அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 48

அதிர்ச்சிக்கு வைத்தியம்!!

ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது - மாணவனின் கண்களிலே நீர் குபுகுபுவெனக் கிளம்பி வழிகிறது - அவன் தாயார் அதைக் கவனிக்கவில்லை - மாணவன் முகத்தை வேறு பக்கம் வைத்துக் கொண்டிருக்கிறான்.

கோவெனக் கதறவில்லை - ஆனால் விம்மலை அடியோடு அவனால் அடக்க முடியவில்லை - ரயில் ஓடும் சத்தத்தால் மிமல் தாயாரின் செவியில் விழவில்லை. வண்டியிலிருந்த வேறு சிலர், இந்தக் காட்சியைக் கண்டுவிட்டார்கள் - ஏண்டா, தம்பீ! அழறே? - கேட்டும் விட்டார்கள்.

அலறலுடன் தாயார் கேட்கிறார்கள் - ஏண்டா அழுகை?

விம்முகிறான் - பதில் இல்லை. கேள்வி, மறுபடியும்! பதில், விம்மல்தான்.

என்னடா நடந்தது? ஏன் அழுகிறே - சொல்லித் தொலையேன் . . . - கேள்வி, கடுமையாகிறது.
ஒண்ணுமில்லை . . . பதில், அழு குரலில்.

கோபம் விறந்துவிட்டது தாயாருக்கு - ஏண்டா! நாகப்பழம் தின்றதற்காக அடித்தேனே, அதற்காகவா அழறே? என்று ஆராய்ச்சித் திறத்துடன் கேட்கிறார்கள். ஆமாம் என்கிறான் மகன். அவன் பதில் கூறியதும், தாயாருக்கே தெரிகிறது, தான் கேட்ட கேள்வி அசட்டுத்தனமானது என்று. ஏனெனில், மகன், நாகப்பழம் தின்று அதற்காக அடிபட்டது, காலையில், 9 மணி சுமாருக்கு - அதற்காக பிற்பகல் 3 மணிக்கா அழுவான் - ஓடும் ரயிலில்!

டேய்! உண்மையைச் சொல். இன்னும் இரண்டு நாள் இங்கே இருக்கவேண்டும் என்று அழுகிறாயா? - கடுமையாகவே இருக்கிறது கேள்வி. ஆமாம் என்று அறிவிக்கிறான் தலை அசைப்பால்.

மலைப் பிரதட்சணத்தின் போது, தலையிலே குட்டினேனே, அதை எண்ணிக்கொண்டா இப்ப அழறே? - வேறோர் கேள்வி பிறக்கிறது. ஆமாம் என்றே இதற்கும் பதில்!

வண்டியிலே உள்ளவர்கள் சிரிக்கிறார்கள் - கண்ணீர் நிற்கவில்லை.

ஊருக்குப் போனதும், நாளைக்கு, பள்ளிக்கூடம் போகவேணுமே, விளையாடுவதற்கு இல்லையே, என்று அழறியா? - விபரீதமான கேள்விதான் ஆனால் இதற்கும், ஆமாம் என்றே பதில் அளிக்கிறான் மகன்.

வேறு கள்வி கேட்கும் பொறுமை, நீடிக்குமா, யாருக்கேனும்! எனவே கேள்விகள் நின்றுவிட்டன, மிரட்டல் பிறந்தது - கண்ணீர் மட்டும் நிற்கவில்லை!

வெள்ளி, சனி, ஞாயிறு - மூன்று நாட்கள், உல்லாசப் பயணம் போய் வருகிறார்கள், தாயும் மகனும், திருக்கழுக்குன்றம் என்ற ஊருக்கு - உல்லாசப் பயணம் என்ற நினைப்பும் பெயரும், இப்போது தரப்படுவது. அப்போது? திருவிழாவிக்குப் போனார்கள்.

திருவிழவிலே வேடிக்கை, மலைப் பிரதட்சணத்திலே மகிழ்ச்சி, புதிய விளையாட்டுச் சாமான்கள் வாங்கியதிலே திருப்தி - எல்லாம் குறைவற! எனினும், அவன் அழுகிறான், காரணம் கூறவுமில்லை.

எப்போதோ அடித்ததற்கு, இப்போது அழுவதா! - மாடுகள் அதை போடும் உணவை - மாணவன் துக்கத்தை அசை போடுகிறானே!

வியப்பு, வண்டியிலிருந்தவர்களுக்கு - கோபம், தாயாருக்கு! மகனுடைய கையைப் பிடித்து இழுத்தபடி, என்னடா நாலு நாழியா நான் கத்துக்கத்துன்று கத்தறேன் . . . என்று கூறி முடிப்தற்குள், ஐயயோ . . . கையை விடு, விடு கையை, ஐயயோ என்று கையை உதறியபடி கதறுகிறான் மகன். விஷயம் அப்போதுதான் தெரிகிறது - கை, கட்டை விரல், நசுங்கிப் போயிருக்கிறது - இரத்தமும் கசிகிறது, கோபம் பறந்துவிட்டது தாயாருக்கு - அட கண்ணே! இதென்னடா? என்று கேட்டு, கையைப் பதமாகப் பிடித்துப் பார்த்து பதறுகிறார்கள் - வண்டியிலே இருந்தவர்களும் சோகமாக அடடே! அதான் பையன் அழுதுகிட்டு இருந்தான் என்று கூறுகிறார்கள். எப்படி விரல் நசுங்கி விட்டதடா அப்பா! தாய் உள்ளம் பேசுகிறது! மகன், ரயில் வண்டிக் கதவைக் காட்டுகிறான் - விம்மலும் வெட்கமும் கலந்த நிலையில். அட அசடா! கதவைச் சாத்தினபோது கைவிரல் நசுங்கிவிட்டதா தாயார் கேட்கிறார்கள். ஜாக்ரதை இருகக வேணாமா, ஏண்டாப்பா, படிக்கிற பிள்ளைக்கு, ரயில் வண்டிக் கதவைச் சாத்தக் கூடவா தெரியாது வண்டியிலே ஒருவர் கேலி செய்கிறார்.

பையனுடைய பொறுமையை பார்த்தேளோ! மத்த பையன்களா இருந்தா, இன்னேரம லபோ திபோன்னு கூவிண்டன்னா இருக்கும் ஒரு வைதீகர், வாத்சல்யமாகக் கூறுகிறார்.

இப்படி ஒரு அசட்டுப் பிள்ளை இருக்குமா - சரி, சரி, காட்டுடா விரலை தாயார் கூறிவிட்டு, ஈரத்துணி கொண்டு விரலைத் துடைத்துக் காட்டுகிறார்கள் - கண்ணீரைத் துடைத்துக கொள்கிறான் மாணவன்.

கட்டை விரல், ரயில் கதவின் இடுககிலே சிக்கிக் கொண்டது, தான் சாத்தும்போது என்பதை வெளியே சொல்ல வெட்கம் - அதேபோது கைவிரல் நசுங்கியதால் ஏற்பட்ட வலியைத் தாங்கிக் கொள்ள முடியாத நிலை - எனவே கண்ணீர் - விம்மல்! என்ன காரணம் என்று கேட்டதற்கு, உண்மையைக் கூறினால் கேலி செய்வார்களே என்ற கூச்சம்! எனவே ஏதேதோ நொண்டிச் சாக்குகளைக் காட்டினான் - நெடு நேரம் - கடைசியில் உண்மைக் காரணம் வெளிவந்துவிட்டது. கண்ணீர் நின்றது - ஆனால் முகத்திலேயே அசடு வழிந்தது, அந்த மாணவனுக்கு.

அந்த மாணவன், வேறு யாருமல்ல, நானேதான்! ஆமாம்! நான் ஆறாவது வகுப்பு படிக்கும் மாணவனாக இருந்தபோது நேரிட்ட சம்பவம், மேலே குறித்திருப்பது.
(அறிஞர் அண்ணா )

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai