அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 47

கறுப்புச் சட்டைப் படை

கறுப்புச் சட்டைப் படை என்ற பெயரில் தொண்டர் படை ஒன்று நிறுவ வேண்டும் என்ற தீர்மானம், முதன் முதல், 1945ஆம் ஆண்டில் திருச்சியில் நடைபெற்ற திராவிடக் கழக மாநில மாநாட்டில்தான் நிறைவேற்றப்பட்டது.

அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் அறிஞர் அண்ணா அவர்களேயாவார்கள். கழகத் தொண்டர் படைநிறுவுவது பற்றிப் பெரியார் இராமசாமியும் அறிஞர் அண்ணாவும் கலந்து உரையாடிக் கொண்டிருந்தபோது, தொண்டர் படைக்கு எந்த நிறச் சட்டையை ஏற்படுத்தலாம் என்ற பேச்சு எழுந்தது. அப்பொழுது மஞ்சள் காங்கிரசின் நிறமாகவும், சிவப்பு கம்யூனிசுட்டின் நிறமாகவும், பச்சை முசுலீம் லீக்கின் நிறமாகவும், ஊதா ராடிக்கல் டெமாக்ரடிக் கட்சியின் நிறமாகவும் பொதுவாக நாட்டினரால் கருதப்பட்டு வந்தன. கழகத்தின் நிறமாக அவை தவிர்த்த வேறோர் நிறத்தைத் தேடவேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. கழகத் தொண்டர் படைக்குக் கறுப்புச் சட்டையை அடையாளமாகக் கொள்ளலாம் என்றும் இத்தாலிய நாட்டு விடுதலை வீரன் காரிபால்டியின் விடுதலைப் படை கறுப்புச் சட்டைப் படை என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது என்றும், எனவே கழகத்தின் தொண்டர் படைக்குக் கறுப்புச்சட்டைப் படை என்று பெயரிடலாம் என்றும் அறிஞர் அண்ணா அவர்கள் தெரிவித்தார். அண்ணாவின் கருத்து பெரியாருக்கு ஏற்புடையதாகவே பட்டது. பிறகு அது மாநாட்டில் தீர்மான வடிவு பெற்றது.

தீர்மானம் நடைமுறைக்கு வரும்போது, வேறு உருவம் பெறத் தொடங்கிற்று. தொண்டர் படைக்கு என்று ஏற்படுத்தப்பட்ட கருப்புச் சட்டை அடையாளம், கழகத் தோழர்கள் அனைவரும் போட்டுக் கொள்ளவேண்டிய அடையாளமாகப் பெரியாரால் மாற்றப்பட்டது. தீர்மானம் ஒன்று, நடைமுறை வேறாக அமைந்தது. இந்தப் போக்கு அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பொறுக்கி எடுக்கப்படும் தொண்டர் படையினர் மட்டும்தாம் முறையான கறுப்புச் சட்டை அணியவேண்டுமேயல்லாமல் கழகத் தோழர்கள் அனைவரும் கண்ட கண்டபடி கறுப்புச் சட்டையை அணியக்கூடாது என்பது அறிஞர் அண்ணாவின் கருத்தாகும். போலீசுக்குகாரன் உடையைப் பிறர் எப்படி அணியக் கூடாதோ, படைவீரனின் உடையைப் பிறர் எப்படிப் போட்டுக்கொள்ளக் கூடாதோ, நீதிபதியின் உடைகளைப் பிறர் எப்படி மாட்டிக்கொள்ளக் கூடாதோ அப்படியே கறுப்புச் சட்டையைத் தொண்டர் படையினர் தவிர பிறர் அணியக்கூடாது என்ற முறை வேண்டும் என்று அண்ணா அவர்கள் பெரியாரிடத்தில் பல தடவை வாதாடினார்கள். கடமையுணர்ச்சியுள்ள தகுதிவாய்ந்த கழகத் தொண்டர் மட்டுந்தான் கறுப்புச்சட்டை அணியவேண்டும என்றும் அந்த வகையில் அதன் மதிப்பு போற்றிக் காப்பாற்றப்படவேண்டும் என்று அண்ணா அவர்கள் கருதினார்கள். இல்லையாயின் கறுப்புச்சட்டையின் மதிப்பு பல வகைகளிலும் குறைக்கப்பட்டுப் போய்விடும் என்று அவர்கள் கருதினார்கள். குறிப்பிட்ட பணியைக் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் செய்யும்போதுதான் கறுப்புச் சட்டை அணியவேண்டுமே தவிர எங்கும் எப்போழுதும், எந்தப் பணியைச் செய்யும்போதும் அணியக் கூடாது என்ற வரைமுறை இருக்கவேண்டும் என்றும் அண்ணா அவர்கள் எடுத்துரைத்தார்கள். ஆனால் பெரியார் அவர்கள் அண்ணாவின் கருத்துககளைச் செவிமடுக்கத் தயாராக இல்லை. கறுப்புச் சட்டையைப் போட்டுக்கொள்ள அண்ணா அவர்கள் வெட்கப்படுகிறார் என்று தவறாகக் கருதிக்கொண்டு, பெரியார் அவர்கள், கழகத் தோழர்கள் எல்லோரும், எப்பொழுதும், எங்கும் கறுப்புச் சட்டையைக் கூடுமான வரையில் அணியவேண்டும என்று அண்ணாவின் கருத்துக்கு அதிரான முறையில் வற்புறுத்திவரத் தொடங்கினார்கள். அந்த முறை அண்ணாவுக்கு அறவே பிடிக்கவில்லை. அண்ணா அவர்கள் தலைவரின்கட்டுப்பாட்டின் காரணமாக மேடை ஏறிப் பேசும்போது மட்டும் வேண்டா வெறுப்போடு கறுப்புச் சட்டையை அணிந்து வந்தார்கள். அதனால்தான் வரையறையற்ற முறையில் கறுப்புச் சட்டையணியும் பழக்கத்தை அண்ணா அவர்கள் மேற்கொள்ளவில்லை; மேற்கொள்ள விரும்பவில்லை.

கறுப்பு சட்டைப் படைக்குத் தடை விதிக்கப்பட்டபோது இயக்கத்தின் மிக்கத் தொடர்பு கொள்ளாமல் அது வரையில் ஒதுங்கி நின்ற அறிஞர் அண்ணா அவர்கள் கறுப்புச் சட்டை அணிந்துகொண்டு ஓடோடியும் கறுப்புச் சட்டை மாநாட்டில் கலந்துகொண்டார்கள். இது அண்ணாவின் தூய பண்பையும், கடமையுணர்ச்சியையும் காட்டுவதாகும்.
(மன்றம்: நாள் 15.04.1956)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai