மறப்போம்
மன்னிப்போம்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
»
மறப்போம் மன்னிப்போம் - இதற்கு
பெரிய மனது வேண்டும். சொன்னது மட்டுமல்ல செய்தும் நடந்தும் காட்டியவர்
அண்ணா. திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி.
தந்தை பெரியாரின் படைத் தளபதி. அண்ணாவை ஒரு காலத்தில் மனமார பாராட்டியவர்.
பின்னாளில் மனம் மாறி அண்ணாவிடம் காழ்ப்புணர்ச்சி கொண்டார். அழகர்
சாமி அவர்களின் உடல் நலம் கெட்டு எலும்புறுக்கி நோயால் அவதிப்பட்டார்.
தன்னிடம் கோபம் கொண்டிருந்ததை மறந்து அவருக்கு உதவினார் அண்ணா. அவருடைய
மருத்துவச் செலவுக்கு உதவ எண்ணிய அண்ணா தன்னை பொதுக்கூட்டத்திற்கு
அழைத்த கழக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். தன்னை பொதுக்
கூட்டத்திற்கு அழைத்தவர்களை, தனக்கு வழிச்செலவுக் அனுப்ப வேண்டிய
பணத்தை அழகர்காமி அவர்களக்கு அனுப்பி வைத்து அந்த பண விடைத்தாளை
தனக்கு அனுப்பினால் பொதுக் கூட்டத்திற்கு வருவேன் என அறிவித்து அதன்
படியே செய்தார். தன் நாடகத்தின் மூலம் திரட்டிய ஒரு தொகையை நன்பர்.
கே.ஏ.மதியழகன் மூலம் மருத்துவமனையில் தங்கியருந்த ஆழகர் சாமி அவர்களுக்கு
அனுப்பி வைத்தார். அதைப் பெற்றுக்கொண்ட அழகர்சாமி அவர்கள் அப்பா
மதியழகா இதுவரை யாரை நம்பியிருந்தேனோ அவர் கைவிட்டார், யாரை ஆவேசமாக
எதிர்த்தேனோ, ஆத்திரம் தீரத் திட்டித் தீர்த்தேனோ அவர் எனக்கு உதவுகிறார்.
மதியழகா அண்ணாவுக்கு என் நன்றியைச் சொல்லப்பா என்றார்.
அண்ணா பவழ விழா மலர், 1984
»
1952-ம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்தின் பிரதமர் நேரு அவர்கள் திராவிட
முன்னேற்றக் கழகத்தைப் பற்றி குறிப்பிடும் போது (சூடீசூளுநுசூளுநு)
எனும் வார்த்தையைப் பயன்படுத்தினார்.
அதற்கு அண்ணா அவர்கள் தஞ்சாவூரில்
14.12.1952 அன்று நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் பிரதமர்
நேரு அவர்கள் பேசியதைக் குறிப்பிட்டு மிகப் பெரிய மனிதர்! மிகச்
சாதாரணச் சொல்! மன்னிப்போம் - மறப்போம் என்றார்.
»
இனியன கேட்பின் என்னரும் தம்பி
இனிது, இனிது இலட்சியம் இனிது
அதனினும் இனிது
அதன் பகைவர்கள்.
அடுத்ததன் நண்பராய் ஆகுதல் அன்றோ!
இனியன கேட்பின்
கனிமோழித் தம்பி
இனிது, இனிது
அன்பர்கள் அருங் குழாம்
அதனினும் மாற்றார்
திருந்தி நம்முடன்
சேர்ந்திட விழைதல்!
»
1946-ல் எதிர்ப்புகளுக்கு இடையில், பல முட்டுக்கட்டைகளுக்கு இடையில்
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கு அண்ணா நிதி திரட்டி ரு.25,000
அளித்தார். அன்னாளில் அவர் அண்ணாவை எவ்வளவோ தரக்குறைவாகத் திட்டியும்
அண்ணா அவரைத் திருப்பித் தாக்கவில்லை.
»
1967-ல் முதல்வரான அண்ணா இப்படிச் சொன்னார்.
. . . உள்ளபடியே இந்த அமைச்சர் பதவியின் மூலம் மக்களுக்கு நன்மை
செய்ய அதிக அதிகாரம் இல்லையே என்பதுதான் எங்கள் வருத்தம்.
»
இந்தக் கணக்கைப் பார்க்காமல் வேறு கணக்கைப் பார்ப்பது முடியாத காரியமா?
நாம் எதிர்கட்சி என்பதற்காக முன்பு நமது குப்புசாமியை அவர்கள் மூன்று
நாள் சிறையில் வைத்தார்களா? சரி அங்கே யார் இருக்கிறார்கள், குமாரசாமியா?
அவரைப் பிடித்து 6 நாள் வை!
நமது சின்னசாமி மீது வழக்கு போட்டார்களா?
பெரியசாமி அங்கிருந்தால் வழக்கு போடு என்று கூறமுடியாதா? சுலபமான
காரியம். அற்பன் தவிர வேறு யாரும் அதை அரசியல் என்று கூறமாட்டான்.
நான் பதவியேற்றதும் போலீஸ் அதிகாரிகள் என்னிடம் வந்தார்கள். நாங்கள்
தேர்தல் நேரத்தில் நியாயமாகத்தான் நடக்க முயன்றோம் என்று கூறினார்கள்.
நான் தெளிவாகச் சொல்லிவிட்டேன். கடந்த காலத்தைப் பற்றி கவலைப்படாமல்
செயலாற்றுங்கள் என்று! ,இன்னும் சிலர் கூறினார்கள் அப்போதய முதலமைச்சர்
ரொம்ப தொந்தரவு செய்தார்; அதனால்தான் என்று ஏதோ கூற ஆரம்பித்தார்கள்.
அந்த விஷயத்தையே கூறவேண்டாம் நீங்கள் நிரங்தரமான சர்க்கார் ஊழியர்கள்
நாங்கள் மக்கள் அனுமதிக்கிறவரை அமைச்சர்கள் இரண்டு பேருக்குமுள்ள
தெடர்பைத் தெரிந்திருக்கிறேன். ஒரு துளியும் கவலைப் படாமல் நல்லா
பணியாற்றுங்கள் என்று கூறினேன்.
»
அய்யாப்பிள்ளை என்று ஒருவர் பின்னாளில் சிறந்த திரைப்பட உரையாடலாசிரியரானவர்.
தொடக்க காலத்தில் மேடைகளில் அண்ணாவை கடுமையகத் தாக்கிக் கொண்டிருந்தார்.
பிறகு திரைப்பட உரையாடலாசிரியராக வேண்டும் என நினைத்து அண்ணாவின்
உதவியை நாடினார். அண்ணாவை சந்திக்க அவருக்குத் தயக்கம். கலைஞர் கருணாநிதி
அவர்கள் உதவியுடன் அண்ணாவைச் சந்தித்தார். அவரைப் பார்த்த அண்ணா
எல்லாவற்றையும் மறந்து என்ன அய்யா பிள்ளை, நலமா? என்ன வேண்டும் என்றான்.
அப்போது புகழ்பெற்றிருந்த திரைப்பட இயக்குநர் திரு.ஏ.எஸ்.ஏ. சாமி
அவர்களுக்கு ஓர் பரிந்துரை வேண்டும். அவரிடம் நான் உதவியாளனாக பணியாற்ற
வேண்டும் என்றார்.
அண்ணா உடனே தொலைபேசியில் இயக்குநர்
ஏ.எஸ்.ஏ.சாமி அவர்களுடன் தொடர்பு கொண்டு இவரை பரிந்துரைத்து, அவரை
சேர்த்துக் கொள்ளச்செய்தார்.
»
காமராசரை எதிர்பதே முதலில் அண்ணாவுக்குப் பிடிக்கவில்லை. கலைஞரின்
பிடிவாதம் வென்றது. என்னண்ணா நீங்க, படுத்துகிட்டே ஜெயிப்பேன்னாரு.
அவ்வளவு அலட்சியம் நம்மை பத்தி! கட்டை விரலை எட்டுவேன்னு சொன்னாரு
முந்தி! அவர் தோத்ததுக்கு வருத்தப்படுறீங்களே! ஜெயிச்சது நம்ம ஆளுங்கங்கறதே
உங்களுக்கு மறந்துடுச்சா? என்று துணிவுடன் கேட்டேன். அரசியலில் அவர்
எதிரிங்கறதை நான் மறுக்கலேய்யா. ஆனா தமிழ்நாட்டுக்கு அவரு எவ்வளவு
செஞ்சிருக்காருங்கறதை மக்கள் மறந்துட்டாங்களே. அவர் மட்டும் தோத்திருக்கக்கூடாது
என்றார் பெருந்தன்மையின் கருத்துள்ளவர். அத்துடன் நின்றாரா? நாடாளுமன்றத்
தொகுதியில் மீண்டும் வருந்தினார். அய்யோ தமிழர் ஒருவர் மத்ய அமைச்சரவையில்
இடம் பெறுவது போயிற்றே என்று இறங்கினார்.
அண்ணா சில நினைவுகள் - எஸ்.கருணாநந்தம்.
»
கடலூர் இரா.இளம்வழுதி-வழக்கறிஞர். அவர் சாக்கடைத் தண்ணீரில் பேனாவை
தோய்த்து எழுதியதுபோல் எப்படியயெல்லாம் கடிதங்கள் வரைந்ததார். கழகத்
தலைவர்களுக்கு அவரை அமைச்சரவையில் சேர்க்கவில்லையாம் அதற்காக இழிமொழிகள்,
வசவுகள், சாபங்கள், தாபங்கள்! இவரைவிட நீண்ட நாட்களாக கட்சியிலிருந்து
வந்த இன்னும் இருவர் மேலும் அனாகரீகமாக நடந்துகொண்டனர். அவர்களிருவருக்குமே
நேரில் வந்து அண்ணாவை கேட்க அச்சம். தம் தம் துணைவியர், மக்கள் இவர்களை
அனுப்பினர். பட்டிக்காட்டுப் பெண்கள்போல் அவர்கள் அழுது, சாற்றி
புலம்பி, மாறடித்து மண்ணை வாரி இறைத்து அண்ணாவின் வீட்டில் அட்டகாசம்
செய்தனர். எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம். அண்ணாவும் அமைதியாகப்
பார்த்துக் கொண்டிருந்தார். உங்களாளே எப்படி பார்த்துக்கொண்டிருக்க
முடியுது அண்ணா? என்றேன்.
ஷேக்ஸ்பியர் நாடகம் ஜூலியஸ் சீசர்
படிச்சோமே, வெறும் பாடமாவா படிச்சோம்? படிப்பினைன்னு நினைச்சுதானே
படிச்சோம். நீயுமா புரூட்டஸ்ன்னு சீசர் கேட்டாள், நானும் கேட்க வேண்டியது
தானா? நீயுமா, நடராசன், நீயுமா சின்னராஜ், ஆனா நான் கேட்கலே. கேட்கமாட்டேன்.
என்னா நான் சீசரில்லை வெரும் அண்ணாதுரை!
»
1949-ல் தந்தை பெரியாரை விட்டு அண்ணா பிரிந்து திராவிட முன்னேற்றக்கழகம்
அமைத்தார். 1967-ல் அண்ணாவின் திராவிட முன்னேற்றக்கழகம் தமிழ் நாட்டில்
ஆட்சியைப் பிடித்தது. 18 ஆண்டுகள் பிரிவு தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும்
இடையில். அண்ணா முதல்வரானதும் திருச்சிராப்பள்ளி சென்று தந்தை பெரியாரைச்
சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அண்ணா அங்கு செல்வதற்கு எதிர்ப்பு
தெரிவித்தவர்களிடம் அண்ணா என்னை இந்த நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே
அவர்தான். முதல்வரானதும் நான் அவரைப் பார்க்காவிட்டால் அது மனிதப்
பண்பே ஆகாது என்றார்.
அண்ணா சில நினைவுகள், கவிஞர். கருணாநந்தம்.
»
பேரரிஞர் அண்ணா அவர்கள் 1957-ம் ஆண்டு தருமபுரி நகரப் பொதுக்கூட்டத்திற்கு
உரையாற்றிட வருகை தர நகர தி.மு.க. சார்பாக ஏற்பாடு செய்திருந்தோம்.
தருமபுரியைச் சேர்ந்த ஒரு திராவிட
கழகத் தோழர், அண்ணாவைத் தாக்கி தமிழ்த்தாயைக் கொன்றவனே, வேசி மகனே,
இந்தப் புனிதமான மண்ணுக்குள் காலெடுத்து வைக்காதே என்று அச்சிட்டு
வெளியிட்டார்.
என்னைப் போன்றத் தோழர்கள் மனம் குமுறி அதற்குச் சூடான பதிலைத் தரவேண்டும்
என்று அண்ணாவிடம் கேட்டுக்கொண்டோம்.
அந்த நோட்டீசை வாங்கி அமைதியாகப்
படித்த அண்ணா சற்றும் துடிக்காமல் பதறாமல் பொறுமையாக தனக்குள் சிரித்துக்
கொண்டு நோட்டீஸ் போட்டவர் என்னைத்தானே திட்டி போட்டிருக்கிறார்.
பொறுமையுடன் வாங்கி படிக்க முடியுமானால் படியுங்கள். இல்லாவிட்டால்
படிக்காதீர்கள். என் வாயால் அந்தத் துண்டறிக்கைக்கு பதில் சொல்லமாட்டேன்.
அதற்கு நான் தர்மபுரிக்கு வரவில்லை, கட்சிக் கொள்கைகளையும் தோழர்களுக்கான
செயல் முறைகளையும் விளக்க வந்திருக்கிறேன் என்று சுட்டிக்காட்டி
எங்களுடைய கோபத்தையும், ஆத்திரத்தையும் முரட்டுத்தனத்தையும் தணித்து
கட்சிப் பொறுப்பைச் சுட்டிக்காட்டி பண்பாட்டையும் போதித்து அடக்கத்துடன்
திரும்பிப்போகுமாறு அறிவுறுத்தி அனுப்பினார்.
த.வ.வடிவேலன் - நகர் மன்றத் தலைவர், தருமபுரி.(அண்ணா
அரிய செய்திகள் மலர் - 1970)
»
முதல்வர் அறிஞர் அண்ணா, பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞர், மாவட்ட
ஆட்சித் தலைவர் ஆகியோருடன் நாமும் மேடையில் இருந்தோம். அறிஞர் அண்ணா
பேசும் போது அடிகளார் அவர்களே! தாங்கள் இந்த விழவுக்கு வந்தது மகிழ்ச்சியைத்
தருகிறது! முந்தய அரசு உங்கள் மேல் வழக்குப் போட்டது . . சிறைக்குள்
தள்ள துடித்தது. இந்த அரசு உங்கள் அரசு. உங்களுக்கு தொல்லைத் தராது!
வரவேற்கும், தங்களது ஆலோசனைகளை வரவேற்கும் என்று பேசினார்.
1967 பொதுத் தேர்தலில் அறிஞர் அண்ணாவை எதிர்த்து நாம் வேலை செய்தததை
நினைவில் கொண்டிருந்தால் அவருக்கு இந்தப் பண்பு முகிழ்த்திருக்காது.
அதனால்தான் திருக்குறள், நன்றல்லது அன்றே மறப்பது நன்று என்றது.
அறிஞர் அண்ணாவின் மறப்போம் - மன்னிப்போம் என்ற புகழ் பெற்ற மொழி
இங்கே நினைவுகூறத்தக்கது. எவ்வளவு பெரிய உள்ளம்! பெருந்தன்மை!
ஆனந்த விகடன் இதழ், குன்றக்குடி அடிகளார். |