சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
38
71. நூல் தோன்றிய கதை


சரித்திர பூர்வமான ஆராய்ச்சி நூலாக பாரதியின் வாழ்க்கை வரலாறு ஒன்று எழுத வேண்டும் என்று எனக்குப் பல வருஷங்களாக ஆசை. அது இன்று நிறைவேறுகிறது.

1934ஆம் ஆண்டு, நான் "ஆனந்த விகட"னில் உதவியாசிரியராக இருந்த சமயம் முதன் முதலாக பாரதியார் புகைப் படம் ஒன்றைப் பார்த்தேன். புதுவை அன்பர் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் கொண்டு வந்து கொடுத்த அப்புகைப் படத்தைப் பிரதியெடுத்துத் தரும்படி ஆசிரியர் 'கல்கி' பணித்தார். அப்போது எடுத்த அப்படத்தின் பிரதிகள் பிற பத்திரிகைகளுக்கும் உதவப்பட்டன. என்னிடம் வந்து சேர்ந்த முதல் பாரதிச் சின்னம் என்று இதைக் கூறலாம்.

வேங்கட ஆரியா

1937ஆம் ஆண்டில் "ஜெய பாரதி" என்ற தேசீய தினசரியில் நான் பணிபுரிந்து வந்தேன். 1909 - 10ல் பாரதியுடன் அவரது "இந்தியா" பத்திரிகையில் மாற்று - ஆசிரியராக இருந்த வேங்கட ஆரியா என்பவரும், திருவல்லிக்கேணியில் பாரதியுடன் பழகியவரான கி.சடகோபன் என்பவரும் அப்போது "ஜெய பாரதி"யில் உதவியாசிரியர்களாக இருந்தனர். இவர்களில், வேங்கட ஆரியாவுடன் நான் அதிகம் பழகுவதற்குள் அவர் ரஜாவில் போனார்; கோபனிடம் பாரதியைப் பற்றிப் பல விஷயங்களை அறிய சந்தர்ப்பம் கிடைத்தது.

"ஜெய பாரதி" தினசரியின் வாரப் பதிப்புக்கு ஆசிரியனாக நான் வேலை பார்த்து வந்த காலத்தில், ஒரு நாள் இரவு கடுமழை பெய்தது. மழைச் சாரலிலிருந்து பழம் பத்திரிகைகள் சிலவற்றை ஒதுக்கி கைக்கப் போனபோது, 'வேங்கட ஆர்யன்' என்று மேலே பெயர் எழுதியிருந்த காகிதக் கட்டொன்று கிடைத்தது. ஆரியாவினுடைய காகிதங்கள் என்று அதை எடுத்து வைத்தேன்.

இது நடந்த சின்னாட்களில் வேங்கட ஆரியா நோய்வாய்ப்பட்டுக் காலமாகிவிட்டார். ஆனால், அப்போதும் அவர் பெயரிட்ட கட்டில் என்ன இருக்கிறதென்று நான் பார்க்கவில்லை. வெகுநாளுக்குப் பின் ஒரு சமயம் கட்டைத் திறந்து பார்த்தபோது, "இந்தியா" என்ற பழைய புதுவைப் பத்திரிகையின் பிரதிகள் வரிசையாக இருப்பதைக் கண்டேன். ஆரியாவின் உறவினர் எவரெனும் வந்தால் தருவோமென்று இதை பத்திரமாய் வைத்திருந்தேன்; ஆனால் எவரும் வரவில்லை.

1933-34ல் முதன் முதலாக வ.ரா.வைச் சந்தித்தேன். அப்போது அவர், "மணிக்கொடி" வாரப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். அவருக்கு பாரதி என்றால் உயிர் என்பது அவருடைய பேச்சிலும் எழுத்திலும் தெரிந்தது. அக்காலத்தில் பாரதி சரித்திரம் ஏதும் கிடையாது. பாரதி தினக் கொண்டாட்டங்களில் நடக்கும் பிரசங்கங்களிலிருந்து பாரதி ஒரு தீர புருஷர் என்றும், ஆனால் ஏனோ அரெஸ்ட்டுக்கு "பயந்து" புதுச்சேரிக்கு ஓடிப்போனார் என்றும் மடடும் அறிந்திருந்தேன். அவரது கவிதைகள் எளிதில் புரிந்தன, விவரிக்கவொண்ணா இன்ப்த்தையும் தெம்பையும் வீராவேசத்தையும் கொடுத்தன. இத்தகைய வீராவேசப் பாடல்களைப் பாடியுள்ள ஒருவர் பயந்துகொண்டு புதுவைக்க ஓடிப்போயிருப்பாரா என்ற சந்தேகம் மட்டும் எனக்கிருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில்தான் "காந்தி" மாதப் பத்திரிகையில் வ.ரா. "சுப்பிரமணிய பாரதியார்" என்ற தலைப்பில் பாரதியின் வாழ்க்கைச் சரிதத்தைத் தொடர்கதை போல எழுதவாரம்பித்தார். ஒவ்வொரு மாதமும் கட்டுரை எப்போது வருமென்று காத்திருந்து படிப்பேன். வ.ரா.வின் கட்டுரைகளில் பல புது விஷயங்கள் தெரிந்தன. பாரதி என்ற மேதையின் பலதரப்பட்ட தன்மைகளை ஒருவாறு உணர்ந்தேன். ஆனால், வ.ரா.வின் கட்டுரைகளில்கூட பல இடங்களில் வருஷம் தேதி முதலான விவரங்கள் சரிவர ஞாபகமில்லை யென்று அவரே குறிப்பிட்டிருந்தது ஆதார பூர்வமான விவரங்களைத் தேடத் தூண்டுதலாயிற்று.

1936ல் ஆக்கூர் அனந்தாச்சாரியாரி வெளியிட்ட பாரதி சரிதமும், பிறகு சக்தி தாஸன் சுப்பிரமணியன் வெளியிட்ட 'பாரதி லீலை' என்ற சிறு நூலும் முழுமையான பாரதி சரிதம் வேண்டுமென்ற ஊக்கத்தை வளர்த்தன.

அக்காலத்தில் பாதி தினம் வ.வே.ஸு.அய்யர் தினம் முதலியவைகளுக்ககான கூட்டங்கள் பழைய காங்கிரஸ் மாளிகையில் நடக்கும். அதில் வழக்கமாக வரும் இருபது முப்பது பேர்களே இருப்பார்கள். இந்தக் கூட்டங்களில் "லோகோபகாரி" ஆசிரியர் பரலி சு.நெல்லையப்பரைச் சந்தித்தேன். நெல்லையப்பரின் பத்திரிகையில் ஒரு சில பாரதி கட்டுரைகள் திரும்பத் திரும்ப வெளியிடப்படுவதும் கண்டேன்.

இந்தச் சமயத்தில் நான் சந்தித்த இன்னொரு பாரதி அன்பர் மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாராகும். பாரதியின் தேசீய முயற்சிகளுக்கெல்லாம் உறுதுணையாகவிருந்த மண்டயம் குடும்பத்தைச் சேர்ந்த இந்த அடக்கமிகுந்த பெரியவர் அப்போது சென்னையில் வசித்து வந்தார். இவர் இன்னும் ஜீவிதராய் தற்சமயம் டெல்லியில் தம் புதல்வருடன் வாழ்வது நமது பக்கியமாகும்.

மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், வ.ரா., நெல்லையப்பர் முதலியோருடன் பழகியதிலிருந்து பாரதியை நேரில் அறிந்த மற்றும் பலர் புதுவையில் வாழ்கிறார்கள் என்றும், பாரதியின் கவிதை, கதை, கட்டுரைகளில் இன்னும் பல வெளிவராமலிருக்கின்றன என்றும் அறிந்தேன். புதுவை போய் பாரதி இருந்த இடங்களைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை இதனால் பிறந்தது.

புதுவைப் பயணம்

1938ல் இதற்கேற்ற சந்தர்ப்பமும் ஏற்பட்டது. பாரதியை நேரில் அறிந்தவரும், பாரதியைப் போலவே திலகரை அரசியல் குருவாகப் பின்பற்றியவருமான "ஸண்டே டைம்ஸ்" ஆசிரியர் எம்.எஸ்.காமத் நடத்தி வந்த "ஹிந்துஸ்தான்" தமிழ் வாரப் பத்திரிகையின் உதவியாசிரியர்களில் ஒருவனாக இருந்த நான், என்னை புதுச்சேரிக்கு அனுப்பினால் பாரதி சம்பந்தமான பல விவரங்களையும் படங்களையும் கொண்டு வர இயலுமென்றும், இவைகளைக் கொண்டு ஸெப்டம்பர் 11ஆம் தேதி இதழை விசேஷ "பாரதி மல"ராக வெளியிடலாமென்றும் தெரிவித்தேன். "ஹிந்துஸ்தான்" ஆசிரியர்கள் ஈ.ஆர்.கோவிந்தனும், ரா.நாராயணனும் இதை ஆர்வத்துடன் ஆமோதித்தனர். காரியாலயப் புகைப் படக்காரரான யூ.என்.ஸிங் என்பவரும் நானும் புதுவை சென்றோம். முன் ஜாக்கிரதையாக நானும் ஒரு காமிரா எடுத்துச் சென்றேன்.

புதுவை போகுமுன் சென்னையிலேயே குவளைக் கண்ணன் என்ற பாரதி சீடரைச் சந்திக்கும் பாக்கியம் பெற்றிருந்தேன். பாரதியின் உயிர்த் தோழரான அவர் அச்சமயம் திருவல்லிக்கேணியில் வாழ்ந்து வந்தார். வியப்புறு ஞாபகசக்தி படைத்தவர் அவர். பாரதி நண்பர்கள் பலரைப் பற்றி அவர் விவரம் சொன்னார்; அப்போது பிரசுரமாயிராத பாரதி பாடல்கள் பலவற்றை வரி பிசகாமல், எழுத்துப் பிசகாமல் மனப்பாடமாய்ச் சொன்னார். இப்பாடல்களில் சில பின்னர் புத்தகமாய் வெளிவந்ததும் ஒப்பிட்டுப் பார்த்தபோதுதான் அவரது ஞாபக சக்தியின் பெருமை புலனாயிற்று.

புதுவையில் முதன் முதலாக அம்மாக்கண்ணு என்ற கிழவியைக் கண்டோம். பொன்ன முருகேசம் பிள்ளை என்ற தனவான் வீட்டுப் பணிப் பெண்ணாகிய இவளுக்கு பாரதியிடம் வாஞ்சை அதிகம். நாங்கள் போன சமயம், 1938ல் அம்மாக்கண்ணு தள்ளாமையடைந்துவிட்டாள்; காது கேட்கவில்லை. அவளிடம் பேசி அதிக விஷயங்கள் அறிய முடியவில்லை.

அம்மாக்கண்ணுவின் புதல்வர் வேணு என்ற வே.வேணுகோபால் நாயக்கர் எங்களைப் புதுவையில் பாரதி சம்பந்தப்பட்ட இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்று காட்டினார். மற்றும் புரோபஸர் என்.சுப்பிரமணிய அய்யர் ("பிரம்மராய அய்யர்"), ஆறுமுகம் செட்டியார்("எலிக்குஞ்சு செட்டியார்"), பொன்னு முருகேசம் பிள்ளையின் புதல்வர் ராஜா பகதூர் முதலிய பாரதி நண்பர்களையும் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். "பாரதி தாசன்" என்ற வாத்தியார் கனக சுப்புரத்தினத்தையும் தேடிச் சென்றோம்; அவர், துரதிர்ஷ்டவசமாய், ஊரில் இல்லை.

'பிரம்மராய அய்யர்'

பாரதி காலத்தில் புரொபஸர் சுப்பிரமணிய அய்யர் வீட்டுத் திண்ணையில் "இடிப் பள்ளிக்கூடம்" என்று பெயர் பெற்ற அரட்டைக் கச்சேரி நடக்கும் என்று ஒரு கட்டுரையில் பாரதி குறித்திருக்கிறார். இந்தக் கச்சேரி, 20 வருஷங்களுக்குப் பின் நாங்கள் போன சமயமும் நடந்து கொண்டிருந்தது. ஆனால், வீட்டுத் திண்ணைக்குப் பதிலாக, மாடியில் நடந்தது; முன்பு நடந்ததுபோல புரொபஸரின் இடியோசை கேட்கவில்லை. அடக்கமாக, சீட்டுக் கச்சேரியாகத் திகழ்ந்திருந்தது.

பாரதியார் விஷயமாக நாங்கள் வந்திருக்கிறோமென்று அறிந்ததும் புரொபஸர் சுப்பிரமணிய அய்யர் வெகு நேரம் அளவளாவிக் கொண்டிருந்தார். பாரதியின் ஞாபகார்த்தமாகத் தாம் வைத்திருந்த "பொன் வால் நரி" (The Fox with the Golden Tail) என்ற ஆங்கிலப் பிரசுரத்தின் பிரதி ஒன்றையும், "விஜயா" தலையங்கத்தைக் கையிலெடுத்தவர் அதைத் தமது உரத்த குரலில் படித்துக் காட்டிக் களிக்கவும் ஆரம்பித்துவிட்டார். அவ்வளவுதான். அவருக்குப் பழைய ஞாபகங்கள் அலைமோதிக்கொண்டு வந்துவிட்டன. "வி.கிருஷ்ணஸ்வாமி அய்யர் நீதிபதி பதவி ஏற்றதைக் கண்டித்து இந்தத் தலையங்கம் எழுதிவிட்டு, பாரதியார் இதை எங்களிடம் எப்படிப் படித்துக் காட்டிக் குதூகளித்தார் தெரியுமா!" என்று கடகடவென்று சிரித்தார்.

அடக்கவொடுக்கமான ஆறுமுகம் செட்டியார் தம் நினைவாக, வ.வே.சு.அய்யரின் "பால பாரதி" பத்திரிகை, தமக்கு அது தபாலில் வந்த மேலுறையுடன், கொடுத்தார்.

'ஹிந்துஸ்தான்' பாரதி மலர்கள்

புதுவையில் எடுத்த படங்களும் தேடிச் சேகரித்த பல தகவல்களும் "ஹிந்துஸ்தான்" பாரத மலராக வெளிவந்தபோது, பல பாரதி அன்பர்கள் பாராட்டி, ஊக்குவித்தார்கள். இந்த ஊக்கம் காரணமாக, மறு வருஷமும் புதுவை போய்ப் பல புதிய தகவல்களையும் கடிதங்களையும் படங்களையும் கொண்டு வந்தேன். 1939ஆம் ஆண்டு பாரதி மலரில், "சென்னை மாகாணத்தின் அரசியல் விழிப்பு" (Political Evloution in the Madras Presidency) என்ற இன்றும் வெளியாகாத பாரதியின் ஆங்கில நூலின் முதல் அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பு உட்படப் பல விஷயங்கள் வெளியிடப் பெற்றன. இதை பாரதியின் இளைய சகோதரர் சி.விசுவநாதன் அனுப்பி உதவினார்.

1940, 1941ஆம் ஆண்டுகளிலும், "ஹிந்துஸ்தான்" சிறந்த பாரதி மலர்களை வெளியிட்டு, அதுவரை வெளிவராத பல புதிய விஷயங்களை வெளிக் கொணர்ந்தது.
பாரதி வாழ்க்கைச் சுவடுகளை வெளிப்படுத்தி, பாரதியைத் தமிழ் மக்கள் சரிவரப் புரிந்து கொள்ளச் செய்யவேண்டும் என்ற இக்கருத்தில் வேறு பல 'பாரதி நினைவு'களும் வெளிவரலாயின. ஆனால் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியான இந்த நினைவுக் குறிப்புகளையும் தொகுத்து வெளியிடுவதில் தமிழ் நாட்டில் எவரும் இதுவரை ஊக்கம் காட்டவில்லை.

பாரதி பொருட்காட்சி

"ஹிந்துஸ்தான்" பத்திரிகையில் பணிபுரிந்ததற்குப் பன்னிரண்டு வருஷங்களுக்குப் பின்னர் மீண்டும் நான் சென்னைக்குத் திரும்பியபோது, என்னிடமுள்ள பாரதி நினைவுப் பொருள்களையெல்லாம் சேர்த்து ஒரு பாரதி பொருட்காட்சியாக அமைத்துப் பலரும் கண்டு களிக்கச் செய்ய விரும்பினேன். முடிவில் 1953ஆம் ஆண்டு ஸெப்டம்பர் மாதம் பாரதியார் சங்கம் சென்னை ஹிந்தி பிரசார சபைக் கட்டடத்தில் நடத்திய பாரதி விழாவில் இத்தகைய பொருட்காட்சியொன்று அமைக்க வாய்ப்புக் கிடைத்தது. இதை அமைப்பதற்கு, பாரதியார் சங்கக் காரியதரிசி ஆக்கூர் அனந்தாச்சாரி ஊக்கமளித்தார்; 'பாரத்தன்' எனப்படும் ஜி.பார்த்தஸாரதி என்ற இளம் சித்திரக்காரர் இரவு பகலாய் உழைத்துப் பெரும் உதவி புரிந்தார்.

பாரதி பொருட்காட்சி எதிர்பார்த்ததைவிட அதிகமான உற்சாகத்தை எங்களுக்கு உண்டாக்கியது. பொதுமக்களுக்கும் இக்காட்சி பாரதியிடம் புது உற்சாகம் பிறக்கும்படி செய்வதாயிருந்தது. பாரதியை அறிந்த பலர் மேன்மேலும் பல தகவல்களைக் கொடுக்க முன் வந்தனர்; பாரதியைப் பற்றிய பல புதிய ஆதாரங்கள் இருக்குமிடம் தெரிந்தது. இதே காட்சி மேலும் சிறப்பான முறையில் 1953ஆம் ஆண்டு இறுதியில் நடந்த சென்னை காங்கிரஸ் பொருட்காட்சியிலும் இடம் பெற்றது. இந்த பாரதி பொருட்காட்சியைக் கண்ட தலைவர் ராஜாஜி "இது ஒரு பெரு முயற்சி, மகிழ்ச்சி தருகிறது" என்று பாராட்டினார்.

நூல் யோசனை

பாரதி பொருட்காட்சியின் சேவையை சகோதரத் தமிழ் எழுத்தாளர்களும் பாராட்டினார்கள். சென்னை தமிழ் எழுத்தாளர் சங்கம், தனது 1954ஆம் வருஷ மகாநாட்டில், இதற்கென இந்நூலாசிரியருக்கு ஒரு தங்க மெடல் அளித்து கௌரவித்தது.

பாரதி பொருட்காட்சி மேலும் சில புதிய சேர்க்கைகளுடன் 1954ஆம் ஆண்டு அண்ணாமலை நகரில் நடந்த அகில இந்திய எழுத்தாளர் மகாநாட்டிலும், அதே ஆண்டு ஸெப்டம்பரில் பாரதி தினத்தன்று சென்னை அமெரிக்கத் தகவல் ஸ்தாபனமான யுனைட்டேட் ஸ்டேட்ஸ் இன்பர்மேஷன் ஸெர்விஸின் நூல் நிலையத்திலும் காட்டப்பெற்றது.

கிடைத்தற்கரிய அசல் பாரதி கடிதங்களும் கையெழுத்துப் பிரதிகளும் பழம் பத்திரிகைகளும், அச்சில் இல்லாத பல பாரதி நூல்களும், பாரதியன்பர்களின் புகைப்படங்களும் இன்னும் பல விஷயங்களும் பாரதி பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இந்த அரிய பொருள்களை அடிக்கடி பொருட்காட்சியாய் வைப்பதில் சில சிரமங்கள் இருக்கின்றன. தொட்டால் பொடித்து விழும் பழம் தாள்கள் இவ்வாறு அடிக்கடி எடுத்து வைப்பதால் மேலும் சேதமடைகின்றன. இதற்கு என்ன செய்வோமென்று நினைத்திருந்த சமயம், அமுத நிலையம் நிர்வாகி ரா.ஸ்ரீ.ஸ்ரீகண்டன், பொருட்காட்சியிலுள்ள விஷயங்களையும் படங்களையும் சேர்த்து ஒரு நூலாக வெளியிடலாம் என்றார்.

இது சிறந்த யோசனையென்று சம்மதித்தேன். ஆனால், நூலாக வெளியிடுவதென்றால் கூடுமானவரை முழுமையான தொடர் உருவம் கொண்டதோர் நூலாக இருக்கவேண்டும் என்றும் அதற்காக மேலும் கிடைக்கக்கூடிய விஷயங்களையெல்லாம் சேகரிக்க வேண்டும் என்றும், படங்களையெல்லாம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தோன்றிற்று. உண்மையில் நூலாக வெளியிடுவது என்று ஒப்பமானதற்குப் பின் எனது முயற்சிகளை முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாக்க வேண்டியிருந்தது!

மூன்று வருஷமாக

மூன்று வருஷ இடையறாத முயற்சிக்குப் பின், இன்று ஒருவாறு திருப்தியடைந்து இந்நூலை வெளியிடுகிறோம். இந்த மூன்று வருஷங்களும் வீண்போகவில்லை. பாரதி பொருட்காட்சியில் இருந்ததைப் போல இரண்டு மடங்கு படங்களும் அதற்குப் பன் மடங்கு அதிகமான அரிய தகவல்களும் இப்போது சேர்ந்து இந்நூல் தயாரிப்பதில் உபயோகிக்கப்பட்டுள்ளன. இன்னும்கூட பல அபூர்வமான 'பாரதிச் சுவடுகள்' எதிர்பாராதபடியெல்லாம் கிடைத்துக்கொண்டே யிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். உதாரணமாக, இந்நூலின் விஷயப் பக்கங்கள் அச்சாகி வந்த சமயம், பாரதி 1907ல் வெளியிட்ட "எங்கள் காங்கிரஸ் யாத்திரை", "புதிய கட்சியின் கொள்கைகள்" என்ற இரு கிடைத்தற்கரிய பிரசுரங்களின் பிரதிகள் கிடைத்தன! மேலும் காணமற் போய்விட்டதெனக் கருதப்பட்ட "சந்திரிகையின் கதை" கடைசி இரு அத்தியாயங்களின் கையெழுத்துப் பிரதி கிடைத்துள்ளது - பாதியாய்க் கிழிந்து!

இதிலிருந்து ஒன்று நிச்சயமாய்த் தெரிகிளது. போன காலதாமதமெல்லாம் போகட்டுமென்று நாம் இப்போதாவது விரிவானதோர் தேடுதல் முயற்சியை மேற்கொண்டோமானால் இன்று கிடைத்திராத இன்னும் பல பாரதி எழுத்துகள் கிடைப்பது சாத்தியமே. ஆனால் தனிப்பட்ட ஒருவரது முயற்சி மட்டும் போதாது. தமிழிலும் பாரதியிலும் ஊக்கமுள்ள பலரும், பாரதி பதிப்புக்குழு, ஸர்வகலாசாலைகள், பாரதி சங்கங்கள் போன்ற பலவித ஸ்தாபனங்களும் பாரதிச் சின்னங்களையும் எழுத்துகளையும் தேடும் ஆராய்ச்சி முயற்சிக்கு ஆதரவு அளித்தால் இன்னும் எவ்வளவோ காரியங்களைச் சாதிக்க முடியும்.

ஏனெனில், இத்தகைய தேடுதல் ஆராய்ச்சி வேலைக்கு நிறைய அவகாசம் வேண்டும், செலவும் ஆகிறது. இந்த நூலுக்குப் புது விஷயங்கள் சேகரிப்பதற்காகச் சென்ற மூன்றரை ஆண்டுகளில், நான், பாரதி இருந்த எட்டயபுரம், கடயம், மதுரை, புதுவை முதலிய ஊர்களுக்குப் போய் அங்கங்கே தங்கியிருந்து விசாரித்துப் பார்த்துள்ளேன். புதுவை போன்ற ஊர்களுக்கு ஒரு தடவைக்குப் பல தடவை போய் வரவேண்டியிருந்தது. பாரதியை அறிந்த சிலரைச் சந்திப்பதற்காக வேறு பல ஊர்களுக்கும் போய் வந்தேன். சில சமயங்களில் நெடுந்தூரம் பயணம் செய்தும் பயனின்றித் திரும்பிய அநுபவமும் கிட்டிற்று.

பலவகை ஆதாரங்கள்


வெளியூர்கள் போய் வருதல் மட்டுமல்ல, சென்னை நகரிலேகூட ஆராய்ச்சி நடத்துதற்குரிய பல விஷயங்கள் இருக்கின்றன. இந்நூலுக்காக, "சுதேசமித்திரன்", "ஹிந்து" முதலிய பத்திரிகைகளின் பாரதி காலத்து இதழ்களைப் புரட்டிப் பார்த்துப் பல விவரங்கள் சேகரித்துள்ளேன். ஆவகாசம் இருந்தால், இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்திருக்க முடியும்.

பிரபலஸ்தர்களும் அல்லாதாருமான பலரைச் சந்தித்து அவர்கள் அறிந்தபடி அவர்கள் கூறும் பாரதி பற்றிய விவரங்களைச் சேர்த்தும், ஏற்கனவே வெளியாகியுள்ள பாரதி நூல்கள், பாரதி சரிதங்கள், பாரதி நினைவு நூல்கள் முதலியவற்றில் கிடைக்கும் விவரங்களைச் சேர்த்தும், எல்லாவற்றையும் ஒன்றாக்கி, ஒப்பிட்டுப் பார்த்து, எது சரியாயிருக்குமென்று தீர்மானித்து, என் கருத்துகளை இந்நூலில் வெளியிட்டிருக்கிறேன்.

பாரதி வாழ்க்கை விவரங்களில் பல வருஷமாக ஈடுபட்டிருந்தும், சென்ற சில ஆண்டுகளாக விசேஷமான ஆயத்தங்கள் செய்து கொண்டும்கூட, நூலை எழுதத் தொடங்கிய போதுதான் இத்தகைய ஆய்வு நூல் எழுதுவதிலுள்ள சிரமம் தெரிந்தது. இருப்பினும், துணிந்து இந்நூலை ஓர் ஆராய்ச்சி வரலாறாக எழுத முற்பட்டேன்.

இந்நூல் சாட்சிபூர்வமான நூலாக இருக்க வேண்டும் என்பதற்காக, இதில் கற்பனைப் படங்களுக்கு இடமளிப்பதில்லையென முதன் முதலாக முடிவு செய்தேன். அதையொட்டி, இந்நூலில் உள்ள 183 படங்களில் நாலைந்து போக மற்றெல்லாப் படங்களும் புகைப்படங்களாகவே இருக்கின்றன. புகைப்படங்களிலும், கிடைத்தவரை பாரதி காலப் படங்களையும், அவைகளிலும் கூடுமானவரை அசல் படங்களையுமே உபயோகித்திருக்கிறேன்.

இன்றைய தமிழர் கடமை.

இந்நூலில் காணப்பெறும் முடிபுகள் பல தரப்பட்ட அத்தாட்சிகளைச் சீர்தூக்கிப் பார்த்து நானறிந்தவரை சரியெனக் கொண்டவை யென்றாலும், சரித்திர ஆராய்ச்சியில் இறுதியான முடிவு என்பது கிடையாது. புதுப்புது அத்தாட்சிகள் கிடைக்கக் கிடைக்க சரித்திரமே மாறி வருவது நாம் கண்கூடாகக் காணும் உண்மை. அதேபோல, பாரதி வாழ்வில் இன்று தெரியாத பல உண்மைகள் மேன்மேலும் தெரியத் தெரிய அந்த ஆதாரங்களுக்குத் தக்கபடி நமது கருத்துகளையும் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும்.

இதே சமயம், பாரதியின் வாழ்க்கை விவர ஆதாரங்களைப் போலவே பாரதியின் கையெழுத்துகளையும் அவர் எழுத்துகள் வெளியான பழம் பத்திரிகைகளையும் தேடிக் கண்டுபிடித்துக் காக்க வேண்டும். எனக்குத் தெரிந்த இந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குள்ளாக பல பாரதி கையெழுத்துப் பிரதிகளும் அவரது கதை, கட்டுரை, கவிதைகள் வெளியான அக் காலப் பத்திரிகை இதழ்களும் நமது அஜாக்கிரதையினால் போன இடம் தெரியாமல் போய்விட்டன. இவைகளில், இன்று வேறு கிடைக்காமல், பெரும் பொக்கிஷங்களானவை சில. இத்தகைய அரிய பொருள்கள் பழம் காகிதக் கடைக்குப் போயிருக்கின்றன என்பதை நினைத்தால் தமிழ் மக்கள் பாரதியை உண்மையிலேயே விரும்புகிறார்களா என்ற ஐயம்கூட எழுந்துவிடுகிறது. ஆனால் ஒரு சிலர் இப்படி அலட்சியத்தால் தவறு செய்து விட்டபோதிலும், தமிழ் மக்களில் பெரும்பாலோர் பாரதியை விரும்புகிறார்கள் என்பது உறுதி.

எனது இம்முயற்சியினால் தூண்டப் பெற்றுத் தமிழ்நாடு அறிஞர்களும் உற்சாகமிக்க இளைஞர்களும் பாரதி வாழ்க்கை பற்றிப் பலப் பல புதிய ஆதாரங்களையும் இதுவரை வெளியாகாத பாரதி எழுத்துகளையும் தேடிக் கண்டுபிடிப்பார்களானால் அதுவே இந்நூல் கண்ட பயனாகக் கருதுவேன்.

பழைய பத்திரிகைகளும் கையெழுத்துப் பத்திரிகைகளும் கல்வெட்டுகளல்ல, அஜாக்கிரதையையும் கால வேகத்தையும் எதிர்த்து நிற்க. எளிதில் சேதப்பட்டு அழிந்து போகும் தன்மை வாய்ந்த அவைகளைக் காலத்தில் தேடிக் காப்போமானால் நாமும் பயனுறுவோம், எதிர்கால சந்ததிகளும் நம்மை வாழ்த்துவர். ஒரு முந்திய தலைமுறை பாரதியை அறியாது தவிக்கவிட்டதென அங்கலாய்க்கிறோம். அன்று பாரதிக்கு நேர்ந்த கதி இன்று அவரது எழுத்துகளுக்கு நேர்ந்து வருகிறது. இதற்கு இன்றையத் தமிழ்த் தலைமுறை சரியான வழி செய்ய வேண்டாமா?



ரா.அ.பத்மநாபன்

8-3-1957
பாரதி நிலையம்,
32, மூஸா ஸேட் தெரு,
தியாகராய நகர்,
சென்னை 17

 
 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur