அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 51


துறையூரில் நடைபெற்ற மாநாட்டுக்கு சி.என்.அண்ணாதுரை எம்.ஏ. அவர்கள் தலைமை வகிப்பதாகப் பத்திரிகையில் நாங்கள் படித்திருந்தோம்.

துறையூர் மாநாட்டைப் பற்றியும் நிகச்சிகளைப் பற்றியும் சொன்ன பிறகு, அழகிரிசாமி அவர்கள் கூறினார்:
தலைமை வகித்த அண்ணாதுரை நன்றாகப் பேசுகிறான். கருத்தும் சொல்லும் கோர்வையாக வருகிறது. நன்றாக வருவான். ஆனால் பொடி போடுகிற பழக்கம் இருக்கிறது. அது இல்லாமல் இருந்தால் நல்லது!

அண்ணாவைப் பற்றிக் கிடைத்த முதல் அறிமுகம் இதுதான்!

பொடி போடும் பழக்கம் இருக்கிறது அது இல்லாமலிருந்தால்!

அழகிரிசாமி அவர்கள் கூறினார்: துறையூர் மாநாட்டில், அண்ணாத்துரை தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசியதற்குப் பிறகு நான் பேசினேன் அவ்வளவுதான்!

பேச்சில் அண்ணாதுரைக்கு அடுத்தபடியாக அழகிரிசாமி என்றது பேசியநேரத்தில்!

நம்முடைய பேச்சு வழக்கம்போல் பந்திக்கு முன் பேச்சுதான்! என்று நகைச்சுவையுடன் அழகிரிசாமி கூறினார்.

முசிரி தாலுகா மூன்றாவது சுயமரியாதை மகாநாடு துறையூரில் நடைபெற்றது. 1937 ஆம் ஆண்டு. அப்பொழுது அண்ணா அவர்களுக்கு வயது 27தான்! இளைஞராக இருந்த தம்மை ஒரு மாநாட்டுக்குத் தலைமை தாங்க அழைத்தமையை ஒரு பெருமையாக அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள்.

27 வயது இளைஞர் எம்.ஏ.பட்டம் பெற்றவர் - கல்லூரியை விட்டு வந்து இரண்டு மூன்று ஆண்டுகள் தானாகிறது - தோற்றத்தில் சற்றுக் குள்ளமானவர் - கொல்லாற்றலில் மிகவாக உயர்ந்து நிற்பவர் - நன்றாக வரக்கூடியவர் - ஆனால் பொடி மட்டும் போடுகிறார் - இந்த அளவுதான் சி.என்.அண்ணாதுரை அவர்கள் எங்களுக்கு தமிழகத்தின் இளம் உள்ளங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

அறிஞர் அண்ணா அவர்கள், சென்னைத் தோழர் சி.என்.அண்ணாதுரை என்ற முறையில் தமிழக மக்களுக்கு 1936 1937 ஆண்டுகளில் அறிமுகமானார்கள். 1937ல் நடைபெற்ற துறையூர் மகாநாட்டில் அண்ணா அவர்கள் தலைமை வகித்ததை முதலில் நான் குறிப்பிட்டுள்ளேன். அந்த ஆண்டுகளில், மகாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் அண்ணா அவர்கள் தீவிரமாகப் பங்கு கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.

ஜஸ்டிஸ் கட்சியைப் பெரியார் அவர்களும் அண்ணா அவர்களும் ஆதரித்தற்குக் காரணம், ஜஸ்டிஸ் கட்சியில் இருந்தவர்களை ஆதரிக்கவேண்டும் என்பதற்காக அல்ல. ஜஸ்டிஸ் கட்சி அரசியலில் ஆற்றியிருந்த பணியும்தான்!

ஜஸ்டிஸ் கட்சியை நீதிக்கட்சி என்று அழகுபட அண்ணா அவக்ரள் பேசினார்கள். பத்திரிகைக்கு இருந்த ஜஸ்டிஸ் என்ற பெயர். அந்தக் கட்சிக்கு ஏற அண்ணா அதை மொழிபெயர்த்து நீதிக்கட்சி என்றார். சமுதாயத்தில் பின் தங்கியவர்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீதி வழங்க அந்தக் கட்சி வந்தது, நீதி வழங்கியது என்பது அவருடைய கருத்தாகும். அரசியலில் சம உரிமை கேட்டு ஜஸ்டிஸ் கட்சி பாடுபட்டது. சுயமரியாதை இயக்கம் கருத்துப் புரட்சியைத் துவக்கிவைத்தது; ஜஸ்டிஸ் கட்சி செயலளவில், அரசாங்க அமைப்பில் சில திட்டங்க்ளைக் கொண்டுவந்தது.
(இரா.செழியன் - மன்றம்,1969)

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai