அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 9

தூத்துக்குடி திராவிடக்கழக மாநில மாநாடு
1948-ஆம் ஆண்டில் பெரியார் அவர்கள் தூத்துக்குடியில் திராவிடக் கழக மாநில மாநாட்டைக் கூட்டினார்கள். அந்த மாநாட்டிற்குப் பெரியார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அந்த நேரம் பெரியார் அவர்கள் அறிஞர் அண்ணாவிடம் வெறுப்புணர்ச்சிக் கொண்டு, அண்ணாவைப் புறக்கணித்து வந்த நேரம். புரட்சிக் கவிஞருக்குப் பண முடிப்பு தந்தது, எப்பொழுதும் கறுப்புச்சட்டையைப் போட மறுத்தது, 1947 ஆகஸ்டு 15-ம் நாளை மகிழ்ச்சி நாளாகவே கொண்டாடச் செய்தது, கொள்கைப் பரப்புப்பணிகளுக்கு மிகவாகச் செல்லாமலிருந்ததது ஆகியவை அண்ணாவிடம் பெரியாருக்கு வெறுப்புணர்ச்சி ஏற்படக்காராணமாக இருந்தவையாகும். பெரியார் கடுமையான சினங்கொண்டிருப்பதன் காரணமாக மாநாட்டிற்குப் போகலாமா? வேண்டாமா? என்ற ஐயப்பாட்டு எண்ணத்தோடு அண்ணா இருந்து வந்தார்கள். அறிஞர் அண்ணாவும், நானும் காஞ்சீபுரத்திலிருந்து புறப்பட்டு, மாநாட்டில் கலந்து கொள்வதைப் பொறுத்து அரைமனதோடு திருச்சி போய்ச் சேர்ந்தோம். திருச்சியில் தோழர ஈ.வெ.கி.சம்பத் வந்து தங்கியிருந்தார். பல சூழ்நிலைகளையும் ஆராய்ந்து பார்த்ததற்குப் பிறகு, மாநாட்டிற்குச் சென்று கலந்து கெள்ளவேண்டாம் என்று மூவரும் முடிவு செய்தோம். அறிஞர் அண்ணாவின் அரிய உரையைக் கேட்கும் பேராவலோடு மாநாட்டில் குழுமியிருந்த பெரும்பாலான மக்களுக்கு அண்ணா வருகை தராதது, பெருத்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் வாட்டத்தையும் அளித்தது. ஆனால் பெரியாருக்கும், அவரோடு நெருங்கியிருந்த கழகத்தொழர்களுக்கும் அந்தச் செயல் பொல்லாத சினத்தைப் பொங்க வைத்தது.

ஈரோடு சிறப்பு மாநாடு
சில திங்கள் கழித்துப், பெரியார் அவர்கள் அறிஞர் அண்ணா அவர்களைத் தம் அன்பு வலைக்குள் மீண்டும் இழுத்துப போடவேண்டி, 1948-இல் ஈரோட்டில், திராவிடக்கழகத்தின் சிறப்பு மாநாடு ஒன்றினை, அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் கூட்ட ஏற்பாடு செய்தார். அறிஞர் அண்ணா அவர்களும் மாநாட்டில் கலந்து கொள்ள இசைவு அளித்தார். அந்த மாநாட்டை ஒட்டி நடைபெற்ற உர்வலத்தில்தான், அறிஞர் அண்ணா அவர்கள் அணி செய்யப்பட்ட, குதிரைகள் பூட்டப்பட்ட, கோச்சுவண்டியின் முன்னால் நடந்தே சென்றார்கள். பட்டுக்கோட்டை கே.வி.அழகர்சாமி கலந்து கொண்ட இறுதி மாநாடு அதுதான். தமிழ்த்தென்றல் திரு.வி.க. கலந்துகொண்டு மாநாட்டில் திராவிடக் கழகத்தின் முன்னணியினர் பலரும் கலந்து கொண்டனர். அறிஞர் அண்ணாவின் விருப்பதிற்கிணங்க, நான், பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களின் திருவுருவப்படத்தைத் திறந்து வைத்துச் சிறப்புரை ஆற்றினேன். கழகத்தின் பெட்டி சாவியை அண்ணாத்துரையிடம் கொடுத்துவிட்டேன் என்ற பெரியார் அறிவித்தது அந்த மாநாட்டில்தான்.

பெரியாரின் திருமணம் என்ற பெயரால் ஒரு ஏற்பாடு
1949-ஆம் ஆண்டில், பெரியார் அவர்கள், இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த திரு இராசகோபாலச் சாரியரரைத் திருவண்ணாமலையில் தனியாகச் சந்தித்துப் பேசினார், தம் சொந்தப் பிரச்சினை குறித்துப் பேசினேன் என்ற செய்தித்தாள்களில் செய்தி வெளியிட்டார். பின்னர் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும், பண்ணுருட்டியில் நடைபெற்றப் பொதுக்கூட்ட நிகழச்சியிலும் கலந்துகொண்ட அறிஞர் அண்ணா அவர்கள், மேடையிலேயே பேசும் போது, நேருக்கு நேராக திரு.இராசகோபாலாச் சாரியாரை ஏன் சந்தித்தீர்கள்? என்ன நோக்கம்? தங்களுக்கு என்று சொந்தப் பிரத்சினை என்ன இருக்க முடியும்? இயக்கத்திற்கு அப்பாற்பட்டதாக எந்த ஒரு பிரச்சினையும் திராவிடக் கழகத் தலைவராக இருக்கும் தங்களுக்கு இருக்க நியாயமில்லையே! என்று கேட்டார்கள். பெரியார் அவர்கள் இரண்டு இடங்களிலும் எந்த ஒரு விளக்கமும் கூறவில்லை.

ஆனால், சில நாட்கள் கழித்துப் பெரியார் அவர்கள், இயக்கத்தின் பாதுகாப்புக் கருதியும், எதிர்கால நலங்கருதியும் திருமணம் என்ற பெயரால் இரு ஏற்பாடு செய்யப்போகிறேன். எனக்கு உதவியாளராகவும், எனது நம்பிக்கைக்கு உரியவராகவும், இருந்துவரும் மணியம்மையாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். இதனைத் தடுக்கவே அல்லது எதிர்க்கவே எவருக்கும் உரிமையில்லை என்னும் கருத்துப்பட அறிக்கையொன்று வெளியிட்டார்கள்.

அந்த அறிக்கை இயக்கத் தோழர்கள் பெரும்பாலானோர்க்கும் பேரதிர்ச்சியையும், பெருங்குழப்பத்தையும், பெருத்த வருத்தத்தையும் அளித்தது எல்லோரும் செய்வது என்ன என்று தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் அறிஞர் அண்ணா அவர்கள், பெரியாரின் பெர்லின் பயணம்! என்னும் தலைப்பிட்டு, நீண்டதொரு கட்டுரையைத், திராவிடநாடு இதழில், பெரியாரின் போக்கை எதிர்த்தும், அவரின் திருமணம் என்ற ஏற்பாடு தவறானது என்பதைச் சுட்டிக்காட்டியும், கழகத்தின் நலங்கருதி அந்த ஏற்பாட்டைப் பெரியார் கைவிட வேண்டும் என்று வற்புறுத்தியும் வெளியிட்டார்கள்.

அறிஞர் அண்ணாவின் அந்தக் கட்டுரை கழகத் தோழர்கள் பலருக்கும் ஆறுதலையும், விளக்கத்தையும், தெளிவையும் தந்தது. திராவிடக் கழகத்தின் முன்னணியினர் - செயல்வீரர்கள் பலரும் பெரியாரின் போக்கை எதிர்த்தும், அறிஞர் அண்ணாவின் கருத்தை ஆதரித்தும் நாட்டின் நாலாப் பக்கங்களிலிருந்தும் முடங்கல்கள் எழுதி திராவிடநாடு அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அப்பொழுது நான் அண்ணாவிற்குப் பக்கத்துணையாக இருந்து, திராவிடநாடு இதழில், கட்டுரைகளை வெளியிடும் பணியில் ஈடுபட்டிருந்தேன். பெரியாரின் போக்கை எதிர்த்து முடங்கள் எழுதியோரின் பெயர்களைத் தொகுத்து, அவற்றைப் பட்டியலாகத் திராவிடநாடு இதழில் வெளியிட்டேன். அந்தப் பட்டியலுக்குக் கண்டனக் கணைகள் என்ற தலைப்பை எடுத்துவிட்டுக் கண்ணீர்த் துளிகள் என்று போடும்படிக் கூறினார். நான் ஏன் என்று கேட்டேன். நம்மை ஆளாக்கிவிட்ட பெரியாரைக் கண்டிக்கும் வயதோ-உரிமையோ-தகுதியோ நமக்கு இல்லை. நாம் கண்டித்தால் நம்மீது நாட்டு மக்களுக்கு அனுதாபம் ஏற்படாது. பெரியாரின் போக்கு கண்டு, நாம் வருந்திக் கண்ணீர் விடுகிறோம் என்றால்தான், நாடு நம்மை மதிக்கும். நம்மீது அனுதாபம் வைக்கும்; நம்மை ஆதரிக்கும் என்றார். அறிஞர் அண்ணாவின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, அண்ணா அவர்கள் கூறியபடியே, கண்ணீர்த் துளிகள் என்ற தலைப்பின் கீழ்ப் பெயர்களின் பட்டியலை வெளியிட்டேன்.

அப்பொழுது பெரியார் அவர்கள் மணியம்மையாரோடு ஏற்காட்டிற்குப் போய்த் தங்கிவிட்டார்கள். பெரியாரிடம் வேண்டுகோள் விடுக்க அறிஞர் அண்ணா அவர்களும், நானும், பிற முக்கிய நண்பர்களும் சேர்ந்து, தோழர் கே.கே.நீலமேகம் தலைமையில் ஒரு தூதுக்குழுவினையும், தோழர் எஸ்.குருசாமி தலைமையில் மற்றொரு தூதுக்குழுவினையும் ஏற்காட்டிற்கு அனுப்பிவைத்தோம். அவற்றால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. 1949 ஆகஸ்டு 9-ஆம் நாள், பெரியார் மணியம்மையாரைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டுவிட்டார் என்ற செய்தி எல்லா ஏடுகளிலும் வெளிவந்துவிட்டது. நம்பிக்கையெல்லாம் போய் நாங்கள் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றோம்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோற்றம்
பெரும்பாலான கழகத்தவர்கள் அடுத்து எடுக்கக் கூடிய முடிவு பற்றிப் பலவகையான கருத்துக்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். நான், தோழர் ஈ.வெ.கி.சம்பத், தோழர் கே.கே.நீலமேகம், தோழர் சேலம் ஏ.சித்தையன், இளவல் செழியன் போன்றவர்கள் நாம் பெரும்பான்மையோர் வலிவைப் பெற்றிருப்பதால், திராவிடக் கழகம், அதன் பெயரில் உள்ள சொத்துக்கள், விடுதலை நிறுவனம் ஆகிய அனைத்தையும் கையகப்படுத்தி நாமே நிருவாகப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று பல நாட்கள் வாதிட்டு வந்தோம். எங்களுடைய உணர்வையோ, கருத்துக்களையோ, திட்டங்களையோ அறிஞர் அண்ண அவர்கள் அறவே ஏற்றுக்கொள்ளவில்லை. திராவிடக் கழக அமைப்பையும், சொத்துக்களையும் அப்படியே பெரியாரிடத்தில் விட்டுவிட்டு, புதிய கழகத்தைப் புதிய கொடியுடன், புதிய அமைப்புடன் துவக்கலாம் என்றும், பெரியாரோடு மோதுதலைத் தாம் அறவே விரும்பவில்லை என்றும், பெரியாரிடம் கற்றுக்கொண்ட கொள்கைகளையும், குறிக்கோள்களையும் காப்பாற்றி வளர்ப்பதுதான், நம்முடைய கடமையாக இருக்கவேண்டும் என்றும், அண்ணா அவர்கள் வாதிட்டு வந்தார்கள். எந்த முடிவு எடுப்பது என்பதில் தெளிவு ஏற்படாமலேயே பல நாட்கள் கடந்தோடிவிட்டன. பெரும்பாலான கழகத் தோழர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிக் கிடந்தனர். இறுதியில், அண்ணாவிடம் வாதிட்டு வந்த நாங்கள் எல்லோரும் வேறு வழியில்லாமல் அண்ணாவின் கருத்தை முழு மனதோடு ஏற்றுக்கொண்டோம். 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள், சென்னை பவளக்காரத் தெருவில், திரு.திருவொற்றியூர் சண்முகம் அவர்கள் வீட்டின் மாடிப் பகுதியிலுள்ள கூடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கழகம் துவக்கப்படவேண்டியதன் இன்றியமையாதக் காரணகாரிய விளக்கங்கள் அடங்கிய நீண்ட அறிக்கையைக் குழுமியிருந்த கழக முன்னணியினரிடம் படித்துக் காட்டி, நிறைவேற்றி வைக்கும் பொறுப்பை, அறிஞர் அண்ணா அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்கள். அதனை வரலாற்றுச் சிறப்புமிக்க பேறு படைத்த ஒரு செயலாக எண்ணி இன்றும் இறும்பூதெய்துகின்றேன்.
(நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai