சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
15
29. அரவிந்தர், அய்யர் வருகை
முன் பக்கம்
   

பாரதியின் "இந்தியா" நின்றுபோன ஒரு மாதத்திற்குள், 1910 ஏப்ரலில், பாபு அரவிந்த கோஷ் பாரதியின் யுக்தியைப் பின்பற்றிப் புதுச்சேரிக்கு ரகசியமாய் வந்து சேர்ந்தார். அரவிந்தர் புதுவை வருவதற்கும், வந்ததும் யாருமறியாது வாழ்வதற்கும் ஏற்பாடு செய்தவர்கள் மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியும் பாரதியுமாவார். கலவை சங்கர செட்டியார் இவர்களுடன் ஒத்துழைத்தார்.

1910ல் அரவிந்தர் நாட்டின் முக்கியமான அரசியல் தலைவராயிருந்தார். வங்காள வெடிகுண்டு இயக்கத்தில் சம்பந்த முள்ளவரென சந்தேகித்து அரசாங்கம் அவரைச் சிறையிலிட்டது. சிறையில், எங்கும் கிருஷ்ணன் இருப்பதைக் கண்டு ஞான தரிசனம் பெற்றார் அரவிந்தர். அவர் மனம் யோகசாதனையில் நாட்டம் கொண்டது. விடுதலை யடைந்ததும் "கர்மயோகின்" என்ற பத்திரிகையை நடத்தலானார். இதையே பாரதி தமிழ்ப் படுத்தி "கர்மயோகி" என்ற பெயரில் புதுவையில் நடத்தி வந்தார். அரவிந்தரது யோகசாதனையெல்லாம் வெறும் வேஷமென நினைத்த அரசாங்கத்தார் அவருக்கு மேன்மேலும் தொந்தரவு கொடுத்து வந்தார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில், வ.உ.சி. துவங்கிய சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் கம்பெனிக்குப் பங்குகள் சேர்ப்பதற்காக ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் இளைய சகோதரர் பார்த்தஸாரதி வட இந்தியா சென்றிருந்தார். கல்கத்தாவில் அவர் அரவிந்தரைச் சந்தித்தார். கப்பல் கம்பெனி விஷயங்களைத் தவிர தென் இந்திய அரசியல் நிலைமை பற்றியும், சென்னையிலிருக்க முடியாத பாரதியும் "இந்தியா" பத்திரிகையும் புதுச்சேரிலிருந்து தங்கு தடையின்றி முழங்கி வருவது பற்றியும் பார்த்தஸாரதி அரவிந்தரிடம் சொன்னார். தமிழர் கண்டுபிடித்த யுக்தி அரவிந்தருடைய மனதில் பதிந்துவிட்டது.

1910 மார்ச்சில் அரவிந்தரிடமிருந்து ஒரு கடிதம் எடுத்துக் கொண்டு ஒரு வங்க இளைஞர் புதுவை வந்தார். தாம் புதுவை வரத் தீர்மானித்துவிட்டதாயும், குறித்ததோர் தேதியில் ஒரு பிரெஞ்சுக் கப்பலில் வருவதாயும் தம்மைச் சந்தித்து அழைத்துச் செல்லுமாறும், புதுவையில் தாம் ரகசியமாய்த் தங்கியிருக்க இடம் ஏற்பாடு செய்யும்படியும் பார்த்தஸாரதிக்கு அரவிந்தர் எழுதியிருந்தார். இக்கடிதத்தை ஸ்ரீநிவாஸாச்சரரியார் பாரதியிடம் காட்டினார். பிறகு இருவரும் கலவை சங்கர செட்டியாரிடம் போனார்கள். அரவிந்தர் செட்டியார் வீட்டு மாடியில் வாழ ஏற்பாடாயிற்று.

குறித்த நாள் மாலை கப்பலில் அரவிந்தர் வந்து சேர்ந்தார். பாரதியும் ஸ்ரீநிவாஸாச்சாரியும் படகில் ஏறிக் கப்பலுக்குச் சென்று அரவிந்தரைச் செட்டியார் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அரவிந்தர் புதுவை வந்துவிட்ட விஷயம் இரண்டு மாதங்களுக்குப் பிறகே பிரிட்டிஷ் போலீஸுக்குத் தெரிந்தது.

பாபு அரவிந்த கோஷ் வந்த ஆறு மாதத்தில் புதுவைக்கு தாடி வைத்த ஒரு முகமதியர் வந்து சேர்ந்தார். புதுவை வந்து சேர்ந்த பின் அவர் தாமே வ.வே.சு.அய்யரென பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு பகிரங்கமாக அறிவித்தார்.

வ.வே.சு.அய்யர், திருச்சி வரகனேரியைச் சேர்ந்தவர். பாரிஸ்டர் படிப்புக்காக லண்டன் சென்று, அங்கே டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன், விநாயக தாமோதர சாவர்க்கர் முதலியோர் சகவாசம் ஏற்படவே, பயங்கர இயக்கத்தில் ஈடுபட்டார். இவர்கள் கோஷ்டியைச் சேர்ந்த மதன்லால் தினகரா என்ற பஞ்சாபி இளைஞன் கர்ஸான் வைலி என்ற ஆங்கிலேய அதிகாரியை லண்டனில் சட்டுக் கொன்றான். சாவர்க்கர் இது சம்பந்தமாய்க் கைதானார். அய்யர் தலைமறைவாகி, வீர விக்கிரமஸிங் என்ற தாடியுள்ள ஸீக்கியர் போலவும், கைரோவில் ஆறுவேளை நமாஸ் செய்யும் அராபிய முஸ்லிம் போலவும் நடித்து, தென் அமெரிக்காவிலுள்ள பிரேஸில் நாடு போவதாகக் கடிதங்களில் பாய்ச்சுக் காட்டி, துருக்கி வழியாகக் கொழும்பு வந்து, புதுவை போய்ச் சேர்ந்தார். அவரும் தர்மராஜா கோவில் வீதியில் குடியிருந்தார். பாரதி, ஸ்ரீநிவாஸாச்சரரியார், அரவிந்தர், அய்யர் நால்வருக்கும் அடைக்கலம் தந்ததனால், இந்தத் தெருவை பாரதி, "பாரதி அறுபத்தா"றில், "கீர்த்தி அடைக்கலம் சேர் ஈசுவரன் தர்மராஜா கோயில் வீதி" என்று பாடியிருக்கிறார்.

பாரதி, ஸ்ரீநிவாஸாச்சரரியார், அய்யர், அரவிந்தர் இந்நால்வரும் மாலை நேரத்தை இலக்கியம், ஞான மார்க்கம் முதலிய விஷயங்களை விவாதிப்பதில் கழித்தார்கள்.

அரவிந்தர் பழக்கத்தினால் பாரதி வேதரிஷிகளின் கீதங்களில் ஈடுபடலானார். அவைகளைத் தமிழிலும் மொழி பெயர்த்தார். "வேதரிஷிகள் கவிதை", "பதஞ்சலி யோக சூத்திரம்" (இது, விவேகானந்தரது ஆங்கில மோழி பெயர்ப்பை விட நன்றாயிருப்பதாக அரவிந்தர் சொல்வாராம்), "காட்சி" முதலிய வசன கவிதைகள் இக்காலத்தில் பிறந்தவை.

30. இளம் தொண்டர்கள்
முன் பக்கம்

காந்தக்கல் இரும்புத் தூள்களை இழுப்பதுபோல பாரதியின் மேதை புதுவையில் சில இளைஞர்களை வசீகரித்தது. அவர்களுடன் சல்லாபிப்பதில் அவருக்கு ஆனந்தம்.

திருப்பயணம் வ.ராமசமி அய்யங்கார் என்ற இளைஞர் ஒருவர். அரவந்தர் புதுவைக்கு வந்துவிட்டாரா என்று அறிந்து வரும்படி திருச்சி அரசியல் தலைவர் பொடியாலம் ரங்கஸ்வாமி அய்யங்கார் இவரைப் புதுச்சேரிக்கு அனுப்பினார். புதுச்சேரியில் பாரதியைப் பார்த்து, அவர் மூலம் அரவிந்தரையும் கண்டார். இவருக்கு பாரதியிடம் அதிக பக்தியா, அரவிந்தரிடம் அதிக பக்தியா என்பது அக்காலத்தில் தீர்மானிக்க விஷயமாயிருந்தது.

புதுவையில் பாரதியைப் பார்க்கச் சென்று அவருடன் சில காலம் வாழ்ந்த பலரி.சு.நெல்லையப்பர், அக்காலத்தில் வ.ரா. தாடிச் சாமியாராக விளங்கினாரென்றும் வ.ராவைத் தாம் ஒரே ஒரு தடவைதான், அரவிந்தாசிரமத்தில், பார்த்ததாகவும் கூறுகிறார்.

புதுவை தேசபக்தர்களுக்குப் பணம் தருவிக்கும் வேலையில் வ.ரா. கைதேர்ந்திருந்தார். இதற்காக நெய் வியாபாரமும் புத்தக வியாபாரமும் செய்தாராம். அதாவது, ஆறுமுகம் செட்டியார் என்ற புதுவைப் பிரமுகர் பெயரில் சென்னையிலிருந்து நெய் டின்கள் வரும். நெய்யில் கை விட்டுத் துளாவினால் ரூபாய்க் காசுகள்! சாதாரண புக்-போஸ்டில் புஷ்தகம் வரும். புத்தக அட்டையை வெட்டிப் பார்த்தால் ரூபாய் நோட்டிருக்கும்!

புதுவையை அடுத்த முத்தியாலுப்போட்டையைச் சேர்ந்த கிருஷ்ளணசாமி செட்டி என்ற நெசவுத் தொழில் இளைஞர் ஒருவர். 20 வயது. குள்ளம். கெட்டியான இரட்டை நாடி சரீரம். சோர்வே அறியாத சுபாவம். "வெல்லச்சு" என்று பாரதி இவருக்கு செல்லப் பெயர் வைத்தார். தம் பாடல்களை இவரிடம் பாடிக் காட்டுவதில் பாரதிக்கு தனி இன்பம். மாலை வேளைகளில் பாரதி வீட்டில் நண்பர்கள் கூடியிருப்பார்கள். அவர்களை உபசரிக்கப் பணமிராது. செட்டியாரும் இருந்தால், பாரதி, காட்டில் திருடனுக்கு பயந்து கட்டைபோல் கிடந்த செட்டியின் கதையைச் சொல்வார். தன் மீது இடறிய ஒரு திருடன் தன்னைக் கட்டையென்றதும், செட்டியாருக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிடுகிறது; "உங்கள் வீட்டுக் கட்டை மடியில் பத்து ரூபாயுடன் கிடக்குமோ?" என்று தன்னை மறந்து கேட்கிறான். கதையில் இந்தக் கட்டம் வந்ததும், வெல்லச்சு கிருஷ்ணசாமி செட்டியார் மடியிலிருந்து பத்து ரூவாயை எடுத்து பாரதியிடம் கொடுத்துவிடுவார்! 'கதையில் வந்தவன் திருடன்; நான் பகல் கொள்ளைக்காரன்' என்று பாரதி களிப்பார்.

அரவிந்தரின் ஆரம்ப சீடர்களில் ஒருவரும், அரவிந்தாசிரமத்தில் தற்சமயம் பொறுப்பான ஸ்தானத்திலிருப்பவருமான அமிர்தா என்ற ஆராவமுதய்யங்கார் பாரதியிடம் மனதைப் பறிகொடுத்த இளைஞர்களில் ஒருவர்.

"பாரதியின் பரிணாமத்தைக் கவனிக்கும்போது அவர் பிறவியில் கவியென்பதும், பிறகுதான் பாரத தேவியின் புத்திரன் என்ற நினைவு அவருக்கு மூண்டதும், கடைசியாக, தான் சக்தியின் புதல்வன் என்று கண்டு கொண்டதும் பிரதான அம்சங்களாகும்" என்ற பாரதி வாழ்க்கைத் தத்துவத்தை அழகுற விவரிக்கிறார் அமிர்தா.

"பாரதி தாசன்" என்ற கனக.சுப்புரத்தினம் பாரதி பக்தர்களில் ஒருவர். தாம் பாரதியை முதன்முதல் சந்தித்த விவரத்தை அவரே எழுதியிருக்கிறார்.

"இந்தியா" நின்றுபோய்விட்டது; சின்னையா ரத்னசாமி நாயுடு என்பவருடன் சேர்ந்து பாரதி ஆரம்பித்த "சூரியோதயம்" என்ற பத்திரிகையும் நின்றுவிட்டது. அப்போது சுப்புரத்தினம் சர்க்கார் பாடசாலையில் தமிழாசிரியர். "இந்தியா" இதழ்கள் படித்திருக்கிறார். "சுதேத கீதங்கள்" பாடல்களைக் குவளைக் கண்ணன் தன் கவர்ச்சியற்ற குரலில் உரத்துப் பாடக் கேட்டிருக்கிறார். முடிவில் ஒரு புத்தகம் சம்பாதித்து அப் பாடல்களைத் தாமும் பாடத் தொடங்கினார்.

"வல்லூறு நாயக்கர்" என்று பாரதி தம் கட்டுரைகளில் குறிப்பிடும் வேணு நாய்கரது கல்யாணத்தில் சுப்புரத்தினம் "வீர சுதந்திரம் வேண்டி நின்றார்" பாட்டைப் பாடினார். பாடும் தன்னைப் பாராமல் எல்லாரும் "ரவிவர்மாப் படப் பரமசிவம் போலிருந்த" ஒருவரையே பார்ப்பதை அவர் கவனித்தார். பாட்டு முடிந்ததும் அந்த 'ரவி வர்மாப் படப் பரமசிவம்', "உணர்ந்து பாடுகிறீர்கள்" என்று சுப்புரத்தினத்தை ஆசீர்வதித்தார். தாம் பாடிய பாட்டை இயற்றிய கவி சுப்பிரமணிய பாரதி அவரே என்று தெரிந்ததும் சுப்பிரத்தினம் நாணிக் கோணினார்.!

பாரதி ஊக்குவிக்க, தாமே கவிதை யெழுத முடியும் என்று உணர்ந்து, "பாரதிதாஸன்" ஆனார் சுப்புரத்தினம். பிற்காலத்தில் "பாரதி கவிதா மண்டலம்" என்ற பெயரில், முற்றிலும் கவிதையான ஒரு அற்புதப் பத்திரிகை நடத்தினார் "பாரதிதாசன்"

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur