சித்திர பாரதி
(ரா.அ.பத்மநாபன்)

 
     
13
25. 'நேற்றிருந்தோம் அந்த வீட்டில்'
முன் பக்கம்
   

திடீரென சென்னையை விட்டுப் புதுவைக்குப் போய்ச் சேர்ந்தபோது பாரதியார் தனியாகவே அங்கே போய்ச் சேர்ந்தார். குழந்தை தங்கம்மாளும், கர்ப்பிணியாக விருந்த மனைவி செல்லம்மாளும் கடயத்தில் செல்லம்மாளின் பிறந்தகத்திற்கு அனுப்பப் பெற்றிருந்தார்கள்.

புதுவை போவதற்கு முன் பாரதியும் "இந்தியா" சொந்தக்காரர் எஸ்.என். திருமலாச்சாரியாரும் அவரது உறவினரும் பாரதிக்கு உறுதுணையாகவிருந்த மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியாரும் ஒரு பெரிய திட்டம் போட்டிருந்தார்கள். "இந்தியா"வின் நிர்வாகத்தை, எஸ்.என்.திருமலாச்சாரியாரின் சிறுதாயார் புதல்வரும் பத்திரிகையை திறம்பட நிர்வகித்து வந்தவருமான எம்.பி.திருமலாச்சாரியார் வசம் ஒப்புவித்துவிட்டு, பாரதி, எஸ்.என்.திருமலாச்சாரியார், மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் மூவரும் ஐரோப்பா போய்ச் சுற்றிப் பார்த்து வருவதாகத் திட்டம். ஆனால் இத்திட்டம் பல காரணங்களால் தடைபட்டு வந்தது.

பாரதி புதுவைக்கு வரும்படி நேர்ந்தது அக்காரணங்களில் ஒன்று. அவருக்கு பந்துவும் அவ்வப்போது பண உதவி செய்துவந்தவருமான லக்ஷ்மய்யர் என்பவர், இது விஷயமாக பாரதியைப் பார்க்கப் புதுவைக்கு வந்தார். பாரதி புதுவையிலிருந்தது மட்டுமன்றி, மனைவி பிரசவிக்கும்வரை காத்திருக்க வேண்டிய அவசியமும் ஐரோப்பா யாத்திரையைத் தாமதித்தது.

இந்நிலையில் மற்றவர்கள் எதிர்பாராதபடி, எம்.பி.திருமலாச்சாரியார் தாம் இங்கிலாந்து செல்ல ஏற்பாடு செய்துகொண்டுவிட்டார். திடீரென ஒரு நாள் புதுவை வந்து சேர்ந்தார் அவர். கொழும்பு வழியே கப்பலில் செல்வதாகவும், நண்பர்களைக் காண வந்ததாவும் சொன்னார். பாரதிக்கு இது பெரிய ஏமாற்றமே. "இந்தியா"வைக் கவனித்துக் கொள்ளச் சரியான ஆள் இல்லாததால் இதர நண்பர்களும் ஐரோப்பிய யாத்திரையை மறக்க வேண்டியதாயிற்று. அவர்கள் பத்திரிகையை வலுப்படுத்துவதில் முழு கவனம் செலுத்தலானார்கள்.

ஐரோப்பா செல்ல வேண்டும் என்ற ஆசை பாரதிக்கு பிற்காலத்திலும் இருந்து கொண்டேயிருந்தது. முதல் மகாயுத்த காலத்தில் புதுவைக் கடலோரம் தென்படும் கப்பல்களையெல்லாம் அவர் ஆர்வத்துடன் பார்ப்பாராம். தன் புகழைத் தமிழ் நாடு அறியாமலிருக்க, பிரெஞ்சுக்காரரும் மேனாட்டுப் புலவோரும் கௌரவிக்கிறார்கள் என்பதும், தன்னையொத்த ரவீந்திரர் மேனாட்டினரால் மதிக்கப்பட்டு நோபல் பரிசு பெற்றதும் பாரதிக்கு ஐரோப்பா யாத்திரை ஆசையை மேலும் தூண்டிவிட்டன. ஆனால் அவரைக் காண ஐரோப்பா கொடுத்து வைக்கவில்லை!

கொஞ்ச காலத்தில் செல்லம்மாள் பிரசவித்தார். குழந்தை பிறந்த செய்தி கிடைத்த சமயம் காளிதாஸனது சாகுந்தலத்தைப் படித்துக் கொண்டிருந்தார் பாரதி. குழந்தைக்கு சகுந்தலா என்று பெயர் வைக்கும்படி எழுதினார்.

இந்தியா புதுவையில் நன்றாய் வேரூன்றி நடக்கவாரம்பித்த பின் பாரதி தம் குடும்பத்தைப் புதுவைக்கு அழைத்துக் கொண்டார். ஈசுவரன் தர்மராஜா கோயில் தெருவில் தெற்குப் பார்த்த ஒரு வீட்டில் குடியேறினார். இவ்வீடு இன்னும் அப்படியே இருக்கிறது. இதில் இப்போது பாரதி சங்கமொன்று நடப்பதாய்த் தெரிகிறது. ஆனால், நன்றாய்ப் பழுது பார்க்கப்படாமல் கட்டடம் க்ஷீணித்து வருகிறது.

சில ஆண்டுகள் இவ்வீட்டில் இருந்தபின் இதற்கு எதிரே உள்ள பெரிய மாடி வீடு ஒன்றில் பாரதி குடிமாறினார். குடிமாறிய தினம் புதுவையில் முன் பின் கண்டிராதபடி புயலடித்தது. ஓயாத மழை, சூரைக்காற்று. ஏராளமான மரங்கள் சாய்ந்து "காடெல்லாம் விறகான கதை"யாயிற்று. பல வீடுகள் சேதமாயின. பாரதி நேற்றுவரை இருந்த பழைய வீட்டின் பின் பகுதி இடிந்து விழுந்தது. பாரதியும் குடும்பமும் அங்கேயே இருந்திருப்பார்களானால்?

இந்தக் கேள்வியை அவரும் செல்லம்மாளும் கேட்டுக் கொண்டார்கள். அதன் பயனாக உதித்தது ஒரு பாடல்.

"புயற்காற்று - நள வருஷம் கார்த்திகை மாதம் 8ஆம் தேதி புதன் கிழமை இரவு - ஒரு கணவனும் மனைவியும்" என்ற தலைப்பில், "காற்றடிக்குது, கடல் குமுறுது, கண்ணை விழிப்பாய் நாயகனே" என்று மனைவி கூறும் பாவுடன் ஆரம்பமாகும் கவிதையே அது.

"நேற்றிருந்தோ மந்த வீட்டினிலே இந்த
நேரமிருந்தால் என் படுவோம்?
காற்றென வந்தது கூற்றமிங்கே, நம்மைக்
காத்தது தெய்வ வலிமையன்றோ?"
என்று கவிதையை முடிக்கிறார் பாரதி.

26. 'பெரிதினும் பெரியது கேள்'
முன் பக்கம்

எதிலும் தாராள மனது படைத்தவர் பாரதி; "புதிய ஆத்திசூடி" யில் "பெரிதினும் பெரிது கேள்" என்று உபதேசித்தவரல்லவா?

குடியிருப்பு வீடு எடுப்பதிலும் அவர் இதே விதம்தான் நடந்து கொண்டார். ஈசுவரன் தர்மராஜா கோவில் வீதியில் முதலில் இருந்த வீடு பிடிக்காமல் புது வீடு பார்த்தார். அதே தெருவில் முந்திய வீட்டுக்கு எதிர் வீடு இது. பெரிய வீடு. மாடி வீடு. மாடி ஹாலுக்கு மேல் மொட்டை மாடி கொண்டது. "சும்மா" என்ற கட்டுரையில் ('வசனங்கள்' தொகுதியில் உள்ளது.) பாரதி இதைப் பற்றிச் சொல்லுகிறார்:

"நேற்று ஸாயங்காலம் நான் தனியாக மூன்றாவது மெத்தையில் ஏறி உட்கார்ந்திருந்தேன். நான் இருக்கும் வீட்டில் இரண்டாவது மெத்தையிலிருந்து மூன்றாவது மெத்தைக்கு ஏணி கிடையாது... ஆதலால் மூன்றாம் மெத்தைக்கு ஏறிப்போவது மிகவும் சிரமம். சிறிய கைச்சுவர் மேல் ஏறிக்கொண்டு அங்கிருந்து ஒரு ஆள் உயரம் உந்த வேண்டும். மூன்றாங்கட்டின் சுவரோரத்தைக் கையால் பிடித்துக் கொண்டு கைச்சுவர் மேலிருந்து உந்தும்போது கொஞ்சம் கை வழுக்கிவிட்டால் ஒன்றரை ஆள் உயரம் கீழே விழுந்து மேலே காயம்படும். நான் தனிமையை விரும்புவோன் ஆதலால், சிரமப்பட்டேறி அடிக்கடி மூன்றாங்கட்டிலே போய் உட்காந்திருப்பது வழக்கம்."

நமக்கு தம்படிக்கும் பயனில்லாத வீணர்களின் கண்ணில் படாமல் வாழ "ஏகாந்த கூடம்" (Hall of Solitude) ஒன்று தேவை என்று குவளைக் கண்ணனிடம் பாரதியார் சொல்வாராம். இதைக் கேட்ட அரவிந்தர் அதைக் கட்டுப்பாடாகச் செய்தும் காட்டிவிட்டார் என்பார் குவளை.

இப்படி ஏகாந்தமாய் மேல் மொட்டை மாடியில் உலவியவரை அங்கே தேடி வந்த குள்ளச்சாமியின் அருமை பெருமைகளை விவரிக்கிறது "சும்மா" என்ற கட்டுரை. "கண்மூடித் திறக்கு முன்னாகவே கைச்சுவர் மேல் மெத்தைக்கு இரண்டாம் பாய்ச்சலில் வந்துவிட்டார் சாமியார்" என்கிறார் பாரதி. சாமியாரைத் தொடர்ந்து தானும் பாய்ந்தேற முயன்று கீழே விழுந்த வஸ்தாது வேணு முதலி என்ற நண்பனுக்கு பலத்த ஊமைக் காயங்கள்!

இந்தச் சம்பவம் நடந்த தினம் சாமியார்களை வேணு முதலி ஏதோ குறைகூட, "ஹிந்துஸ்தானத்து மஹா யோகிகளின் மகிமையைப் பார்!" என்று குள்ளச்சாமி ஒரு அதிசயம் செய்து காட்டினார். திடீரென குள்ளச்சாமி நெடியசாமி ஆகிவிட்டார்! பாரதி கூறுகிறார்: "நாலேமுக்கால் அடிபோல் தோன்றிய குள்ளச்சாமி ஏழேமுக்கால் அடி உயரம் வளர்ந்துவிட்டார். ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைபோல் இருந்தது; மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப்போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் பார்வதியைப் போல் இருந்தது. இடப்புறம் பார்த்தால் சிவன்போல் இருந்தது. குனிந்தால் பிள்ளையார் போலிருந்தது. நிமிர்ந்து பார்க்கும்போது விஷ்ணுவின் முகத்தைப் போலே தோன்றிற்று."

நானே பரமபுருஷன் என்று சாமியார் சொன்னார். மத பேதங்களை நீக்கி ஒருமையைக் காணென்றார். வேணு முதலி மூர்ச்சையாகி விட்டான்; பாரதியும் மூர்ச்சையாகிவிட்டார். மூர்ச்சை தெளிந்தபோது சாமியார் போய்விட்டார்!


வீடு பெரியதாயினும் பாரதி பகலில் பெரும்பொழுது வெளியே தோப்புத் துறவுகளில் சஞ்சரிக்கச் சென்றுவிடுவார். அப்படியானால் பெரிய வீடு எதற்கு என்று ஒரு சமயம் வ.வே.சு.ஐயர் கேட்டதற்கு, "சின்ன வீடு எனக்குப் பிடிப்பதில்லை. வீட்டுக்காரர் 'விளக்கெண்ணெய்ச் செட்டி'க்கோ வாயிதா எட்டு மாதம் வரை சொல்லலாம்!" என்றார் பாரதி.

செட்டியார் அவ்வளவு பொறுமைசாலி. வாடகை கேட்க பயபக்தியுடன் நுழைவார். வாய் திறந்து கேட்கமாட்டார்; பணமிருந்து பாரதி கொடுத்தால் பெறுவார். இல்லையென்றால் பாரதி தம் கவிதைகளைப் பாடிக் கொண்டருப்பதைச் சிறிது நேரம் இருந்து கேட்டுவிட்டுச் சந்தடியின்றிப் போய்விடுவார்! கண்டிப்பு தெரியாதவர் என்ற காரணத்துக்கே பாரதி இவரை அன்புடன் 'விளக்கெண்ணெய்ச் செட்டியார்' என்றழைத்தார்.

இந்த வீடு இப்போது கைமாறி, வீட்டுக்காரர்கள் வாழ்ந்து வருகின்றனர்; குடியிருப்பு வீடாகையால், எதிர் வீட்டைபோல் நலிந்து செல்லாமல், நன்றாகப் பலிக்கப்பட்டு வருகிறது.

 
     
Website Designed by Bharathi Sangam, Thanjavur