திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்ற பாடிய கவிஞனது கவிதைகளை இன்று பாரதப் புலவோரும் பிறநாட்டுப் புலவோரும் போற்றுகிறார்கள். பாரதி எழுத்துக்களைப் பிறமொழிகளில் அளிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இன்று காண்கிறோம்.
ஆனால், இது இன்றுதான் ஏற்பட்டது என்று நினைக்கவேண்டாம்.
பாரதி இருந்த காலத்திலேயே அவரது கவிதைகளைப் பிறமொழி அறிஞர்கள் போற்றியிருக்கிறார்கள்.
புதுவையிலிருந்து திரும்பி வந்தபின் மீண்டும் சென்னையில் "சுதேசமித்திர"னில் வேலை பார்த்து வந்த பாரதி, தமது நூல்களை ஒழுங்காய்ப் பிரசுரிப்பதற்காக 'தமிழ் வளர்ப்புப் பண்ணை' என்ற ஸ்தாபனம் அமைத்து அதன் பெயரில் விடுத்த வேண்டுகோள் ஒன்றில் தமது கீர்த்தி "பூமண்டல நிறைந்த கீர்த்தி" என்று சொல்லி, மேலும் கூறுகிறார்:
"ஆனால் இவருடைய கீர்த்தி தமிழ்நாட்டில் மாத்திரமே பரவி யிருப்பதாக நினைத்துவிடக் கூடாது. இவருடைய பாட்டுக்கள் பல தெலுங்கு பாஷையில் மொழிபெயர்க்கப்பட்டு ஆந்திர தேசத்தாரால் கொண்டாடப்படுகின்றன. ஐயர்லந்து தேசத்து மஹா கவிகளில் ஒருவரும் ஜப்பான் தேசத்தின் ராஜதானியாகிய டோக்யோ நகத்திலுள்ள 'இம்பீரியல் யுனிவர்ஸிடி' என்ற ஸாம்ராஜ்ய ஸர்வகலா சங்கத்தில் இங்கிலீஷ் ஆசிரியராக விளங்கியவருமாகிய ஜேம்ஸ் எச்.கஸின்ஸ் என்பவர் இவருடைய தமிழ்ப் பாட்டுக்கள் சிலவற்றை இங்கிலீஷில் மொழிபெயர்த்து மேல் நாட்டார் வியப்புறும்படி செய்திருக்கிறார்."
தெலுங்கில் பாரதி பாடல்
பாரத் பாடல்களை இவ்வாற தெலுங்கில் மொழி பெயர்த்துப் போற்றியது யாரென்று தெரியவில்லை. துக்கிரியால கோபால கிருஷ்ணய்யா என்ற ஆந்திரத் தலைவர், 1921ல் சீமையிலிருந்து சென்னை திரும்பி வந்தபோது சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார். அதே கூட்டத்தில் பாரதி முதலில் பாடினார். பாரதியின் பாட்டில் மயங்கிப் போன கோபாலகிருஷ்ணய்யா தமது பேச்சுக்குப்பின் பாரதியை மீண்டும் பாடும்படி செய்தாராம். பாரதி இரண்டாம் தடவை பாடி முடித்ததும் அவரை இறுகக் கட்டித் தழுவிக் கொண்டாராம் அந்த ஆந்திரத் தலைவர். மேலும், கூட்டம் முடிந்ததும் பாரதியும் துக்கிரியால கோபாலகிருஷ்ணய்யாவும் கடல் மணலில் நான்கு மணி நேரம் அளவளாவிக் கொண்டிருந்தனராம். பாரதி தமது தமிழ்ப் பாடல்களைப் பாடச் சொல்லி, அவைகளின் அர்த்த்தைக் கேட்டு ரஸித்தார் ஆந்திர நண்பர்; தமது ஆந்திர ரஸிகருக்குத் தமது பாடல்களின் அர்த்தத்தை ஆங்கிலம் கலந்த தெலுங்கில் விளக்கிவந்தார் பாரதி.
பாரதி பாடல்களை துக்கிரியால கோபால கிருஷ்ணய்யாதான் தெலுங்கில் மொழிபெயர்த்துள்ளாரோ என்னவோ, தெரியவில்லை.
பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும்
பாரதி 1919ல் எட்டயபுர மன்னருக்கு அனுப்பிய இரண்டாவது சீட்டுக் கவியில்,
"பிரான் ஸென்னும் சிறந்தபுகர் நாட்டிலுயர்
புலவோரும் பிறருமாங்கே
விராவு புகழ் ஆங்கிலத்தீங் கவியரசர்
தாமுமிக வியந்து கூறிப்
பராவி யென்றன் தமிழ்க்கவியை மொழி பெயர்த்துப்
போற்றுகின்றார்..."
என்று கூறியிருக்கிறார். பிரெஞ்சு மொழியில் யார் எப் பாடலை எப்பொழுது மொழி பெயர்த்தனர் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால், புதுவையன்பர் ஒருவர், பாரதி தம் பாடல்கள் சிலவற்றை பிரெஞ்சு மொழியில் பெயர்த்து பாரிஸ் நகரிலுள்ள ஒரு பத்திரிகைக்கு அனுப்பியதாகவும், அவை பிரசுரிக்கப்பட்டு நூறு பவுன் சன்மானம் கிடைத்ததாகவும் கூறுகிறார்.
பாரதி தம் பாடல்கள் சிலவற்றைத் தாமே ஆங்கிலப் படுத்தி அன்னி பெஸண்டின் 'காமன்வீல்', 'நியூ இந்தியா' பத்திரிகைகளிலும், அரவிந்தரின் 'ஆர்யா'விலும் தம் காலத்தில் வெளியிட்டிருந்தார். இவை பற்றி ஏற்கனவே இந் நூலின் 91ஆம் பக்கத்தில் குறிப்பிடப் பெற்றிருக்கிறது.
பாரதியின் காலத்துக்குப் பிறகு பல தமிழறிஞர்கள் அவரது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். ராஜாஜி பாரதி பாடல்கள் சிலவற்றை மொழிபெயர்த்து 'யங் இந்தியா' பத்த்ரிகையில் வெளியிடச் செய்தார். புரொபஸர் கே.ஸ்வாமிநாதன், பெ.நா.அப்புஸ்வாமி, புரொபஸர் ஏ.ஸ்ரீநிவாஸ ராகவன், மிஸஸ் ஹெப்ஷிபா ஜேசுதாஸன் முதலியோர் செய்துள்ள பாரதி பாடல் மொழிபெயர்ப்புகளை 'கவிக் குரல்' (Voice of a Poet) என்ற ஆங்கில நூலாக கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் 1951ல் வெளியிட்டிருக்கிறது.
ஹிந்தியில் மொழிபெயர்ப்பு
பாரதி நூல்களில் மூன்று 1940ஆம் வருஷத்திலேயே ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு சிறு ஙபத்தகங்களாக பாரதி பிரசுராலயத்தால் வெளியிடப் பெற்றன. பண்டித கே.எம்.சிவராம் 'ஞானரதம்' என்ற வசன நூலையும், ஸ்ரீநிவாஸாச்சார்ய பாரத்வாஜீய என்பவர் 'தராசு' நூலையும், பெயர் தெரியாத ஒருவர் 'ஆறில் ஒரு பங்கு' என்ற ஹரிஜன முன்னேற்றக் கதையையும் மொழி பெயர்த்திருக்கிறார்கள். இந்நூல்களுக்க முறையே 'ஞானரத்', 'தராசு', 'ஷஷ்டாம்ச' என்று ஹிந்தியில் பெயர்கள். இவற்றின் பிரதிகள் இன்றளவும் சென்னை மவுண்ட் ரோடிலுள்ள சர்க்கார் நூல் விற்பனை நிலையத்தில் கிடைக்கின்றன.
சென்ற சில ஆண்டுகளில், 'பாரதி பக்த' என்ற புனைபெயர் கொண்ட மஹேஷ் நாராயண் என்ற ஹிந்தி கவிஞர் பாரதியிடம் மோஹம் கொண்டு பல பாரதி பாடல்களை ஹிந்தியில் மொழிபெயர்த்து வருகிறார். சென்னை ஹிந்தி பிரசார சபையில் ஊழியம் புரிந்துவரும் இவர், தாம் செய்துள்ள மொழிபெயர்ப்புகளை 'தக்ஷின் பாரத்', 'ஹிந்தி பிரசார் பத்திரிகா' முதலியவற்றில் வெளியிட்டிருக்கிறார்.
வட இந்தியப் பத்திரிகைகளில் சிறந்ததொன்றும், ஹிந்தி 'டைஜஸ்ட்' என்று பெயர் பெற்றதுமான 'நவநீத்' என்ற பத்திரிகையில் 'தாய்', 'பாரத தேசம்' என்ற பல பாரதி பாடல்கள் மொழிபெயர்த்து வெளியிடப் பெற்றுள்ளன. ஆர். ஸெளரிராஜன் என்ற தமிழன்பர் இம்மொழிபெயர்ப்புகளைச் செய்திருக்கிறார்.
பூர்ணம் சோமசுந்தரம் என்ற தமிழன்பரும் பாரதிiய வட இந்தியாவுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். தற்சமயம் மாஸ்கோவில், தமிழ் நூல்களை ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்க உதவும் பணியில் இருக்கும் அன்பர் சோமசுந்தரம், பாரதியை ரஷ்ய மொழியில் கொடுக்கவும் உதவுவார் என்று சொல்லத் தேவையில்லை.
செக் முதலிய மொழிகளில் பாரதி
ஆங்கிலம், பிரஞ்சு முதலியவை தவிர பிற ஐரோப்பிய மொழிகளிலும் பாரதி பாடல்கள் பரவும் காலம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. செக்கோஸ்லாவாகியாவில் ஓர் அறிஞர் இத் துறையில் செய்துவரும் பணி குறிப்பிடத் தக்கது.
செக்கோஸ்லாவாகிaத் தலைநகரான ப்ராஹாவில் 'கீழ்த் திசைக் கலைகள் கழகம்' (ஓரியண்டல் இன்ஸ்டிட்யூட்) ஒன்று இருக்கிறது. இக் கழகத்தில் தொழிபுரியும் டாக்டர் காமீல் ஸ்வலேபில் என்ற செக் அறிஞர், தமிழ் கற்றுளு, தமிழில் பாரதியைப் படித்துச் சுவைத்து, பாரதி பாடல்களை செக் பாஷையில் மொழிபெயர்த்து வருகிறார். 'பாரத சமுதாயம்', 'பறையருக்கு மிங்கு தீயர் புலையருக்கும் விடுதலை' முதலிய சில பாடல்களை இவர் மொழிபெயர்த்திருக்கிறார். மேலும், பாரதி வாழ்க்கை பற்றியும் பாரதியின் கவிதை பற்றியும் விரிவானதோர் ஆராய்ச்சி நடத்தி வருகிறார். இவர் செக் மொழியில் செய்துள்ள மொழிபெயர்ப்புகளும் பாரதி பற்றி செக் மொழியில் எழுதியுள்ள கட்டுரைகளும் 'கீழ்த்திசைக் கலைகள் கழக'த்தின் பத்திரிகையான 'நோவீ ஓரியண்டில்' பிரசுரமாகியிருக்கின்றன. இவர் ஆங்கிலத்தில் பாரதியைப் பற்றி எழுதியுள்ள இரண்டு கடுடுரைகள் சென்னையிலிருந்துவரும் 'தமிழ்ப் பண்பாடு'(Tamil Culture) என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளன.
பாரதி பாடல்களையும் சரிதத்தையும் தமது செக் மொழியில் மட்டுமன்றி, போலிஷ், ஜெர்மன், ரஷ்யன் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடச் செய்திருப்பதாக இவ்வறிஞர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஆசிய எழுத்தாளர் மகாநாட்டின்போது, ரஷ்ய எழுத்தாளர்களில் சிலர் பாரதியின் பெயரை - அவர் பெரும் புரட்சிக் கவிஞர் என்ற வகையில் - உணர்ந்திருக்கிறார்கள் என்றறிந்தோம்.
உலக நூல் நிலையங்களில்
லண்டனில் உள்ள பிரபல நூல் நிலையமான பிரிட்டிஷ் மியூஸியம், உலகத்தில் மிகப் பெரிய நூல் நிலையம் எனப்படும் வாஷிங்டன் 'லைப்ரரி ஆவ் காங்கிரஸ்' இரண்டிலும் இப்போது பாரதி நூல்கள் இருக்கின்றன.
மூன்றாண்டுகளுக்கு முன் லண்டன் சென்ற நண்பரொருவர் மூலம் சென்னை அரசாங்கம் வெளியிட்டுள்ள பாரதி கவிதைகள் நூலின் பிரதியொன்றை இந் நூலாசிரியர் லண்டன் பிரிட்டிஷ் மியூஸியத்துக்கு அனுப்பி வைத்தார். அப்போது, பிரிட்டிஷ் மியூஸியத்தின் இந்திய மொழிகள் பகுதித் தலைவர் லெவின் என்பார், அதிகார பூர்வமான ஏற்புக் கடிதம் அனுப்புவதற்கு முன்பே சொந்த முறையில் உற்சாக மிகுந்ததோர் நன்றிக் கடிதம் அனுப்பியிருந்தார். "பிரிட்டிஷ் மியூஸியத்தில் இதை சார் படிக்கப் போகிறார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். இங்கே இத்தகைய நூல் நன்கு பயன்படும். மிக நன்றி" தஎன்று அவர் எழுதியிருந்தார்.
இரண்டரை வருஷங்களுக்கு முன் இந் நூலாசிரியர் அமெரிக்கா செல்ல வாய்ப்பு நேர்ந்தபோது, வாஷிங்டனில் உள்ள 'லைப்ரரி ஆவ் காங்கிரஸ்'ஸுக்கு பாரதியின் 'அக்னி முதலிய கவிதைகள்; கட்டுரைகளும் குறிப்புகளும்' என்ற ஆங்கில நூலையும் தமிழ வேதமாகிய திருக்குறளுக்கு வ.வே.சு.அய்யர் செய்துளள சிறந்த மொழி பெயர்ப்பையும் அளித்தார். 'லைப்ரரி ஆவ் காங்கிரஸ்' நிர்வாகிகளும் இதற்கு உற்சாகத்துடன் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.
இதேபோல உலகிலுள்ள இதர முக்கியமான நூல் நிலையங்களிலும் பாரதி நூல்கள் சேரும்படி செய்தோமானால், ஆங்காங்குள்ள அறிஞர்கள் பாரதியின் மேதையை உணரும்படி உதவியராவோம்.
'மனித சமூகமனைத்திற்கும் உரியவர்'
பாரதி தமிழனுக்கு மட்டும்தான் சொந்தம் என்ற காலம் மலையேறிவிட்டது. 'பாரதி மொழியின் எல்லையைக் கடந்தவர்: மனித சமூக மனைத்திற்கும் உரியவர்' என்று கவிக்குயில் ஸரோஜனி நாயுடு போற்றியிருப்பது உண்மையாகி வருகிறது. நமது அண்டை அயல் மொழிகளிலும், நாடெங்கும் பரவிய மொழியான ஹிந்தியிலும் பாரதி மேன்மேலும் அதிகமாய் மொழி பெயர்க்கப்படப் போவது உறுதி. வங்க கவர்னராகவிருந்த டாக்டர் கைலாஸ் நாத் காட்ஜு, பாரதியை இந்தியாவெங்கும் பரப்பச் சிறந்த உபாயம் பாரதி எழுத்துக்களை ஸமஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பதாகும் என்று கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஹிந்தியிலும் ஸமஸ்கிருதத்திலும் பாரத் மொழி பெயர்க்கப்பட்டு, அவரது எழுத்தின் கருத்துக்கள் நாடெங்கும் பரவுவது உறுதி.
ஆனால், உலகமே பாரதியைப் போற்றுவதற்கு முதற்படி தமிழர் பாரதியை நன்கு, ஆழமாகவும் விரிவாகவும், அறிவதாகும். நாம் பாரதியை நன்றாக அறிந்தாலொழிய உலகமே அவரைப் போற்றியும் பயனிராது. ஆதலால், பாரதியை - பாரதி கவிதைகளை, பாரதி கட்டுரைகளை, பாரதி கதைகளை, பாரதி குறிப்புகளை - நாம் நன்கு படித்துப் பயனெய்துவோமானால், உலகமே பாரதியைக் கொண்டாடும்போது நாமும் அர்த்த புஷ்டியுடன் அதில் களிப்பெய்தலாம். இது தமிழர் கையிலன்றி வேறெவர் கையிலுமில்லை.
|