"ஞான பாநு"வில் பாரதி எழுதி வந்த சமயம், தமிழ் நாட்டில் வேறெந்தப் பத்திரிகையிலும் அவரது கவிதைகளோ கதைகளோ வெளியானதாய்த் தெரியவில்லை.
1904ல் ஆரம்பமான "சுதேச மித்திரன்" தொடர்பு 1906ல் நின்று போயிருந்தது. 1907 ஸெப்டம்பருக்குப் பின் அவரது எழுத்துகள் எட்டு வருஷ காலம் "சுதேசமித்திர"னில் வரவில்லை. 1915ஆம் வருஷம் ஜூன் மாதம் தான் மீண்டும் பாரதி "மித்திர"னில் எழுத ஆரம்பித்திருக்கிறார்.
ஆனால், இடையிலிருந்த எட்டு வருஷங்களில்தான் அவர் ஏராளமாக எழுதிக் குவித்தார்! இந்த வருஷங்களில்தான் அவரது முக்கியமான பல நூல்கள் எழுதப் பெற்றன.
இந்தக் காலத்தில் எழுதப் பெற்ற பெரிய நூல்களில் இரண்டே இரண்டுதான் அப்போது அச்சேறிப் புத்தகமாக வெளி வந்தன. 1910ஆம் ஆண்டு நவம்பரில் "மாதா மாணிக்கவாசகம்" என்ற பெயரில் தமது மூன்றாவது கவிதைத் தொகுதியை வெளியிட்டார். "பாஞ்சாலி சபத"த்தின் முதல் பாகம் 1912ல் பிரசுரமாயிற்று. "புதிய ஆத்திச்சூடி" சிறு பிரசுரமாக 1914ல் வெளியாயிற்று. அதே வருஷம் பாரதியின் ஆங்கிலத் துண்டு பிரசுரம் "பொன் வால் நரி" (The Fox With the Golden Tail) சென்னையில் பெரிய கலக்கத்தையும் குதூகலத்தையும் உண்டாக்கியது.
இம்மாதிரி ஒரு சில எழுத்துக்களே புத்தக வடிவில் வந்ததால், பாரதியை மறுபடி "சுதேச மித்திர"னுக்கும் எழுதும்படி புதுவை நண்பர்கள் சொன்னார்கள். பாரதியின் எழுத்தைப் பிரசுரித்து சங்கடத்தில் மாட்டிக்கொள்ள "சுதேசமித்திரன்" தயாராயிருக்குமோ என்று பாரதி திருப்பிக் கேட்டார். தமக்கும் "மித்திர"னுக்கும் கொள்கையில் வேறுபாடு இருக்கும்போது, அதாவது தம்முடைய அதி தீவிர வாதத்தை "மித்திரன்" ஆதரிக்காதபோது, அதில் தமது எழுத்துக்களை வெளியிடச் சொல்லிக் கேட்பது நியாயமில்லை என்றும் பாரதி சொன்னார்.
இத்தகைய நிலையில் பாரதியாரின் எழுத்துகளை வேண்டி வரவேற்று, துணிந்து வெளியிட்ட பெருமை "ஞான பாநு"வைச் சார்ந்தது.
பாரதியின் "வேய்ங்குழல்" என்ற சுவை மிகுந்த பாட்டு "ஞான பாநு"வில் 1914ல் ஜனவரி இதழில் முகப்புப் பாடலாக வெளியாயிற்று.
"பாப்பா பாட்டு" 1915 பிப்ரவரி மாத இதழில் வெளி வந்தது. பாரதியார் தமது இரண்டாவது பெண் பாப்பா என்ற சகுந்தலாவுக்காக பாடியது இப்பாடல். இதில் பாரதியின் குழந்தையுள்ளம் நன்கு வெளிப்படுகிறது.
"ஞான பாநு"வில் வந்த பாப்பா பாட்டிற்கும் தற்போது பாரதி பாடல் தொகுதியில் இருக்கும் பாப்பா பாட்டிற்கும் சில பாக்களில் வேறுபாடு காண்கிறது. "ஞான பாநு"வில் இப்பாடலுக்கு 14 பாக்களே இருக்கின்றன. தற்போதைய பாடலில் 16 பாக்கள் இருக்கின்றன. "வடக்கில் இமயமலை பாப்பா..." என்றும் "வேதமுடைய திந்த நாடு.." என்றும் தொடங்கும் இரு பாக்கள். பாரதி இப்பாடலை முதலில் எழுதியபோது இல்லை; பின்னால் சேர்த்திருக்கிறார்.
அதே போல "ஞான பாநு"வில் வந்த பாடலை அவரே பல இடங்களில் திருத்தியிருக்கவும் வேண்டும். "ஞான பாநு"வில் வெளி வந்த "பாப்பா பாட்டி"ல் 11ஆவது பாவின் கடைசி அடியை "ஆரிய தேசமடி பாப்பா" என்பதற்கு பதிலாக "ஆன்றோர்கள் தேசமடி பாப்பா" என்றும், 12ஆவது பாவின் கடைசி அடியை "தெய்வமென்று கொண்டாடு பாப்பா" என்பதற்கு பதிலாக "தினமும் புகழ்ந்திடடி பாப்பா" என்றும், 13ஆவது பா,
"சாதி பெருமையில்லை பாப்பா - அதில்
தாழ்ச்சி யுயர்ச்சி செய்தல் பாவம்
நீதி, தெளிந்த மதி, அன்பு - இவை
நிறைய வுடையபர்கள் மேலோர்"
என்பதை,
"சாதிகள் இல்லையடி யாப்பா - குலத்
தாழ்ச்சி யுயர்ச்சி சொல்லல் பாவம்
நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்"
என்றும் திருத்தியிருக்கிறார்.
பாரதியின் மேதையை மனைவி செல்லம்மாளோ உறவினரோ முதலில் உணரவில்லை.
பாரதி காசியில் படித்துக் கொண்டிருந்த சமயம் அவருக்குச் செல்லம்மாளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தேச சுதந்திர விஷயமாய் அவர் ஓயாமல் பாடுபடுவதாகவும், அதனால் ஆபத்து, தீவாந்தர சிட்சை கூட நேரலாமென்றும் உறவினர் மூலம் கேள்விப்பட்டு, உடனே காசியை விட்டுத் தெற்கே வந்துவிடும்படி வேண்டிக் கொண்டிருந்தாள் மனைவி. இதற்கு வந்த பதில் பாரதியின் மனத்தெம்பையே காட்டியது. நீ பயப்படும்படி நான் ஏதும் செய்யவில்லை; இப்படிக் கவலைகளில் பொழுதுதைப் போக்குவதற்குப் பதில் தமிழை நன்றாகப் படி என்று எழுதியிருந்தார் அவர்!
காசியிலிருந்து எட்டயபுரம் வந்த பிறகு, மன்னருடன் சென்னை சென்று திரும்பியவர் பெரிய மூட்டை முடிச்சுடன் வந்தார். தமக்குத் துணிமணி நிறைய வந்திருக்கிறது என்று மகிழ்ந்த செல்லம்மாள், அத்தனையும் பழந்தமிழ் இலக்கிய நூல்கள் என்று கண்டதும் ஏமாற்ற மடைந்தார். பாரதி, ஒரே ஒரு புடவை மட்டும் வாங்கி வந்திருந்தார்!
1908ல் சென்னையிலிருந்த பாரதி திடீரென்று புதுவைக்குப் போய்விட்டதும் செல்லம்மாளுக்கு வியப்பாக இருந்திருக்கவேண்டும். தனது புருஷர் ஒரு விசித்திர மனிதர் மட்டுமல்ல, எதிர்பாராத காரியங்களையும் செய்யக் கூடியவர் என்பதும் செல்லம்மாளுக்குப் புரிந்து போயிருக்கவேண்டும்.
நாளாக ஆக பாரதி பழுத்த வேதாந்தியாகிவிட்டார். கையில் எவ்வளவு பணம் வந்தாலும், என்ன பொருள் இருந்தாலும், ஏழை எளியாரைக் கண்டால் நாளை என்ற நினைவின்றி அப்படியே கொடுத்துவிடுவார் அவர்! ஒரு சமயம் ஒரு கிழப் பிச்சைக்காரன் தெருவில் அவரைக் கண்டு கையேந்தினான். கொடுப்பதற்கோ ஒன்றுமில்லை. குளிர்க்காலம். பாரதிக்குச் சட்டென ஒரு யோசனை உதயமாயிற்று. "வா தருகிறேன்" என்று சொல்லிக் கொண்டே அவனைத் தம் வீட்டு வாசல் வரை அழைத்து வந்தார். வீட்டுக் கதவைத் தட்டினார். செல்லம்மாள் கதவைத் திறந்தார். வீட்டு ரேழிக்குள் சென்று, க்ஷணத்தில் அரை வேஷ்டியைத் களைந்து அதைக் கிழப் பிச்சைக்காரனிடம் வீசி யெறிந்தாராம். கிழவன் அதை யணிந்து மகிழ்ந்தான். கோவணத்துடன் நின்ற பாரதி அக்காட்சியைக் கண்டு புளகாங்கிதமானார். "உமக்கென்று நண்பர்கள் அளித்த புது வேஷ்டியை இப்படி தானம் செய்து விட்டீர்களே!" என்று கேட்ட செல்லம்மாளுக்கு, "நம் குறை இருக்கட்டும். பார், அவனைப் பார். என்ன சந்தோஷத்தோடு போகிறான், பார்!" என்ற பதிலே கிடைத்தது!
"இல்லை" என்ற சொல்லே பாரதிக்கு ஆகாது. "இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்" என்று லக்ஷ்மி தேவியிடம் முறையிட்ட அவர், தம் வீட்டில் அரிசி இல்லை என்றால் "அனா இனா"(அ-இ) என்றே தெரிவிக்க வேணுமென மனைவிக்கு உத்தரவிட்டிருந்தார்.
பொருள்களைச் சேமித்து நாளைக்கென வைத்துக்கொள்ளும் வழக்கம் கிடையாதே தவிர, மற்ற வகையிலெல்லாம் பாரதி ஒப்புயர்வான கணவராகவும் தந்தையாகவும் விளங்கினார். அவர் இல்லத்தில் மனைவிக்கும் குழந்தைகட்கும் மட்டற்ற சுதந்திரமிருந்தது.
சிருஷ்டி வெறி வந்துவிட்டால் மட்டும் பாரதியைக் கட்டிப் பிடிக்க இயலாது. இந்த மாதிரி சமயங்களில், இரவோ, பகலோ, அவர் வயல் வெளிகளிலும் கடற்கரை நிலவிலும் தனிமையை நாடிச் சென்றுவிடுவார். வீட்டில் இருக்க நேர்ந்த சமயங்களில், மௌன விரதம் அனுஷ்டித்துப் பார்த்துமிருக்கிறார். "வாரத்தில் மூன்று நாள் பேசாமல் இருந்தால் எழுத்து வேலை தடங்கல் இல்லாமல் நடக்கிறது" என்பது அவர் வாக்கு. "மந்திரம் போல் சொல்லின்பம்" பெற மௌனவிரத மனுசரித்து, நாற்பது நாள் தவத்தின் பயனாய் "பாரதி அறுபத்தாறு" பாடல்களையும், "தேவர் வருகவென்று சொல்வதோ" என்று துவங்கும் பாட்டையும் அவர் பாடினாராம்.
புதுவையில் இருக்கையில் கொஞ்ச காலம் பாரதியார் வழக்கமான மீசையைத் தவிர தாடியும் வைத்திருந்தார். அந்தச் சமயம் அவர் வைஷ்ணவ ஆழ்வார்களின் பாசுரங்களில் ஈடுபட்டிருந்தார். நெற்றியில் விரிந்த நாமம், கட்டுக் கடங்காத தாடி மீசை, எதையும் உற்றுநோக்கும் தீக் கங்குளொத்த விழிகள்! பெண்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கே சங்கோஜப்பட்ட அந்நாளில் தம் மனைவியின் தோளில் கை போட்டு அணைத்துக் கொண்டு புகைப்படமெடுக்கத் துணிந்தவர் பாரதி! இது 1917ல் எடுத்த படம்.
கவிஞரின் பத்தினி செல்லம்மாள் நாணத்துடன் நிற்பதும் இப்படத்துக்கு ஒப்பற்ற சுவையளிக்கிறது.