கட்டுப்பாடு
( டாக்டர். அண்ணா பரிமளம் )

» சுமார் 50-வது ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியாருடன் அண்ணா வடநாட்டில் சுற்றுப்பயணம் செய்தார். லக்னோ பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் அவர்கள் தமிழில் பேச அண்ணா அவர்கள் மொழிபெயர்த்தார்கள் ஆங்கிலத்தில்.

கூட்டம் முடிந்த பின்னர் அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் தலைவர் அண்ணா அவர்கள் எம்.ஏ. படித்தவர் என்பதை அறிந்து சிறிது நேரம் ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கேட்டார்.

அண்ணா தந்தை பெரியாரைக் கேட்க அவர் அனுமதி தர மறுத்துவிட்டார். அவர்கள் வற்புறுத்துவதைப் பார்த்த தந்தை பெரியார் அண்ணாவிடம் நான் அவரின் பேச்சை மொழிபெயர்க்க வந்திருக்கிறேன் என்று அவர்களுக்கு ஆங்கிலத்தில் சொல்லு என்றார். அண்ணா அவர்களும் தந்தை பெரியார் சொன்னதை அந்த மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி, பேசுவதைத் தவிர்த்து தன் தலைவரின் சொற்படி கட்டுப்பாடோடு நடந்துகொண்டார்.

» 1953-ம் ஆண்டு மும்முனைப் போராட்டத்தில் ஈடுபட்டு அண்ணாவும் பல கழகத் தோழர்களும் சிறை ஏகினர். சிறை புகுந்த தோழர்கள் சிறை கூடத்தின் கட்டு திட்டங்களுக்கு உட்பட்டு கட்டுப்பாடு தவறாமல் நடந்து கொள்ள வேண்டுமென்று வற்புறுத்தி அதனை காத்து வருவதிலே அண்ணா அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள்.

ஒரு சமயத்தில் சிறையில் ஒரு குழுவாக நுழைந்த முப்பது பேர் சாலையில் வரிசையாக அமரவும், அறைக்குள் இருக்கும் சிறு நீர்ப் பானையை வெளிக்கொண்டு வரவும் சோற்றினைச சென்று வாங்கிக்கொள்ளவும் மறுத்துவிட்டனர். சிறை வார்டன்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் தகராறு வளர்ந்தது. இதைக் கேள்வியுற்ற அண்ணா, என்னை அழைத்து அவர்களால் சிறு நீர் பானையை எடுத்து வெளியே வைக்க முடியவில்லையென்றால் நானே வந்கு அவர்களின் சிறுநீர்ப்பானைகளை வெளியே எடுத்து வைக்கிறேன் - சோறும் வாங்கித்தருகிறேன், அவர்களிடம் சொல் என்றார். நான் போய் கழகத் தோழர்களிடம் அண்ணா இப்படி உங்களிடம் சொல்லச் சொன்னார் என்றவுடன் அவர்கள் கண் கலங்கி அண்ணா வரவேண்டாம் நாங்களே முறைப்படி நடந்துக்கொள்கிறோம் எங்களை மன்னிக்கும்படி அண்ணாவிடம் கூறுங்கள் என்று தெரிவித்தனர்.
அண்ணாவோடு வாழ்ந்த அந்த சிறைவாசம், நாவலர் நெடுஞ்செழியன்.

» கடற்கறையில் ஓர் நாள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் நடக்கிறது. அண்ணா மேடையில் அமர்ந்திருக்கிறார். திராவிட முன்னற்றக் கழகத்தின் ஐம்பெரும் தலைவர்களில் (அண்ணா, சம்பத், நாவலர், என்.வி.நடராசன், மதியழகன்)ஒருவரான திரு.என்.வி.நடராசன் அவர்கள உணர்ச்சி வசப்பட்டு இந்த மந்திரிகளை கல்லால் அடிக்க வேண்டும் என்று பேசிவிட்டார். உடனே அண்ணா அவர்கள் அவர் பேச்சை நிறுத்தச் சொல்லி இப்படி பேசியதற்கு மக்களிடம் மன்னிப்பு கேள் என்றார். அவரும் மக்களைப் பார்த்து, நான் இப்படி பேசியது தவறு மன்னியுங்கள் என்றார்.

» இன்னொரு முறை அதே கடறகரையில் ஓர் கூட்டம். மக்கள் பெருந்திரளாக வந்திருக்கிறார்கள், அமர்ந்திருக்கிறார்கள். அண்ணா அவர்கள் எதிரே திரண்டிருந்த மக்களைப் பார்த்து தோழர்களே, மாற்றார் என்னைப் பார்த்து அவருக்குச் சேருகிற கூட்டம் கட்டுப்டற்ற கூட்டம் என்று சொல்கிறார்கள். நீங்கள் கட்டுப்பாடுள்ள என் தம்பிகள் என்பதை நிரூபிக்கும் வகையில் இப்போது நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் நடக்க வேண்டும் என கூறி, எல்லோரும் எழுந்திருங்கள் என்றார். அந்த மனிதக் கடல் எழுந்து நின்றது. அமைதியாக அப்படியே கலைந்து செல்லுங்கள் என்றார். அந்த மக்கள் கூட்டம் தன் தலைவன் கேட்டுக்கொண்டதற்கிணங்க அமைதியாக கலைந்து சென்றது.


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai