தம்பிக்கு அண்ணாவின் கடைசிக் கடிதம்

தமிழர் திருநாள்
2

பழம் பெருமை பேசிப் பெருமூச்செறிந்துகொண்டே செயலற்று இருப்பதல்ல நமது குறிக்கோள். செயலினால் பெற்றிடும் செழுமையை எடுத்துக் காட்டிடும் நன்னாளாம் பொங்கற் புதுநாளில், செயலார்வம் மிகுந்திடுவது இயல்பு. செயலும் செம்மையானதாக அமைந்திட வேண்டும், பயனும் சமூகம் முழுவதற்கும் கிடைத்திடத்தக்க முறை கண்டாக வேண்டும். வெள்ளம் அழித்திடும்; - வாய்க்கால் வளமூட்டும், செல்வம் சிலரிடம் சென்று குவித்திடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது. அது கொண்டவனையும் அழித்திடும், சமூகத்தில் வலிவற்றோரையும் அழித்திடும். எனவேதான் - சிந்தனையாளர், செல்வம் பெருக்கிட வேண்டும். அஃது முடக்கப்படாமல் சமூகம் முழுவதற்கும் பயன் அளிக்கக்கூடிய வழிமுறை கண்டாக வேண்டும் என்று எடுத்துக் கூறினர். நமது அரசுகூட அந்தச் சமதர்ம இலட்சியத்தைப் போற்றுகிறது; நமது கழகம் சமதர்ம நெறியிலே நம்பிக்கையும் நாட்டமும் கொண்டிருக்கிறது. ஆனால், நடைமுறைக்குள் புகும்போது, தம்பி! ஆயிரம் ஆயிரம் தடைகள் எதிர்ப்புகள், ஆபத்துகூட!

ஆண்டவனே! ஏனோ எனக்கு இந்தச் சோதனை, இத்துணை வேதனை என்று ஏழை இறைஞ்சுகிறான். செல்வவான், ஆண்டவன் அருளால் நான் பெருநிதி பெற்றேன். இதனைக் குறை கூறுவது தர்மமா? என்று நியாயம் பேசுகிறான்.

மொரேவியா நாட்டில், பணம் பெட்டியில் தூங்குகிறது; பணக்காரன் பட்டு மெத்தையில் தூங்குகிறான்; ஆண்டவன் சொர்க்கத்தில் தூங்குகிறார்; இல்லாவிடில் தெருவில் ஏன் இத்தனைப் பிச்சைக்காரர்கள்? என்றோர் பழமொழி உண்டு.

இந்த நிலை கண்டு மனம் வெதும்பிய நிலையில், பொங்கலாம் பொங்கல்! யாருக்கு? ஏழைக்கு ஏது அந்த இன்பம்? - என்று நமது இளங்கவிஞர்கள் கேட்கின்றனர். அந்தக் கேள்வியிலே உருக்கமும் இருக்கிறது உண்மையும் இருக்கிறது.

இந்த நிலையைக் கண்டு மனம் வெதும்பிக் கவிஞர் இராஜேந்திரன்.

தைத்திங்கள் வருகின்ற பொங்கல் நாளில்
தங்கத்தைச் சுமக்கின்ற மகளிர் ஆக்கும்
நெய்ப்பொங்கல் சுவைத்துண்டு மகிழ்ச்சிகொள்வர்
நிதிபடைத்த சீமான்கள் என்றும் எங்கள்
கைதொட்டு வாய்பட்டதுண்டோ பொங்கல்
கண்மட்டும் ஓயாமல் பொங்கும்! பொங்கும்!
தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கு இல்லை
தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?

என்று கேட்டிருக்கிறார். மிகைப்படுத்திக் கூறுகிறார் என்று எவரும் கூறிடார்! ஏழ்மை நெளிகிறது! அதிலும் வளம் பெற்றளிக்கும் பாட்டாளிகளிடம்! இது நீதியல்ல; தமிழர் நெறியுமாகாது. இந்நிலை மாறிட, எல்லோர்க்கும் வாழ்வில் இன்பம் கிடைத்திட நாம் ஒவ்வொருவரும் தத்தமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பிற்கு ஏற்ற முறையில் பணியாற்றிட வேண்டும். தமிழர் திருநாளில் தமிழர் அனைவரும் களிப்புடன் கலந்துகொள்ளத் தக்கதான சமுதாய அமைப்பு முறை காணப் பாடுபட்டாக வேண்டும். உவகை தந்திடும் இந்நாளில் இதற்கான உறுதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்நிலை, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா எங்கணும் இருந்திடக் காண்கின்றோம்.

இந்தியாவின் தொழில் பொருளாதாரம் 20 இலட்சம் பங்குதாரர்களின் கையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. 500 முக்கிய கேந்திரத் தொழில்கள், நிதி ஸ்தாபனங்கள், கம்பெனிகளில் எடுத்துப்பார்க்கும் போது அவற்றில் 3,128 டைரக்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை யார் என்று உற்றுக் கவனித்தால் 1,013 பேர்கள்தான் இந்த 500 கம்பெனிகளில் டைரக்டர்களாக இருக்கிறார்கள் என்பது புலப்படும். இந்த 1,013 டைரக்டர்கள் யார் என்று கவனித்தால் அவர்களில் 800க்கு மேற்பட்டவர்கள் 20 குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவோ அவர்களுக்கு உட்பட்டவர்களாகவோ இருப்பதைச் சுலபத்தில் காணலாம். இந்த 20 பெரிய திமிங்கலங்கள் பாங்குகளையும் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளையும் நிர்வகிப்பதன் மூலமாகவும், நம் தொழில், பொருளாதாரத்தின் தன்மையையும், வேகத்தையும், போக்கையும் நிர்ணயித்து நிர்வகிக்கும் சக்தி பெற்றவர்களாக விளங்குகிறார்கள்!

என்று அசோக்மேதா சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார். இன்றைய நிலை, அதனைவிட மோசம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் இதனை மாற்றி அமைத்திடத்தக்க முறைகளை நமக்கு இந்திய அரசியல் சட்டம் போதுமான அளவுக்கு அளிக்கவில்லை. எனவேதான் எங்களுக்கு ஏது பொங்கல்? என்று ஏழை கேட்கும் நிலை நீடிக்கிறது.

ஆனால் தம்பி! மனம் வெதும்பி இதுபற்றிக் கூறிய கவிஞரே, பிறகோர் இடத்தில்,

தைத் திருநாள் வருகை பார் தம்பி! வெல்லத்
தமிழ் உள்ளம் தனில் இன்ப வெள்ளம் சேர்க்கும்
மெய்த்திருநாள் மேன்மை பார்! அறிவை வாட்டி
மெலியவைக்கும் தேவையற்ற பண்டிகைகள்
பொய்த்தினிமேல் போய்விடும்! பார் வானில் பாயும்
புலிச்சின்னப் புகழ் மன்னன் கரிகாலன்றன்
கைத்திருவாள் வெளிச்சம்போல மின்னுகின்ற
கதிர்மணியின் குவியல் பார்! கரும்பைப் பார்!

என்று எழுச்சியுடன் பாடுகிறார். தமிழ் கற்றுணர்ந்தவர்கள் அனைவருமே இதுபோலத்தான்; சமூகத்தில் மூட்டிவிடப் பட்டுள்ள கேடுகளைக் கண்டு மனம் வெதும்பினாலும், பொங்கற் புதுநாளை மட்டும் தமிழர் தமது திருநாளாகக்கொள்ள வேண்டும் என்பதனை எடுத்துரைத்து வருகின்றனர். காரணம் மற்றைய பல விழாக்கள்,

கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

நாம் வந்த வழி அது.

இங்குத் துன்பம், அங்கு இன்பம் கிட்டும்.

என்ற எண்ணங்களுக்கு முதலிடம் தருவன. தமிழர் திருநாளாம் பொங்கற் புதுநாள் தனித்தன்மை பெற்றது.

உழைப்பே செல்வம்
உழைப்பே உயர்வு
உழைப்பின்றி உலகு இல்லை!

என்பன போன்ற நற்கருத்துக்களைத் தருவதாக அமைந்திருக்கின்றது.

பணம் படைத்தவர்கள், அது எந்த வழியிலே கிடைத்தது என்றாலும் சமூகத்திலே முன்னிடம் பெற்றுவிடுவது காண்கிறோம். அந்தப் பணம் பண்பை அழிப்பதுடன், சமூகத்தில் பல முறைகேடுகளை மூட்டிவிடுகிறது.

தம்பி! செல்வச் சீமானின் மகன் - இளைஞன் - எப்படி நடந்துகொள்கிறான் என்பதனை நன்கு அறிவாய் அல்லவா? அறிந்திருக்கிறாய் என்றாலும், இதோ நான் தந்துள்ள காட்சியையும் பார்த்திடு - சமூகத்தின் நிலை நன்கு புரிந்திட வாய்ப்புக் கிடைக்கும்.

இடம்:- லிலி கிளப்

இருப்போர்:- கண்ணாயிரம், கோடீஸ்வரன், காதர் மற்றும் பல நண்பர்கள்.

நடப்பது: லிலி கிளப், சீமான் வீட்டுப் பிள்ளைகள் பொழுது போக்குவதற்காக உள்ள இடம். ஆகையால் அங்குச் சீட்டாட்டம் ஒரு புறம், பூப்பந்தாட்டம் மற்றோர் புறம், ஆங்கில முறை நடனம் வேறோர் புறம், விருந்து இன்னோர் புறம் இப்படி இருக்கிறது.

பூந்தோட்டப் பக்கமாகப் போடப்பட்ட நாற்காலி களிலும் சாய்வு நாற்காலிகளிலும் உட்கார்ந்துகொண்டு கண்ணாயிரமும் அவன் நண்பர்கள் சிலரும் சிகரெட் புகைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

காதர்: எனக்கு வர வர, இந்தக் கிளப் பிடிக்கவில்லை. ஒரே களியாட்ட மயமாகிவிட்டது. இதிலேயே நாம் முழுகி விடுகிறோம். உலகிலே மனிதர்களாகப் பிறந்தவர்கள், ஏதாவது ஒரு பயனுள்ள வேலையைச் செய்தே ஆக வேண்டும். கடினமாக உழைக்க வேண்டும். . .

கோடீஸ்வரன்: எந்தப் புத்தகத்திலே படித்தாயப்பா இதை?. . .

காதர்: புத்தகம் கிடக்கட்டும், நமக்கென்று சிந்திக்கிற சக்தி இருக்கிறதே. அது போதுமே, இதைப் புரிந்துகொள்ள. . .

கண்: என்ன சொல்கிறார், காதர்!

கோடீ: கடினமாக உழைக்கச் சொல்கிறார்.

கண்: உழைக்கட்டும், உழைத்தே தீரவேண்டியவர்கள். . .

காதர்: எல்லோருக்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன். உழைக்காமல் வாழ்பவன் சமூகத்தைச் சுரண்டிப் பிழைக்கிறான் என்றுதான் பொருள். அதாவது. . .

கண்: புரிகிறது, புரிகிறது! வியாக்யானம் வேண்டாம். தத்துவம் பேசுகிறாய். தாராளமாகப் பேசு. . . தேவையுள்ளவர்கள் அதன்படி நடந்துகொள்ளட்டும். . . .

கோ: அட, உனக்கும் சேர்த்துத்தான் சொல்கிறான் காதர், தெரியவில்லையா? வெறும் பொழுதை ஓட்டிக்கொண் டிருக்கிறாயாம். . . கடினமாக வேலை செய்ய வேண்டுமாம்...

கண்: ஏதோ எனக்கென்று கொஞ்சம் சொத்து இருக்கிறது பிரதர்! நான் ஒன்றும் அலைந்து திரியவேண்டிய அவசியம் இல்லை. நிம்மதியாக வாழ எனக்கு வசதி இருக்கிறது. ஆண்டவன் அப்படி ஒன்றும் என்னை உழைத்து உருக்குலையும்படியான நிலையிலே விட்டுவைக்கவில்லை. வாழ்வதற்காக வதைபடு என்று என் தலையில் ஒன்றும் எழுதியில்லை. . .

(காதர், அந்தப் பேச்சுக் கேட்டுத் திகைத்துக் கிடக்கிறான். இரண்டோர் விநாடி கழித்து விடைபெற்றுக் கொண்டு செல்கிறான். அவன் மறையும் வரையில் பார்த்துக்கொண்டிருந்து விட்டு)

கோ: கண்ணாயிரம்! காதர் யார் தெரியுமல்லவா உனக்கு? கான் சாகிப் சாதுல்லாவுடைய பேரன். கான் சாகிப்புக்கு மலாயாவிலே தோட்டக்காடு நிரம்ப. அந்த வருவாய் வந்து கொண்டிருந்தது. அதை வைத்துக்கொண்டு சுல்தான் - அதாவது காதருடைய அப்பா, இவனைச் செல்லமாகத்தான் வளர்த்து வந்தார். போன வருஷம் ஒரு பெரிய ஆபத்து; சுல்தான் மறு க-யாணம் செய்துகொண்டார்; குழந்தை பிறந்திருக்கிறது; காதர் வருத்தப்படாமலிருக்க முடியுமா?. . . அப்பனோடு சண்டை! சின்னம்மா சாகசக்காரி - அந்தச் சண்டையை அதிகமாக்கி விட்டுவிட்டாள். காதர் இப்போது சொந்தத்திலே மாவு மில் நடத்துகிறான்.

கண்: அப்படிச் சொல்லு. . . . அதனால்தான் வரட்டு வேதாந்தம் பேசுகிறானா? நாம் சற்று பச்சென்று இருப்பது அவனுக்கு இப்போது பிடிக்கவில்லை. . . . இவனுக்குப் பணக் கஷ்டம்; அந்தச் சமயத்திலே, நான் பணத்தைத் தாராளமாகச் செலவழித்து, ஆனந்தமாக இருப்பதைக் கண்டு இவனுக்கு மனம் பொறுக்கவில்லை. . . .

கோ: என்ன கண்ணாயிரம்! இதுதான் சாக்கு என்று என்னமோ பிரமாதமாகப் பேசுகிறாய் உன் தாராளச் செலவுபற்றி.

கண்: (வேடிக்கையாக) அடப்பாவி! நேற்று மட்டும் பால் டான்சுக்காக ஆயிரம் செலவிட்டேனே. . .

கோ: உன் அந்தஸ்துக்கும் செல்வத்துக்கும் இது ஒரு பிரமாதமா? நேற்றுத் தோன்றியவர்களெல்லாம் ஷெவர்லேயில் போகும்போது, நீ ஏன் ரோல்ஸ் ராயில் போகக்கூடாது. சாதாரணப் பயலெல்லாம் "ரேஸ்' கிளப்பிலே ஆயிர ரூபாய் நோட்டை அலட்சியமாக வீசி எறிகிறான். நூறு ரூபாய் நோட் எடுப்பதென்றால் உனக்குக் கை நடுக்கம் எடுக்கிறது! உன் அந்தஸ்துக்கு ஏற்றபடியா உடை இருக்கிறது. ட்வீட் இல்லாமல் டாக்டர் தாமோதர் வெளியே கிளம்புவதில்லை; உன் உடையைப் பார்! செச்சே! என்ன இருந்தாலும் நீ இப்படிச் செல்வ நிலைக்குக் குறைவாக, மட்டமாக, வாழ்க்கை நடத்தக்கூடாது. மதிக்க மாட்டார்கள். என்னடா மகாப் பிரமாதம்! அவன் பெரிய புள்ளியின் மகன் என்கிறீர்கள்; அவனுந்தான் 555 பிடிக்கிறான். நானுந்தான் அதே சிகரட்! என்று ஒரு நாள் ஆபிரகாம் சொன்னான். வெட்கமாகத் தான் இருந்தது எனக்கு. நீ கஞ்சன்தான் வரவர. . . . .

(கோடீஸ்வரன் பேசிக்கொண்டிருக்கையில், கண்ணாயிரம் தன்னை நோக்கி வரும் ஒருவனை உற்றுப் பார்த்தபடி இருக்கிறான். கோடீஸ்வரனை பேச்சை நிறுத்தும்படி ஜாடை காட்டிவிட்டு.)

கண்: இரு கோடி! யாரோ, தெரிந்த ஆசாமிபோல இருக்குது... ஆமாம். . . அடே, என்கூடப் படிச்ச பய. . . இவ்வளவு சீக்கிரமா கிழவனாகிவிட்டானே.

(அடையாளம் கண்டுபிடித்த களிப்பில் அவன், கண்ணாயிரம் அருகே வந்து நிற்கிறான். கண்ணாயிரம் அவனைக் கட்டிப் பிடித்தபடி, களிப்புடன்)

கண்: வாடா, வாடா, வள்ளியப்பா! பார்த்துப் பல வருஷமாகி விட்டது. ஆமா, என்னடா இதற்குள்ளே கிழவனாயிட்டே . . . தலை நரைச்சி இருக்கு, உடல் இளைச்சி இருக்குது, முகம் கருத்துக் கிடக்குது . . . எங்கே இருக்கறே? . . . என்ன வேலை? . . . இங்கே எப்ப வந்தே? . . .

வள்: கண்ணாயிரம்! நல்லவனப்பா நீ எங்கே அடையாளம் தெரியாமல் இருக்கறியோன்னு பார்த்தேன். அடையாளம் தெரிஞ்சாலும் அலட்சியப்படுத்திவிடுவயோன்னுகூடப் பயந்தேன். . .

கண்: இடியட்! நான் அப்படிப்பட்டவனா?. . .

வள்: நீ நல்லவன்தான் கண்ணாயிரம்! ஆனா, உன்னோட அந்தஸ்து. . .?

கண்: அது பொல்லாதது என்கிறயா?. . . வள்: அப்படியும் சொல்லவில்லை. . . . ஆனா உன்னோட அந்தஸ்துக்கு நீ என்னோடு சரி சமமாப் பழக முடியா தேன்னுதான் பயப்பட்டேன். நான் இந்த கிளப்பிலே கணக்குச் சரிபார்க்க வந்திருக்கிறேன் - ஆடிட்டர்.

கோ: புதுசா ஆடிட்டர் வரப்போறதாகச் சொன்னாங்க. . . கணக்கு சுறுசுறுப்பா எழுதியபடி இருந்தாங்க. . . நீங்கதான் ஆடிட்டரா?

வள்: ஆமாம் சார்! நான்தான் ஆடிட்டர்.

கண்: டே ஆடிட்டர்! நீ கணக்கு பரீட்சையிலே மூன்று தடவை "கோட்' அடிச்சவனாச்சே நீ எப்படிடா ஆடிட்டர் ஆகிவிட்டே? . . . . போகட்டும் சம்பளம் என்ன? கலியாணம் ஆகிவிட்டதா? குழந்தைகள்?

வள்: குழந்தைகள் நாலு பெண்ணு, இரண்டு ஆண் அப்பா. . . சம்பளம் 300 . . .

கண்: பரவாயில்லை . . . சௌக்கியமா இருக்கிறியா?. . . அதுபோதும். ஆமா இப்படி ஏன் கருத்துப்போய் இருக்கே?. . .

வள்: பெரிய குடும்பம் கண்ணாயிரம். என் மனைவிக்கு ஆஸ்த்மா, அம்மாவுக்கு டி. பி., கொழந்தைகள் ஆறு, கிடைக்கிற சம்பளம் 300 எப்படி சுகமா இருக்க முடியும்? கஷ்டந்தான் கவலைதான். . .

கண்: போடா போக்கிரி! நீ எப்பவுமே இப்படித்தான். பெரிய பாரமூட்டையைத் தூக்கிச் சுமப்பவன்போல மூக்காலே அழுகுற வாடிக்கை. . . .

வள்: உனக்கு என்னப்பா, குத்தலும் குடைச்சலும். பெட்டியிலே பணம் ஏராளமாக. வட்டி சட்டி மூலம் அதை வளர்க்கச் சரியான தந்தை இருக்கிறார். நீ சுத்தலாம் ஆனந்தமாக. விலை பற்றிக் கவலை இல்லாம, சாமான்களை வாங்கலாம்; காலத்தைப் பத்தின கவலை இல்லாம, வேடிக்கையாக இருக்கலாம், எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்!

கோ: வாயைப்போய் கழுவிட்டு வாங்க ஆடிட்டர்! நம்ம கண்ணாயிரத்தைப் போயி, எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்னு சொல்லிய வாயைக் கழுவியாகணும். ஆசாமி ஒரே கஞ்சத்தனம்.

கண்: சும்மா இரு கோடி. வள்: எப்படியோ சொத்து சேர்ந்துவிட்டது, சுகமாக வாழ முடியுது. மற்றவர்களைப்போலக் கஷ்டப்பட்டுச் சேர்த்திருந்தா உனக்கும் தெரியும் பணத்தோட அருமை. சீமானுக்கு மகனாப் பிறந்தே - இப்ப, ஆனந்தம் என்கிற அம்சதூளிகா மஞ்சத்திலே புரள முடியுது. உனக்கு ஊர்லே உள்ள கஷ்டம் என்ன தெரியும்?. . . . நான் வந்ததும் விசாரித்துத் தெரிந்துகொண்டேனே. உன் கவலை பூராவும் விதவிதமான களியாட்டங்களைத் தேடுவதிலேதானே. . .

கண்: போடா பொல்லாத போதகாசிரியனாகிவிட்டே! டே! வள்ளி! வா ஒரு நாளைக்கு வீட்டுக்கு. . .

கோ: கண்ணாயிரத்தோட அப்பா இல்லாதபோது. . .

கண்: ஒரு நாளைக்கு என்ன! வாயேன் இப்பத்தான். . .

வள்: வீட்டுக்குத்தானே. . . .

கண்: பின்னே காட்டுக்கா கூப்பிடுவேன். . . .

கோ: என்ன, பிளான் மாறுது. நாம போட்டிருக்கிற திட்டம். . . . .

(ஏதோ ஜாடை காட்டுகிறான்)

கண்: ஆமா. . . . மறந்தே போயிட்டேனே. . . . . பிரதர்! நாளைக்குக் கட்டாயம் வரணும். . . . இப்ப ஒரு அவசரமான வேலை.

வள்: போய் வா கண்ணாயிரம். நீ இவ்வளவு அன்பாகப் பேசினயே, அதுபோதும் எனக்கு. மற்றதுகள் கொஞ்சம் பணம் கைக்கு ஏறியதும், மண்டைகனம் கொண்டுவிடும், நீ நல்லவன். . .

கண்: நாளைக்குக் கட்டாயமா வர வேண்டும். . .

(கண்ணாயிரமும் கோடீஸ்வரனும் கிளம்புகிறார்கள்.)

(திடுமென்று அங்கு வந்த கண்ணாயிரமும், வள்ளியப்பனும் அளவளாவுவதைப் பார்த்துக்கொண் டிருந்த காதரும் வேறோர் நண்பனும் அவர்கள் போவதைப் பார்த்தபடி நின்றார்கள்.)

நண்பன்: மனுஷ ஜென்மமெடுத்தா இப்படி எடுக்க வேண்டும்; நாம் இருக்கறோம் நாய்படாத பாடுபட்டுக்கொண்டு, அதோ பார் கண்ணாயிரத்தை; மகராஜன், புண்யசாலி; போன ஜென்மத்திலே என்ன பூஜை செய்தானோ, இந்த ஜென்மத்திலே இவ்வளவு அந்தஸ்த்தோடு வாழறான். . . கடவுள் கடாட்சம் மோட்டாரைப் பார்! படகு போல!!

காதர்: கிடக்கிறான். தள்ளப்பா. எதுக்காக அவனைப் புகழணும்? மோட்டாரிலே சவாரி செய்கிறானாம். அதிலே இருக்கிற ஒரு சிறிய ஆணியை விலை கொடுத்து வாங்கத் தேவைப்படும் பணத்தைக்கூட அவன் சம்பாதித்ததில்லை - சம்பாதிக்க முடியாது - வழி கிடையாது. என்னமோ பணக்காரனுக்குப் பிள்ளையாகப் பிறந்துவிட்டான், அகப்பட்டதை வைத்துக்கொண்டு ஆடறான் ஆட்டம். இது ஒரு பெரிய கீர்த்தியா? இவன் தன்னுடைய திறமை யாலும், உழைப்பாலும் சேர்த்ததா இந்தச் சொத்து, இவனைப் புகழ. அவன் மட்டும் சீமான் சிங்காரவேலுக்கு மகனாகப் பிறக்காதிருந்தா, அரை ரூபா சம்பாதிப்பானா அன்றாடம்? விரலை மடக்கு அவனுக்கு பிழைக்கும் வழி இன்னது தெரியும்னு. என்ன வேலைக்கு இவன் இலாயக்கு? கூ- வேலைகூடச் செய்ய முடியாதே. உடலிலே அதுக்கு வலிவு ஏது? என்ன கண்டுவிட்டே அவனைப் புகழ. பிழைக்க வகை இல்லாதவன். அப்பன் சேர்த்து வைத்திருப்பதைச் செலவழிக்கிற வீண் ஜம்பக்காரன் என்றுதான் சொல்லுவேன்.

(சிகரெட் எடுத்து பற்ற வைக்கிறான். அதை நண்பன் பார்த்துவிட்டு.)

நண்: அமர்க்களமாகப் பேசிவிட்டு, "அக்பர்ஷா' பத்த வைக்கறே நீ. அவனைப் பார்! தங்கமுலாம் போட்ட குழாயிலே 555! காதர்: அது மட்டுந்தானா! பூப்போட்ட கிளாசிலே பொங்கி வழியப்போகுது போதை. நண்: அந்தப் பழக்கம்கூட உண்டா? காதர்: பணம் வேறே எதற்கு இருக்குது?. . . காலத்தைச் செலவிடணுமே! வேறே வழி, நேரே அதுக்குத்தான் ஆசாமி போறது. . .

நண்: பணக்காரன். ஒஸ்திச் சரக்குச் சாப்பிடுவான். . . காதர்: அடச் சே, போ! சுத்தப் பஞ்சப் பயலா இருக்கறே. . .

(காதர் கோபமாக அவ்விடம் விட்டுச் செல்கிறான்)

தம்பி! இப்படிப்பட்ட சீமான் மகன் கொண்டாடும் விழா அல்ல பொங்கற் புதுநாள். சமூகத்தின் கோணல்களை நிமிர்த்தியாக வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட உன்போன்றாருக்கென்றே அமைந்துள்ள விழாவாகும்.

கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தக்க முறையிலே பயன்படுத்தினால், சமூகத்தை நிச்சயமாகத் திருத்தி அமைத்திடலாம்.

காலத்தை வீணாக்காமல் சமூகத் தொண்டாற்ற ஓர் துடிப்பு உனக்கு உண்டு என்பதனை உணர்ந்த உன் அண்ணன் இன்று உனக்குக் கனிவு நிரம்பிடும் வாழ்த்தினை அளிப்பதுடன்,

உன் இல்லத்துள்ளார் யாவருக்கும் வாழ்த்துக் கூறுவதுடன், நாடு வளம்பெற, சமூகம் சீர்பெற, சமதர்மம் மலர்ந்திட பாடுபடுவதற்கான உறுதியினை இன்று பெற்றிடுக என்றும் கூற விரும்புகிறேன்.

ஒரு நிமிடம்கூட வீணாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் கூறுவதற்குக் காரணம், தம்பி! எங்கோ படித்ததாக நினைவு. ஒரு நிமிடத்தில், விண்ணிலிருந்து 6,000 விண் கற்கள் விழுகின்றன; பூமி தன்னைத்தானே 950 மைல் வேகத்தில் சுற்றுகிறது; 100 பேர் இறந்துபடுகின்றனர்; 114 குழந்தைகள் பிறக்கின்றன. 34 திருமணங்கள், 16 விவாக விடுதலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன; 68 மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதாக.

காலம் அத்துணை மதிப்பு வாய்ந்தது. கடமை உணர்ந்த நீ, காலத்தையே கனியச் செய்திடும் ஆற்றல் பெற்ற நீ, தமிழக அரசியலையே மாற்றி அமைத்த நீ உன் கடமையைச் செய்வதிலே கண்ணுங் கருத்துமாக இருப்பாய் என்பதனை நான் அறிவேன். எனினும் அண்ணன் என்ற உரிமையுடன் உனக்கு அந்தக் கடமையை நினைவுபடுத்துவது எனக்கோர் மகிழ்ச்சி தந்திடுவது போல உனக்கும் மகிழ்ச்சி தந்திடும் என்பதிலே ஐயப்பாடு இல்லை.

என்னைப் பொறுத்தமட்டிலே தம்பி, நலிவைத் தாங்கிக் கொண்டபடி என்னால் இயன்றதைச் செய்துகொண்டு வருகின்றேன்.

தாத்தாவுக்கு ஏன் கைவலி தெரியுமா?. . . . எழுதுவதாலே! - என்று என் பேரன் மலர்வண்ணன் - என் மகன் டாக்டர் பரிமளம் பெற்ற செல்வம் - கூறுகிறான். உண்மைதான்! வலி இருக்கத்தான் செய்கிறது - ஆனால் தம்பிக்கல்லவா கடிதம் எழுதுகிறேன்! அது தனியானதோர் சுவையைத் தருகிறது.

மகிழ்ந்திரு!

விழா நடத்திடு!

வேலை மிகுதி இருக்கிறது என்ற நினைவுடன்.

அண்ணன்,

12-1-69

 


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai