கடமை
( டாக்டர் அண்ணா பரிமளம் )

 

20-ம் நூற்றாண்டின் தலை சிறந்த சுய சிந்தனையாளர் தந்தை பெரியார் அவர்களை இனம் கண்டு தலைவராக ஏற்றுக் கொண்டவர் அண்ணா. அண்ணா அவர்கள் பள்ளி இறுதி ஆண்டு மாணாக்கராக இருந்த போது, 1925-ம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள், தமிழரிடம் புகுத்தப்பட்ட ஏற்ற தாழ்வுளை ஒழிக்க சுளுரைத்து காங்கிரஸ் எனும் பேரியக்கத்திலிருந்து வெளியேறியது, அண்ணாவின் இளம் உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதே போல் 1929-ம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள், தான் யாரை பின்பற்ற வேண்டும், எந்தப் பாதையில் பயணம் செய்ய வேண்டும் என்று அண்ணா அவர்கள் முடிவெடுத்திருக்கலாம்.

ஆதலால்தான் 1933, 1934 ஆகிய ஆண்டுகளில் முறையே காங்கேயம், திருப்பூர் ஆகிய ஊர்களில் நடந்த செங்குந்த இளைஞர் மாநாட்டில் தந்தை பெரியாரின் தலைமையில் பேசிய அண்ணா அவர்கள் தன் பட்ட படிப்பு முடிந்ததும் தந்தை பெரியாரின் படைவரிசையில் சேர்ந்து பணியாற்றுவது என்று முடிவெடுத்திருப்பார்கள் என்பது என் துணிபு.

தந்தை பெரியார் அவர்களின் சமுதாய மேம்பாட்டு கொள்கைகளை மக்களிடம் பறப்புவதிலே தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டும், மக்களை மறுமலர்ச்சி தமிழகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதுவே தன் தலையாய கடமை என நினைத்து பணிபுரிந்தவர் அண்ணா. அது மட்டுமன்றி எல்லாத் தரப்பினரும் இந்தக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுகிற முறையில் நயமாக, ஆனால் ஆணித்தரமாக எடுத்துரைத்தவர் அண்ணா. அதற்காக அரசியல்வாதியான அண்ணா அவர்கள் இலக்கிய உத்திகளைப் பயன்படுத்தி வெற்றிகண்டவர்கள். அவர் மேடைப் பேச்சுகளில் தம்பிக்கு எழுதிய கடிதங்களில், ஆற்றிய இலக்கியப் பணி கூட சமுதாய ஏழுச்சிக்கும் அவர் நடாத்திய விடுதலை இயக்திற்கும் தன் தம்பியர் படையை தயார் செய்ததற்கும் பயன்படுத்தியிருக்கிறார். அண்ணா அவர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டதன் முக்கியக் குறிக்கோள், தமிழர் தன் இன, மொழி உணர்வுடன், ஏற்ற தாழ்வற்ற, சாதி, சமய மூடநம்பிக்கைகள் அற்ற, ஓர் சமுதாயத்தை மீண்டும் காண, ஊக்குவிக்க என்பதை தன் தலையாய கடமையாகக் கொண்டார்.

நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய்ப்பச் செயல் என்ற குறளுக்கேற்ப அண்ணா தன் பணியை மேற்கொண்டார்

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகள் மூடநம்பிக்கை ஒழிப்பு கருத்துக்கள், பெண்ணுரிமை, அறியாமை ஒழிப்பு, சமதர்மம் இவைகள் எல்லாமே வீழ்ந்து கிடக்கிற தமிழினத்தை, தட்டி எழுப்ப, எழுப்பி நிறுத்த, இழந்ததைப் பெற, பெற்றபின் மீண்டும் தரணி மெச்ச வாழ என்பதை புரிந்துகொண்டு அதற்கேற்ப பாதை அமைத்து, பயணம் செய்து இளைஞர்களை ஈர்த்து, மாபெரும் அறிவியக்கமாக ஆக்கி வேதனைப்புரத்தில் உழன்ற தமிழர்களை வெற்றிபுரி அழைத்துச் சென்றவர் அண்ணா அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களின் தமிழகத்தைப் பற்றிய, தமிழனைப் பற்றிய கனவுகள் மெய்ப்படவேண்டுமென்றார், அரசாட்சியைப் பிடிக்க வேண்டும், அரசு நம் கைக்கு வரவேண்டும் என நினைத்தார் அண்ணா. அதற்காக பதினெட்டு ஆண்டுகள் இரவு பகல் பாராது கடுமையாக உழைத்தார். பேராயக் கட்சியை எதிர்த்து, அதை ஆதரிக்கும் தன் தந்தை பெரியாரை எதிர் கொண்டு 1967-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி கண்டு திராவிட முன்னேற்ற கழகத்தை அரசு கட்டிலில் ஏற்றினார். தந்தை பெரியாரின் கனவுகளை நினைவாக்கினார்.

இதை அண்ணாவே சொல்கிறார்.

12.07.1968 அன்ற கரூரில் நடந்த தந்தை பெரியாரின் 89-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பேசிய அண்ணா,

என்னுடைய நண்பர்கள் எல்லாம், நான் பிரிந்து சென்று விட்டேன் என்று குறிப்பிட்டார்கள். இருக்க வேண்டிய கடினமான நாட்களில் இருந்தேன். பிரிந்தேன் என்பது கூட தவறு. இந்த நாடு அரசியலை நமக்கு நேர் மாறான கருத்துடையவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களுக்கு நாம் ஆளாகி இருப்பதைப் போக்க வேண்டும் என்பதற்காக, அரசியலில் நுழைந்து அதனை கைப்பற்றியும் இருக்கிறேன். . . . . . இவரது கொள்கைகளை நிறைவேற்ற என்னால் இயன்றவரை பாடுபடுவேன். இந்த ஆட்சியால் பயனில்லை, எதுவும் செய்ய இயலாது என்றால், ஓட்டிக் கொண்டிருப்பேன் என்று யாரும் கருத வேண்டாம். எனக்கு இப்பதவி இனிப்பானதல்ல . . .

இது அண்ணாவின் கூற்று.
அண்ணா அவர்கள் தன் சிறுகதைகள், புதினங்கள் மூலம் வரதட்சினைக் கொடுமை, பொருந்தா மணம், விலை மகளிர் அவலம், பல மணைவியரை மனத்தல், விதவைக் கொடுமை இவைகளைக் கண்டித்து எழுதினார். அவைகளில் இருந்து விடுபட, விதவை மறுமணம் கலப்பு மணம், இருதாரத் தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை இவைகளை வலியுறுத்தி எழுதி போர் தொடுத்தார்.

மார்க்சின் தத்துவத்தை அரசாங்கம் மூலமாக நடைமுறைப் படுத்துவதில் லெனின் எவ்வாறு தன்னை அர்பணித்துக் கொண்டாரோ அதேபோல தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களை அரசாங்கம் மூலமாக செயல் வடிவம் கொடுக்க தன்னை அர்பணித்துக் கொண்டவர் அறிஞர் அண்ணாவாகும். காரல் மார்க்சுக்கு எப்படி ஒரு லெனின் அமைந்தாரோ அவ்வாறே தந்தை பெரியாருக்கு அண்ணா அமைந்தார்.

அண்ணா தமிழக முதல்வராக இருந்த குறுகிய காலத்தின் செயலாக்கம் தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களை நடைமுறைப்படுத்துவதிலேயே இருந்தது. அவற்றில் தலையாயது 'தமிழ் நாடு' எனப் பெயர் மாற்றம். மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் அந்தந்தப் பகுதியைக் குறிக்கும் வகையில் பெயர்கள் அமைந்திருக்கும் போது நமது மாநிலத்திற்கு மட்டும் மாநில தலைநகரின் பெயரைக் கொண்டே 'ஸ்டேட் ஆப் மதராஸ்' எனப் பெயர் அமைந்திருப்பதை மாற்றி தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்தார். . . (31.01.93- சசி - ஞாயிறு மலர், விடுதலை)

அதேபோல் பெரியாரின் மற்றொரு உயிர்க் கொள்கையான சுயமரியாதைத் திருமணங்கள் செல்லுபடியாகவும் சட்டம் கொண்டு வந்தார்.

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை கொண்டு வந்து இந்திக்கு இங்கே இடமில்லை என அறிவித்தார்.

ஆலயங்களின் வருவாயிலிருந்து பணத்தை கல்வி, மருத்துவம் முதலிய சமுதாய நல வசதிகளைச் செய்துத் தரக்கூடிய வகையில் அறநிலைய பாதுகாப்புச் சட்டத்தை சீர்திருத்தி அமைப்பதற்கான சாத்யக் கூறுகளை அறநிலைய ஆணையரைக் கொண்டு ஆராயச் செய்ய வேண்டும் என்ற அவரது கனவு இன்று வரை நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. (31.01.1993 - சசி - ஞாயிறு மலர், விடுதலை)

1944-ல் சேலத்தில் நடை பெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் 'அண்ணாதுரை' தீர்மானம் எனக் கொண்டு வந்து 'ஜஸ்டிஸ்' கட்சியை 'திராவிடர் கழகம்' எனப் பெயரை மாற்றி அதன் தலைவர் தந்தை பெரியார் என்று பிரகடனப் படுத்தியவர் அண்ணா. இதை தன் தலையாய கடமை என நினைத்து நிறைவேற்றினார்.

வளரும். . .

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai