அண்ணா
களஞ்சியம்
இனம் |
மொழி |
அரசியல் |
கல்வி |
மதம் |
நீதி |
பண்பு |
சமதர்மம்
|
பகுத்தறிவு
|
பொதுவாழ்வு
பொருளாதாரம் |
பெண் |
சமுதாயம்
இனம்
பகுதி: 1
பகுதி:
1
2 3 4
»
தமிழனுக்கு தமிழ் நாட்டிலே
தமிழரின் பணத்தால் கட்டி தமிழரின் பணத்தால் பராமரிக்கப்படும் கோயில்களிலே
தமிழருக்குச் சம உரிமை இல்லை; உண்டிச்சாலைகளிலேயும் இல்லை. தமிழ்நாட்டிலே
தமிழனுக்கு வேலை கிடைப்பதில்லை.
(தமிழரின் மறுமலர்ச்சி)
»
கனியிருக்கக் காயும், கரும்பிருக்க இரும்பும், விளக்கிருக்க மின்
மினியும், வேண்டுவரோ விவேகிகள்? தமிழ் இருக்க, தமிழர் நெறி இருக்க,
தருக்கு மிக்க ஆரியமேன் எமக்கு! கிளியும், குயிலும், மாடப்புறாவும்,
மைனாவும் ஒரே சோலையிலே உல்லாசமாக வாழும். ஆனால் வல்லூறு வட்டமிடக்
கண்டால் அதுவும் நம்மைப் போல் ஒரு பட்சிதானே என்று அவை கருதா;
வட்டமிடும் வல்லூறு தம்மை வதைக்கும் என்பதறிந்து! அதுபோலவே திராவிடப்
பெருங்குடிமக்கள் தம்மில் சிற்சில வேறுபாடுகள் கொண்டவராக இருப்பினும்,
ஒரே வட்டாரத்தில் வாழ இசைவர். ஆனால் தமது சுயமரியாதையைச் சூரையாடும்
ஆரியருடன் தோழமை பூண்டு வாழ இசையார்.
(கட்டுரை - சீறும் சில்லரைகள் - 28.06.1942)
»
இராமாயணம் வைணவருக்கு மேலான நூல். பெரிய புராணம் சிவனடியார்களின்
பக்தியை விளக்கும் நூல். சைவம், வைணவம் எனும் இரு மார்க்கங்களையும்,
பெரியபுராணம், கம்ப இராமயணமாகிய இரு நூற்களையும், தமது மார்க்க
நூற்களாகக் கொள்கின்றனர். வைணவம், சைவம் எனும் இரண்டும் இந்து
மார்க்கத்தின் கிளைகள். தமிழர் இந்துக்களல்லர்; தமிழருக்கு தனி
நெறி உண்டு என்றாலும் இவ்விரு மார்க்கங்களையும் தழுவிக்கொண்டு,
தமிழர் தன்மை இந்துக்கள் என்று கருதி வருகின்றனர். நெறியைவிட்டு,
ஆரிய நெறியாகிய இந்து மார்க்கத்தைக்கொண்டு தம்மை இந்துக்கள் என்று
கருதிக்கொள்வதால், தமிழர், தாங்கள் தனி இனம் என்பதை மறந்து இந்துக்களில்
ஒரு பகுதி என்ற எண்ண, தன் மானத்தையும் தன்னரசையும் இழந்தனர்.
(14.03.1943 - தீ பரவட்டும்)
»
தஞ்சை மாவட்டத்திலே, சாம்பசிவ ஐயர், சாமியப்பா முதலியார், ஆரியர்,
திராவிடர் என்று நாம் நினைக்கிறோம். ஒருவரை காங்கிரஸ் என்றும்,
மற்றவரை ஜஸ்டிஸ் என்றும் சொல்கிறோம். அவரவர்களுக்கு வேறு வேறு
கொடியிருப்பதாக நாம் எண்ணுகிறோம். பெருமையுடன் பேசிக்கொள்கிறோம்.
குத்தகைத் தகராறு, வாரத் தகராறு, இவைகளின் காரணமாக விவசாயிகளின்
கிளர்ச்சி நடக்கும்போது என்ன காண்கிறோம். ஆரிய சாம்பசிவ ஐயரும்,
திராவிடச் சாமியப்பாவும் காங்கிரஸ் மந்திரி பாஷ்யம் ஐயங்காருடன்
பேசி, திராவிட கந்த சாமியின் கொட்டம் ஒழிக்கப்படவேண்டும், என்று
மந்திராலோசனை செய்கிற வேடிக்கையை. வேடிக்கை அல்ல அது? வேதனை?
»
தமிழர்களுக்கு ஜாதியும் கிடையாது. ஜ வும் கிடையாது. தமிழிலே ஜாதி
என்ற ஏற்பாடு தமிழகத்திலே கிடையாது. நீ குறிப்பிடும் உனது முன்னோர்களாகிய
தபசிகளும், ரிஷிகளும் தவம் செய்வதையும், காம குரோத மத மாச்சரியாதிசிகளை
அடக்குவதிலும் காலந்தள்ளாது, தமிழ் இனத்தைக் கெடுக்கும் திருத்தொண்டு
புரியவேண்டியே வர்ணாஸ்ரமத்தை புகுத்தினர். வகை கெட்ட மன்னர்கள்
வளைவுகளுக்கு ஆசைப்பட்ட (வளைவுகள் என்றால் விபரீத அர்த்தம் செய்யவேண்டார்.
ஆரியர், மன்னர்கள் எதிரிலே வளைந்து நின்று ஏய்த்தனரே அதனைத்தான்
குறிப்பிடுகிறேன்) அந்த வர்ணாஸ்ரமத்திற்கு இடம் அளித்தனர். அதனால்
இடர்பட்ட தமிழர் இன்று அதனை அடித்து விரட்டுகின்றனர்.
(கட்டுரை - மட்டரகம் - 28.11.1943)
பகுத்தறிவு
»
போர்க்கருவிகள் விஞ்ஞான முறையிலே என்பதற்காக, விஞ்ஞானத்தை தூஷிப்பபது
கோட்டைக்கு உபயோகிக்க வேண்டிய கருங்கல்லின் மீது, மண்டையிணை மோதவைத்துக்கொண்டு
கருங்கல்லின் கொடூரத்தைக் கூறி கோவென கதறும் கோணல் புத்திக்காரன்
செயல் போன்றதாகும். விஞ்ஞானம் பல கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக
இருக்குமே ஒழிய, அவைகளை உபயோகிக்கும் மக்களின் மனப்போக்குக்கு,
அது ஜவாப்தாரியல்ல! வீணையின் நரம்புகள், நாதத்தைத் தரும் இசை வாணனின்
மிருதுவான கரத்திலே. விஷயமறியாதவனுக்கு தூக்குக்கயிறுக்கும் அது
உபயோகமாகக் கூடும். குற்றம் வீணையினுடையதல்ல. அந்த வீணனுடையது.
வீணை உயிர் குடிக்கும் விபரீதப் பொருள் என்ற விளம்புவது போன்றது
விஞ்ஞானத்தை குறை கூறுவது.
(கட்டுரை - விஞ்ஞானம் விடுதலை வீரன் - 09.01.1944)
»
ஐந்தறிவு படைத்த மிருகங்கள் ஆறறிவு படைத்த மனிதனிடத்தில் அடங்குவதில்
ஆச்சர்யமில்லை . ஆனால் ஆறறிவு படைத்தத் தமிழன், அதைப் போலவே ஆறறிவு
படைத்த ஆரியனிடம் அடங்கிக் கிடப்பது அதிசயமாக இருக்கிறதென்று,
அன்பர் ஒருவர் கூறினார். ஆனால் ஆரியனுக்கு ஏழாம் அறிவு என்று ஒன்றிருக்கிறது.
அதுதான் பிறரை ஏய்த்துப் பிழைக்கும் அறிவு. இப்படி அடங்கிக் கிடக்கும்
தமிழன் தரணி ஆண்டவன் என்றும், ஆற்றல் மிகுந்தவனென்றும் அந்த நாள்
வரலாறு அறிவிக்கிறது. இமயத்தில் வெற்றிக் கொடி நாட்டியத் தமிழன்
என்று சொல்லப்பட்டவன், இன்று எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதா?
என்று ரோமாபுரிவரை வாணிபம் நடத்திய தமிழன்இன்று வாழ வழியின்றி
திகைப்பதா என்பதுதான் இன்று நாங்கள் உங்களைச் சிந்தித்துப் பார்க்கும்படி
கேட்டுக்கொள்வது. ஆகவேதான் பார்பனீயம் என்ற பழைய ஏற்பாடு, பாராண்ட
தமிழர்களைக் கோழையாக்கிற்று என்று கூறுகிறோம். இந்தப் பார்பனீயம்
அழிக்கப்பட்டாகவேண்டும்.
(01.07.1945 - பொழிவு - மறுமலர்ச்சி - சிதம்பரம்)
ஆரியர் - திராவிடர்
சிலர் கேட்கலாம், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று பலப்பல பேசுகிறீர்.
திராவிடத்திலே கூடப் பள்ளர், பறையர் என்றும், முதலியார், நாயுடு
என்றும், சைவர், வைணவர் வேளாளர் என்றும் பல பிரிவுகள் உள்ளனவே.
இது உங்கள் கண்களில் உறுத்தவில்லையா? வீணே ஆரியத்தை மட்டும் ஏன்
தூற்றுகிறீர் என்று ஒப்பாரி வைக்கலாம். நான் கூறுகிறேன் அத்தகையத்
தோழர்களுக்கு. ஆரியத்தின் அக்ரமச் செயலால் உண்டான பிழைகள் இவை.
வேறுபாடுகள் இவை. திராவிடத்திலே உள்ள வேறுபாடுகளை நீக்கிக்கொள்ள
முடியும். ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையே அளவற்ற முரண்பாடுகள்
உள்ளன. வேறுபாட்டை நீக்கிக் கொள்ளமுடியும். ஆனால் முரண்பாடு நீக்க
முடியாது. சான்றாக திராவிடத்திலுள்ள வேறுபாடு தண்ணீருக்கும் பன்னீருக்கும்
ஒத்தது. தண்ணீரோடு பன்னீரைச் கலக்கலாம். கெடுதியில்லை. தண்ணீரும்
பன்னீரின் மணத்தைப் பெறும். இதில் முரண்பாடு இல்லை. வேறுபாடுதான்
உள்ளது. இன்னும் இந்த வேறுபாடு இளநீருக்கும், தண்ணீருக்கும் உள்ள
வேறுபாட்டைப் போன்றது. இளநீர் சற்றுஇனிப்பாக இருக்கும். தண்ணீர்
சுவையற்றிருக்கும். வேற்றுமை அவ்வளவே. இளநீரோடு தண்ணீர் கலந்தால்
உபயோகமற்றதாகிவிடாது. இதுவும் முரண்பாடல்ல. வேற்றுமைதான். இத்தகைய
வேற்றுமைகளை விவேகமிருந்தால் விலங்கிக் கொள்ளலாம். அறிவு இருந்தால்
அகற்ற முடியும். ஆனால் ஆரியத்திற்கும், திராவிடத்திற்கும் உள்ள
முரண்பாடு தண்ணீருக்கும் கழுநீருக்கும் உள்ளதைப் போன்றது.
(குடந்தை - பொழிவு - திராவிடர் நிலை)
»
ஐயர்மார் பேசும் மொழி ஆலயங்களிலும், துரைமார்கள் பேசும் மொழி ஆட்சி
அலுவலகங்களிலும் இருக்கும் நிலை வந்ததும் தாய்மொழிக்கு இடம் தொட்டில்,
கட்டில், சமயலிடம், தோட்டம், கழநி என்றாகி விட்டதல்லவா!
ஆரியர்கள் சிந்து நதி தீரத்திலிருந்து தக்காணம்
நோக்கி வந்த போது தமிழகத்தின் செல்வம் கொழித்திருந்தது. தமிழர்கள்
நெஞ்சில் நல்லெண்ணங்கள் குடி கொண்டிருந்தன என்பதுவும், ஆரியர்கள்
குடியேற்றத்திற்குப் பிறகு செல்வம் குறைந்திருக்கிறது. நல்லெண்ணங்கள்
மறைந்து நச்சுக் கொள்கைகள் குடிகொண்டிருக்கின்றன என்பதுவும் வரலாற்று
உண்மைகள். இதை யாரும் ஒப்புக்கொள்கிறார்கள். மறுப்பதில்லை. எனவே
ஆரியர்களது வேத இதிகாச கருத்துக்கள் தொடங்கியவுடன் தமிழர்களின்
நினைப்பு கெட்டு, நினைப்பு கெடவே நிலையும் கெட்டிருக்கவேண்டும்
என்பது என் யூகம். (பொழிவு - நிலையும் நினைப்பும்)
»
ஆலயமென்பது ஆரியக் கோட்டை என்பதும், தந்திரயந்திரமென்பதும், பாமரருக்கு
பலிபீடம் என்பதும், சிந்தனைச் சுதந்திரத்தை இழந்தவர் சிக்கிச்
சிதையும் சிலந்திக் கூடென்பதும் அவனிக்குத் தெரியும். அதனைத் தெரிந்திருந்த
தமிழரோ அதனை மறந்தனர். அது நாளை சூத்திரங்கள் என்று நம்பியும்
மமதையாளரின் போக்கை மகிமை என்ற எண்ணவுமான நிலை பெற்றது கண்டு வாடினர்.
(கலிங்கத்துப்பரணி - புதினம்)
»
தமிழன் யாருக்கும் தாழாமல் - யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல்
- எவராலும் சுரண்டப்படாமல், எவருக்கும் எசமானனாக இல்லாமல் - உலகில்
எவருக்கும் அடிமையாக இல்லாமல் - நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே
எங்களது தலையாயக் கொள்கை.
»
எளிமைதான் தமிழனின் பண்பு, அது மட்டுமல்ல; நிலை உயர, உயர மிகமிக
எளிமையாக இருப்பதுதான் - அந்த பண்பின் சிகரம்
»
தமிழன் உலகில் எங்கு சென்றாலும் - தனியாகவே சென்றாலும், தனக்கென
இருக்கும் பண்பை - ஆற்றலை உலகு அறிந்துகொள்ளச் செய்வான்.
»
தமிழன் வாழவேண்டிய நல்வாழ்வு, தன்னை மட்டும் வாழ்வித்துக்கொள்ளக்
கூடியதல்ல! தமிழன் நல்வாழ்வு வாழவேண்டுமென்பது, மற்றவர்களை வாழவைக்கவேண்டும்
என்பதுதான்.
»
தேசிய ஒருமைப்பாடு என்பது நல்ல இலட்சியம்தான். மதித்து நடக்கக்கூடியதுதான்.
ஆயினும் அதற்காக மொழித்துறையிலோ, பொருளாதாரத் துறையிலோ, ஆதிக்கம்
செலுத்துவதையும், அநீதியையும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.
அதனால்தானே மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
»
அச்சம் தவிர்த்திடுக! நவநிதியேத் தந்திடினும் நத்திக் கிடந்திட
இசையாதீர்! வாய்மைதனைக் காத்திடும் வன்மைதனைப் பெற்றிடுக! அதற்காக
நெருப்பாற்றில் நீந்திடவும் துணிந்திடுக! யாந்தமிழர் என்பதனை மெய்பித்திடுக.
பகுதி:
1
2 3 4
இனம் |
மொழி |
அரசியல் |
கல்வி |
மதம் |
நீதி |
பண்பு |
சமதர்மம்
|
பகுத்தறிவு
|
பொதுவாழ்வு
பொருளாதாரம் |
பெண் |
சமுதாயம்