மனித
நேயம்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
மனிதாபிமானத்தின் மலைச்சிகரம்
அழகிரிக்கு
உதவிய அன்புகிரி - அண்ணா!
புத்தர் - ஏசு - காந்தியைப் போல
மனித நேயம் கொண்ட மகோன்னதமானவர் பேரறிஞர் அண்ணா!
அவரது வாழ்வே மனிதாபிமானத்தின் அடித்தளத்தில் எழுந்த மாளிகை என்றால்
அது மிகையல்ல!
காரிருள் சூழ்ந்த தென்னக வானில் பேரொளியாய் பூத்தவர் தந்தை பெரியார்!
பெரியார் கண்ட பகுத்தளிவுப் பாசறை திராவிடப் பேரியக்கம்!
தெள்ளுத் தமிழ்ப் பேச்சால் மக்கள் நெஞ்சை அள்ளிக்கொள்ளும் வெல்லு
தமிழ்ச் சொல்லாளன்.
சோதனை நெருப்பிலும் சுடர்ப் பொன்னாற் மிளிர்ந்த சுயமரியாதை இயக்க
சொக்கத்தங்கம்!
பகை கண்டு நடுங்காத அஞ்சாசெஞ்சன் - அரிமா வீரன் - அண்ணா அவர்களாலேயே
அண்ணன் என்றழைக்கப்பட்டவர் அழகிரிசாமி!
இன்றைய தலைமுறையின் இணையற்ற பேச்சாளர்கள் பலருக்கு அடியெடுத்துக்
கொடுத்த இலட்சிய தீபம்!
ஒலிப்பெருக்கி இல்லாத காலத்திலேயே மணிக்கணக்கில் பேசும் மணி ஓசை
உரைவித்வான்.
நாடு நகரெல்லாம் காடுமேடெல்லாம் சுற்றிச் சுழன்று சுயமரியாதை இயக்க
இலட்சியங்களை தொண்டை வலிக்க - அடிவயிறு வலியெடுக்கக் கத்திக் கத்தி
- எலும்புருக்கி நோய்க்கே ஆளாகிறார். வீராவேசமாக மேடையில் முழங்குவார்
- கீழிறங்குவார் - இறுமுவார் - இரத்தம் கக்குவார்! கட்டுக் குலையாத
இராறவமேனி சட்டை போர்த்திய கட்டையாக மாறியது! பட்டுக்கோட்டையில்
எழுந்த எஃகு கோட்டை பட்டமரமானது!
தந்தை பெரியாரின் தளபதியாக இருந்தவர்தான்
அண்ணா, எனினும் அழகிரிக்கு அண்ணா என்றாலே ஏனோ கசப்பு!
அண்ணன் மேல் அழகிரிக்குத்தான் அதிருப்தியே தவிர, அண்ணா அழகிரியை
அண்ணன் என்றே பாசம் கொப்பளித்து அழைத்து வந்தார்!
ஒரு சமயம் - உருக்கி நோய் உக்ரதாண்டவமாட தாம்பரம் மருத்துவமனையிலே
அனுமதிக்கப்ட்படு, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார் அழகிரி!
ஆதரவற்ற நிலை - அரவணைப்பார் யாருமிலை. குடும்பத்தைக் காப்பதெப்படி?
அழகிரி நெஞ்சில் ஆற்றமாட்டாத பெருந்துயரம்!
இந்த நிலையில் அழகிரிக்கு ஏதாவது செய்தே தீரவேண்டும் என்று துடிக்கிறார்
அண்ணா - மறுக்கிறார் அய்யா!
துணிந்தொரு முடிவெடுத்து அழகிரிக்காக நிதி சேர்த்து ஐயாயிரம் ரூபாய்
மதியழகன் மூலமாக அனுப்பி வைக்கிறார் அண்ணா!
தாம்பரம் ரயிலடியில் மதியழகன் அழகிரியை சந்தித்து அந்தப் பணத்தை
ஒப்படைக்கிறார்.
எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத பெருந்தொகையொன்று கிடைக்கப்பெற்ற
அழகிரி - இதுவரை யாரை நான் நம்பினேனோ, அவர் என்னைக் கைவிட்டார்.
யாரை ஆவேசமாக எதிர்த்தேனோ, ஆத்திரம் தீருமட்டும் திட்டித் தீர்த்தேனோ,
அவர் எனக்கு உதவியிருக்கிறார். மதியழகா! அண்ணாவுக்கு என் நன்றியை
சொல்லப்பா என்று சொல்லி கண் கலங்கி நெஞ்சம் நெகிழ்ந்தார் அழகிரி!
அழகிரிக்கு தாம் செய்யும் உதவி
இத்தோடு முடிந்துவிடவில்லை என நினைத்து அண்ணா, தம்மை கூட்டங்களுக்கு
அழைக்கும் கழக நண்பர்கள் அழகிரி பெயருக்கு நூறுரூபாய் பணவிடை மூலம்
அனுப்பிவிட்டு, அதற்குரிய சான்றினைக் காட்டினால் தேதிக் கொடுக்கப்படும்
என்று தெரிவித்தார். கூட்டங்களும் நடந்தன - அழகிரிக்கு நிதியும்
குவிந்தது!
இப்படிக்கு அழகிரிக்கு அண்ணா பல்வேறு
வகையிலும் உதவியது மறக்கமுடியாத வரலாற்றுச் சம்பவமாகும்!
தன்மான இயக்கத்தின் தனிப்பெருங்கவிஞர்
மட்டுமல்ல; தலையான கவிமுதல்வர் புதுவை தந்த புதுமைக்குயில் புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன்!
ஷெல்லி, வாட் விட்மன், கதே, புஷ்கின்,
உமர்கயாம் போன்ற கவிதைச் சிற்பிகளின் கூட்டுவடிவாக பாட்டுவானில்
பறந்து திரிந்து தமிழியக்கம் மலர - திராவிட இயக்கம் வளர அற்புதக்
கற்பனைகளை அழகோவியக் கவிதைகளாக வடித்தார்.
அண்ணா இயலிலும் நாடகத்திலும் வளர்த்த
உணர்வுகளை இசைத்தமிழில் ஒங்கச் செய்த புரட்சிக்கவிஞருக்கு பொன்னாடை
போர்த்த வேண்டும் - பொற்கிழி வழங்க வேண்டும் என்கிற பேராசை பொங்கி
வழிந்தது அண்ணாவுக்கு!
அவர் தமிழைக் காக்கிறார். நாம்
அவரைக் காப்போம் என எண்ணிய திண்ணிய நெஞ்சம் படைத்த அண்ணா நிதி திரட்டும்
பொறுப்பேற்றார். அந்த நாளில் 25 ஆயிரம் - (இரண்டு லட்சம் பெறும்);
திரட்டினார்.
சென்னை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
சாலையிலுள்ள தொலைபேசி அலுவலகக் கட்டிடத்திற்குப் பின்னேயுள்ள பச்சையப்பன்
கல்லூரி விளையாட்டுத் திடலில் பிரம்மாண்டமான விழாவை ஏற்பாடு செய்து
புரட்சிக் கவிஞருக்கு பொற்கிழி தந்தார் அண்ணா!
தனக்கென நிதி திரட்டிக் கொண்டு
- தன் பெண்டு தன் பிள்ளைகளைத் தற்காத்துக் கொள்ளும் கடுகு உள்ளம்
கொண்டோர்க்கு மத்தியில் அண்ணாதான் தன்னைப்பற்றிய நினைப்பை மறந்து
தன்னைச் சூழ்ந்திருப்போரின் சூனிய வாழ்வில் சுடரொளியை ஏற்றி வைப்பதில்
முனைந்து நின்றார்!
|