அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 56

திராவிடநாடு அலுவலகத்திலிருந்து நானும் அண்ணாவும் அண்ணா வீட்டுக்குப் போவோம். காலில்லையென்றால் அலுவலர் பஞ்சாட்சரத்தின் சைக்கிளை நான் ஓட்ட அண்ணா பின்னால் அமர்ந்துகொள்வார். அவரே சில நேரங்களில் சைக்கிள் ஓட்டுவார்.

அண்ணாவுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டிக் கற்றுக்கொள்ள ஆசை வந்து திரு. புட்டாசாமி, திரு.சி.வி.இராசகோபால் இருவரையும் அழைத்துக் கொண்டு காஞ்சீபுரம் பொன்னேரிக்கரையில் கற்றுக்கொள்ள முயற்சித்து, அண்ணா ஒரு முறை கீழே விழ, அதோடு பறிற்சி முடிந்தது.

அண்ணாவின் சொல்லாதது எனும் சிறுகதைக்கு தாய் மகளுக்குக் கட்டியத் தாலி என்கின்ற பேயரில் நான் (அரங்கண்ணல்) திராக்கதை வசனமும் எழுத அந்தப் படத்துவக்க விழாவில் அண்ணா பேசினார் சுதேசமித்திரன் வெளியிட்டிருந்தது.

என்னைப்போல் எழுதுகிறவர் யாராவது உண்டா என்றால், உண்டு! அது இதோ இருக்கிற அரங்கண்ணல் என்று சொல்வேன் என்னைப் போல் மட்டுமல்ல, என்னை அறிந்து எழுதுகிறவர் அவர். தோழர்கள் என்னிடமே சொல்வதுண்டு. போன வாரம் நீங்கள் எழுதிய கட்டுரை அபாரம் என்று. அது நான் எழுதியதாயிருக்காது அரங்கண்ணல் எழுதியதாயிருக்கும். இதைப் போய் அந்தத் தோழரிடம் சொல்லி ஆர்வத்தை ஏன் குறைக்கவேண்டுமென்று சும்மாயிருந்துவிடுவேன். தம்பி அரங்கண்ணல் எழுதுவதில் மட்டுமல்ல, சுபாவத்திலும் என்னைப்போல் இருப்பன். இரயில் போனாலும் போகட்டும என்ற நான் இருப்பேனே ஒழிய முண்டியடித்துக்கொண்டு நாமும போக வேண்டும் என்று டிக்கட் வாங்கும் பழக்கம் எனக்கு வராது
(இராம. அரங்கண்ணல்)

உங்கள் இதயத்தில் இடம் வேண்டும்! எனக்கு மாலை போட்டவர், நான் 1967-ல் முதலமைச்சராக வரவேண்டும என்று சொல்லி மாலை போட்டார். நீங்களெல்லாம் இப்படிச் சொல்வதால் தானோ என்னவோ - முதலமைச்சர் பக்தவத்சலம், நான் அமைச்சர் பதவிக்காகப் பித்துப் பிடித்து அலைவதாகச் சொல்கிறார்.

மந்திரி வேலை என்பது கொளுத்திவிட்ட வாணம்! வாணத்தைக் கொளத்தியதும அது திடீரென்று உச்சிக்குப் போகும்! சில வினாடிகள் தீப்பொறிகளைப் பூப்போலச் சொரியும்! எல்லாரும் வாணத்தை அண்ணாந்து பார்க்கிறோம் - ஆனால் அடுத்த விநாடி அது தரையை நோக்கி வேகமாக வந்து வீழ்கிறது! கந்தகம் போட்டுக் கெட்டித்த வாணம் வெடித்த பிறகு கீழே விழுந்ததும், சிறு பையன்கள் அதை எடுத்து, அதில் மண்ணைப் போட்டுக் கெட்டித்து, மண்வாணம் விடுவார்கள்! கடந்து 25 ஆண்டுகளில் இப்படி மண் வாணம் ஆகிவிட்ட மாஜி மந்திரிகளின் கணக்கு எனக்குத் தெரியும்! அதனால்தான், மந்திரிப் பதவியில் எனக்கு ஆசை ஏற்படவில்லை!

எனக்கு உங்கள் இதயத்தில் இடம் வேண்டும்; உங்களிடம் மட்டுமல்ல - உங்கள் பிள்ளைகள், பேரர்கள், பிற குழந்தைகளின் இதயங்களிலும் எனக்கு இடம் வேண்டும்! அதுதான் வேண்டுமென்று நான் பாடுபடுகிறேனே தவிர, மந்திரிப் பதவிக்கல்ல!
(அறிஞர் அண்ணா - திருத்துறைப்பூண்டியில்)

டில்லி மேலவையில் அண்ணா.

நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன். நான் என்னை திராவிடன் என்று அழைத்துக் கொள்ளப் பெருமைப்படுகிறேன்.

இப்படி கூறுவதால் நாங்கள், வங்காளிக்கோ மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிர்ப்பானவன் அல்ல.

ராபர்ட் பர்ன்ள் சொன்னதுபோல மனிதன் எப்படியிருந்தாலும் மனிதன்தான்.

நான் என்னை திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ளும்போது, திராவிடனிடம் இந்த உலக்திற்கு வழங்க, திட்டவட்டமான, தெளிவான மற்றவைகளிடமிருந்து வேறுபட்ட சில இருக்கின்றன என்று விரும்புகிறோம்.

. . . உங்களோடு ஒரு நாடாக இருக்கக்கூட ஆசைதான். ஆனால் ஆசைகள் வேறு. உண்மைகள் வேறு.

நாங்கள் ஒரெ உலக்தை விரும்புகிறோம். ஒரே அரசாங்கத்தை விரும்புகிறோம். எனினும் நாங்கள் தேசிய எல்லைகளை மறக்கத் தயாராயில்லை.
(தில்லி மேலவை - அண்ணாவின் முதல் பேச்சு)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai