அண்ணா
களஞ்சியம்
இனம்
|
மொழி |
அரசியல் |
கல்வி |
மதம் |
நீதி |
பண்பு |
சமதர்மம்
|
பகுத்தறிவு |
பொதுவாழ்வு
பொருளாதாரம் |
பெண் |
சமுதாயம்
பகுத்தறிவு
பகுதி:1
பகுதி:
1
2 3 4
மறுமலர்ச்சி
வாடிய மலரை மீண்டும் மலரச்செய்ய முயல்வது. அழுக்கடைந்த அமைப்புகளைச்
சீர் செய்வது, திரிந்துபோன முறைகளை திருத்தி அமைப்பது. தேய்ந்த
தத்துவங்கட்கு உரம் ஊட்டுவது. குனிந்த உள்ளத்தை, நிமிர்த்துவது
கூனிப்போன கொள்கையைச் சரி செய்வது. இழந்த இன்பத்தை தேடுவது, இது
எங்கும் நடக்கும் நிகழ்ச்சி. இதை மறுமலர்ச்சி என்று அழைப்பர்.
(1945)
அன்பே சிவமானால், அன்பை வளர்க்கப் பாடுபடுவதுதானே
சைவர் கடமை. வேறு எதற்கு? அன்பு வளர அறிவு வளர அறிவு வேண்டும்.
வறுமை போகவேண்டும் வாட்டம் தீரவேண்டும். ஒருவரைச் சுரண்டினால்தான்
மற்றவன் வாழமுடியும் என்ற முறையிலே உள்ள அமைப்புகள் மாறவேண்டும்.
அன்பு அப்போதுதான் வளரும். அதைச் செய்ய நாடெங்கும் கோயில்கள் ஏன்?
அங்கு கொட்டு முழக்கும் கூத்தும் ஏன்? அதைக்காட்டி பிழைக்க ஓர்
ஆரியக்கூட்டம் ஏன்? அது கடடிவிட்ட கதைகள் ஏன்? ஆறுகால பூசையும்,
அபிஷேக விசேடமும் ஏன்? அன்பு வளர இவை அவசியமா? அன்றி ஆலயங்களிலே
அடைப்பட்டுள்ள பொருளை, வறுமை போக்கும் வளமான திட்டங்களுக்கு செலவிடல்
முறையா என்பது பற்றி சிவநேசச் செல்வர்கள் சற்றே சிந்திக்கலாகாதா?
என்று கேட்கிறேன்.
(கட்டுரை - சிவநேசர்கட்கு - 10.01.1943)
சுயமரியாதைக்காரர்களின் உழைப்பு பலனளிக்காமலும்
போவதில்லை. சேரி சீறுவதும், அக்ரகாரம் அழுவதும், பூசுரர் பார்ப்பனரானதும்,
சூத்திரன் தமிழனானதும், புரோகிதனின் கெம்பீரநடை தள்ளாட்டமானதும்,
புராணிகளின் குரல் மங்கினதும், தத்துவார்த்தங் கூறுவோர் தடுமாற்றமடைந்ததும்
எதனால்? சடங்ககுகளை செய்வதிலே பெருமை கொண்டிருந்தவர்கள் இன்று
ஒழிக்க முடியவில்லையே, பழக்கமாகி விட்டதே, படிப்படியாகத்தானே நீக்க
முடியும் என்ற பக்குவமாகப் பேசி சமாதானங் கூற முன் வருவது எதனால்?
நீறு நிகண்டு தூக்கி, நாம நெற்றி என வேடமிடுவோரின் எண்ணிக்கை குறைவதன்
காரணமென்ன? பொதுவாக வைதீகத்தின் ஆட்டம் ஓரளவு ஒடுங்கக் காரணம்
என்ன? சுயமரியாதைக்காரனின், சளையாத உழைப்பு, வைதீக அச்சு முறிந்து,
சுனாமாக்காரன் அனுபவித்த மண், கல் வீச்சு, காலம் முழுவதும் சொல்லடிப்பட்டு
சோர்வின்றி உழைக்கும் தலைவரின் தளராத ஊக்கம் இவைகளே. விதவைத்துயரம்
துடைக்கப்பட்டது. கலப்பு மணம் ஓங்கிற்று. கபோதி காணலாயினர். ஊமைகள்
உக்கிரமாக பேசினர். புரட்சி மனப்பான்மை தாண்டவமாடிற்று சமுதாயத்தில்
சரியானதோர் புரட்சி, துருக்கியில் கமால் பாட்சாவும், சீனாவில்
சன்யாட்சனும் செய்தது போன்ற மாறுதல் இங்கு ஏற்படத் தொடங்கிற்று.
(கட்டுரை - சேலம் வாரீர் - 10.01.1943)
கோயில்களைக் கட்டவும் இவைகளுக்கு மானியங்கள் விடவும்
தமிழர்கள். ஆனால் சொத்து, கல்விக்கு செலவிடப்படக் கூடாது, ஆரியத்தை
கொழுக்க வைக்கவே பயன்படவேண்டுமென, மேனாட்டு படிப்பு படித்தும்
ஆரியத்தை கைவிடா அகந்தையினர், கூறிவிடுகின்றனர். இந்நிலையிலே அவர்களிடத்தில்
எத்தனைக்காலம் சமரசம் பேசிக் கிடப்பது. எதற்காகத் தங்களைப் போன்ற
தனவான்கள் இன்னமும் அத்தகைய தருக்கர்களின் திருவடி பணிந்து, பணம்
தந்து வளர்க்கவேண்டும?
ஏன் நேரம் பிறக்கவில்லை? நீதிக்கு கட்டுபட மறுப்போறுடன் ஏன் குலவிக்
கிடப்பது? அறிவே தெய்வம், அன்பே தெய்வம். என்று கூறுவர்கள். அதே
அறிவுக்கும் அன்புக்கும் அரை காசும் செலவிடக்கூடாது அன்ன வகைக்களுக்கும்,
அதிர் வெடிகளுக்கும், வேத மொதும் வீணருக்கும் தரகு செய்யும் தருக்கருக்கம்,
ஆடம்பரத்திற்கும் அக்ரகார வளர்ச்சிக்குமே, செலவிடப்படவேண்டும்.
என்று கூறுகிறார்கள், கூசாது. அவர்தம் கூற்றை கேட்டுக்கொண்டெ,
உதைக்கும் காலுக்கு முத்தமிட்டு வாழ்வது முறையா?
(கட்டுரை - வீரவைணவர் வேங்கடசாம் அவர்கட்கு)
. . . . இன்று எதையெதைக் குற்றபென்றுடம் கொடுமையென்றும்,
கலியான சுந்தரனார் அவர்கள்(திரு.வி.க) குறிப்பிடுகிறார்களோ, அவைகளிலே,
எது அவர்கள் புன்னகையும், பெருமூச்சும் கலந்து பாவத்துடன் கூறுகிறார்களோ
அந்தக்காலத்திலே இல்லாமற் போய்விட்டது? கொய்யும், பழுவம், கொலையும்,
களவும், சூதும், சூழ்ச்சியும் காமந்தகாரமும், கோரமும் அன்று இல்லையா?
தேவலோகத்தில் இருந்ததாகத்தானே ந்நாட்களின் பெருமையைக் கூறும் அந்தநாட்களின்
கூறும் ஏடுகள் எடுத்துக்காட்டுகின்றன
(கட்டுரை . காலம் கெட்டுபோச்சு)
வேடம் - வேதாந்தி
கடவுள் அருளுக்கு வழிகாட்டப்படும் இடம் என்று பாமரர் நம்பும் அந்த
இடம் காம வேள் நடன சாலையாக இருக்கக் கண்டோம் இளித்தவாயர்களுக்கு
பகலிலே உபதேசம் இன்பவல்லிகளுக்கு இரவிலே சரசமாம். குருடனுக்கு
கோல் தேவையாக இருப்பது போல ஊர் ஏமாற்றி குடிகெடுப்பவனுக்கு வேஷம்
தேவைப்படுகிறது. வேடமணியாத வேதாந்தி மோடி செய்யாத மாது ஜோடியில்லாத
மாடப்புறா சேடியில்லாத ராஜ குமாரி இருக்கமுடியாதாம் அரி அரதாஸ்
இத்தகைய ஓர் வேடதாரி இந்த ஆஸ்ரமத்திலே காதினிலே குண்டலம் ஆட கனத்த
சாரீரம் பாட காய்ச்சிய பால் தொண்டையில் ஓட கண்கள் கதியற்ற கன்னியரை
நாட கடவுள் அருளுக்க வழிகாட்டப்பட்டதாம். சிரித்திடும் நரி சிவ
ரூபத்தில் இருந்தது. இந்த குருவை காண ஒழுக்கம் கூசிற்று. தருமம்
இவன் இருக்கும்திக்கை காண மறுத்தது.
(வேலைக்காரி - 1945)
வைதீகத்தையும் மூடப்பழக்கத்தையும் வளர்க்கும்
மகாமகத்திற்குப் போகாதே என்றல்லவா, சுயமரியாதைக்காரன் சொன்னான்
என்பதற்காக, கல்கி மகாமகம் குளத்தையும் அங்கு குழுமியிருந்த மக்களையும்
படம் பிடித்துக் காட்டி, இதோ பாருங்கள் சுயமரியாதைக்காரன் கூட்டம்
இந்த நெருக்கடியான காலத்திலும் இதிலிருந்து அவர்களுக்கு பிரச்சார
பலமில்லை தெரிகிறதல்லவா? என்பதன் மூலம் சுயமரியாதைக்காரனுக்கு
வெட்கம் என எழுதியது, யாருக்கு வெட்கம்? முதலில் கல்கி ஆசிரியர்
தனக்கு ஏற்பட்ட அவமானத்தை மறந்துவிடுகிறார். இந்த அணுகுண்டு சகாப்தத்திலே,
அழுக்கு நீரிலே குளித்தால் ஆண்டவனுடைய அருளைப் பெறலாம் என்பதை
ஆதரிப்பது போலல்லவா நமது படம் இருக்கிறது என்று அவமானப்படவேண்டியவர்
அவர்தான். ஆகவே எதையும் சுயமரியாதைக்காரன் சொன்னான் என்பதற்காக
எதிர்க்காமல் மகாமகம் மடைமையை வளர்க்கிறது என்றவுடன், 10 வருடம்
சுயமரியாதைகாரன் சொல்வதை ஏற்று எழுதட்டும். எழுதாமலாவது இருக்கட்டும்.
பாருங்கள் 10 வருடத்திற்கு பின் இந்த நாட்டிலே ஜாதி இருக்குமென்று
நினைக்கிறீர்களா? அஞ்ஞானம் இருக்குமா? தீண்டாமை இருக்குமா? எல்லாம்
போன இடம் தெரியாமல் போய்விடும். (பொழிவு
- ஏ, தாழ்ந்த தமிழகமே! - 20.09.1945)
ஆண்டவன் எனக்கு என்ன வழியப்பா காட்டப் போகிறார்?
ஆண்டவன் இருக்கிறானா? எங்கே இருக்கிறான்? இதோ என் புருஷர் வதைக்ககிறார்.
கண்ணைத் திறக்கிறேன், கலம் கண்ணீர் விடுகிறான். தெய்வம் என்ன செய்கிறது?
தெருவிலே ஏழைகளை அலைய வைக்கிறது. தெய்வமாம், தெய்வம்! திக்கற்றவர்களுக்கு
தெய்வம் துணை என்பது பாட்டிக் கதை என்று அழுதுகொண்டே கூறினார்.
அழாதே அக்கா! ஆண்டவன் இருந்துதான் என்னை இங்கே அனுப்பி வைத்தார்
என்று சொன்னான் அந்த சுந்தரமூர்த்தி.
ஆமாம், உன்னைப் போல ஈரமுள்ள நெஞ்சு கொண்டவர்கள் வந்துதான் ஆண்டவனின்
மானத்தை காப்பாற்ற வேண்டியிருக்கிறது என்ற அவள் பதறி பேசினாள்.
(தீர்ப்பளியுங்கள்(அ) சிக்கலானப் பிரச்சினை
- சிறுகதை - திராவிடநாடு இதழ் - 21.01.1945)
சாது, பண்டாரம், யோகி என்று சொல்கிகொண்டும் சர்வரோகநிவாரணி,
சூரணம், சகல சித்திலேகியம் தருவதாக் கூறிக்கொண்டு, காவியும் தரித்துக்கொண்டு
செவாதம், மாந்திரீகம் தெரியும் என்று சொல்லிக்கொண்டு அன்னதானம்,
அபிஷேகம், ஆராதனை செய்வதாகச் சொல்லிக்கொண்டும், ஆஸ்ரம் வைக்கிறேன்.
அருள் தருகிறான் என்று பேசிக்கொண்டு வரும் போலி வேடதாரிகளை நம்பாதீர்!
காசு தராதீர். காலில் விழாதீர் என நோட் நோட்டீஸ் அச்சடித்து வெளியிடுகிறான்
பகுத்தறிவுவாதி.
(அன்னதானம் - 03.06.45)
மாணவர் தொண்டு!
மனிதனை மனிதனாக்க - மனிதனிடமிருந்து மிருகத்தைப் பிரிக்க - மனிதனை
தேவனாக்க - எண்ணத்திலுள்ள இருளைப் போக்க - மன வளத்தை உண்டாக்க,
மாணவர்கள் தொண்டாற்றவேண்டும்.
உழைப்பு. ..
நமக்கு இன்னலும் இடையூறும் இருக்கத்தான் செய்யும்; ஆனால் நமது
உழைப்பு ஒரு நாளும் வீண்போகாது!
விஞ்ஞானம்
விஞ்ஞானம் இந்நாட்டில் விழலுக்கிரைத்த நீராகிவிட்டது. பாலைவனத்தில்
வீசிய பனிக்கட்டிபோல - குருடனிடம் காட்டிய முத்துமாலையைப்போல செவிடனிடம்
பாடிய சங்கீதம் போல விஞ்ஞானம் மதிப்பற்றிருக்கிறது!
இந்தியாவின் ஒற்றுமையின்மைக்குக் காரணம், அது
அறிவாலும், கலாச்சாரத்தாலும் வரலாற்றாலும் பகுதிக்குப் பகுதி வேறுபட்டிருப்பதே
காரணம்
மனிதர்கள் மீது வைக்கின்ற ஆழமான அன்பே, கடவுளின்
மூது காட்டுகின்ற உண்மையான அன்பாகும்.
எல்லா தேசிய மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்குவது
கடினம் என்றால், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவை ஒரே நாடாகப்
பார்ப்பதும் கடினமாகத்தான் இருக்கும்.
ஒரு சனநாயக சமுதாயத்தில், கருத்துக்களைச் சொல்வதற்கு
தடையோ, சுதந்திர உணர்வுகளுக்கு அழிவு தரும் நடைமுறைகளோ கண்டிப்பாக
இருக்கக் கூடாது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத்
தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டும் போதாது;
தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ள
வேண்டும்.
ஒரு நாட்டின் என்த ஒரு பகுதியாவது மத்தியில் உள்ளவர்களால்
அநீதி இழைக்கின்ற விதத்திலோ, வெறுத்து ஒதுக்குகின்ற விதத்திலோ
நடத்தப்படுமேயானால், அந்த நாடு பிளவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது
என்றுதான் பொருள்.
வன்முறைப் போராட்டம் ஒரே ஒரு முறைதான் நடந்திட
இயலும். ஏனென்றால் அதனால் ஏற்படும் கலகம், கலவரம், குழப்பம் ஆகியலை
அடுத்து அப்படி ஒரு போராட்டம் ஏற்பட கண்டிப்பாக அனுமதிக்காது.
அரிசியில் வேண்டுமென்றே கல்லையும், மண்ணையுங்
கலந்து ஒரு படியை ஒண்ணரை படியாக்கி விற்றிடும் அக்ரமம் செய்திடும்
முதலாளி, கோயிலிலே உற்சவம் நடத்தி, வெண்பொங்கற் பிரசாதம் பக்தர்களுக்கும்
ஏழைகளுக்கும் வழங்கிடும் புண்யம் செய்கிறார்! பார்த்திருக்கலாமே!
நான் அதைமட்டுமல்ல தம்பி, அந்தப் புண்யவான், அந்தப் பொங்கலில்
கல் ஒன்றிரண்டு இருந்திடக் கண்டு கடுங்கோபம் கொண்டு என்ன அநியாயமையா
இது? என்று கேட்டதையும் கண்டிருக்கிறேன்.
திட்டங்கள் நேர்மையானவர்களால் தீட்டப்படுகிறது என்றாலும் கூட,
அவர்கள் மக்களுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று சொல்லமுடியாது. விமானம்
மூலம் நிலங்களைப் பார்வையிட்டு விவசாய முன்னேற்றத்துக்கான திட்டங்களை
போடுதல், பைல்களைப் புரட்டி, தொழில் துறையை இயந்திரமயமாக்குவதற்கான
முடிவுகளை எடுத்தல் ஆகிய இத்தகைய செயல்கள் திட்டங்களைத் தீட்டுபவர்களுக்கும்,
மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றன.
திட்டங்களை வகுப்பவர்கள் மேதைகள்; ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால், மக்களின் சுகதுக்கங்களை அறிந்துகொள்ள முடியாத தொலைவிலும்,
மக்களது உண்மை நிலையை அறிந்துகொள்ள விரும்பாத நிலையிலும் அவர்கள்
இருக்கிறார்கள் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
உழுது நீர் பாய்ச்சி களை எடுக்காமுன்னம் பச்சை
பயிர் பார்க்க முடியுமா? செந்நெல் தேட இயலுமா? இங்கே நம் நாட்டு
களைகளைப் போக்கினோமா? இல்லையே! அதோ தீண்டாமை எனும் கோரமான களை
இருக்கிறது. பார்ப்பனீயம் எனும் பண்டை பயங்கரப்பாசி அடிமுதல் நுனி
வரை படர்ந்திருக்கிறது. பித்தலாட்ட தொள்கை எவ்வளவு! பாமரர் ஏய்க்கப்படுவது
எத்துனை. குட்டிக் கொள்கையும், முரட்டுப் பிடியும், வரட்டு வீரமும்,
கிழட்டுப் போக்கும், பகட்டுப் பேச்சும், இங்கே உள்ள கிளைகள்! இவைகள்
போக்கப்படாமுன்னம் பயிர் ஏது? இவைகளைக் களைவதன்றோ, பண்ணையில் அக்கரைக்
கொண்டோரின் கடன்.
(பொங்குக புதுமை - 13.01.1940)
பாடதிட்டத்தில் பகுத்தறிவை புகுத்தினால்தான்,
மக்களுக்கு பழமையினிடத்திலுள்ள மாசு நீங்கும். பாலத்திற்குத் தக்கதுபோல்
கருத்து வளரும்.
(நிலையும் நினைப்பும் - பொழிவு - 23.09.1947)
வள்ளுவர் கூறிய அறம், ஆரிய முறைப்படி நம்மவருக்கு
அறிவிக்கப்பட்டுள்ள, தான தருமம் அல்ல . மக்களின் வாழ்விலே உள்ள
பொறுப்புகளுக்கும், கடமைகளுக்கும் ஏற்றபடி வாழ்க்கைத் திட்டம்
அமைய வேண்டும் ஒருவர் வாழ்வை மதித்து மற்றவர் நடத்தல் வேண்டும்
- அவரவருக்குள் கடமையினின்று வழுவாதிருக்கவேண்டும். வாழ உரிமை
கொண்டடோரே மக்கள் அனைவரும் என்ற பொது நீதியை அழிக்காதிருக்கவேண்டும்.
இது அறநெறி - இதனை மதித்து நடந்தால்தான் இன்பம் வரும் என்று கூறினார்
வள்ளுவர்.
(திராவிட நாடு - பொங்கள் மலர் - 14.01.1949)
அறநெறி என்று கூறப்படுவது, மந்திய உச்சாடனச் சொல்
அல்ல. ஓமகுண்டத்தருகே உலவுவதல்ல! கள்ளமில்லா உள்ளத்திலே பூத்துக்
காய்த்துப் பழுத்திடும், பயனும் சுவையும் உள்ள கனி. அது வெறும்
பொருள் பகிர்ந்து கொள்ளும் முறை மட்டுமல்ல. தொழில் அமைப்புத்திட்டம்
மட்டுமல்ல . இவைகளுடன் கூட, மக்கள் எவ்வகையிலே, இழிவாலும், கொடுமையாலும்
தாக்கப்பட்டாலும், அவர்களை மீட்டிடவும், அத்தகைய தாக்குதல் மக்களுக்கு
நேரிடாதபடி முறை வகுத்தலும் ஆகிய எல்லாம் சேர்ந்த பொதுவான பொறுப்பான
வாழ்க்கை அமைப்புத் திட்டம் அறநெறி! எனவேதான் மனிதகுலம், குரங்கு
நிலையிலிருந்து, கோயில் கட்டிக் கும்பிடும் நிலை அளவுக்கு வளர்ந்தும்,
எந்த இன்பம், இன்னமும் கிடைக்கவில்லையோ, அந்த இன்பத்தைப் பெருவதற்கு,
வள்ளுவர் அறநெறியைக் காட்டியிருக்கிறார். அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்.
அறத்தால் வருவதே இன்பம்!
(திராவிடநாடு - பொங்கல் மலர் - 14.01.1949)
பாட்டாளியின் கூலியைக் குறைத்துச் சேர்த்த இலாபச்
சொத்திலே, பழநியாண்டவருக்கு பஞ்சாமிருத அபிஷேகம் செய்வதோ, பத்துப்பண்டாரங்களுக்குச்
சோறிடுவேதோ அறமாமோ! ஆகாது! செல்வம் சேர்ந்த விதமோ, அறத்தை அழித்த
முறையால்! அவன் செய்வது வேடபக்தி, விளம்பரதானம் - அறமல்ல! (திராவிடநாடு
- பொங்கல் மலர் - 14.01.1949)
நமது சொகரியத்திற்காக ரூபாய்க்கு 16 அணா என்று
இருந்ததை 100 புதுக்காசுகளாக மாற்றிக் கொள்ளவில்லையா? அகல் விளக்கு
இருந்த அன்றையக்காலம் மாறி - இதோ இங்கு எரியும் பெட்ரோமாக்ஸ் வரவில்லையா?
மின்சார விளக்கு நகரத்திலே மற்ற மற்ற இடத்திலெல்லாம் ஒளிவிடவில்லையா?
இதையெல்லாம், நம்முடைய முன்னோர் ஏற்படுத்திய ஏற்பாடு, மீறக்கூடாது
என்றென்ணணி அகல் விளக்கையும், குத்துவிளக்கையுமா வைத்துக்கொண்டிருக்கிறோம்?
எங்கோ இருந்து இங்கு வந்தவன் புகுத்திய விஞ்ஞான அற்புதங்களையெல்லாம்
ஏற்றுக் கொள்கிறோம். அனால் பன்னெடுங்காலமாக, நமது சமுதாயத்தை பாழ்படுத்திவரும்,
நச்சுக் கருத்துக்களை - நாச எண்ணங்களை, புராணக் குப்பைகளை தூர
எறிந்துவிட்டு, புதுமை கருத்துக்களை புத்துலக வலவாற்றை - விஞ்ஞான
நல்லறிவை ஏன், ஏற்றுக்கொள்ளக்கூடாது?
(புத்தனாம்பட்டி சொற்பொழிவு - 15.09.1960)
மறுமலர்ச்சி
வெடித்துக்கிடக்கும் வயல் படர்ந்துபோகும் நிலையில் உள்ள விளக்கு,
பட்டுக்கொண்டே வரும் நிலையில் உள்ள மரம், உலர்ந்துகொண்டுவரும்
கொடி, வற்றிக்கொண்டிருக்கும் குளம், இவைளைப்போல சமுதாயத்தின் நிலையும்,
நினைப்பும், நடவடிக்கையும் ஆகிவிடும்போது, இந்த அவல நிலையை போக்கியாக
வேண்டும் என்ற ஆர்வமும் போக்க முடியும் என்ற நம்பிக்கையும் போக்கக்கூடிய
அறிவற்றலும் கொண்ட ஒரு சிலர் முன்வருகிறார்கள். அறிவுப்பண்ணைக்குப்
பணியாற்ற! அவர்களை நாடு வரவேற்பதில்லை, நையாண்டி செய்யும், துணைபுரிவதில்லை,
தொல்லை தரும். எனினும் அந்த ஒரு சிலர் ஓயாது உழைத்து, சலிப்பு
கோபம் வெறுப்பு, பகை எனும் உணர்ச்சிகளுக்குப் பலியாகிவிடாமல்,
புன்னகையும், பெருமூச்சும் கலந்த நிலையில் பணியுரிந்து, பட்டமரம்
துளிர்விடும்வரை, படர்ந்து போக இருந்த விளக்கு மீண்டும் ஒளிவிடும்
வரையில் பாடுபட்டு வெள்ளிகண்டு மறுமலர்ச்சியை உண்டாக்கிவைக்கிறார்கள்.
(நாடகத்தில் மறுமலர்ச்சி - பொழிவு)
ரயிலேறி ராமேசுவரம் போவதும் ரோட்டரிமிஷினில் ரமணர்
நூல் அச்சாவதும் ரேடியோவில் சங்கராச்சாரி பேசுவதும், காமிராகொண்டு
கருட சேவையை படம் பிடிப்பதும் டெலிபோன் மூலம் தெப்ப உற்சவ நேரத்தை
விசாரிப்பதும் இவை போன்றவை இங்கு அநித்ய நிகழ்ச்சிகள் அல்லவா?
இது சரியா? பல்துலக்கப் பயன்படும் பசை பாத்திரம் துலக்க பயன்படுத்தினால்,
கல் உடைக்கும் கருவியைக்கொண்டு எலியைச் கொல்லக் கிளம்பினால் என்ன
எண்ணுவர்? என்ன கூறுவர்? அது போல புத்தறிவு, புது வாழ்வுக்கு வழி
செய்ய ஏற்பட்டிருக்கும் அந்த புத்தறிவு தரும் சாதனங்களைக் கொண்டு
பழைய வாழ்க்கையை நடத்த முற்படுபவர்களைப் பற்றி என்ன எண்ணுவது?
என்ன கூறுவது? (ரயிலேறி - திராவிடநாடு 21.12.1947)
அறிவுத்துறையில் அர்த்தநாரீஸ்வரர்கள் இருக்கிறார்கள்.
உடல் அமைப்பிலே, ஆணும் பெண்ணும் பாதி பாதி ஒட்டிக்கொண்டு ஓருருவமாக
இருப்பதில்லை. மனப்பான்மையிலே பழமையும், புதுமையும், பாதி பாதியாக
ஒட்டப்பட்டுள்ளவர்கள், பலர் உள்ளனர் அறிவுத் துறையிலே உள்ள இந்த
அர்த்தநாரீஸ்வரர்களால் ஏற்படும், அவதி சொல்லுந்தரத்தக்கதல்ல. சகல
வகையான புதுமைச் சாதனங்களையும் வசதிகளையும், பயன்படுத்தி மகிழத்தான்
செய்கிறார்கள். அதேபோது, பழமையையும் பெருமையாகப் பேசிக்கொள்ளவும்
பழைய ஏற்பாடுகள், சிதைந்துபோன சித்தாந்தங்கள் தகர்ந்துபோனத் தத்துவங்கள்,
வெட்டி வேதாந்தம் இவைகளைக் கட்டி அழுவதோடும் நிற்காமல் போற்றிப்
புகழவும் செய்கிறார்கள். அடிக்கடி ரேடியோவில் கேட்கிறோமல்லவா திருப்பாவைக்கு
அர்த்தம், திருவாசகத்துக்கு உரை. திருப்பல்லாண்டு இவைப்போல பேசும்
அவர்களோ பேசச் சொல்லும் ரேடியோ நிலையத்தாரோ, ஒரு தடவையாவது சிந்திக்கிறோமா,
ரேடியோ - என்ன வகையான சாதனம் - எந்தக் காலத்தது? எவ்விதமான அறிவைக்
கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது - இதனை - நாம் எந்த காரியத்திற்கு,
எத்தகைய அறிவைப் பரப்பப் பயன்படுத்துகிறாம் என்று எண்ணிப்பார்க்கிறார்களா?
கிடையாது. ஏன்? அர்த்தநாரீஸ்வரம் மனம்!
குதிரை மீதேறிக்கொண்டு கொசு வேட்டைக்குக் கிளம்புவது, யானை மீதேறி
பூனையைத் துரத்திப்பிடிக்க கிளம்புவதுபோன்று!
(கட்டுரை - யானைமீதேறிப் பூனைபிடிக்கும்
முறை - 09.011.1947)
அநேக நாட்களாக மந்திரக்கரார்கள் பாமரரை ஏமாற்றி
நான் அது செய்கிறேன் இது செய்கிறோன். உமது எதிரிகளைக் கொன்றுவிடுகிறேன்.
மிட்டாய் தருவித்து கொடுக்கிறேன் ரூபாய்கள் தருவித்துத் தருகிறேன்
என்று மக்களிடம் ரூபாய்களை கொள்ளையடித்து ஓட்டாண்டிகளாக்கிக்கொண்டு
திரியும் புரட்டர்களிடமிருந்து மக்களை தப்புவிப்பதற்கும் இதுகாரும்
பொருட்களையும், நாட்களையும் அறிவையும் இழந்து புண்பட்டிருப்பதை
ஆற்றுவதற்கேயன்றி புண்படுத்துவதற்கல்ல இதுவும் நான் மட்டும் புத்தாகச்
சொல்லிவிடவில்லை. சுயமரியாதைக்காரர் யாவருமே சொல்வார்கள்.
(ஊரார் விளையாடல் - உரை - 02.11.1947)
காலையில் விற்பனையாகாத இட்லியை, உடைத்து உதிரியாக்கி,
மாலையிலே கொஞ்சம் மசாலா போட்டு மாறு பெயரும் வைத்து விற்க முயலும்;
ஊர்க்கோடி உண்டிக்காரனின் உள்ளப்போக்கு, நமது நண்பர்களுக்கு பிறந்துவிட்டது.
புராணப் பிரசங்கம் விலை போகாமல் ஜில்லிட்டுப்போன இட்லி, நமது நண்பர்கள்
நடத்தும் பேச்சுக் கடையிலே வேறுபண்டம் இல்லை, என்ன செய்வார்கள்?
கைவசம் தங்கிவிட்ட பண்டத்தை விற்காவிட்டலோ, கைமுதலுக்கு நஷ்டம்,
எனவே மசாலா போடுகிறார்கள், சொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் சீர்திருத்தம்
இவைகளைக் கலந்து புதிது உருவாக்கி, விற்பானைக்கு கொண்டுவருகிறார்கள்.
வீண் வேலையாகவே இதுவும் முடியப்போகிறது என்பதை விரைவில் உணரப்போகிறார்கள்!
(வெண்ணைய் வைத்து கொக்குப் பிடிக்கும் முறை
- கட்டுரை - 06.01.1946)
மற்ற இடங்களிலே வீரர்களுக்குக் கோட்டம் இங்குக்
கோட்டங்களிலே வீணருக்கு இடம். மற்ற இடங்களிலே அறிஞர்கள் போற்றப்படுவர்;
இங்கு ஆரியரன்றி அறிஞர் சிலர் என்று எவன் ஒப்புக்கொள்கிறானோ அவனே
அறிஞன்! மற்ற இடங்களிலே உழைப்புக்குப் பெருமை இங்கு உயர்ந்தோன்
உழைக்கலாகாது எனபதுதான் நியதி. மற்ற இடங்களிலே பழமைக்குக் கல்லரை,
இங்கு புதுமைக்குச் சித்ரவதை, இங்கு இன்றும் வேள்விகள், யாகங்கள்,
வேதபாராயணங்கள், குருபூஜைகள், அபிஷேகாதிகள், ஆராதனை வகைகள் யாவும்
உண்டு. இவையாவும் மனிதன் காட்டுமிராண்டிப் பருவத்திலே கற்றுக்
கொண்டவைகள். அறிவுக்காலத்துக்கு இவை ஆகா என்று மற்ற இடங்களிலே
விட்டுவிட்டனர்.
மற்ற இடங்களிலே ஜீவன், மினர்வா, அபோலோ, நெப்டியூன், தார், ஓமன்,
ஜுபிடர் முதலிய எண்ணற்ற கடவுள்களை வேலையினின்று நீக்கிவிட்டனர்.
இங்கு இன்னும் காட்டேரி, முனியனைக் கூடக் கைவிடவில்லை. மற்ற இடங்களிலே
அறிவாளியின் மொழியைக் கேட்டு அரசுகள் நடக்கின்றன. இங்கு ஆரிய மொழிப்படி
நடப்பதே அரசதர்மம் என்ற எண்ணம் பலமாக இருக்கிறது.
(திருமுகம் - கட்டுரை - 29.01.1946)
பாடத்திட்டத்தில் பகுத்தறிவைப் புகுத்தினால்தான்
மக்களுக்கு பழமையிடத்திலுள்ள பாசம் குறையும், மனத்திலுள்ள மாசு
நீங்கும், காலத்திற்குத் தக்கதுபோல கருத்து வளரும்.
(நிலையும், நினைப்பும் - பொழிவு - 23.09.1947)
பகுதி:
1
2 3 4
இனம்
|
மொழி |
அரசியல் |
கல்வி |
மதம் |
நீதி |
பண்பு |
சமதர்மம்
|
பகுத்தறிவு |
பொதுவாழ்வு
பொருளாதாரம் |
பெண் |
சமுதாயம்