அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
58
அண்ணாவின் வாழ்க்கையிலே. . .
சி.பக்கிரிசாமி, பி.ஏ., எல்.டி.,
(அறிஞர் அண்ணாவுடன் படித்த மாணவர்)
1926 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள்
அண்ணாவும் நானும் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதியாண்டு
வகுப்பில் படித்துக்கொண்டிருந்தோம். ஆனால் அப்பொழுது அண்ணா அரசியலில்
நாட்டம் கொண்டது கிடையாது. நிறைய நூல்கள் படிப்பார். கணக்கு மாத்திரம்
கொஞ்சம் வராது அவருக்கு. எனவே தான் பள்ளியிறுதுத் தேர்பில் (எஸ்.எஸ்.எல்.சி)
ஓரிரு ஆண்டுகள் தவறிவிட்டார். எனினும் விடா முயற்சியுடன் மேலும்
உழைத்து 1928 ஆம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி தேறினார்.
ஒரு அரையாண்டுத் தேர்வில் பொடி
விஷயம பெரிய நகைச்சுவையை உண்டு பண்ணிவிட்டது. விடை எழுதிக் கொண்டிருந்த
அண்ணா எதிரில் உட்கார்ந்திருநத ஆசிரியருக்குத் தெரியாவண்ணம் துணியால்
முகத்தை மூடிக்கொண்டு குனிந்து பொடி போட்டார். திடீரெனப் பார்த்த
ஆசிரியர் அண்ணா காப்பியடிக்கிறார் என நினைத்து அருகில் வந்து அண்ணாதுரை!
நீ கூட இப்படி செய்யலாமா? என வினவி, காப்பியடித்த காகிதத்தைக் கொடுக்கும்படி
வற்புறுத்தவே வேறு வழியின்றி பொடி டப்பியை எடுத்துக் காண்பித்தால்.
எல்லோரும் சிரித்து மகிழ்ந்தோம்.
எதையும் தாங்கும் இதயம் வேண்டும்
என்று நமக்கெல்லாம் போதித்த அண்ணா அவர்களுக்கு மாத்திரம் அன்பு கனிந்த
இதயம்தாம் இருந்தது. சிறிய வயதிலிருந்தே ஒருவர் அவர் எப்படிப்பட்ட
தவறு செய்த போதிலும் சீ என்று ஏதியதே இல்லை. இது அவரிடமிருந்த சிறந்த
குணம் என்போர் பலரும், குறை என்று சிலரும் சொல்வார்கள். ஆனால் இந்த
அருங்குணம்தான் அண்ணா அவர்களுக்குப் பல்லாயிரக் கணக்கான அருமைத்
தம்பிகளையும் பல லட்சக்கணக்கான அன்பர்களையும் உண்டாக்கியது என்று
சொன்னால் மிகையாகாது.
வெற்றியின் சிகரத்தில் இருந்த அவர்
என் வேண்டுகோளுக்கிரங்கி எங்கள் பள்ளியில் திரு.காமராஜ் அவர்களின்
திரு உருவப் படத்தைத் திறந்து வைத்து எதிர்க்கட்சிகளும் போற்றக்கூடிய
வகையில் தலைவர் காமராஜ் அவர்களின் நற்பண்புகளையும், தொண்டுகளையும்,
திறமைகளையும், அறிவாற்றலையும் பற்றிப் பேசியது வேறெந்த அரசியல் தலைவரும்
செய்ய முடியாத ஒன்று என்று யாரும் சொல்லிடலாம்.
அறிஞர் அண்ணா வாழ்க! அவர் தம் கொள்கைகள் வெல்க!
|