அந்தச் செல்வம் நாட்டிலே - பாறைக்கடியிலே - சுரங்கத்திலிருக்கும் தங்கக் கட்டிகளாக இருக்கக் கூடாது. அதை எடுத்து பயன்படுத்திப் பளபளப்புள்ள - நல்ல ஒளியுள்ள தங்கமாக ஆக்கவேண்டும். (பொழிவு - புத்தனாம்பட்டி, 15.09.1960)

» மகிழ்ச்சி ஊட்டுவது, புதிய எண்ணங்களைத் தூவுவது பழையக் கருத்துக்களை மாற்றுவது, பண்பு தருவது செயல்புரியும் திறன் அளிப்பது என்பனப் போன்ற பயன்களைப் பெறுவதற்கே படிக்கிறோம். ஒவ்வொரு வகைப் புத்தகமும் ஒவ்வொரு பயனை ஒவ்வொர் அளவுக்குத் தருவதுடன், நமது மனத்தை உருவாக்க உதவுகின்றன.

» பொதுவாக மக்களின் அறிவுக்குத் தெளிவும், ஆண்மைக்கு உரமும், ஒழுக்கத்திற்கு வலிவும் தரத்தக்க நூல்கள் இருக்கவேண்டுமே தவிர வாழும் இடத்தை வகையற்றது எனக்கூறி, வான வீதிக்கு வழிகாட்டும் நூல்களும், தன்னம்பிக்கையைக் கெடுத்து, விதியை அதிகமாக வலியுறுத்தி, பெண்களை இழித்தும் பழித்தும் பேசிடும் நூல்கள் இருத்தலாகாது.

» சலிப்பு வருகிற நேரத்தில் வள்ளுவரின் உருவத்தை ஒரு முறை பார்த்தால், வந்த சலிப்பு பறந்துபோகும். சந்தேகம் வரும்போது திருக்குறளில் காணப்படும் கருத்துக்களை எண்ணிப்பார்த்தால் வந்த ஐயப்பாடுகள் நீங்கிவிடும்.

» மானத்தோடு வாழ, ஒருவனை ஒருவன் தாழ்த்தாமல் வாழ்வதற்குரிய ஏடுகள் தேவை. சுவையும் பயனும் எதில் இருந்தாலும் எடுத்துக்கொள்ளுங்கள். பயன் மட்டும் இருந்து சுவை இல்லாமல் இருக்கக் கூடாது. சுவைமட்டும் இருந்து பயன் இல்லாமல் இருக்கக் கூடாது. இரண்டும் ஒருங்கு சேர்ந்து இருக்கவேண்டும்.

» பெரும்பாலனவர்களின் மூளை குழம்பியதற்கு காரணம் வறுமை! பைத்தியக்காரச் சாலை. அதன் விளைவு! கோர்ட்டு, போலீஸ், சிறை, தூக்குமேடை போல் பைத்யக்காரச்சாலையும், வறுமையை ஒழிக்காததால் இருக்கவேண்டி நேரிட்ட இடங்கள். இந்த நாட்டிற்கு நிரந்தரமான செல்வத்தைத் தேடித் தருபவர்கள் யாராவது இருக்கிறார்கள் என்றால் அது ஆசிரியர்கள்தான். நிலையானச் செல்வத்தை, அழியாத செல்வத்தை தேடித் தரும். போட்டியும் பொறாமையும், பொச்சரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம் நேராக நடந்து செல்ல நமக்கு துணையாக இருக்கக் கூடியது, கல்வி போல் வேறொன்றும் இல்லை.

» எவ்வளவு கட்டிடங்கள் கட்டினாலும், விஞ்ஞான கூடங்கள் அமைத்தாலும், புது பூங்கா அமைத்தாலும் கல்விச் செல்வம் இல்லாவிடில் அவை பயன் தரமாட்டா.

» விரிவான அறிவும், விளக்கமான சிந்தனையும், தெளிவான பேராற்றலும், ஊட்டமும் தரும் கருத்தரங்கமாகப் பல்கலைக்கழகங்கள் திகழ்ந்திடவேண்டும்.

பகுதி:  1  2

இனம் | மொழி | அரசியல் | கல்வி | மதம் | நீதி | பண்பு | சமதர்மம் | பகுத்தறிவு | பொதுவாழ்வு பொருளாதாரம் | பெண் | சமுதாயம்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai