அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
46
ஜஸ்டிஸ்
கட்சி திராவிடர் கழகமாகிவிட்டது
பட்டம் பதவிகளை விட்டுவிடத் தீர்மானம்!
பி.பா.பணிவு! கீ.ஆ.பெ.கனிவு!
தலைவர் பெரியாரின்
முழக்கம்
தோழர், சி.ஜி.நெட்டோவால் கேட்டுக்கொள்ளப்பட்டும், தோழர்கள், சௌந்தர
பாண்டியனார், டி.சண்முகம், துரைசாமி, கணேச சங்கர், திருமதி இராமாமிர்தத்தம்மாள்
ஆகியவர்களால் ஆதரிக்கப்பட்டும், பெரியார் வாழ்க, திராவிட நாடு திராவிடருக்கே
என்று வீர முழக்கத்துடனும், கை தட்டுதலுக்கிடையேயும், பெரியார் அவர்கள்
மாநாட்டுத் தலைவராகயிருந்து செய்த வீர முழக்கம் வருமாறு:
வரவேற்புத் தலைவரவர்களே,
பெரியோர்களே, தாய்மார்களே, இளைஞர்களே, என்னை இம்மாநாட்டுக்குத் தலைவராகத்
தேர்ந்தெடுத்தது பற்றி யான் ஓரளவு மகிழ்ச்சியடைகிறேன். நான் இம்மண்டபத்திற்குள்
நுழையும் போது என்னிடம் தாங்கள் காட்டிய பெருமிதமான அன்பால் என்னுடைய
கட்சியின் தலைவராக இருப்பது இதுதான் கடைசி முறையாகும். அடுத்த மாநாட்டில்
வேறு தலைவரை நீங்கள் அவசியம் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
நீங்கள் உள்ளபடியே
என்னைத் தலைவராகயிருக்குமாறு வேண்டுகின்றீர்களென்பதை நானறிவேன்.
நான் இட்ட கட்டளைக்குச் செவிசாய்த்து நாட்டின் பல பாகங்களிலிருந்து
பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இங்கு கூடியிருக்கின்றீர்கள். அதுமட்டுமல்ல,
மாநாட்டில் யாதொரு கலவரமும் நடைபெறாதவாறு நடந்து கொள்ள வேண்டுமென்றும்
உங்களை வேண்டியதற்கு, அதற்கும் எனது தாட்சண்யத்திற்காக கட்டுப்பட்டுக்,
கிளர்ச்சி செய்யாதிருந்தீர்கள். தோழர் பி.பாலசுப்பிரமணியம் பேசுகையில்,
தலைவரை இதுவரை பின்பற்றியே நடந்து வந்துள்ளேன் என்றும், மற்றவர்கள்
யாரும் தலைவராகயிருக்க யோக்யதை இல்லையென்றும் மற்றும் பலவாறாகவும்
பேசி என்னைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்தார். அவரின் போக்கின்படியே,
மற்றவைகளை மறந்து அவரை வரவேற்கிறேன். எனது நண்பர் விசுவநாதனும்,
தனக்கும், தலைவருக்கும் யாதொரு மனக் கஷ்டமும் இருந்ததில்லையென்றும்,
கட்சி அமைப்பும் வேண்டுமென்றும் சொல்லித் தலைவரைச் சர்வாதிகாரியாக்கிவிட்டால்
எல்லாவற்றையும் விடச் சிறந்ததாகுமென்று குறிப்பிட்டார்.
நான் கூறுகிறேன்,
பொதுவாழ்வில் நான் ஈடுபட்டதிலிருந்து இன்றுவரை ஒருவிதத்தில் சர்வாதிகார
மனப்பான்மையுடனேதானிருந்து வருகிறேன். நம் நாட்டு மக்கள் இன்றுள்ள
நிலையில் ஓரளவாவது தன்மான உணர்ச்சி பெறவேண்டுமானால் அதற்காகப் பொறுப்பேற்றுக்கொள்ளும்
தலைவன் சர்வாதிகாரி மனப்பான்மை கொண்டவனாகயில்லாவிடில், ஒரு சிறுகாரியங்கூடச்
சாதிக்க முடியாது. கட்சியின் அமைப்பு முறை பற்றிச் சிலயோசனைகள் சொல்லப்பட்டது
எனக்குத் தெரியும். அமைப்புமுறை மட்டுமிருந்தால் சர்க்கார் மதித்து
விடுவார்கள் என்று கருதுவது பைத்தியக் காரத்தனமாகும். இதனால் அமைப்பு
முறைவேண்டா மென்பது எனது கருத்தல்ல. யான் கேட்கிறேன் அமைப்பு முறைபற்றிக்
குற்றம் சொல்ல முன் வந்துள்ளவர்களை, இவர்கள் இதுவரை இவர்களிருக்கும்
மாவட்டங்களில் என்ன சாதித்திருக்கிறார்கள் என்று. கட்சித் தலைவன்
என்ற முறையில் பல வேண்டுகோள்கள் பத்திரிகையில் வெளியிட்டேன், பல
தடவைகளில் கடிதமும் எழுதிக் கேட்டிருக்கிறேன். நேரிலும் சில சந்தர்ப்பங்களில்
வேண்டியுமிருக்கிறேன். சில ஜில்லாக்கலில் ஈடுபட்டார்கள். எத்தனை
ஜில்லாக்களில் கட்சியின் திட்டங்கள் கவனிக்கப்பட்டன? அக்காலங்களிலெல்லாம்,
வீண்வேதாந்தம் பேசிவிட்டுக் கட்சியில் அமைப்பு முறையில்லை இது சரியில்லை,
அது அப்படி நடக்க வேண்டும் என்று சொல்லி விடுவதால் தங்களில் குற்றங்களை
மக்கள் மறந்து விடுவார்கள் என்பது கருத்தா?
காங்கிரசைத்தான்
எடுத்துக் கொள்ளுங்கள், தோழர் ஆச்சாரியாரோ, அல்லது காந்தியாரோ, ஊர்ஊராகச்
சென்று சங்கங்களை ஏற்படுத்துகிறார்களா? அல்லது நமது ஜனாப் ஜின்னா
அவர்கள்தான் அவ்வாறு செய்கிறாரா? அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டால்
எல்லா இடங்களிலும் காரியங்கள் நடைபெறுகிறது. ஆங்காங்குள்ளவர்கள்
திரண்டு சேருகிறார்கள்.. ஆனால் நமதியக்கத்திலோ, எல்லாம் மேதாவிப்பாடமாகவும்,
தலைகீழாகவும் நடைபெற்று வருவதோடு, அமைப்பு முறை ஏற்படுத்தவில்லையென்று
சொல்லித்திரிவது ஒப்புக் கொள்ள முடியாத வாதமாகும். கட்சியின் அமைப்பு
முறையைக் கண்டு சர்க்கார் ஒருக்காலும் கலங்காது. வேண்டுமானால் அமைப்பு
முறை வேண்டுமென்பவர்களுக்கோ, அதன் மூலமாக மற்றப் பதவிகளை வேண்டுமென்று
ஆசைப்படுபவர்களுக்குத்தான் அது பெரிதும் பயன்பட முடியும். உண்மையிலேயே
சர்க்காரை நம் எண்ணத்திற்குப் பணியவைக்க வேண்டுமாயின் குறைந்தது
4000 பேர்களாவது சிறைபுகத் தயாராயிருக்கவேண்டும்.
நாம் நாட்டின் உண்மையான
தேவைகளைக் கட்டுப்பாடாக எடுத்துச் சொல்ல வேண்டும், நியாயமான கிளர்ச்சிகளைச்
செய்ய வேண்டும். அப்போதுதான் சர்க்காரின் கண்கள் திறக்கும் அதைவிட்டுவிட்டு,
மானங்கெட்ட பட்டம் பதவிகளுக்கு ஆசைப்பட்டுக் கொண்டு, சர்க்கார் காலடியில்
ஆயிரத்தெட்டுக் கும்பிடு போட்டுக் கொண்டும் கவர்னர் மாளிகை வாயிற்படியில்
அவரின் பேட்டிக்காகக் காத்துக் கொண்டுமிருந்துவிட்டு, என்னதான் அமைப்பு
முறையுடனிருந்தாலும், அது போலித்தனமானது என்பதே எனது கருத்து. சர்க்காரும்,
மற்ற இயக்கத்தினரும்கூட அவ்விதமே தான் நம்மைப் பற்றியும், நமது கட்சியின்
அமைப்பு முறையைப் பற்றியும் அலட்சியமாகக் கருதுவர். இன்னும் சில
நாட்களுக்குள் நாம் பெரிய தியாகம் புரியத் தயாராகயிருக்க வேண்டுமென்பதையும்
இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
எனது ஆருயிர் நண்பரான சவுந்தர பாண்டியன் அவர்களைப் பொறுத்தவரையிலும்
நமது தோழர் சென்னைத் திருவொற்றியூர் டி.சண்முகம் அவர்களும் இன்னும்
இரண்டொருவரும் தங்களின் பதவிகளைத் துச்சமாக மதித்துவருகின்றனர் என்பதையும்,
அவர்களின் வாழ்க்கைக்கு இது தூசி அளவுகூடப் பயன்படாதென்பதையும் அவர்கள்
இம்மேடையிலேயே தங்களின் பதவிகளை வீசி எறியத் தயாராயிருப்பதையும்
நானறிவேன். சில சமயங்களில் நண்பர் பாண்டியன் அவர்களைப் பற்றிக் கோபமாக
நான் பேசுவதுண்டு எதனால்? அவரின் பேரால் சிலர் இல்லாததெல்லாம் சொல்லி,
வீண் தொந்தரவுகளை ஏற்படுத்த முயற்சிக்கையில். அவ்விதம் யான் பேசுவதுண்டு.
நண்பர் பாண்டியன் அவர்களும் அதை அறிவார். நான் அவரை எனது சகோதரர்
போலவும் அவர் என்னைத் தனது தகப்பனாரைப் போன்றோ, மூத்த சகோதரர் போன்றோ
பாவித்து வருகிறார். உண்மையிலேயே எனக்குப் பதிலாகக் கட்சியை நல்ல
முறையில் நடத்தக் கூடிய நம்பிக்கையான இரண்டொருவர்கள் இருக்கிறார்களென்றால்
அதில் முதன்மையானவர் நமது பாண்டியன் அவர்களேயாகும்.
ஆகவே தோழர்களே, இனி
நாம் நமது கிளர்ச்சியைத் தீவிரமாக ஆரம்பிக்க வேண்டும், ஆரியத்திற்கும்
புத்திப் புகட்ட வேண்டும், அதேசமயத்தில் சர்க்காரும் நமது கிளர்ச்சியைக்
கண்டு, நம் திராவிட நாட்டின் விடுதலை வேட்கையைப் பூர்த்தி செய்யுமாறு
செய்விக்க வேண்டும். நான் இதுவரை கூறியவைகளில் ஏதாவது தீவிரமாக இருப்பினும்
அவ்வளவும் நமக்குள்ளிருக்கும் கட்டுப்பாடு வளர்ச்சியடையவேண்டு மென்பதற்காகத்
தானேயன்றி வேறில்லை என்று விளக்கமாகப் பேசினார்.
பின்னர் மாநாடு பகல்
உணவிற்காக ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் மாலை 3.30 மணிக்குக் கூடிற்று
மாலை 3.30 மணியிலிருந்து 5 மணி வரையில் விஷயாலோசனைக் கமிட்டியில்
முக்கிய தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது. அதில் தளபதி பாண்டியன்
அவர்களும், டி.சண்முகம் அவர்களும் மற்றும்பல தோழர்களும் கலந்துகொண்டனர்.
பெரியார் அவர்களும் தோழர் சி.என்.ஏ. அவர்களும் தீர்மானங்களை விளக்கிப்
பேசினர்.
5-மணிக்கு மாநாட்டில்
தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. தெ.இ.ந.உ. சங்கம் என்பதற்குப் பதிலாக
திராவிடர் கழகம் என்று மாற்றுவதென்ற தீர்மானத்தை தோழர் சி.என்.ஏ.
கொண்டுவந்தார். தோழர் டி.சண்முகம் ஆதரித்துப் பேசினார். இந்நிலையில்
தோழர்கள் நெட்டோவும், கணேச சங்கர், மதுரை வேணுகோபால் ஆகியோரும் அதை
எதிர்த்துப் பேசினர். கூட்டத்தில் கிளர்ச்சி ஏற்படயிருந்ததைப் பெரியார்
அடக்கி அவர்கள் வாதத்திற்குத் தகுந்த பதில் சொல்லலாமென்றும் சமாதானம்
சொன்னார். பின்னர் தீர்மானத்தை ஆதரித்துப் பேசப் பல தோழர்கள் முன்வந்தனர்.
நேரமில்லாததால் தலைவரே அதற்குப் பதில் சொல்லுகையில், ஜஸ்டிஸ் கட்சி
என்ற பெயரே இதுவரை இருந்ததில்லை என்றும் கட்சியின் ஆங்கிலப் பத்திரிகைக்குத்தான்
ஜஸ்டிஸ் என்ற பெயர் இருந்து வந்ததாகவும், தெ.இ.ந.உ.சங்கம் என்பதை,
நாம் இந்தியர்கள் என்ற பெயரை ஏற்றுக் கொள்வதில்லையென்ற காரணத்தினால்,
திராவிடர் கழகம் என்று மாற்றப்படுவதாயும், போதிய நோட்டீஸ் இல்லையென்று
சொல்லுவது பித்தலாட்டக்காரர்களின் கூக்குரலென்றும், கடந்த 8-மாதங்கட்கு
முன்னர் சேலத்தில் நடைபெற்ற நிர்வாகக் கூட்டத்தில் இன்று எதிர்க்க
முன்வந்த தோழர் நெட்டோ அவர்களே இதை ஆதரித்துள்ளார் என்றும் (வெட்கம்,
வெட்கம்) ஆகவே இதை உங்கள் ஓட்டுக்கு விடுகிறேன் என்றும் கூறினார்.
பத்தாயிரக் கணக்கானவர் திராவிடர் கழகம் வாழ்க என்ற வாழ்த்தொலியுடன்
கைகளை உயர்த்தி ஓட்டளித்தனர். எதிர்த்து யாராவது ஓட்டளிப்பதாயிருந்தால்
கைகளை உயர்த்துமாறு தலைவர் தெரிவித்தார். எதிர்த்துப் பேசியவர்களே
கை தூக்காமல் பேசாமல் நின்று கொண்டிருந்ததைக் கண்ட அனைவரும் மீண்டும்
வெட்கம் வெட்கம் என்று ஆரவாரித்தனர். உடனே கூட்டத்தைவிட்டு நெட்டோ
போய்விட்டார்.
சர்க்கார் அளித்துள்ள
பட்டம் பதவிகளைத் துறந்துவிட வேண்டுமென்ற தோழர் அண்ணாதுரை அவர்களின்
தீர்மானம், ஆறு மாதத் தவணையுடன், என்ற திருத்தத்துடன் தளபதி பண்டியன்
அவர்களால் ஆதரிக்கப்பட்டுக் கொண்டு வரப்பட்டது. உடனே பல பிரிதிநிதிகள்
இன்றேவிட வேண்டு என்று பேசினார்கள். கடைசியில் தலைவர் அவர்கள் அதற்கான
காரணங்களைக் கூறி ஆறு மாதத்திற்குள் நாட்டின் பல பாகங்களிலும் கிளைச்சங்கங்களை
ஏற்படுத்தி விசேஷமாநாட்டில் இதை அமுலுக்குக் கொண்டு வருவதென்ற
முடிவுடன் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
(திராவிடநாடு - 03.09.1944)
|