கண்ணியம்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
தந்தை பெரியார் அவர்களது இந்தி
எதிர்ப்பு போராட்டத்தையும், இன வாதத்தையும் காட்டுமிராண்டித்தனமான
செயல் என்று பண்டித நேரு அவர்கள் தாக்கியிருந்த நேரம். இதற்கு எதிர்ப்பு
தெரிவிப்பதற்காக அன்று சென்னையில் நேரு அவர்களுக்கு கறுப்புக் கொடி
காட்டுவது என்றும், மற்ற ஊர்களில் கண்டன ஊர்வலம் நடத்துவதென்றும்
முடிவெடுத்து அண்ணா அறிவித்தார். சனவரி 14 அன்று திராவிட முன்னேற்றக்
கழக ஏடுகள் பொங்கல் மலர் வெளியிடுவது வழக்கம். அண்ணாவுக்கு அய்யம்.
கவிஞர் கண்ணதாசன் உணர்ச்சி வயப்படுபவர் ஆயிற்றே என நினைத்து கவிஞர்
கண்ணதாசன் அவர்களின் ஏடான தென்றல் அலுவலகத்திற்கு ஓர் தோழரை அனுப்பி
சனவரி 6 பற்றி அவர்கள் ஏதாவது கவிதை எழுதியிருந்தால் அதைக் கொண்டு
வாருங்கள் எனப் பணித்தார். அச்சில் எட்டுப் பக்கம் வந்திருந்த அந்தப்பாடல்
அண்ணா அவர்களது பார்வைக்கு சென்றது.
நான் நினைத்தது போலவே கண்ணதாசன்
உணர்ச்சி வயப்பட்டுவிட்டாரே என்னதான் நாம் நேருவுக்கு கறுப்புக்
கொடி காட்டிய போதிலும் அவரைப்பற்றி இழிவாகவா வர்ணிப்பது? இது நம்
கழகத்தின கண்ணியத்திற்கே! இந்த வசைச் சொற்கள் நேருவின் மீது வீசப்
பட்டன அல்ல! நம் மீது நாமே வீசிக்கொண்ட கணைகள். தென்றல் ஏடு இந்தப்
பாட்டோடு வெளியாகக் கூடாது. வேறு பாடல் எழுதி வெளியிடுக. யார் மரியாதையும்
குறையக் கூடாது என்று சொல்லி அனுப்பிவிட்டார் அண்ணா.
கவிஞர் கண்ணதாசன் அந்தப் பாடலை நீக்கிவிட்டு, வேறு பாடல் எழுதி பொங்கல்
மலரை வெளியிட்டார். (சங்கொலி இதழ் - மா.பாண்டியன்)
திரு. என். வி.நடராசன் அவர்கள்
தொடக்கத்தில் காங்சிரஸ்காரர். பிறகு திராவிடர் கழகத்திற்கு வந்தவர்.
திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சியில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.
அவர் ஒரு முறை சென்னை கடற்கரைக் கூட்டத்தில் பேசும்போது சற்றே சினம்
வயப்பட்டு காங்கிரஸ் அமைச்சர்கள் செய்வதை சகிக்க முடியவில்லை மக்கள்
அவர்களை நாயைப் போல் கல்லால் அடித்து விரட்ட வேண்டும் அப்போதுதான்
அவர்களுக்கு அறிவு வரும் என்று பேசிவிட்டார்.
அண்ணாவின் முகம் சிவந்துவிட்டது. உடனடியாக என்.வி.நடராசன் அவர்களின்
சட்டையைப் பிடித்து இழுத்து உங்கள் பேச்சுக்கு இப்போதே மன்னிப்புக்
கேளுங்கள் என்று சொல்ல அவரும் மன்னிப்புக் கேட்டார். ஆயிரம் வேறுபாடு
இருந்தாலும் கண்ணியம் அண்ணாவுக்கு உயிரன்றோ?
(நம்நாடு - முத்துகிருட்டிணன்)
மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா,
மதுரை வாரியார் திருப்புகழ் மண்டபத்தில் நடைபெற்றது. அண்ணா அவர்கள்
கலந்து பொண்டு சிறப்புரையாற்றினார்.
எங்கோ இருக்கிற குன்றக்குடி மடாதிபதிக்கு இந்தப் பொன்விழாவில் சிறப்பிடம்
தரப்படுகிறது. ஆனால் மதுரை ஆதினமான எனக்கு அந்த மரியாதை இல்லையே
என்று குமைந்த இவன் மறுநாள் விழாவின் போது காலையில் ஓர் அரசியல்
தலைவர் ஒருவருடன் மேடைக்கு வந்தார். அந்த அரசியல் தலைவரோ அண்ணாவை
மிகமிகத் தரக்குறைவாக பேசினார். சாதியைக் குறிப்பிட்டு, மிகமிக மோசமாக
திட்டினார். அவனைப் பேசவிட்டவர் கருங்காலிகள் என்று பேசிவிட்டார்.
கூட்டமே திகைத்து பல்வேறு மாநிலங்கள், பல்வேறு நாடுகளிலிருந்து வந்தவர்களெல்லாம்
அந்தத் தலைவரை ஆதீனம் தூண்டி விடுவதைக் கண்டு மனம் சுளித்தனர். இது
நடந்த இரண்டு நாள் கழித்து ஞாயிறு அன்று மாலை மதுரைச் சந்தைத் திடலில்
அண்ணா அவர்கள் பேசும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டம் ஏற்பாடாயிருந்ததது.
அண்ணா அவர்கள் பதில் சொல்லுவார் என்று எதிர்பார்த்தவர்களெல்லாம்
ஏமாறும் படி அண்ணா அவர்கள் அதைப்பற்றிப் பேசாமல் கண்ணியம் காத்தார்.
(மா.பாண்டியன்)
தந்தை பெரியார் திருமணம் செய்து
கொண்ட நேரம் 1949-ம் ஆண்டு பெரும்பாலன கழகத்தவர்கள் அடுத்து எடுக்கக்
கூடிய முடிவு பற்றி பலவகையான கருத்துக்ளைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.
நான், தோழர் ஈ.வெ.சி.சம்பத், தோழர் கே.கே.நீலமேகம், தோழர் சேலம்.ஏ.சித்தய்யன்,
இளவல் செழியன் போன்றவர்கள், நாம் பெரும்பான்மையோர் வலிவை பெற்றிருப்பதால்
திராவிடர் கழகம், அதன் பெயரில் உள்ளச் சொத்துக்கள், விடுதலை நிறுவனம்
ஆகிய அனைத்தையும் கையகப்படுத்தி நாமே நிருவாகப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்
என்று பல நாளாக வாதிட்டு வந்தோம். எங்களுடைய உணர்வையோ, கருத்துக்களையே,
திட்டங்களையே அறிஞர் அண்ணா அவர்கள் அறவே ஏற்றுக்கொள்ளவில்லை . திராவிடர்
கழக சொத்துக்களையும், அமைப்பையும் அப்படியே பெரியாரிடத்தில் விட்டு
விட்டு புதிய கழகத்தை, புதிய கொடியுடன், புதிய அமைப்பை துவங்கலாம்
என்றும், பெரியாரிடம் கற்றுக்கொண்ட கொள்கைகளையும், குறிக்கோளையும்
காப்பாற்றி வளர்ப்பதுதான் நம்முடைய கடமையாக இருக்கவேண்டும் என்று
அண்ணா அவர்கள் வாதிட்டு வந்தார்கள். (நாவலர்.
நெடுஞ்செழியன்)
தி.மு.க. தோன்றிய இரண்டொரு ஆண்டுகட்குப்
பின்பு ஒரு நாள் அண்ணா, சம்பத், நான் மூவரும் இருக்கிறோம். அப்போது
வெளியாகிய ஓர் திரைப்படத்தில் இசைச் சித்தர் சிதம்பரம் செயராமன்
எது வேண்டும் சொல் மனமே என்று ஒரு பாடலை அற்புதமாகப் பாடியிருந்தார்.
அது எப்போதும் என் செவிப்புலனை நிறைந்திருந்தது. நான் தனியே உட்கார்ந்து
ஒரு சிறு தாளில் எழுதத் தொடங்கினேன்.
எது வேண்டும் என் தலைவா - தலைவா
மதிவேண்டும் என்ற உம் கொள்கையா - இல்லை
மணம் வேண்டி நின்ற உம் வேட்கையா
பணி செய்வோர் விசுவாசமா - இல்லை
மணியம்மை சகவாசமா?
இதைப் படித்துப்பார்த்த சம்பத்
சட்டென்று அந்தத் தாளை உருவி அண்ணாவிடம் தந்தார். அண்ணாவின் முகம்
மாறியது. சேச்சே, இது மாதிரி எழுதாதய்யா, அய்யா ரொம்ப வருத்தப்படுவார்.
அதிலேயும் நீ எழுதினதுன்னு தெரிந்ததோ, அப்புறம் அவருக்குத் தூக்கமே
வராது. என்று சொல்லிவிட்டு அந்தத்தாளை கிழித்து எரிந்துவிட்டார்.
அண்ணா சும்மாதான் கிறுக்கினேன். மன்னிச்சுடுங்க என்றேன்.
(அண்ணா சில நினைவுகள் - கவிஞர் கருணாநந்தம்)
தி.மு.க. தேர்தல் கூட்டம் காஞ்சியில்,
அண்ணா அவர்கள் பேசும்போது காங்கிரஸ்காரர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்
கொள்வேன். தமிழ் நாட்டுக்குத் தேவையான திட்டங்கள் இன்னின்ன, என நான்
ஒரு பட்டியல் தருகிறேன். அதை நீங்கள் மய்ய அரசிடம் சொல்லி வாங்கித்தந்துவிடுங்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் இன்னும் 15 ஆண்டுகளுக்குத் தேர்தலில்
நிற்காது என்று அறிவித்தார். இப்படி அறிவித்த முதல் தலைவர் அண்ணாதான்,
வரலாற்றில்.
திரு. டி.எம்.பார்த்தசாரதி அவர்கள்
நடத்தி வந்த மாலை மணி நாளிதழ் இரண்டாம் ஆண்டு மலர் (1952 ஆம் ஆண்டு)
வெளியிடப்பட்டது. அதன் முகப்பில் ஓர் ஓவியம் தந்தை பெரியார் அவர்கள்
கழகத்தவர்களை கண்ணீர்த்துளிகள் என்று அழைத்து கடுமையாக சாடிவந்த
காலம். அந்தக் கண்ணீர்த்துளியே, பெருங்கடலாகப் பெருகி அந்தக் கண்ணீர்
கடலில் பெரியார் தன் கைத்தடியுடன் மிதப்பது போல் படம் போடப்பட்டிருந்தது.
அண்ணா இதைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டடு பெரியார் நம்மை இழித்தும்
பழித்தும் பேசினாலும், நாம் அவரை சிறிதும் குறைத்து பேசவோ, எழுதவோ
கூடாது என்பது அண்ணாவின் அறிவுரை. பெரும் பணச் செலவில் பல்லாயிரம்
படிகள் அச்சிடப்பட்டுவிட்டன. இநத் நிலையில் இந்தப் படம் வெளிவரக்
கூடாது என்றால் என்ன செய்வது?
வண்ண மை ஈரம் காயாமல் இருந்ததால் பெரியார் உருவத்ததை இலகுவாக அழிக்க
முடிந்தது. உடனே அலுவலகத்தில் உள்ள நாங்கள் அனைவரும் உட்கார்ந்து
கையாலே அத்துனை அட்டைப்பட ஓவியங்களையும் அழித்தோம். பெரியார் மீது
அண்ணா அவர்கள் கொண்டிருந்த மரியாதையும், தமது கண்ணியமான அரசியல்
பண்பாட்டுக்கு இழுக்கு வந்துவிடக்கூடாது என்று அண்ணா மேற்கொண்ட நடவடிக்கையும்
இந்த நிகழ்ச்சி மூலம் அறியலாம்.
(அண்ணா எனும் அண்ணல் - மா.செங்குட்டுவன்)
1962 - ம் ஆண்டிலே பூவிருநத்வல்லியிலே
கழக நண்பர்களும் நானும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
மாங்காடு என்ற ஊரிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது. மக்கள் வெள்ளமோ
கடலென திரண்டு வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டது அன்றைய ஊர்வலம்
கோலாகலமாக அமைந்தது.
எதிர்பாராத விதமாக அன்றைய தமிழக விவசாய அமைச்சராக இருந்த திரு.எம்.பக்தவச்சலம்
அவர்கள் கழக ஊர்வலத்தில் வந்து சிக்கிக்கொண்டார். மிக அலங்காரமாகவும்,
பார்ப்பவர்கள் மெய் மறந்து ரசிக்கக் கூடிய ஓர் அலங்காரத் தேரிலே
அறிஞர் அண்ணா உட்கார்ந்திருந்தார். எப்படியோ திரு. பக்தவச்சலம் வந்து
சிக்கிக் கொண்டு தவிப்பதை பார்த்துவிட்டார்.
அவ்வளவுதான். மிக வேகமாக கீழே இறங்கி ஓடிவந்து அவரை அங்கிருந்து
வழியனுப்பவேண்டிய ஏற்பாடுகளைச் செய்து மிக கண்ணியத்துடன் அனுப்பிவைத்துவிட்டு
பிறகு மீண்டும் தனது அலங்காரத் தேரில் ஏறி ஊர்வலமாக வந்தார். திரு.பக்தவச்சலம்
வந்து உர்வலத்திலே மாட்டிக்கொண்டாரே என்ன நடக்குமோ, ஏது ஆகுமோ என்ற
சூழ்நிலை அங்கே காணப்பட்டது. அந்தச் சூழ்நிலையை தகர்த்தெறிந்து அவரை
மிக மரியாதையோடும், பெருமையோடும், எவ்வித சிறு குறைபாடும் நிகழாமல்
அனுப்பிவைத்த சம்பவமானது அண்ணா அவர்களின் கண்ணியத்தை அரசியல் நாகரீகத்தையும்
மனிதப்பண்பாட்டையுமே காட்டியது.
(டி.இராசரத்தினம்- முன்னால் சட்டமன்ற உறுப்பினர்,
பூவிருந்தவல்லி - அண்ணாவுடன் ஓர் அரிய சந்திப்பு மலர்)
திருச்சியில் இரண்டு நாட்கள் அண்ணாவின்
கூட்டங்கள் நடத்துவது, முதல் நாள் தமிழிலும் இரண்டாவது நாள் ஆங்கிலத்திலும்
என விளம்பரம் செய்திருந்தோம். நாங்கள் எங்கள் கூட்டங்களை விளம்பரப்படுத்தியப்
பிறகு அண்ணா ஆங்கிலத்தில் பேச இருந்த நாளில் நாவலர் சோம சுந்தரபாரதியார்
கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்து சிலர் விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.
முதல் நாள் கூட்டத்திற்கு வரும்போதே அண்ணா மறுநாள் நடக்க இருக்கும்
இரு கூட்டங்களின் சுவரொட்டிகளை பார்த்து விட்டு நாளைய கூட்டம் இல்லை
என அறிவித்துவிடு என்றார். அண்ணா நாங்கள் விளம்பரம் செய்த பிறகுதான்,
நாவலர் சோமசுந்தர பாரதியார் பேசுவார் என்று யாரோ வேண்டாத சிலர் விளம்பரம்
செய்திருக்கிறார்கள். நாம் விளம்பரம் செய்தாகிவிட்டது உங்களது தமிழ்
பேச்சைவிட எல்லோரும் ஆங்கிலப் பேச்சை எதிர்பார்க்கிறார்கள். அதை
எப்படி நிறுத்த முடியும் என்று நான் எதிர்ப்பு தெரிவித்தேன். நமக்குதான்
கூட்டம் வரும் என்றேன் (நாவலர் சோமசுந்தர பாரதியார் அந்த காலக்கட்டத்தில்
வாழ்ந்த பெரும் தமிழ் அறிஞர்), அதற்கு அண்ணா நானும் அதனால்தான் கூட்டத்தை
நிறுத்தச்சொல்கிறேன். பாரதியார் கூட்டத்திற்கு யாரும் போகாமல் இருப்பது
அவருக்கு ஏற்படுத்தும் அவமானமல்லவா? கட்சியைப் பரப்புவதைவிட பெரியவர்களை
மதிப்பதுதான் முக்கியம். நீ சொல்லாவிட்டால், நானே நாளைக்கு கூட்டம்
இல்லை என்று தெரிவித்துவிடுவேன் என்று கண்டிப்பாகச் சொன்னார்கள்.
வேறு வழியில்லாமல் அடுத்த நாள் கூட்டம் கிடையாது என்று நானே எதிரிலிருந்த
மக்களிடம் அறிவித்தேன்.
தத்துவமேதை டி.கே.சீனிவாசன், (திராவிட முன்னேற்றக்
கழகத்தின் முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவர்- அண்ணா பவழ விழா மலர்,
1984)
|