அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
55
அண்ணா அவர்களைப் பற்றி பிற்காலத்தில் நினைக்கும்பொழுது,
காஞ்சிபுரத்துடன் இணைத்துப் பார்க்கிறோம். காஞ்சி தந்த கருவூலம்
என்று பூரிப்புடனும் பெருமையுடனும் குறிப்பிடுகிறோம். காஞ்சிபுரத்தைச்
சேர்ந்தவர் அண்ணா என்பது இனி சொல்லிச் தெரியவேண்டியதில்லை. அண்ணாவின்
பெயரின் முன் உள்ள சி.என். என்பதில் சி என்பது காஞ்சிபுரம் என்பதற்காக
உள்ளதாகும்.
ஆனால் 1937 இல் அண்ணா
அவர்கள் தமிழ் நாட்டு மேடையில் தோன்றியபொழுது சென்னைத் தோழர் சி.என்.அண்ணாதுரை
என்றுதான் அறிமுகப்படுத்தப்பட்டார்.
சுயமரியாதை இயக்க
ஏடுகளில், தோழர்களின் பெயர்களுக்கு முன் ஊர்ப்பெயர்களும் தவறாது
தரப்பட்டு வந்தன. பட்டுக்கோட்டை அழகிரிசாமி மாயவரம் சி.நடராசன்,
நாகை காளியப்பன், பூவாளுர் அ.பொன்னம்பலம், பட்டி வீரன்பட்டி டவிள்யூ,
பி.ஏ.சௌந்திரபாண்டியன், பூதப்பாண்டி ஜீவானந்தம் சேலம் சித்தையன்,
குகை ஜதீசன், திண்டுக்கல் மத்திரன். இப்படி சுயமரியாதை இயக்கத் தோழர்கள்
ஊர்ப்பெயர்களுடன் சேர்த்து அழைக்கப்பட்டனர். அந்த வகையில் அண்ணா
அவர்களைக் குறிப்பிடும்பொழுது அவர் சென்னையைச் சேர்ந்தவராகக் கருதப்பட்டார்;
சென்னைத் தோழர் சி.என்.அண்ணாத்துரை என்று பத்திரிகைகளில் மகாநாட்டு
விளம்பரங்கள் வந்தன.
முசிரி தாலுகா மூன்றாவது
சுயமரியாதை மகாநாடு, 22.08.1937 இல் துறையூரில் நடைபெற்றபொழுது அதற்கு
அண்ணா அவர்கள் தலைமை வகித்தார் என்று முன்பே, குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மாகாராட்டுக்கு வரவேற்புக் கழகத் தலைவராக இருந்த செல்லிப்பாளையம்
தோழர கே.வி.பெருமாள் அவர்கள் ஊர்ப்பெயரையும் சேர்த்துதான், குடி
அரசு பத்திரிகை குறிப்பிட்டுள்ளது - தமது வரவேற்புரையில், மகாநாட்டுத்
தலைவரைப் பற்றிக் கூறுவதாவது,
சென்னை இளஞ்சிங்கம்,
நவயுகம் ஆசிரியர் சி.என்.அண்ணாத்துரை எம்.ஏ. அவர்கள் தலைவராக இச்சந்தர்ப்பத்தில்
நமக்குக் கிடைத்துள்ளது பற்றி அளவற்ற மகிழ்ச்சி அடைவதுடன், நமது
மனமார்ந்த நன்றியறிதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
அண்ணா சென்னை இளஞ்சிங்கமாக
அன்று காட்சியளித்தார்! தோல்விக்குமேல் தோல்வி அடைந்து சோர்வு தட்டியிருந்த
இயக்கத்தினரிடையே அண்ணாவின் குரல், சிங்கத்தின் குரலாக - எழுச்சிதரும்
குரலாக இருந்தது!
(இரா.செழியன்
- மன்றம்,1969)
|