அண்ணா களஞ்சியம்
இனம் |
மொழி |
அரசியல் |
கல்வி |
மதம் |
நீதி |
பண்பு |
சமதர்மம்
|
பகுத்தறிவு
|
பொதுவாழ்வு
பொருளாதாரம் |
பெண் |
சமுதாயம்
பொருளாதாரம்
»
நான் ஒரு வார்த்தை கேட்கிறேன், பொது உடமைத் தோழர்களை
பொது உடமை பேசும் புனிதர்களே, பஞ்சம் பஞ்சம் பஞ்சமென்று பறைசாற்றுகிறீர்களே
அந்தப் பஞ்சம் யாவர்க்கும் பொதுவா? ஏன் ஒரு குலத்தைப் பஞ்சம் பீடிப்பதில்லை?
உங்களுக்கு நல்லெண்ணமிருந்தால் உங்கள் நெஞ்சில் தேன்றாமலிருக்குமா
இது? பஞ்சத்தினால் சம்மட்டி ஏந்தும் பார்ப்பனனை பார்ப்பதில்லை
ஏன்? கல் உடைக்கும் பார்பனனைத்தான் பார்ப்பதுண்டா நீங்கள் ஏன்?
அந்தக் குலம் மட்டும் குனியாது வளையாது குந்திக் குதிர்போல் பெருகுகிறது
ஏன்? அவர்கள் கட்டை வண்டி ஓட்டுவதில்லை? கனமூட்டை சுமப்பதில்லை,
மலத்தைக் கூட்டுவதில்லை, பஞ்சம் கூட பார்ப்பானுக்கு ஒருவிதம்,
பாட்டாளிக்கு வேறு விதம் என்று பார்த்துதான் வருமா? ஏன் நம்மவர்
மட்டுமே உச்சி வேளையிலே உழைக்கின்றனர் மாடுபோல். நம்முடைய மகளிர்
அனிச்சம் பூவினும் மென்மையார் என்ற புலவரால் புகழப்படும் பூவையர்கள்
மட்டும் காடேறி, மேடேறி நாடு சுற்றி, சுள்ளி பொறுக்குகின்றனர்.
கவிகள் பாடும் கருங்குவளை மலர் போன்ற கண்படைத்த நம் இனக் காரிகைகள்
கடும் வெயில் நேரத்தில் கல் உடைக்கக் காணலாம். ஆனால் பார்ப்பன
கும்பலில் ஒருவர் கூட செய்யவில்லை எந்த வேலையும்? பார்ப்பனப் பெண்
ஒருத்தி கூட பணிப்பெண்ணாக இருக்கக் காணோமே, ஏன்? பொதுவுடமைவாதிகளே
நீங்கள் ஏன் இதைக் கவனிப்பதில்லை? இது எந்த பொருளாதார பேதத்தில்
அடங்கியது, எவரும் இதுவரை ஏற்படுத்தாத தந்திர முதலாளி ஏற்பாடல்லவா
இது? பலர் பிழைப்பை ஒரு சிலர் உறிஞ்சி உண்டுகளிப்பது உத்தமம் என்று
எண்ணுகிறீர்களா? ஏன் மௌனம் இது பற்றி? முதலாளிகள் ஒழிந்தால் யாவும்
நன்கு நடக்கும் எனப் பொதுவுடமைவாதிகள் நவில்கின்றனர். ஆனால் இந்த
நாட்டுப் பொதுவுடமைவாதிகள் உண்மை முதலாளியைப் பற்றி கவலைப்படுவதில்லை.
(திராவிடர் நிலை - 14.07.1945)
»
அன்னியரை விரட்ட வழியென்றும், தாரக மந்திரமென்றும், தகிடுதத்தம்
செய்து கதரைப் பரப்பிய மகாத்மா மனமாற கதர் இயக்கம் வளரப் பாடுபடவில்லை.
எப்படி? உண்மையாகவே, அவர் அவ்விதம் எண்ணியிருந்தால், கதர் இயக்கம்
மிகவும் வளர்ச்சியுற்று, நாடெங்கும் பரவியிருக்கும். ஆனால் நிலமை
மாறி, மில்கள் வடநாட்டில் மிகப் பெருத்துவிட்டன. கதர் இயக்கம்
வளர்ந்திருந்து மக்கள் கதர் கட்டும் எண்ணம் கொண்டிருந்தால் மில்
தொழில் வளர்ச்சியுற்றிருக்காது, தோன்றிகூட இருக்காது. இதற்குக்
காரணம் யார்?
காந்தி பக்தர்களாய் விளங்கும் பஜாஜ், பிர்லா முதலானோர்தான் மில்
முதலாளிகள்? அந்நிய நாட்டுத் துணியை மட்டும் பகிஷ்கரித்தார் காந்தி,
ஆனால் இந்நாட்டு மில் துணியைப் பற்றிக் கவலைப்படவில்லையே ஏன்?
அந்த மில் முதலாளிகள் காங்கிரசின் ஆதரவு பெற்று தம் தொழிலைப் பெருக்கினர்.
மேலும் காங்கிரசுக்கு வேண்டும் உதவிகள் புரியும் தியாக மூர்த்திகளாக
அவர்கள் விளங்குகிறார்கள். இந்த முதலாளிகளிடம் மில் வேண்டாம் என்றா
காந்தி கூறினார்? ஏன் கூறவில்லை? அதனால் கதர் வளர்ச்சி குன்றும்
என்ற எண்ணம் தோன்றாத குறை மதியாளரா காந்தி? அவ்விதமிருப்பார் என்ற
நான் நினைக்கவில்லை. நெஞ்சார அறிந்தும் மில் வேண்டாம் என்று கூறவில்லை
மகாத்மா, போகட்டும். இனித்தான் கூறுவாரா? இவ்விதம் கூறாவிட்டாலும்
அதனை ஆதரிக்காமலாவது இருந்தாரா? அதுவும் இல்லை மாறாக சுதேசி! சுதேசி!
என்று கூறி ஊக்கந்தந்து, விளம்பரப்படுத்தி வடநாட்டு மில்களுக்கு
உதவி புரிந்தார். அங்கு அவ்விதம் தொழில் வளர்ச்சி வளர்ந்தது. இங்கோ
கதரைக் கண்மூடித்தனமாக நம்பி நலமிழந்தனர் நம்மவர்!
(திராவிடர் நிலை)
»
தானே பயிரிட்டு வரும் சொந்த நிலம், தாய்ப்பால் குடித்து வளரும்
குழந்தை போல, நமது நிலத்தை கூலிக்கோ, வாரத்திற்கோ, விட்டு பயிர்
செய்வது தாதியிடம் பால் கொடுக்கச் செய்தோ அல்லது டப்பாவில் வரும்
தயாரிப்புப் பால் கொடுத்தோ வளர்க்கப்படும் குழந்தை போலத்தான்,
வளராது என்று அர்த்தமில்லை; வளரும், ஆனால் அந்தப் பாலிலே வாஞ்சனை
கலந்திருக்க முடியாது - தாயின் அன்பு அதிலே கலந்திருக்க முடியாது.
அது போலவேதான் கூலிக்கோ, வாரத்திற்கோ பயிரிடும் நிலத்துக்கு எவ்வளவு
வளம் ஏற்பட்டபோதிலும், உடமைக்காரனின் சொந்த உழைப்பும், பராமரிப்பும்,
கண்காணிப்பும் இல்லாமல் போனால் அந்த நிலம் இரு போகம் தரினும் சரியான
வளம் பெற்றது என்று கூறமுடியாது.
(ஜமீன் இனாம் அழைப்பு - கட்டுரை)
»
இதனால் இருத்தரப்பிலும் பேதமும், கசப்பும் வளருகிறது என்பது மட்டுமல்ல,
விவசாயத்தில் தரம் குறைந்துவிடுகிறது. இதனை எண்ணித்தான் சொந்தமாக
நிலத்தை பராமரிக்காதவனிடம் நிலம் இருக்கவேண்டும் என்ற கொள்கை இன்று
வலிவு பெற்று வருகிறது.
(ஜமீன் இனாம் ஒழிப்பு)
»
எந்த தொழிற்சாலையையும் எடுத்து நடத்த அனுமதிக்கக் கூடாது. முதலாளிகளிடமிருக்கும்
எல்லா ஆலைகளையும் அரசாங்கம் கைப்பற்றிக்கொள்ளவேண்டும். எல்லா தொழிற்சாலைகளையும்
சர்க்கார் எடுத்து நடத்த வேண்டும். அவ்விதம் செய்தால் அதில் கிடைக்கும்
லாபம் அரசாங்கத்தைச் சாரும். எந்தத் தனிப்பட்ட முதலாளியையும் சாராது
அதனால் முதலாளித்துவம் வளராது.
முதலாளிகள்அதிகச் சரக்கைத் தயார் செய்து அகண்ட தன் நாடு பூராவிலும்
விற்று நிறைய லாபம் சம்பாதித்துப் பெரிய முதலாளிகள் ஆகிறார்கள்.
இம்முறையை ஒழிக்க வேண்டும். முதலாளிகள் குறிப்பிட்ட ஒரு இடம் வரையில்தான்
வியாபாராம் செய்யலாம் அதற்கு மேல் செல்ல வேறு அரசாங்கத்தின் அனுமதிபெறவேண்டும்
என்ற முறை இருக்க வேண்டும்.
முதலாளிகள் ஒன்று சேர்ந்து கூட்டு வியாபாரம் நடத்துக்கிறார்கள்.
அதனால் மேலும் பலனடைகிறார்கள். ஆகயால் அதை தடுக்கவேண்டும்.
பொழிவு - நமது முழக்கம் கி இத்தகைய பேதம் இருக்கிறது பணக்காரனுக்கும்,
முதலாளிக்கும். ஐந்து கோடி வைத்திருப்பவன் அதனை ஐந்தே கால் கோடி,
ஆறு கோடி, பத்து கோடி என்று பெருக்கும் முறையை, தொழிலை இயந்திரத்தை
சிமிட்டி ஆலையை, இரும்புத் தொழிற்சாலையை பருத்தி ஆலையை, வட்டிக்கடையை,
வைத்திருப்பவன் முதலாளி. அதிலும் சிறந்த முதலாளி வடிகட்டின அசல்
பிறவி முதலாளி ஆரியன். பிறரை உழைக்க வைத்து விதைக்காது அறுத்தெடுக்கம்
முறையை, தொழிலை, தந்திரத்தை, கையாளும் பார்ப்பனன்தான் முதல் தர
முதலாளி, பிறவி முதலாளி. அவனிடத்தில் முதல் கிடையாது, ஆலை கிடையாது,
வட்டிக்கடை கிடையாது. அவன் ஊரை ஏய்த்துப் பணம் பறிக்கும் எத்தன்
முதல் இல்லாமல் பணம் உற்பத்தி செய்கிறான். விதைக்காமலேயே அறுத்தெடுத்து
பலனை அனுபவிக்கிறான்.
(திராவிடர் நிலை)
»
அதையும் கடந்தால் ஆங்கில நாட்டிலே பலர் இருப்பர். ஆனால் அதை விட
அவர்களுக்கு கடன் தரும் அமெரிக்கர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும்
மேல் ஒரு பணக்காரன் இருப்பார். இன்று வண்டியோட்டி, அதனால் வண்டிக்காரன்,
நாளை கிண்டி பந்தயத்தில், அல்லது பகுத்தறிவுப் போட்டியில் ரூ.6000
அதிர்ஷ்டம் அடிக்கும், அப்போது அவன் பணக்காரன். அடுத்த சில மாதங்களில்
ஆடம்பரத்தால் அந்தப் பணம் போகும் அப்போது புதுப்பணக்காரன் பழைய
வண்டிக்காரனாகிவிடுகிறான். எனவே பணக்காரன் முதலாளியல்ல ஆனால் பணம்
உண்டு பண்ணும் இயந்திரயத்தை, பண உற்பத்தி ஸ்தாபனத்தை வைத்திருப்பவன்தான்
முதலாளி.
»
பணக்காரன் குளம் குட்டைக்குச் சமமானவன். முதலாளி ஊற்றுக்குச் சமமானவன்.
மழை பெய்தால்தான் குளம், குட்டைகளில் நீர் இருக்கும். இன்றேல்
வரண்டுவிடும். ஆனால் ஊற்றோ என்றும் நீர் சுரந்துகொண்டே இருக்கும்.
இந்தப் பொதுவுடைமைவாதிகளுக்கு உண்மையிலே முதலாளி யார் என்பது தெரியவில்லை,
புரியவில்லை, சரிவரத் தெரிந்து கொள்ள மனமில்லை. பணக்காரன்தான்
முதலாளி என்று அவர்கள் தவறாகச் கருதுகின்றனர். பணக்காரனுக்கும்
முதலாளிக்கும் உள்ள பேதத்தை அவர்கள் அறியவில்லை. பணக்காரன் முதலாளியல்ல;
எப்படியெனில் பங்களா வைத்திருப்பவன் பங்களாக்காரன். வண்டி வைத்திருப்பவன்
வண்டிக்காரன், சிக்ஷா இழுப்பவன் சிக்ஷாக்காரன், கடைவைத்திருப்பவன்
கடைக்காரன். அது கோலவே பணம் வைத்திருப்பவன் பணக்காரனாகிறான்; அழைக்கப்படுகிறான்.
நான் மறுமுறையும் கூறுகிறேன், பணக்காரன் முதலாளியல்ல என்று. பணக்காரன்
யார் என்று பார்ப்போம். குடந்தையில் ஒருவர் பணக்காரராய் இருப்பார்.
ஐந்தாம் மயிலில் அவரைவிடப் பணக்காரர் இருப்பார். அதற்கு மேல் நண்பர்
நாடிமுத்து இருப்பார். அதற்குமேல் ராஜா சர் இருப்பார், அவரைவிட
வடநாட்டு பிர்லா இருப்பார். அதற்குமேல் தலால், அதைவிட டாட்டா என்று
போகும்.
தசாவதாரம்
பணம் வாழ்க்கைக்கொரு கருவியே ஒழிய அதனை பிரேமைக்குரிய பொருளாகக்
கொள்ளுதல் கூடாது; பணப்பித்தம் கூடாது; வெறும் அலங்காரங்களுக்கும்
ஆடம்பரத்துக்கும் பணம் தேடிக்கொண்டிருப்பவனின் வாழ்வு பாழ்படும்.
அலைந்து திரிவானே ஒழிய வாழ்க்கையில் இன்பம் காணமாட்டான்.
(சௌமியன் - புதுமைப்பெண் - 1945)
»
முதலாளிகள் லாபத்தால் வளர்கிறார்கள் என்று குறிப்பிட்டேன். முதலாளிகளின்
லாபத்தைக் குறைக்க வேண்டும். முதலாளிகளுக்கு கிடைக்கும் இலாபத்தை
அரசாங்கம் அப்படியே உறிஞ்சிவிடவேண்டும். முதலாளிக்கு ஓரளவு லாபம்தான்
கிடைக்க வழி செய்யவேண்டும்.
»
முதலாளிக்கு கிடைக்கும் லாபம் அவர்கள் மேனி மினுக்குக்கு பயன்படுத்தும்
அளவு இருக்கக் கூடாது. அவர்களது வாழ்க்கை நடத்துவதற்கு, குடும்பத்தை
காப்பாற்றுவதற்கு போதுமானதைத் தவிர, மீதி பணத்தை வரிபோட்டு அரசாங்கம்
வாங்கிக் கொள்ளவேண்டும். அப்படி செய்தால் முதலாளிகள் பெருகவும்
மாட்டார்கள். அவர்களிடம் பொருளும் குவியாது. வரி போட்டு அவர்களிடமிருந்து
வாங்கும் பணத்தில் மக்களுக்கு நல்லது செய்யலாம். இதனால் முதலாளித்துவம்
ஒழிந்துவிடும்; ஓங்கி வளராது. கி இந்நாள் நம் திருநாட்டில் ஒரு
சிலர் கிளம்பியிருக்கின்றனர். பொதுவுடமையெனும் போர்வையைப் போர்த்திக்கொண்டு,
அவர்கள் முதலாளி யார் என்று தெரியாமலேயே முதலாளிகளை ஒழிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள்.
பாவம் பணக்காரர்களையெல்லாம் முதலாளிகள் என்று அவர்கள் தவறாகக்
கருதிக்கொண்டு வீண் வேலையில் ஈடுபடுகின்றனர். பார்ப்பன பிறவி முதலாளிகளை
அவர்கள் கண்டிப்பதில்லை, கண்டுகொள்வதுமில்லை. ஆண்டவன் பேரால் ஆயிரமாயிரம்
வேலி நிலங்களும், கோடானகோடி பொருளும் குவிந்துக்கிடப்பதை அவர்கள்
காண்பதில்லை. ஏன்? அவர்கள் விழிப்புற்று எழுச்சியுறும் நம் இனத்தோழர்களின்
கவனத்தை வேறு திசையில் திருப்ப முயல்கின்றனர்!
(திராவிடர் நிலை - 14.07.1945)
கி அந்த சுபாவம் (எழைகள் திருடுவது) பணக்காரத்
தன்மை ஒரு புறமும், வறுமை மற்றோர் புறமும் இருப்பதால்தான் உண்டாகும்.
பனியிலே குளிர் உண்டாகிறது, வெயில் உடல் எரிச்சலைத் தருகிறது.
வறுமையும் அப்படித்தான். அதை அனுபவிப்பவர்களுக்கு வேதனை ஊட்டி
அவர்களின் சுபாவத்தை மாற்றுகிறது.
»
தர்மப் பிரபுக்கள் என்று சிலரும்,
தரித்திரப் பூச்சிகள் என்ற பலரும் இருக்கும் வரையில் சுபாவமும்
அந்த பொருளாதார நிலைக்கு ஏற்றபடிதான் அமையும்.
(பார்வதி பி.ஏ. - புதினம்)
»
பணத்துக்கு இருக்கும் காந்த சக்தி, விசித்திரமானது. அந்த சக்தியால்
இழுக்கப்படாத பொருளே இல்லை. அரசு, புகழ் எதுவும் அந்த காந்த சக்திக்குக்
கட்டுப்பட்டுவிடுகிறது. அது மட்டுமா? பணத்தை பணம் இழுக்கிறது.
அந்த காந்த சக்தியால் பணம் இருக்கும் இடத்தில் பணம் சேருகிறது
என்று மக்கள் பேசுவதிலே இந்த உண்மை தொக்கியிருக்கிறது. பண பலத்தைக்
கொண்டு, மேலும் பண பலத்தை அதிகரிக்க செய்யும் சக்தி வடநாட்டுக்கு
ஏற்பட்டுவிட்டது. இவ்வளவு பேங்குகள் நடத்தி வருகிறார்கள் என்றால்,
ஏமாந்தப் பணமும் வடநாட்டிலிருந்து மூட்டைக் கட்டிக்கொண்டு வந்தது
என்பதல்ல பொருள் ஒரு பாங்க் அமைத்து அதனுடைய வளத்தை விளம்பரப்படுத்திவிட்டால்
பணம் இருக்கும் இடம் தேடி பணம் உருண்டோடி வருகிறது. ஆகவே வடநாட்டவர்
இந்த பாங்குகளை அமைப்பதென்றால், அதிலே நம் நாட்டு பணம் குவிகிறது
என்றுதான் பொருள். தோழில் வளர பணம் தேவை என்பது ஒரு விஷம். இங்கு
மக்களைக் கூட, மற்றோர் புறத்திலே நமது நாட்டுப் பணத்தையே பாங்க்
வைத்து இழுத்துக்கொண்டு அதைக் கொண்டு இங்கு தொழில் வளருவதை ஆதரிக்கவோ,
தடுக்கவோ தங்களுக்கே சக்தி வளரும்படியான சூட்சும வேலைகளைச் செய்கின்றனர்.
வடநாட்டு பொருளாதார செப்படி வித்தைக்காரர்கள். இதைப் பற்றி யோசிப்பதே
பாரத மாதாவுக்கு கோபமூட்டும் என்று இங்குள்ள பரமபக்தனான தேசியத்
தோழன் எண்ணுகிறான். பாவம் அவனுக்கு தொழில் வளர்ச்சி ஏன், காந்தியார்தான்
குடிசைத் தொழிலை கவனிக்கச் சொல்லிவிட்டார். தக்களியும், கைராட்டையும்
தந்துவிட்டார். ஆடு ராட்டே, சுழன்றாடு ராட்டே என்று ஆனந்தமாகப்
பாடுகிறான். பணமூட்டைகள் - அங்கே - வடநாட்டிலே குவிந்துவிடுகின்றன.
(கட்டுரை - பணத்தோட்டம் - 13.01.1946)
»
காவேரி, தென்பெண்ணை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஜீவ நதிகள்; இங்கு
ஜீவநதிகள் என்றால் அவை வெறும் பாவத்தைப் போக்கும் விசேஷ தீர்த்தம்
என்றா பொருள்? விவசாயத்துக்கு வள்ளல்! அதுமட்டுமல்லவே, எந்த மின்சார
சக்தி தற்கால விஞ்ஞான தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற கருவியோ அந்த மின்சாரத்தை
வாரி வழங்கும் வல்லமை இந்த ஆறுகளிடம் இருக்கிறது. இன்று நாம் அந்த
வல்லமையைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. நமது காடுகள் இயற்கையின்
எழிலுக்கும் அதைக் காணும் கவிகள், ஓவியர் ஆகியோருக்கு கற்பனைத்
திறனை கிளறிவிடும் இடம் மட்டுமல்ல. அவை நமது தொழில் துறைக்கு தேவையான
பொருளைத்தரும் களஞ்சியம், இன்று வரை நாம் அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை.
நமக்குச் சுரங்கங்கள் உள்ளன. புதைப் பொருட்ச்செல்வத்தை நாம் சரியாக
பயன்படுத்தவில்லை. எறக்குறைய நாலுகோடி மக்கள் உள்ளனர். அவர்களில்
பலப்பல இலட்சம் மக்களை, பர்மா காட்டுக்கும், மலேயா மண்ணுக்கும்
பலி கொடுத்து வருகிறோம். இவ்வளவு இருப்பதுடன், வெளி உலகுடன் தொடர்புகொள்ள
கடலோரம் மூன்று பக்கம். இவைகளில் மறைந்தவையும், மங்கியவையும் போக
மீதமுள்ள தறைமுகங்கள் அநேகம். இவ்வளவு இருந்தும் நாம் காண்பதென்ன?
ராஜபுதனப் பாலைவனத்து தந்திரக்காரர்களும் வறட்சி மிக்க வடநாட்டவரும்
இங்கு முதலாளிகள் ஆகிவிட்டதையும் பிர்லாக்களின் படை எடுப்பதையும்தான்
காண்கிறோம்.
(வனஸ்பதி - கட்டுரை - 03.02.1946)
»
தொழிலாளி, கூலிக்காரன், அடிமை; மூன்று விதமான பெயரும், ஏழைதான்
பெறமுடியும் மூன்று விதமானவர்களும் ஏழைகள் - உழைத்தே பிழைக்க வேண்டியவர்கள்
- ஆனால் மூவருக்கும் நிலமை வேறு, வேறு.
»
தொழிலாளி தனக்கு விருப்பமில்லாவிட்டால் வேலைக்கு வர மறுக்கும்
நிலமையையும், தன்னை காரணமின்றி வேலையிலிருந்து நீக்கினால், ஏன்
என்ற கேட்கும் நிலமையையும் கேட்கும் உரிமையையும், உழைப்புக்கேற்ற
பணம் தந்தாகவேண்டும் என்று கிளர்ச்சி செய்யவும் சட்டபடி உரிமை
பெற்ற நிலை பெற்றுள்ளவன். கூலிக்காரன் இதற்கு ஒரு படி மட்டம்.
கிளர்ச்சிக்கு வழி - வசதி கிடையாது. ஆனால் இவனையும் வேலை செய்தாகவேண்டும்
என்று கட்டாயப்படுத்த முடியாது. தேவையானால் கூலிக்காரனை உடமைக்காரன்
ஏதோ வேலை செய்யச்சொல்வான் - இஷ்டமிருந்தால் கூலியாள் வேலை செய்வான்,
தொடர்பு அவ்வளவுதான். அடிமை நிலை அதுவல்ல - அவன் வேலை செய்தே ஆகவேண்டும
- ஏன் என்று கேட்க முடியாது - எவ்வளவு அளவு வேலை என்று கேட்க முடியாது
- என்ன பணம் தருகிறார் என்ற கேட்கக் கூடாது.
அவனை எஜமான் அடிப்பான் - சட்டம் குறுக்கிடா - அவனைப் பட்டினிப்
போட்டுச் சாகடிப்பான், சகஜம் என்று சர்க்கார் இருந்துவிடும் -
உண்மையில் அவன் கால்களில் சங்கிலியும் உண்டு.
(பயங்கரப் பாதை - கட்டுரை - 17.11.1946)
»
வயலின் பசுமை, தொழிலின் மாண்பு என்பவை, பொன்னாகி, பொருளாகி, பூசுவனவாகி,
உடுப்பனவாகி, உல்லாசமுமாகி, உப்பரிகையில் வாழ்வோரிடம் சென்று சிறைப்பட்டிடவே
ஏழையர், வறியவராயினர்.
(கடிதம் - என்னை வாழவிடு - 30.08.1964)
ஏழ்மை
ஏழ்மை ஒரு நோய். அது யாரைப் பிடித்துக்கொள்ளுகிறதோ அவன் மட்டுமல்ல
அவனைச் சூழ உள்ளவர்களையும், அவன் உலவும் சமூகத்தையே பிடித்துக்கொள்வது!
ஒட்டுவார் ஒட்டி!
(சிறகுவிரித்தாடுவதெல்லாம் மயிலாகுமா -
கடிதம் - 14.08.1966)
வருவாய்
ஏழைக்கு உழைக்குமிடம் ஒன்றில் இருந்து மட்டுமே வருவாய் கிடைக்கும்.
சீமானுக்கு வருவாய் பல இடங்களிலிருந்து கிடைக்கும். ஏழைக்கும்
சீமானுக்கும் ஒரே வயிறுதான், அதில் வித்யாசமில்லை.
ஆனால் ஏழைக்கு வருவாய்த்துறை பல இருப்பதில்லை, சீமானுக்குப் பலப்பல.
ஆகவே ஏழை உழைக்கிறான், பிழைத்திருக்க. சீமான் மேலும்சீமானாகிறான்,
பணம் குவிகிறது. குவிந்த பணம் சீமானுக்குப் புதுப்புது வருவாய்த்
துறைகளைப் பெற்றுத் தருகிறது. அங்கே பணம் பணத்தைப் பெற்றுத் தருகிறது.
இங்கே உழைப்பு உடலை வாட்டி, உள்ளத்தைக் கசக்கிப்போடுகிறது.
அங்கே செலவுபோக இருந்திடும் மிச்சம் முந்திரித் தோப்பாக, மூன்றடுக்கு
மாடியாக மாறுகிறது. இங்கே உழைத்து உழைத்து உருக்குலைந்ததன் பலன்
காசம், குன்மம், கடன் . . . (கடிதம் - 14.08.1966)
இனம்
|
மொழி |
அரசியல் |
கல்வி |
மதம் |
நீதி |
பண்பு |
சமதர்மம்
|
பகுத்தறிவு
|
பொதுவாழ்வு
பொருளாதாரம் |
பெண் |
சமுதாயம்