அறிஞர் அண்ணாவின் நகைச்சுவை
( டாக்டர். அண்ணா பரிமளம் )

பகுதி: 1

பகுதி: 1 2

அண்ணா அவர்கள் மேடைப் பேச்சாக இருந்தாலும், சட்டமன்ற உரையானாலும், நாடாளுமன்ற உரையானாலும் எங்கும் நகைச்சுவையுடன் பேசி எல்லோருடைய உள்ளங்களையும் கவர்ந்தார்.

சிலுவையும் சீடர்களும்!
ஒரு முறை சட்டமன்றத்தில் - அப்போது நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டில்லி செல்வதாக இருந்ததால் அவரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார். கழக உறுப்பினர் ஒருவர் சி.சுப்ரமணியத்தை இயேசு பெருமானோடு ஒப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார்.

குறுக்கிட்ட சுப்ரமணியம் இயேசுநாதரைப் போல் சிலுவையில் அறையாமல் இருந்ததால் சரி என்றார்.

இயேசு நாதருடைய சீடர்தான் அவரைக் காட்டிக்கொடுத்தார் என்று உடனே எழுந்துக் கூறினார் அண்ணா!
அவையில் சிரிப்பொலி எழுந்தது.

உங்கள் கட்சிக்காரர்களால்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர எங்களால் அல்ல என்பதை இவ்வளவு அழகாக நகைச்சுவையுடன் அண்ணா குறிப்பிட்டார்.

சம்பந்தி சண்டையா?
மற்றொரு முறை திரு.வினாயகம் எழுந்து நான் கொடுத்த ஆன் புலிக்குட்டியை மிருகக்காட்சி சாலையில் சரியாகக் கண்காணிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறதே! என்று புகார் கூறினார்.

உடனே அண்ணா அவர்கள் சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று பதில் கூறினார்.

புகார் கூறியவர் உட்பட அனைவரும் சிரித்தனர்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழக மக்களின் நல்லாதரவைப் பெற்று, முதல்வராக வீற்றிருந்த சமயம், விலைவாசி குறைந்துள்ளது என்று அண்ணாவும் உறுப்பினர்களும் கூறியதைக் கேட்ட எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் கேலியாக - புளி விலை குறைந்துள்ளதே அது யார் சாதனை? என்று கேட்கிறார்.

அண்ணா அமைதியாக எழுந்து அது புளியமரத்தின் சாதனை என்கின்றார்

அவை சிரிப்பில் முழ்குகிறது! கேட்பவருக்கு எப்படி இருந்திருக்கும்?

எதிர்கட்சியும் ஆளும் கட்சியும்
1957-க்கு முன்பு காமராசரும், காங்கிரசாரும் அண்ணாவையும், கழகத்தினரையும், வெட்டவெளியில் பேசி என்ன பயன் - முடிந்தால் சட்ட சபைக்கு வாருங்கள் என்றனர். அதன் 15 சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் 1957-குப் பின்) இடம் பெற்ற போதும், 1962-ல் 50 பேராகச் சென்ற பிறகும் காங்சிரசார் - அதன் அமைச்சர்கள் சரியான எதிர்கட்சியில்லை, நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று குறை கூறி கழகத்தை கேலியும், கிண்டலும் செய்தனர்.

அப்போது அண்ணா, நீங்கள் எதிர்கட்சி சரியில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் விரையில் நீங்களே அந்தக் குறையைப் போக்கி விடுவீர்கள் என்று எண்ணுகிறேன். நாங்கள் ஒரு காலத்தில் நீங்கள் இப்போது உள்ள இடத்தில் அமர வேண்டியவர்கள் என்பதால் பொறுப்புணர்ந்து அடக்கத்துடன் கூறுகிறேன் என்று தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.

அண்ணாவின் வாதத்திறமைக்கும், சமயோசிதமான கூர்த்த மதியுடன் பதில் கூறும் தன்மைக்கும் எடுத்துக்காட்டாக இதைப்போலவே ஒரு சம்பவத்தை குறிப்பிடலாம்.

யாருக்காக இந்தக் குறள்?
நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் பேருந்துகளிலெல்லாம் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெறச் செய்தார் அண்ணா.

திருவள்ளுவர் படமும், திருக்குறளும் பேருந்தில் இடம்பெற்றதைக் கேலி செய்து எதிர்க்கட்சியினர் பேசியபோதெல்லாம் அண்ணா தகுந்தவாறு பதிலளித்தார்.

ஒரு முறை எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் தந்திரமாக ஒரு கேள்வியைக் கேட்டார்.

பேருந்தில் யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்று குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா? கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற பொதுமக்களுக்காகவா?

இக்கட்டான நிலையில் அண்ணா அகப்பட்டுத் தவிக்க வேண்டும் என்று எண்ணி எழுப்பப்பட்டக் கேள்வி இது!

டிரைவர் . . . கண்டக்டருக்காக என்றால் தொழிளாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.

பொதுமக்களுக்காக என்றால் மக்களின் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டும்.

இந்த கேள்விக்கு அண்ணா கொடுத்த பதில் சாதுர்யமானது மட்டுமல்ல - மிகவும் நுணுக்கமானதுமாகும்.
நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்.

இந்த உடனடியான பதில் கேள்வி கேட்டவரை மட்டுமல்ல, அனைவரையுமே அதிர வைத்துவிட்டது. இதைப் போல பொருத்தமாகத் தெளிவுடன் உடனே பதில் சொல்லும் அறிவாற்றல் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. இது அவரிடம் மிகுதியாக அமைந்திருந்தது.

திரும்பும் சொல்லம்பு!
ஒரு முறை சட்டமன்றத்தில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த வினாயகம் அவர்கள் அண்ணாவைப் பார்த்து,
யுவர் டேஸ் ஆர் நம்பர்ட் (உங்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன) என்று கூறினார்.

அண்ணா அவர்கள் புன்முறுவல் பூத்த முகத்துடன் அமைதியாக எழுந்து,
மை ஸ்டெப்ஸ் ஆர் மெஷர்ட் (என்னுடைய காலடிகளை எடுத்து வைக்கிறேன்) என்றார்.

இப்படி தன்னை நோக்கி வீசப்படுகின்ற கணையை, வீசியவர்களை நோக்கியே உடனடியாகத் திருப்பி வீசுகின்ற சாமர்த்தியம் அண்ணாவிடம் மிகுந்திருந்தது. அண்ணாவை மடக்க எண்ணியோ வீழ்த்த வேண்டுமென்று விரும்பியோ சொல்லம்பை வீசுவோர் அந்த அம்பாலேயே துளைக்கப்பட்டு வீழ்ந்ததுதான் வரலாறு!

நாடாளுமன்றத்தில் அண்ணா!
ஒரு முறை மாநிலங்களவையில் அண்ணா ஆட்சிமொழிப் பிரச்சினை குறித்து அழகுபட பேசிக் கொண்டிருந்தார். அப்போது பலர் குறுக்கிடுகின்றனர். உடனே அண்ணா நகைச்சுவைத் ததும்பக் கூறினார்.

வெளிப்பார்வைக்குப் பலவீனமாகத் தோற்றமளித்த போதிலும், நமது தலைமை அமைச்சர் இரும்புக்கரம் படைத்தவர் என்பதும் எனக்குத் தெரியும்.

இரும்புக்கரம் கொண்டு மண்டைகளைப் பிளக்கலாம். ஆனால் இதயங்களை கவர முடியாது.

நமது தலைமையமைச்சருக்கு இரும்புக்கரமும், பொன் போன்ற இதயமும் இருக்கின்றன என நான் நம்புகிறேன்.

பேராசிரியர் இரத்தினசாமி(சதந்திரா - தமிழ்நாடு): கரம் தெரிகிறது - இதயம் வெளிப்படையாகத் தெரியவில்லை! அண்ணா: மனிதனுடைய பெருந்தன்மையில் எனக்கு இன்னமும் தன்னம்பிக்கை இருக்கிறது. அவருக்குப் பொன் இதயம் இருக்க வேண்டும் இரத்தினசாமி: இருக்கவேண்டும் . . . புபேஷ் குப்தா: இருக்கவேண்டும்

அண்ணா: அதுமட்டுமல்ல, மொரார்ஜி தேசாயின் தங்கக் கட்டுப்பாட்டுக்கு முற்பட்ட பொன்னாக அது இருக்க வேண்டும்; 14 காரட் தங்கமாக அது இருக்கக் கூடாது.

பேரறிஞர் அண்ணா இதயங்களை தன் வயப்படுத்தும் இணையில்லாத பேச்சாளராக விளங்கியதற்குக் காரணம் இப்போது புரிகிறதல்லவா?

பகுதி: 1 2

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள


Website Designed by R.Sembian, Anna Peravai