அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 52


பெரியாரைப் பற்றி உங்களுக்கு எப்பொழுது முதலில் தெரியும்? என்று அண்ணாவை கேட்டிருக்கிறேன்.

அண்ணாவுக்கு பத்துப்பன்னிரண்டு வயதிருக்கும்பொழுது, அதாவது 1920-21 இல், பத்திரிகைகள் படிக்கும் பெரியவர்கள் பேசிக்கொள்வதை அவர் கேட்பாராம். திகர், கோகலே, அன்னிபெசண்டு. காந்தியார், சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியர், ஈ.வெ.ராமசாமி நாக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், பி.டி.தியாகராஜச் செட்டியார் போன்றவர்களின் பெயர்கள் அரசியல் பற்றிய பேச்சுக்களில் வருமாம்.

அண்ணாவின் 15வது வயதின்போது - அப்பொழுது அவர் காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் படித்துககொண்டிருக்கிறார் - காஞ்சிபுரத்தில் ஒரு மகாநாடு நடைபெற இருந்ததாம். திண்ணைப் பேச்சுக்களைக் கேட்டிடும் அண்ணாவுக்கு நடைபெறப் போகும் காங்கிரசு மாகாண மகாநாட்டில் பரப்பரப்பான பேச்சுகள் இருக்குமென்று தெரிந்ததாம். மகாநாட்டில் பிளவு ஏற்பட்டு, இரண்டு காங்கிரஸ் நடைபெற்றன என்றும் ஒன்று திரு.வி.க.மகாநாடு என்றும் மற்றொன்று நாய்க்கர் நடத்தியது என்றும் ஊர்ப் பெரியவர்கள் பேசிக்கொள்ள அண்ணாவுக்குத் தெரிய வந்தது காஞ்சிபுரத்துக்கு ஈ.வெ.ராமசாமி வந்தது பற்றிய கவனம் அண்ணாவுக்கு அந்த அளவு இருந்தது.

அண்ணா அவர்களின் ஞாபகத்துக்கு வந்த அந்த மகாநாடு, 1925 நவம்பர் மாதத்தில் நடைபெற்றதாகும். திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் தலைமையில் கூடிய தமிழ்நாடு காங்கிரஸ் மாகாண மகாநாட்டில்தான் பெரியார் அவர்கள் வகுப்புவாரித் தீர்மானத்துக்கு - அதாவது வகுப்பு எண்ணிக்கைக்குத் தக்கவாறு உத்தியோகங்கள் தரப்படவேண்டும் என்ற கொள்கைக்கு - ஆதரவு திரட்ட முற்பட்டார். அப்பொழுது மகாநாட்டுக்குத் தலைமை வகித்த திரு.வி.க. தீர்மானம் வருவதை அனுமதிக்க மறுத்துவிட்டார். அதனால் வெகுண்டெழுந்த ஈ.வெ.ரா. அவர்கள் தலைமை வகித்தார். --------------------- அண்ணா அவர்களைப் பொறுத்தவரை முற்றிலும் ஒரு பச்சையப்பன் மாணவன் ஆவார்.

அகர முதலாய எழுத்துக்களைக் கற்றுக் கொள்ளும் முதல் வகுப்பிலிருந்து அனைத்துலக அரசியயல் தத்துவங்களை ஆராய்ந்திடும் பி.ஏ. சிறப்பு வகுப்பு வரை பச்சைய்ப்பன் கல்வி நிறுவனங்களில் ஒன்றிலிருந்து ஒன்றாக, அண்ணா அவர்கள் முடித்து வந்தார்கள்.

முதல் நான்கு வகுப்புகளை காஞ்சிபுரத்திலுள்ள பச்சையப்பன் துவக்கப்பள்ளியிலும், பிறகு பத்தாவது வரை காஞ்சி பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் படித்து முடித்தார்கள்.

பள்ளிப் பருவத்தில் அண்ணா அவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பாராம். அடக்கமாகவும், ஒழுங்காகவும் வகுப்புகளில் நடந்து கொள்வாராம். வீட்டிலும் தொத்தா - அண்ணா அவர்களின் சின்னம்மா, இராசாமணி அம்மையார் - அவர்களின் மேற்பார்வையும் கண்டிப்பும் இருந்தன. ஒழுக்க சீலமுள்ள மாணவன் என்று பள்ளியில் அவர் பரிசு பெற்றிருக்கிறார்.

அண்ணா அவர்கள் பத்தாவது பரிச்சையில் முதலாண்டு தேர்ச்சி பெறவில்லை! ஆச்சரியமாக இருக்கிறதா?

எல்லா பாடங்களையும் அண்ணா சரிவத்தான் படிப்பாராம்; ஒரு முறை படித்தால் புரிந்து கொள்ளும் தன்மையும், ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் திறமையும் அவருக்கு நன்கு இருந்தன. இருந்தபோதிலும் கணக்குப் பாடம் மட்டும அண்ணாவிடம் சிக்க மறுத்தது.

பள்ளிப் படிப்பில் அதுதான் முதல் தடவையாக அவர் தேர்ச்சி பெறாத நிகழ்ச்சி. வீட்டுக்குப் போய் தெரிவித்தால் அவருடைய தொத்தா திட்டப் போகிறார்களே என்ற பயம். நல்லவேளையாக அவருடைய பள்ளித் தோழர் சி.வி.இராசகோபால் கிடைத்தார், தாக்குதலைத் தாங்கும் முன்படையாகச் செல்ல!

சி.வி.இராசகோபால் அண்ணாவுடன் புள்ளியில் ஒன்றாகப் படித்து வந்தவர். அவரும் அந்த ஆண்டு தேர்ச்சி பெறவில். (அதற்குப் பிறகு அவர் தேர்ச்சி பெற்று, பத்தாவதைக் கடந்து, கல்லூரிக் வந்தாரா என்று கேட்டுவிடாதீர்கள்! கற்றது கைம்மண்ணளவு, நமது படிப்பு காஞ்சி மண்ணளவு என்று காஞ்சிபுரத்தில் இருந்த பத்தாவதுடன் நின்றுவிட்டார். அதற்குமேல் செல்லவில்லை; பாழாய்ப்போன பரீட்சைகளும் மார்க் போடும் புண்ணியவான்களும் அவரைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.)

முதலில் இராசகோபாலை தொத்தாவின் முன் அண்ணா அனுப்பிவைத்தாராம். சிறுகரும்பூர் சீமான் வீட்டுப்பிள்ளை உண்மையில் சி.வி.இராசகோபாலின் தந்தை செல்வ மிக்கச் சீமானாகக் காஞ்சியில் திகழ்ந்தவர். அப்படிப்பட்ட பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளை கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே நிற்பதைப் பார்த்ததும், தொத்தா மிக ஆதரவுடன் என்னப்பா, ஏன் கண்ணைக் கசக்கிக்கொண்டு நிற்கிறாய்? என்று கேட்டார்.

இல்லை தொத்தா! வந்து . . .

சொல், தைரியமாக! . . .

எனக்குப் பரிட்சையில் பெயில் ஆகிவிட்டது!

பெயில் ஆனால் என்ன? மறுபடியும் படித்து பாஸ் ஆகிறதுதானே!

செய்யலாம்! ஆனால் அப்பா திட்டுவாரோ, அடிப்பாரோ என்று பயமாக இருக்கிறது!

அதற்குப்போய் திட்டுவார்களா, அடிப்பார்களா? பேசாமல் மறுபடியும் நன்றாகப் படி! என்று தொத்தா புத்திமதி கூறினார்கள்.

முன்னேற்பாடு முடிந்ததும், மறைந்திருந்த அண்ணா மெதுவாக எதிரே வந்து நின்றார். தொத்தாவின் பார்வை அண்ணா மீது விழுந்தது.

என்னடா, உன் கதை என்ன?

வந்து, வந்து . . . அதற்குமோல் வாத்தைகள் வரவில்லை.

என்ன வந்து வந்து சொல்!

தொத்தா எல்லா பாடங்களிலும் நல்ல மார்க்குகள்தான்!

அப்புறம்!

கணக்கில் மட்டும் கொஞ்சம் மார்க் குறைந்துவிட்டது!

பெயிலாகிவிட்டேன் என்று சொல்! எனக்கு அப்பொழுதே தெரியும்! நீ எங்கே படித்தாய்? பாடங்களை ஒழுங்காகப் படித்திருந்தால் இப்படி ஆகுமா? என்று தொத்தா பிடித்துக்கொண்டார்கள். பத்தாவது பரீட்சையில் தேறி, கல்லூரியில் சேரும்பொழுது, கலையில் பகுதிப் பாடங்களில் வரலாறு தத்துவம், பொருளாதாரம் என்று போய்விடுவதால் அதன் பிறகு கணக்குப் பாடம் வரவில்லை.
------------------ அண்ணா அவர்கள் தமது பி.ஏ. ஆனர்ஸ் படிப்பின் இறுதிப் பரிட்சையை 1935 ஏப்ரலில் எழுதி முடித்து, கல்லூரி விட்டு வெளிவந்தார்கள்.

அவ்ர கல்லூரியில் இருந்த காலத்தில், பார்ப்பனரல்லாதார் இயக்கம் - சுயமரியாதை இயக்கம் - சமதர்மக் கருத்து - இவைகள் மேலோங்கி வந்தன. இந்தச் சூழ்நிலையில் அண்ணா கல்லூரியை விட்டு வெளிவந்தார்.

பரிட்சை எழுதிவிட்டு, பரிட்சை முடிவு தெரியாத சமயத்தில், அண்ணா அவர்களுக்கு பெரியாரை நேரில் கண்டு தன் எதிர்காலம் பற்றிப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
(இரா.செழியன் - மன்றம்,1969)

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai