அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 8

திராவிடக் கழகத் திருச்சி மாநாடு
1945-ல் திருச்சியில் பெரியார் தலைமையில் திராவிடக் கழக மாநாடு நடைபெற்றது. அப்போழுது அறிஞர் அண்ணா அவர்கள் திராவிடக் கழகத்தின் மாநிலச் செயலாளர் ஆவார். அண்ணாவும், நானும் பத்து நாட்களுக்கு முன்பே சென்று மாநாட்டுப் பணிகளைக் கண்காணித்தோம். ஒரு சத்திரத்தை ஏற்பாடு செய்து கொண்டு, அங்குத் தங்கியிருந்தோம். அறிஞர் அண்ணா அவர்கள் பணிகளைச் சொல்வார். அவற்றை ஓடியாடிச் செய்து முடிக்கும் பொறுப்பினை நான் மேற்கொண்டேன். அந்த மாநாட்டில்தான், திராவிடக் கழகத்திற்கு என்று கருஞ்சட்டைப் படை அமைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதுரைக் கருஞ்சட்டை மாநாடு
1946-ல் மதுரையில் பெரியார் அவர்கள் தலைமையில் கருஞ்சட்டைப் படையினர் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் அறிஞர் அண்ணா சிறப்புரை நிகழ்த்தினார். இரண்டாவது நாள் பெரியாருக்குத் துணையாக என்னை இருக்கும்படி பணித்துவிட்டு, அண்ணா அவர்கள், அவசர வேலையொன்றின் காரணமாகக் காஞ்சீபுரம் சென்றுவிட்டார்கள். இரண்டாம் நாளில்தான், எதிர்க்கட்சியினரால், வைகையாற்று மணலில் நடைபெற்ற கருஞ்சட்டைப்படை மாநாடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. மதுரை எஸ்.முத்துவும், தொண்டர்கள் பலரும் காலையிலேயே கைது செய்யப்பட்டுவிட்டார்கள். நானும், சம்பத், திருவாரூர் தண்டவாளம், கே.வி.கே.சாமி போன்ற பல நண்பர்களும், கைகளிலே தடிகளை ஏந்திக்கொண்டு, பகல் 2 மணி வரையில் பந்தலைக் காத்து நின்றோம். எதிரிகளின் வலிவான தாக்குதல்களைச் சமாளிக்க முடியவில்லை. காவல்துறையினரின் பாதுகாப்பு அறவே இல்லை. அதிரிகள் பந்தலை இறுதியில் பகல் 2 மணிக்குக் கொளுத்திவிட்டார்கள். திராவிடக்கழகத் தொண்டர்கள் பலர் பெரும் தொல்லைகளுக்கும், துயரங்களுக்கும் ஆளானார்கள். பின்னர் ஆறு திங்கள்களுக்கு எந்தவிதப் பொது நிகழ்ச்சியும் திராவிடக் கழகத்தின் சார்பாக மதுரையில் நடைபெறவில்லை. எதிர்ப்புக்கிடையே எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்பட முடியவில்லை. பின்னர் மிக்கத் துணிவோடு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, அதில் நானும், பட்டுக்கோட்டை கே.வி.அழகர்சாமியும், மதுரை எஸ்.முத்துவும் கலந்து கொண்டு, கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.

புரட்சிக் கவிஞருக்குப் பாராட்டும் பணமுடிப்பும்
1946-ஆம் ஆண்டில், அறிஞர் அண்ணா அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்திப் பணமுடிப்பு வழங்க முயற்சியெடுத்தார்கள். நான் அறிஞர் அண்ணா அவர்களுக்குத் துணையாக இருந்து, பணம் திரட்டும் பணியிலும், விழவிற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டேன். திரு.டி.என்.இராமன், திரு.சலகண்டபுரம் ப.கண்ணன் ஆகியோர் உதவியாக இருந்தனர். பாராட்டுவிழா, சென்னை பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் நடபெற்றது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் விழாவைக் காண வருகை தந்தனர். விழவிற்கு நாவலர் ச.சோமசுந்தர பாரதியார் தலைமை தாங்கினார். தமிழறிஞர்களும், கவிஞர்களும், அரசியல் பெருமக்களும் விழாவில் பெருவாரியினராகக் கலந்துகொண்டு பாராட்டுரைகள் வழங்கினர். அந்த விழாவில் றிப்புரை ஆற்றுமாறு அறிஞர் அண்ணா அவர்கள் என்னையும் பணித்தார்கள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எந்த எந்தப் பொருள்கள் பற்றிப் புதுப்பாங்கோடும், புரட்சிகரமான போக்கோடும், புதுச் சிந்தனையோடும், புதுக் கருத்தோடும், அழகு-அருமை-பெருமை - புகழ் - வலிவு - வளம் - நலன் - நயம் சிறக்கப் பாடியுள்ளார் என்று பல்வேறு எடுத்துக்காட்டுக்கள் மூலம் விளக்கினேன். இறுதியில் அறிஞர் அண்ணா அவர்கள் சிறப்புரை ஆற்றும்போது, இருபதாம் நூற்றாண்டின் ஈடும் எடுப்பும் விழா எடுத்துள்ளோம். இது அவர் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டுக்கும் ஆற்றியுள்ள தொண்டுக்காக எடுக்கப்படும் நன்றிக்கடன் காட்டும் விழாவாகும். இன்றைய தமிழ் இலக்கிய உலகில், புரட்சிக் கவிஞர் அவர்கள் முகிலைக் கிழித்து எழுந்து நிற்கும் ஒரு முழுமதி போல் காட்சியளிக்கிறார். நண்பர் ஜீவானந்தம் பேசும்போது பாரதிதாசன் தொழிலாளர்களைப் பற்றிப் பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புரட்சிக் கவிஞர் எந்த எந்தத் துறைகளைப் பற்றியெல்லாம், எப்படியெப்படி எல்லாம், அழகாகவும் அருமையாகவும் பாடியிருக்கிறார் என்பதைத் தம்பி நெடுஞ்செழியன் அடுக்கடுக்காக இங்கே எடுத்து வைத்தார். நண்பர் ஜீவானந்தம் இனிமேலாவது அவற்றையெல்லாம் படித்துப் பார்ப்பது அவருக்கும் நலம் பயக்கும்; நாட்டிற்கும் நலம் பயக்கும்; என்று குறிப்பிட்டார்.

1947 ஆகஸ்டு 15
1947-ம் ஆண்டு, ஆகஸ்டு 15-ஆம் நாளாகிய இந்திய விடுதலை நாளைத், திராவிடக்கழகத் தலைவர் பெரியார் அவர்கள், துக்கநாளாக நாட்டினர் அனைவரும் கருத வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார்.

1947 ஆகஸ்டு 15-ம் நாளாகிய வெள்ளையர் ஆட்சி வெளியேற்றப்படும் அந்த நாள், இந்தியா முழு விடுதலை பெறும் அந்த நாள், மகிழ்ச்சிகரமான நாளே யொழிய, துக்ககரமான நாள் அல்ல என்பது என்னுடைய திட்டவட்டமான தெளிவான கருத்தாக இருந்தது. அந்த எண்ணத்தைப் பொள்ளாச்சி, கோவை, ஈரோடு, சேலம், வேலூர் பகுதிகளிலிருந்த கழகத் தோழரகளிடம் கலந்துரையாடல்கள் மூலம் தெரிவித்துவிட்டுச் சென்னை வந்தேன். அப்பொழுது நானும். இளவர் செழியனும் சென்னை செம்புதாஸ் தெரு, கார்னர் எஸ்டேட் மாளிகை, நான்காவது மாடி 30-ம் எண் அறையில் குடியுருந்தோம். அறிஞர் அண்ணா அப்பொழுதெல்லாம் சென்னைக்கு வந்தார், அந்த அறையில்தான் தங்குவார். நாட்கள் கணக்கில், வாரங்கள் கணக்கில் அவரோடு உரையாடி மகிழும் வாய்ப்பு அப்பொழுதெல்லாம் எனக்கும், செழியனுக்கும், ஏனைய நண்பர்களுக்கும் ஏற்பட்டது.

பெரியாரின் துக்கநாள் பற்றிய அறிக்கையைப் படித்த அறிஞர் அண்ணா அவர்கள் வேதனையோடும், வருத்தத்தோடும், வாட்டத்தோடும் என் அறைக்கு வந்தார். அந்த அறிக்கைப்பற்றி அண்ணா அவர்கள் எங்களோடு விரிவான முறையில் கலந்துரையாடல் நடத்தினார். 1947 ஆகஸ்டு 15-ம் நாள் இந்தியராகத்-திராவிடராகத் - தமிழராகப் பிறந்த எல்லோர்க்கம் மகிழ்ச்சிகரமான நாளேயாகும். அது எந்தவொரு வகையிலும் துக்க நாள் ஆகாது. வெள்ளையன் வெளியேறுவதில் நீதிக் கட்சியினராகிய - திராவிடக் கழகத்தினராகிய - சுயமரியாதைக்காரர்களாகிய நாமும் மகிழ்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்குக் கிடைத்திருக்கும் கடைசி நாள் ஆகஸ்டு 15-ம் நாள்தான். இந்த வாய்ப்பைவிட்டால், நாம் வெள்ளையனுக்கு அடிமைகள் - வெள்ளையனின் அடிவருடிகள் என்ற பட்டங்கள் என்றென்றம் நிலைத்து விடும் என்று எனக்கு முன்பே அத்தகையதொரு முடிவுக்கு வந்திருந்ததனால், கருத்து ஒருமைப்பாட்டின் அடிப்படையில், என் வாதங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, நானும் செழியனும் மற்ற நண்பர்களும் பெரியார் அறிக்கைக்கு எதிர்ப்பு அறிக்கை உடனடியாக விட்டுத் தீரவேண்டும் என்று வற்புறுத்தியதையும் ஏற்றுக்கொண்டு, ஆகஸ்டு 15 மகிழ்ச்சிக்குரிய நாள்தான் என்பதைத் தெளிவுபடுத்துவதற்கான காரண காரிய விளக்கங்களைத் தந்து, நீண்டதொரு அறிக்கையைத் திராவிடநாடு இதழில் வெளியிட்டார். திராவிட இயக்க வரலாற்றில், அந்த அறிக்கையானது மிகமிக முக்கியமானதொரு இடத்தைப் பெற்றதாகம். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கை எழுதப்பட்ட இடம், நானும் செழியனும் தங்கியிருந்த அந்தக் கார்னர் எஸ்டேட் 4-வது மாடி 30-ம் எண் அறையேயாகும்.

கருஞ்சட்டைப் படைக்குத் தடை
1948-ஆம் ஆண்டில், கறுப்புச் சட்டைப் படையைத் தடைசெய்து, அப்பொழுது சென்னை மாநில உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சுப்பராயன் அவர்களால் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. 1945-க்குப் பிறகு கறுப்புச் சட்டை அணிவதைப் பொறுத்துப் பெரியாருக்கும், அறிஞர் அண்ணாவுக்கும் சிறிது கருத்து வேறுபாடு இருந்தது. பெரியார், திராவிடக்கழகத்திலுள்ள எல்லோரும் கறுப்புச் சட்டை அணியவேண்டும், எப்பொழுதும் அணியவேண்டும என்றார். அறிஞர் அண்ணா அவர்கள கறுப்புச் சட்டைப்படை வீரர்களாகத் தம்மைப் பதிவு செய்து வைத்துக் கொண்டிருப்பவர்கள் மட்டுந்தான், கறுப்புச்சட்டை அணியவேண்டும்; அதுவும் படையின் சார்பாகப் பணியாற்றும்போதுதான் அணிந்துகொள்ளவேண்டும என்று கூறினார்கள். இந்தக் கருத்து வேறுபாடு காரணமாக, அறிஞர் அண்ணா அவர்கள் சிறிது காலம் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளில் அதிகமாகக் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருந்தார்கள்.

கறுப்புச் சட்டைப் படைமீது விதிக்கப்பட்ட தடை ஆணையை மீறி, அதனை உடைத்திடும் நோக்கத்தோடு, பெரியார் அவர்கள், சென்னை மெமோரியல் மண்டபத்தில், கறுப்புச்சட்டை மாநாட்டைத் திடீரென்று கூட்டினார்கள். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் கைது செய்யப்படலாம் என்ற செய்தி செய்தித்தாள்களில் வெளிவந்தது. அப்பொழுத, அறிஞர் அண்ணா அவர்கள் எனது அறையில் தங்கிறிருந்தார்கள். பெரியார் நம்மை அழைக்காவிட்டாலும், நாம் தடையெதிர்த்துக் கூட்டப்படுகின்ற கறுப்புச்சட்ப் படை மாநாட்டில் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும். புறப்படு என்றார். நான் என்னுடைய நீண்ட கறுப்பு ஜிபபாவை எடுத்துப் போட்டுக்கொண்டேன். அறிஞர் அண்ணா அவர்கள் எனக்கும் ஒரு கறுப்புச் சட்டை வேண்டுமே. எனக்குத் தகுந்த சட்டை ஒன்றைக்கொடு என்றார். எனக்குத் தகுந்த கறுப்பு ஜிப்பாதான் என்னிடத்திலிருக்கிறது. உங்களுக்குத்தகுந்த கறுப்புச் சட்டை என்னிடத்தில் இல்லையே! என்றேன். சரி! எனக்குக் கொடு. அதையாவது போட்டுக் கெள்கிறேன் என்றார். நான் என் கறுப்பு ஜிபபா ஒன்றைக் கொடுத்தேன். அதை அவர் போட்டுக் கொண்டார். அது அவருக்குத் தொளதொள என்று பெரியதாகவும் நீண்டதாகவும் இருந்தது. நீண்ட கறுப்பு அங்கி அணிந்த பாதிரியாரைப்போல் காட்சி அளித்தார். மாநாட்டு மண்டபத்தில், அறிஞர் அண்ணாவைக் கண்டதும் அனைவரும் ஆரவாரித்து, ஒலி முழக்கம் எழுப்பி, வரவேற்று, மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர். மாநாட்டில் பெரியார், அண்ணா, நான் மற்ற நண்பர்கள் பலரும் சொற்பெருக்காற்றினோம். அறிஞர் அண்ணா அவர்கள் உணர்ச்சிமிக்க, வீரஞ்செறிந்த பேருரை ஒன்றை நிகழ்த்தினார்கள். யாரும் கைது செய்யப்படவில்லை. சில நாட்களக்குப் பிறகு தடை ஆணை திரும்பப் பெறப்பட்டது.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai