அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 53


அண்ணா அவர்கள் பள்ளிப்படிப்பைக் காஞ்சிபுரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் முடித்ததும் கல்லூரிப் படிப்பைத் தொடர சென்னைக்கு வந்தார். அந்தக் காலத்தில், கல்லூரிப் படிப்பு என்பது நடுததரக் குடுமபத்தினர்க்கு எட்டாத செலவு மிக்க - ஒன்றாக இருந்தது. அதிலும், உணவு விடுதியில் சேர்ந்து படிப்பது என்பது நடுத்தரக் குடும்பத்தினரால் நினைத்துப் பார்க்க முடியாததாக இருநதது. அண்ணா அவர்களைச் சென்னைக் கல்லூரியில் படிக்கவைக்க, அண்ணாவின் தொத்தா - இராசாமணி அம்மையார் - சென்னைக்கு வந்து, தங்கசாலை தெருவில் ஒரு வீடு வாடகைக்கு எடுததார்கள். அப்பொழுது பச்சையப்பன் கல்லூரி சைனா பசாரில் இருந்தது. வீட்டிலிருந்து நடந்து கல்லூரி வந்துவிடலாம்.

அண்ணாவின் அம்மா, பங்காரு அம்மாள் காஞ்சிபுரத்தில் தங்கியிருந்தார்கள். சென்னையில் தங்கசாலை தெருவீட்டில் தொத்தாவும் அண்ணாவும் இருந்தார்கள். அம்மாவைவிட தொத்தாவின் கண்டிப்புதான் அதிகம் இருக்கும். அண்ணாவும் தொத்தாவிடம்தான் சற்றுக் கட்டுப்படுவார்கள்.

அண்ணா இருந்த தங்கசாலைத் தெரு வீட்டிற்கு எதிர்ப் பக்கத்தில் சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றம் இருந்தது, முதலாவது சுயமரியாதை மாகாண மகாநாடு செங்கற்பட்டில் நடைபெற்றதும், நாடெங்கும் உண்டான எழுச்சியில் உருவான மன்றங்களில் இதுவும் ஒன்று. தோழரகள் சி.கணேசன், சிவஞானம் (சின்னக் கண்ணு) ரங்கநாதம், புலவர் செல்வராஜ் எம்.எஸ்.முத்து முதலியவர்கள் இந்த சுயமரியாதை இளைஞர் மண்றத்தைத் துவக்கி நடத்திவந்தார்கள். எதிர் வரிசையிலிருந்த இந்த மன்றத்துக்கு அடிக்கடி வருவதும் - அங்கு நடைபெறும் விவாதங்களில் கலந்து கொள்வதும் அண்ணா அவர்களின் பழக்கமாகியது. ஓய்வு நேரத்தில் படிப்பதற்குகூட கல்லூரிப் புத்தகங்களை எடுத்துக் கொண்டுவந்து, அண்ணா அங்கு படிப்பாராம்.

தங்கசாலையில் அண்ணா இருந்த வீட்டிற்கு அருகிலிருந்து ஒரு நண்பர் வீட்டுக்கு, தோழர் பி.பாலசுப்பிரமணியம் வரும்பொழுது, அண்ணாவைப் பார்த்துப் பேசுவாராம், படிப்பிலும் அரசியலிலும் அண்ணாவுக்கு ஊக்கம் தந்தவர்களில் சண்டே அப்சர்வர் ஆசிரியர் பாலசுப்பிரமணியமும் ஒருவராவார்.

கல்லூரிக்குப் போவது, படிப்பது எதிரே இருந்த சுயமரியாதை இளைஞர் மன்றத்தில் அமர்ந்து பேசுவது இவையே அண்ணாவின் நேரத்தைக் கவர்ந்தன.
(இரா.செழியன் - மன்றம்,1969)

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai