கனிவு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
தஞ்சையில்
ஓர் சிறப்புக் கூட்டம் அண்ணாவோடு என்னையும் பேச அழைத்திருந்தார்கள்.
தன்னோடு பயணம் செயும்படி அண்ணா அழைத்தார். இரயில் புறப்பட்டதும்
இருவரும் சிறிது நேரம் பேசிக்பொண்டிருந்தோம். எனக்கு தூக்கம் வந்தது
உனக்கு தூக்கம் வந்தால் படுத்துத் தூங்கு என்றார். நாம் மேலே படுப்பதற்கு
ஒதுக்கப்பட்ட இடத்தில் ஏறி அமர்ந்து தலைக்கு என் பையை வைத்து அதன்
மேல் அண்ணா கொண்டுவந்திருந்த அவருடைய போர்வையை வைத்து படுத்துத்
தூங்கிவிட்டேன். இரவு 3 மணி இருக்கும். இயற்கையின் தொல்லையைத் தணித்துக்கொள்ள
கீழே இறங்கினேன். அங்கே அண்ணா குளிர் தாங்க முடியாமல் தன் இரு கைகளாலும்
உடம்பைப் போர்த்திக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்தார்கள். என்னை எழுப்பி
அந்தப் போர்வையை கேட்டால் என் தூக்கம் கலைந்து விடுமே என்ற எண்ணம்,
அந்த கடுங்குளிரையும் அவரை தாங்கிக்கொள்ளச் செய்தது. அழுதுவிட்டேன்.
என் தலைவர் என்று அது வரை எண்ணியிருந்தேன். இல்லை என் தாய் என்று
எனக்கு உணர்த்தினார்.
(அண்ணா
பவள விழா மலர், தத்துவ மேதை டி.கே.சீனிவாசன்)
இராசாசி கவர்னர் செனரலாக பொறுப்பேற்று
தமிழகம் வந்த போது அவருக்கு திராவிடமுன்னேற்றக் கழகத்தின் சார்பில்
கருப்புக் கொடிகாட்டப்பட்டது. அப்போது என்னை தலைவனாக கொண்ட அணியில்
சென்னை டி.கே.கபாலி, காஞ்சி பரமசிவம் உட்பட 26 பேர், கருப்புக் கொடி
காட்டி கைதானோம். திராவிட முன்னேற்றக்க கழகம் தொடங்கி முதன் முதலில்
காங்கிரஸ் ஆட்சியால் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட முதல்
அணியே அதுதான். முதன் முதலாக சிறைக்கு செல்லும் அணி என்பதால் அண்ணா
அவர்களே ஓடோடி வந்து 26 பொட்டலம் பிரியாணி வாங்கி வந்து சிறை அதிகாரியிடம்
பத்து நிமிடம் அனுமதி பெற்று, அவரே பிரியாணி பொட்டலங்களைப் பிரித்துக்
கொடுத்து உண்ணச் செய்து, பிறகு தழுதழுத்தக் குரலில், மணி இவர்கள்
யாரும் சிறைக்குச் சென்று முன் அனுபவம் இல்லாதவர்கள். நீதான் இவர்களுக்குத்
தலைமை வகித்து ஆழைத்துப் போகவேண்டும். சிறைக்குள் எல்லா காரியங்களையும்
செய்துத்தரவேண்டும் என்று கூறி சிறைக்கு வழியனுப்பி வைத்தார்.
கே.டி.எஸ்.மணி, காஞ்சீபுரம் - அண்ணா அரிய
செய்திகள் மலர்.
நீதி தேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் ஆகிய அவர் எழுதிய
இரு நாடகங்களையும், தானே நடித்து அதன் முழு வருவாயையும் பள்ளிக்
குழுவுக்கு அளித்ததை என்றும் நான் மறந்தறியேன். பள்ளியில் உள்ள கல்வெட்டு
இன்றும் சான்று பகரும்.
தமிழ்ப் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம்.
(இதே போல் அண்ணா அவர்கள் பல பள்ளிகளுக்கும்
கல்லூரிகளுக்கும், தனிப்பட்டவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும்
அன்றைக்கு சேர்த்துத் தந்த தொகை (தன் குடும்பத்திற்கு என்று சேர்க்காமல்)
பல இலட்சங்களைத்தாண்டும் - ஆம் அண்ணா அவர்கள் அறிவுச் செல்வத்தை
மட்டுமல்ல - பொருட் செல்வத்தையும் வாரி வழங்கிய வள்ளல்.
எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்
எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு தண்டலம் மாநாடு மூலமாக இலக்கணம்
வகுத்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் (1957-ல் அண்ணா காஞ்சி சட்ட மன்ற
உறுப்பினர். அவருடைய தொகுதியல் உள்ள தண்டலம் எனும் கிராமத்தில் ஓர்
மாநாடு கூட்டி, அன்றய முதல்வர் திரு.காமராசர் அவர்களை வரவழைத்து,
மக்களைச் சந்தித்து உரையாட வைத்தார். இதற்கு முன் எவரும் இப்படிச்
செய்யவில்லை.
அவருக்கிருந்த வேலை சுமைகளுக்கிடையே
தனது தொகுதி கிராமங்களுக்குச் செல்லத் தவறுவதில்லை. இருபது முப்பது
கிராமங்களைக் கொண்ட பகுதியின் மய்யக் கிராமம் ஒன்றில் இரண்டு மூன்று
நாட்கள் முகாமிட்டுக்கூட மக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்திருக்கின்றார்.
காஞ்சீபுரம் சட்ட மன்ற தொகுதியைச் சேர்ந்த புத்தேரி தொடூர் ஆகிய
கிராமங்களின் பள்ளிக் கூடங்களை சற்றேரக் குறைய ஏழாயிரம் ரூபாய் செலவில்
புதுப்பித்துத் தந்தார். அந்தப் பணம் அவர் சொந்தப் பணமாகும்.
திரு. சி.எஸ்.பூஞ்சோலை, அண்ணாவின் நண்பர்
- காஞ்சி
|