அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 7

1933 ஆம் ஆண்டு ஆனர்ஸ் தேர்வு எழுதினார் அவருடைய உற்ற நண்பருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் தேர்வு எழுத முடியவில்லை. அந்த உற்ற நண்பருக்காக தொடர்ந்து தேர்வு எழுதாமல் அண்ணா விலகிக்கொண்டார். அவர் எழுதி முடித்த இரண்டு தேர்வு தாள்களும் மிகச் சிறந்தது என்று பல்கலைக் கழகத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 1935 ஆம் ஆண்டு அண்ணா ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தால். அண்ணா அவர்கள் சிறிது காலம் அன்றய ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களின் ஒருவராய் இருந்த பொப்பிலிராஜாவிடம் அவருடைய உதவியாளராக இருந்து, அவருடைய ஆங்கிலப் பேச்சை மொழிபெயர்த்து அவருடன் அன்றய சென்னை ராஜதானியில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார்.

1936 ஆம் ஆண்டு குமாரராசா முத்தையா செட்டியார் அவர்கள் அண்ணாவை தன்னிடம் உதவியாளராக வந்துவிடுங்கள் மாதம் ரூ. 120./ தருகிறேன் என வேண்டுகோள் விடுக்க அண்ணா அதற்கு நன்றி கூறி மறுத்துவிட்டார்.

1937 ஆம் ஆண்டு அண்ணா குடியரசில் துணை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த போது, ஈரோடு வந்த ஜி.டி.நாயுடு, அண்ணாவை என்னிடம் உதவியாளராக வந்துவிடுங்கள் மாதம் ரூ. 250 -ம், காரும் பங்களாவும் தருகிறேன் என்றார். அதையும் அண்ணா மறுத்துவிட்டார்.

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் புரட்சி நாடெங்கும் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. அப்போது நம் தோழரகள் இந்தக் கிளர்ச்சியில் கலந்துகொள்ளவேண்டும் என்ற கருத்தை தந்தை பெரியாரிடம் தெரிவித்தார். ஆனால் தந்தை பெரியார் அதை மறுத்துவிட்டார்.

1942 ஆம் ஆண்டில் இந்தியாவில் வைஸ்ராயாக இருந்து ஆங்கிலேயர் அண்ணாவுக்கு அழைப்பு விடுத்தார். தனக்கும் தன் அரசாங்கத்திற்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்ய - பிரச்சார செயலாளராக நியமிக்கிறேன் - நல்ல சம்பளமும் தருகிறேன் என்று. அண்ணா அதற்கு நன்றி கூறி, அந்த அழைப்பை ஏற்க மறுத்தார்.

1944 ஆம் ஆண்டு பர்மாவில் அன்றய பிரதமர் யுநு அவருக்கு உதவியாளராகப் பணியாற்ற மாதம் ரூ. 2000 தருகிறேன், என்று அண்ணாவுக்கு அழைப்பு விடுத்தார். அண்ணா அதற்கும் நன்றி கூறிவிட்டு, அந்த பதவியை ஏற்க மறுத்தார்.


1937 ஆம் ஆண்டில், நான் பட்டுக்கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பில் பயின்றுகொண்டிருந்தபோதுதான், அறிஞர் அண்ணாவின் அருமை பெருமைகளை, முதன் முதலாகச் செவிவழி கேட்டு மகிழும் சீரிய வாய்ப்பினைப் பெற்றேன். 1937-ம் ஆண்டு, 1921 முதல் 1936 வரை சென்னை மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த நீதிக்கட்சியானது, தேர்தல் களத்திலே படுதோல்வியுற, காங்கிரசுக்கட்சி வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நேரம். தேர்தல் களத்தில் தோல்வியைத் தழுவிய நீதிக்கட்சியின் தலைவர்கள் பலர், கட்சியைவிட்டு உதுங்கிப் போய்விட்டனர். அந்த நேரத்தில், பகுத்தறிவுத் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள், வீழ்ந்து பட்டுக்கிடந்த நீதிக் கட்சிக்கு எழுச்சியூட்டவும், அதன் கொள்கைகளையும், போட்பாடுகளையும் சீர்படுத்திச் செம்மைப்படுத்திச் செல்வாக்குப் பெறச் செய்யவும் முழு மூச்சோடு பாடுபடத் தொடங்கினார்கள். அதன் முதற்கட்டமாகச் சிதறுண்டு கிடந்த தொண்டர்களையெல்லாம் ஒன்று திரட்டி, ஓரணியில் கொண்டுவர, பெரியார் அவர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த துறையூரில், சிறப்பு மாநாடு ஒன்றினைக் கூட்டினார்கள். அந்து மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு, அறிஞர் அண்ணாவுக்குப் பெரியார் அழைப்பு விடுத்தார்கள். பெரியாரின் அன்பு அழைப்பினை ஏற்று, அறிஞர் அண்ணா அவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டு, சீரிய சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள். அத வரையில் அண்ணா அவர்க, சென்னையில் உள்ள இரு சிலருக்கு மட்டும் அறிமுகமானவராக விளங்கினார்கள். துறையூர் மாநாட்டிற்குப் பிறகுதான் அங்கு ஆற்றிய அரிய அழகான சொற்பொழிவு, அவரைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த நீதிக்கட்சியைச் சார்ந்த தலைவர்களுக்கும் - தொண்டர்களுக்கும் நன்கு அறிமுகப்படுத்திற்று என்று சொல்ல வேண்டும்.

பட்டுக்கோட்டையிலிருந்து துறையூர் மாநாட்டிற்குச் சென்று வந்த சிலர், அண்ணாவைப் பற்றியும், அவரது சொற்பொழிவின் அருமையைப் பற்றியும் வியந்து வியந்து பாராட்டிப் புகழக் கேட்டேன். மாநாட்டில் கலந்து கொண்டு வந்தவர்கள், மாநாட்டில் ஆற்றிய உரைகளில், சென்னையிலிருந்து வந்த தோழர் அண்ணாத்துரை என்ற இளைஞர் ஆற்றிய உரைதான் தலைசிறந்ததாக அமைந்திருந்தது- அவருக்கு வயது இருபத்தெட்டுதான் இருக்கும். எம்.ஏ.பட்டம் பெற்ற பட்டதாரியாம் அவர். குள்ளமான உருவம்; ஒல்லியான உடல், எளிமையான தோற்றம்; விரிந்த முகம், பரந்த நெற்றி; ஒளிர்ந்த கண்கள்; எடுப்பான மூக்கு; நறுக்கு மீசை; வலது பக்கம் வாகு எடுத்த தலைமுடி; ஓயாமல் வெற்றிலைப் பாக்கைக் குதப்பிக் கொண்டிருக்கும் வாய்; அவ்வப்போது சிட்டிகைப் பொடி போடும் பழக்கம்; அவர் பேச எழுந்து வந்தபோது யாரோ? எவரோ? என்று நினைத்தோம். தோற்றத்தில் கவர்ச்சியில்லை. ஆனால், அவர் பேசத் தொடங்கியவுடன், அவரிடம் காணப்பட்ட அவரது எடுப்பான குரல்; அடுக்குச் சொற்கள் அழகிய தமிழ் எதுகையும் மோனையும், உவமையும் உருவகமும், அணி அழகும் பொருளாழமும் கொண்ட சொல்லோட்டம்; ஓசை நயம்; அழுத்தமான கருத்துக்கள்; ஆணித்தரமான வாதங்கள்; உறுதியான கொள்கைகள்; உயர்ந்த எண்ணங்கள்; கேலியும் கிண்டலும் கலந்த கூற்றுக்கள்; நகைச்சுவை ததும்பும் எடுத்துக்காட்டுகள்; வீரம்-வியப்பு-தெளிவு-திட்பம்-நயம்பலன்-கலைச் சிறப்பு-கற்பனை வளம் போன்ற சுவைகள்; சுய மரியாதை உணர்வின் ஆக்கம்; பகுதிதறிவுக் கொள்கையின் இன்றியமையாச் சிறப்பு; நீதிக்கட்சிக் கொள்கையின் நியாயம்; அதன் போக்கிலே காணப்படும் நேர்மை; அது நிலை நாட்ட விரும்பும் உண்மை; பெரியாரின் தலைமையின் கீழ் ஒன்று திரள வேண்டிய பெரும்படையின் இன்றியமையாமை; பெரும் படை போராட வேண்டிய களங்களின் வகைகள்; பெற வேண்டிய வெற்றிகளின் தன்மைகள் ஆகியவை எங்களை அப்படி இப்படி நகரவொட்டாதபடியும், அங்கும் இங்கும் பார்க்க முடியாதபடியும், கண்-காது-கருத்து ஒன்றி, மெய் மறந்து, மனமகிழ்ந்து, மகிழ்ச்சி ஆரவாரக்கடலில் மூழ்கி வீட்டோம் என்றெல்லாம் அவர்கள் பல படப் பாராட்டிச் சொல்லியவைகள், என் மனதைப் பெரிதும் கவர்ந்தன. அவர்கள் அண்ணாவின் பேச்சு வன்மையைப் பற்றிப் பல நாட்கள் வரை வியந்து வியந்து சொல்லிக்கொண்டே இருந்தனர்; அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டெ இருந்தனர்.

முதன் முதலில் கண்ணாரக் கண்டது:
அப்படிப்பட்ட அண்ணாவை, எப்படியாவது நேரில் காண வேண்டும், அவரது அழகுப் பேச்சைக் கேட்டு மகிழ வேண்டும் என்ற வேணவா, என் உள்ளத்தை ஆட்கொண்டது. அதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துத் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தேன்.

துறையூர் மாநாட்டிற்குப் பின்னர், சில திங்கள் கழித்துத், தஞ்சை நகரை அடுத்த பள்ளி அக்ரகாரத்தில் சுயமரியாதை மாநாடு ஒன்று கூட்டப்பட்டது. அந்த மாநாட்டிற்குத் தோழர சி.என். அண்ணாதுரை தலைமை தாங்குவார் என்றும், ஈ.வெ.ரா.பெரியார், பட்டுக்கோட்டை கே.வி.அழகர்சாமி, பூவாளூர் பொன்னம்பலனார், திருச்சி. கி.ஆ.பெ.விசுவநாதம், மூவலுர் இராமமிர்தத்தம்மையார், கைவல்யசாமியார், நாகை மணி, சேலம் சித்தையன், நாகை காளியப்பன், எஸ்.வி.லிங்கம், மணவை ரெ. திருமலைச்சாமி, டபுள்யூ.பி.ஏ.சௌந்தர பாண்டியன், விவி.இராமசாமி, கே.கே.நீலமேகம் போன்ற பெரியவர்களெல்லோரும் மாநாட்டில் கலந்து கெள்வார்கள் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அப்போழுது எனக்க வயது பதினேழு இருக்கும். அண்ணாவைக் காணவும், அவரது அருமைப் பேச்சைக் கேட்டு மகிழவும் மிக்க ஆவரோடு அந்த மாநாட்டிற்குப் பட்டுக்கோட்டையிலிருந்து இயக்கத் தோழரகளின் துணையோடு சென்றேன்.

1937-ல் நடைபெற்ற அந்த மாநாட்டில்தான் அறிஞர் அண்ணா அவர்களைப் பந்தலின் ஒரு பக்கத்தில், தொலைவில் நின்று, கண்ணாரக் கண்டு களித்தேன். அவரது தலைமைச் சொற்பொழிவைச் செவியாரக் கேட்டு மகிழ்ந்தேன். சிந்தையார அதனைப் பருகி உளம் குளிர்ந்தேன்.

பட்டுக்கோட்டை அழகர்சாமியின் பேச்சு:
அந்த மாநாட்டில், பட்டுக்கோட் அஞ்சாநெஞ்சன் அழகர்சாமி அவர்கள் உரையாற்றும்கோது, பத்தாயிரம் ப.ஜீவானந்தங்கள் நமது இயக்கத்தை விட்டுப் போனாலும், முப்பதினாயிரம் முத்துச்சாமி வல்லத்தரசுகள் நம்மைவிட்டு விலகினாலும், பல்லாயிரம் நீலாவதி இராமசுப்பிரமணியன்கள் நீங்கினாலும், நமது இயக்கத்தைக் கட்டிக் காத்து வளர்க்க, அறிவாற்றல் மிக்க பெரும் படிப்பு படித்த ஈடும் எடுப்பும் அற்ற ஒரு பெரும் பேச்சாளரும், சிந்தனையாளரும், செயல் வீரருமாகிய அண்ணாதுரை நமக்குக் கிடைத்திருக்கிறார். அவர் ஒருவரே நமக்குப் போதும். எதிரிகள் நம்மீது ஏசல் ஈட்டிகளை வீசுகிறார்கள்; அந்த ஈடடிகள் எட்டின மட்டுந்தான் பாயும். பணபலத்தை வைத்து நம்மை மிரட்டுகிறார்கள்;அவர்களின் பணம் பாதாளம் வரையில்தான் செல்லும். எங்கள் அண்ணாத்துரையின் அறிவுச்சுடர்; எதிரிகளின் அண்டபிண்ட பகிரண்ட சராசரங்களையெல்லம் துளைத்துச் சென்று, அவற்றையெல்லம் சுட்டெரித்து, படுசாம்பலாக்கிவிடும் என்பது திண்ணம். இனி, எங்களுடைய வேலையெல்லாம் வெட்டு ஒன்று துண்டு இரண்டுதான். ஓடுகின்ற குருதி ஓட்டத்தின் ஊடே ஊடே மூழ்கி எழுபவன் சுயமரியாதைத் தோழன். எந்த புடலங்காயும் எங்களை எதிர்காலத்தில் எதுவும் செய்துவிடமுடியாது. எதிரிகளின் எதிர்ப்பு இனி டண்டனார் தான் என்று குறிப்பிட்ட கருததுக்கள், என் உள்ளத்தில் இன்னமும ஆழப் பதிந்திருக்கின்றன.

திருவள்ளுவர் இளைஞர்த் தமிழ்க் கழகம்:
1938-ஆம் ஆண்டில், இத்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கம் தலைதூக்கிய காலத்தில், நானும், எனது இளவர் இரா.செழியனும், பிற பள்ளி மாணவர்களும் சேர்ந்து, திருவள்ளுவர் இளைஞர்த் தமிழ்க் கழகம் தொடங்கி தமிழ் விழக்கள் நடத்தி வந்தோம். விளக்க அறிக்கைகள் பல வெளியிட்டோம். அந்த நேரத்தில், அறிஞர் அண்ணாவை அழைத்துப் பொதுக்கூட்டம் கூட்ட, மாணவர்களாகிய நாங்கள் பெரிதும் முயன்றோம். எங்கள் முயற்சி அப்போது வெற்றி பெறவில்லை. எங்கள் அழைப்பினை ஏற்று, வருகை தர வாய்ப்பு கிட்டவில்லை என்று விடை எழுதிவிட்டார்கள்.

அண்ணாவின் கடற்கரைச் சொற்பொழிவு:
1938-ல் சென்னை கடற்கரையில், பேராசிரியர் மறைமலையடிகளார் தலைமையில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புக்கூட்டத்தில், பெரியாரும், அறிஞர் அண்ணாவும் சொற்பொழிவாற்றக் கேட்டேன். அதுதான் எனக்கு அண்ணாவின் பேச்சை, இரண்டாவது தடவையாகக் கேட்கும் வாய்ப்பாகும். தொலைவில் இருந்துதான் கேட்டு மகிழ்ந்தேன்.

திருவாரூர் மாநாட்டில் அண்ணாவின் பேச்சு:
1940-ம் ஆண்டில் திருவாரூரில் பெரியார் தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், தமிழ்நாடு ஏன் தமிழர்க்கு ஆக வேண்டும் என்னும் பொருள்பற்றி அறிஞர் அண்ணா அவர்கள் ஆணித்தரமாக காரணகாரிய விளக்கங்கள் அணித்து ஆற்றிய அருமையான சொற்பொழிவைக் கேட்டேன். அப்பொழுது நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவனாக இருந்து, மாநாட்டில், பார்வையாளனாகச் சென்று கலந்து கொண்டென். அப்பொழுதும் அண்ணாவை நெருங்கிடும் வாய்ப்பினை நான் பெற முடியவில்லை.

சிதம்பரம் பொதுக்கூட்டத்தில் அண்ணாவைக் காணல்:
1941-ல், சிதம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பெரியார், அண்ணா, சி.பி.சிற்றரசு, மூவரும் வந்தனர், அப்பொலுது மேடையின் முன்புரம் முதல்வரிசையில் உட்கார்ந்து அண்ணாவின் வாதங்கள் - எதிர்வாதங்கள் நிறைந்த ஆராய்ச்சி மிக்க அரசியல் சொற்பொழிவைக் கேட்டேன். கூட்டம் முடிந்தவுடன், அவருடன் எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று முண்டியடித்துக் கொண்டு, அவர் அருகில் சென்று கையொப்ப ஏட்டை நீட்டிக் கையொப்பம் போட்டுத் தரவேண்டும் என்ற கேட்டுக் கொண்டென். அண்ணா அவர்கள் ஏட்டில் கையொப்பமிட்டார்கள். அதுவே எனக்கு பெருமதிப்பை ஏற்படுத்தித் தந்துவிட்டதாக எனக்குள்ளேயே எண்ணிக்கொண்டேன். ஏதேனும், பேச்சுக் கொடுக்கக் கருதி, நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். நலந்தான் என்றார். அதற்குமேல் கேட்க எனக்கு எதுவும் தேன்றவில்லை. அவரைச் சுற்றி அலை மோதிய கூட்டம் என்னை ஒரு பக்கம் ஒதுக்கித் தள்ளிவிட்டது. அறிஞர் அண்ணாவிடம் எப்படியோ பேச்சுக் கொடுத்துவிட்டோம் என்ற பெருமிதவுணர்வோடு அண்ணாமலை நகர் தங்கும் விடுதிக்குச் சென்றேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்ணா:
1943-ஆம் ஆண்டில், பேராசிரியர் எம்.இரத்தினசாமி அவர்கள் துணைவேந்தராக இருந்த காலத்தில், அறிஞர் அண்ணா அவர்களைக் கொண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா மண்டபத்தில், சொற்பொழிவுகள் ஆற்ற வைக்க என்னைப் போன்ற மாணவர்க்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டது. எங்களது அழைப்பினை ஏற்று, அண்ணா அவர்கள், அவரது உற்ற நண்பர்களான காஞ்சி இராசகோபால், புட்டாசாமி, பொன்னப்பன் ஆகியவர்களோடு வந்தார். ஆற்றோரம் என்ற தலைப்பில் தமிழ் இலக்கிய மன்றத்திலும், கூழநு குருசுலு டீகு கூழநு குடுஹஆநு என்ற தலைப்பில், பல்கலைக்கழகப் பேரவையிலும் இரண்டு சொற்பொழிவுகள், முறையே தமிழ்-ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நிகழ்த்தினார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் எங்களைப்போன்ற மாணவர்களின் ஆர்வத்தையும் அக்கறையையும், எழுச்சியையும், உணர்ச்சியையும் கண்டு, எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கிக், கூடுதலாக இரண்டு நாட்கள் விருந்தினர் விடுதியிலேயே உரையாடி, அளவளாவி, விளக்கங்கள் கேட்டுத் தெளிவு பெற்று, மகிழ்ச்சியுறுவதற்கான வாய்ப்பு, முதன்முதலாக எனக்கும், என்னையொத்த பிற மாணவர்களுக்கும் ஏற்பட்டது. அந்தத் தொடர்பும் கலந்துரையாடலும் என் மனதைவிட்டு என்றென்றும் நீங்காமல் நிலை பெற்ற நிற்கும் நிகழ்ச்சிகளாகும்.

குடந்தை மாணவர் மாநாடு
1944-ம் ஆண்டு சனவரித் திங்களில், குடந்தையில் மாணவர் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில், பெரியார் அவர்களும், அண்ணா அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நானும் இளவல் இரா.செழியன், நண்பர்கள் க.அன்பழகன், இ.ரெ.இளம்வழுதி, கே.ஏ.மதியழகன், தவமணியரசன் போன்றவர்களும் மாணவர்கள் என்ற முறையில் கலந்துகொண்டோம். நான்கு வேளைகளில் நான்கு பகுதிகளாக நடைபெற்ற அந்த மாநாட்டில், முதல் மூன்று பகுதிகளுக்குப் பேராசிரியர் முத்தையா, தாவுத்ஷா, கான்பகதூர் கலிபுல்லாசாகிப் ஆகியோர் முறையே தலைமை தாங்க, நான் நான்காம் பகுதிக்குத் தலைமை தாங்கும்பேறு பெற்றேன். அப்பொழுது, நான் நீண்ட கருந்தாடிக் கோலத்தோடு காட்சியளித்துவந்தேன். அந்த மாநாட்டில்தான் நானும், மற்ற மாணவர்களும் பெரியாராலும், அண்ணாவாலும் முழுமையாக ஆதரிக்கப்பட்டோம். இயக்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டோம்; இயக்கத்தொழர்களால் அரவணைக்கப்பட்டோம்.

ஈரோடு இளைஞர் மாநாடு
1944 மே திங்களில், பெரியார் அவர்களால், ஈரோட்டில் ஏற்பாடு செய்யப்பெற்ற இளைஞர் மாநாட்டிற்கு, அறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கவும், நான் மாநாட்டைத் துவக்கி வைக்கவும் அழைக்கப் பட்டொம். அந்த மாநாட்டில்தான், மாவட்டவாரியாகக் கொள்கைப் பரப்புச் செய்ய, மாணவர் அணிகள் அமைக்கப்பட்டு, மாவட்டந்தோறம் அனுப்பி வைக்கப்பட்டன. மாநாடுகளில் தலைமை தாங்குதல்:
1944 ஆம் ஆண்டில், பெரியாரின் விருப்பத்திற்கு இணங்க கோபிச்செட்டிப்பாளையத்திலும், இலால்குடியிலும் கூட்டப்பட்ட இளைஞர் மாநாடுகளுக்கு, அறிஞர் அண்ணா அவர்களின் அன்பு ஆணையை ஏற்று, நான் தலைமை தாங்கினேன்.

இராசிபுரம் நீதிக்கட்சி மாநாடு:
1944-ல், சேலம் மாவட்டம் இராசிபுரத்தில் பெரியார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், அறிஞர் அண்ணா அவர்களின் விருப்பத்திற்கிணங்க, அவரோடு சென்று பங்கு கொண்டு உரையாற்றினேன்.

திராவிடக்கழகம் - சேலம் மாநாடு
1944 ஆகஸ்டு திங்களில், சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சியின் மாநாட்டில்தான், கட்சியின் பெயரைத் திராவிடக் கழகம் என்று மாற்றி அமைக்கும் புரட்சிகரமான தீர்மானத்தைக் கொண்டு வந்து, அறிஞர் அண்ணா அதனை நிறைவேற்றினார்கள். அப்பொழுது நீதிக்கட்சியிலிருந்த பெரும் பணக்காரர்களும் சர் திவான்பகதூர் - இராவ்பகதூர் - கான்பகதூர் - இராவ்சாகிப் போன்ற மரியாதைப் பட்டத்திற்குரியவர்களும், வெள்ளையரசின் பதவியாளர்களும் பெரியார் தலைமைக்கும், கட்சியின் பெயர் மாற்றத்திற்கும் பெரும் எதிர்ப்புக் காட்டி வந்தார்கள். அவர்களின் முயற்சிகளையெல்லாம் முறியடிக்கும் பணிகளில், தீவிரமாக ஈடுபட்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள், மாநாட்டிற்குப் பதினைந்து நாட்களக்கு முன்பிருந்தே, என்னைத் தம்மோடு உடனிருக்கும்படி பணித்தார்கள். மாணவர் பட்டாளத்தோடும், இளைஞர் பட்டாளத்தோடும் தொடர்புகொண்டு அவர்களையெல்லாம் பெருவாரியான நிலையில், அண்ணாவின் பக்கத்திலேயே நான் இருந்ததால், அவருடைய அறிவுரைகளைக் கேட்டுச் செய்ய வேண்டிய பணிகளை, எளிதாகச் செய்து முடிக்க முடிந்தது. அண்ணாவும் நானும் ஈரோடு சென்று, பெரியாரை அழைத்துக் கொண்டு சேலம் போய்ச் சேர்ந்தோம். நாங்கள் எதிர்பார்த்தபடி, நாட்டின் நாலாப் பக்கங்களிலிருந்தும், தொண்டர்களும், இளைஞர்களும், மாணவர்களும் ஏராளமாக வந்து மாநாட்டுப் பந்தலில் குழுமினார்கள். பெரியார் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார்கள். அறிஞர் அண்ணா பெயர் மாற்றத் தீர்மானத்தைக் கொண்டு வந்து முன்மொழிந்தார்கள். நானும், நண்பர்கள் சிலரும் வழிமொழிந்து உரையாற்றினோம். பெருத்த கையொலிக்கு இடையே, பேராரவாரத்திற்கிடையே தீர்மானம் நிறைவேறிற்று எதிர்ப்பாக இருந்த சிலர், ஏதும் சொல்லாமல், மாநாட்டுப் பந்தலைவிட்டு நழுவி வெளியேறிவிட்டார்கள். திராவிட இயக்கத்தில் இது மிக முக்கியமானதொரு கட்டமாகும்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai