அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 45

ஜஸ்டிஸ் கட்சி திராவிடர் கழகமாகிவிட்டது
பட்டம் பதவிகளை விட்டுவிடத் தீர்மானம்!

பி.பா.பணிவு! கீ.ஆ.பெ.கனிவு!

27.08.1944-ல் நீதிக்கட்சியின் 16-வது மாநாடு, சேலம் திராயகராயர் பந்தலில் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டுத் தலைவர் பெரியார் ஈ.வெ.இராமசாமி அவர்கள் அன்று காலை சேலம் மார்க்கெட் ரயில் நிலையத்தில் வந்திறங்கினார். பெரியார் தொண்டர் படையினரும், பத்தாயிரக்கணக்கான திராவிட நாட்டு இளைஞர்களும், தளபதிகளும் தொழிலாளர் தோழர்களும் பெரியார் வாழ்க, என்று செய்த ஆரவாரம் வானத்தைப் பிளந்துவிட்டதென்றே சொல்லலாம்.

மோட்டாரில், தலைவரைத், தோழர் ஆர்.எஸ்.அருணாசலம் அவர்கள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். பிறகு பெரிய சாரட் வண்டியில் பெரியார் அவர்களுடன் தளபதி பாண்டியனார் அவர்களை அமரச் செய்து, தோழர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம், பி.பாலசுப்பிரமணியம் ஆகிய மற்றும் பலர் புடைசூழ பல்லாயிரக் கணக்கான மக்கள், பெரியார் வாழ்க, திராவிட நாடு திராவிடருக்கே என்ற முழக்கத்துடன் மாபெரும ஊர்வலம் ஆரம்பமாயிற்று.

இரண்டு யானைகளும், ஐம்பது குதிரைகளின் பேரில் தொண்டர்கள் கொடியை ஏந்தி இரண்டு பிரிவாகத் தலைவரைத் தொடர்ந்து வந்த காட்சியும், யானையின் பேரில் திராவிட நாட்டுப் படம் சித்தரித்த கொடியைத் தொண்டர்கள் ஏந்தி முன்னணியில் சென்றதும் ஊர்வலத்திற்குச் சிகரம் வைத்தது போன்றிருந்தது.

வழிநெடுக மக்கள், தலைவர் பெரியார் அவர்களுக்கு ஏராளமான மாலைகளை அணிவித்து ஆரவாரம் செய்த காட்சியை, ஏட்டில் எழுதி விவரிப்பது முடியாதென்றே கூறலாம். சுமார் 1 மைல் நீள அளவிற்கு ஏராளமான மக்கள் கூட்டங் கூட்டமாக ஊர்வலத்தில் சேர்ந்து வந்தனர். பொன் மலையிலிருந்து வந்த பெரியார் தொண்டர் படையினரும் (பொன்மலைத் தொழிலாளர்கள்) தூத்துக்குடி மில் தொழிலாளர்களும் ஊர்வலத்தில் செங்கொடி ஏந்தி எங்கள் தலைவர் பெரியார் தான் என்ற ஆரவாரத்துடனும், அச்சிட்ட தாள்களை வழங்கியும் ஊர்வலத்தில் அணிவகுத்து வந்தனர். ஊர்வலம் மாநாட்டுப் பந்தலுக்கு 11.30 மணிக்கு வந்து சேர்ந்தது.

மாநாட்டுப் பந்தல் சுமார் 10,000 மக்களுக்கு மேல் கூடும்படியான அளவில் அமைக்கப்பட்டு, மிகவும் கவர்ச்சியளிக்கத் தக்கவகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரிய மேடையும், அம்மேடையில், தலைவர்கள் டி.எம்.நாயர், சர்.தியாகராயர், பனகல் அரசர், சர்.பன்னீர் செல்வம், ஆகியவர்களின் பெரிய உருவப் படங்களை ஜோடித்திருந்ததைக் கண்ட அனைவரும் அவர்கள் உயிர்பெற்று எதிரில் இருப்பதைப் போன்று தோற்றமளித்தது. தராசுக் கொடியைப் பெரிய அளவில் சித்தரித்து மாநாட்டு மேடைக்குப் பின்புறம் தொங்கவிட்டிருந்தனர்.

சுமார் 3,500 பிரதிநிதிகளும், 7000 பார்வையாளர்களும் மாநாட்டுக் கொட்டகைக்குள் வெள்ளம் புரண்டோடுவதுபோல் குழுமியிருந்தனர். ஒலிபெருக்கியின் உதவியால் மாநாட்டுப் பந்தலில் இடமில்லாதவர்கள் வெளியேயும் தெருக்களிலும் கூட்டங் கூட்டமாக இருந்து கேட்டு வந்தனர். காரியதரிசி தோழர் நேட்டோ மாநாட்டின் கருத்துகளைத் தெரிவிக்கையில், யாவரும் தயவு செய்து அமைதியுடனிருந்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்குமாறும் மாநாட்டின் ஏற்பாடுகளிலோ, மற்றவைகளிலோ ஒரு சில தவறுகளிருந்தால் கூட நாம் யாவரும் ஒன்று சேர்ந்து திராவிட நாட்டைப் பெற வேண்டுமென்ற கருத்திற்காக எல்லோரும் ஒற்றுமையுடனிருந்து இம்மாநாட்டைச் சீரும் சிறப்புடன் இனிது நடாத்த, வெளியூர்த் தோழர்களையும் வேண்டிக் கொள்வதாகச் சொல்லித் தோழர் பி.பாலசுப்பிரமணியம் அவர்களை நீதிக்கட்சியின் கொடியை ஏற்றி வைக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தோழர். பி.பாலசுப்ரமணியம், நீதிக் கட்சிக் கொடியை ஏற்றிவைத்துப் பேசியதாவது: எனது மதிப்பு வாய்ந்த தலைவர்களே! தோழர்களே, எனக்கும் தலைவர்க்கும் வேற்றுமையிருப்பதாகச் சொல்லப்படுவதைக் கண்டு நான் வருந்துகிறேன். நான் நமது தலைவர் பெரியார் அவர்களின் கொள்கையைத்தான் பின்பற்றி வந்திருக்கிறேன். நம் நாட்டின் தன்மான உணர்ச்சிக்காக எனது ஒப்பற்ற தலைவர் பெரியார் அவர்கள் செய்துள்ள தியாகத்திற்கு ஈடாக எதையும் ஒப்பிடமுடியாது. நான் ராஜாசாகேப் பொப்பிலி அரசரையும் சர்.ஆர்.கே. சண்முகம் அவர்களையும், நமது கட்சியின் தலைவராக இருக்க முடியும் என்று நம்பியிருந்தது உண்டு. ஆனால் அவர்களின் செய்கை கட்சிக்குத் துரோகம் செய்ததாகவே முடிந்தது. கஸ்தூரிபாய் நிதிக்கு உதவி செய்த அத்தலைவர்களை யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திராவிட நாட்டின் தனிப்பெருந் துலைவர், நமது பெரியார் ஒருவரேதான் என்பதை இங்கு உண்மையாகவே எடுத்துக்காட்ட விரும்புகிறேன். அதுமட்டுமல்ல, திராவிடஸ்தானை நாம் அடைவதற்கும், அதை நிர்வகிக்க வேண்டிய தன்மானத்தை நாம் பெறவும் வேண்டிய வகையில் நமக்கு உணர்ச்சியை ஊட்டக் கூடியவர் நமது பெரியார்தான். நாம் பெறப்போகும் திராவிடஸ்தானில் குடி அரசு சர்க்காரில் பெரியார் முதல் தலைவராக விளங்க வேண்டும். சுருங்கக் கூற வேண்டுமாயின் நமது தலைவரைத் திராவிட நாட்டின் காரல்மார்க்ஸ் என்றே சொல்லுவேன். சமய, சமூக, பொருளாதார அரசியல் புரட்சிக்காரராவார் நமது பெரியார். இவ்வித இணையற்ற விடுதலை வீரராகிய பெரியார் தலைமையில்தான் திராவிடஸ்தான் பெற முடியுமென்பதை யான் உணர்ந்து கொண்டேன். நான் பெரியார் அவர்களை எப்போதும் எதிர்த்ததில்லை. கட்சியை வலுப்படுத்த வேண்டுமென்பதுதான் எனது ஆசை ஆக நமது மாபெருந் தலைவர் பெரியார் அவர்களின் தலைமையின் கீழ் நான் எப்போதும் தொண்டு புரிந்துவருவேன் என்பதை இம் மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான உங்கள் முன்னிலையில், உறுதி கூறுகிறேன், பெரியார் அவர்கள் சிறையிலிருந்த போது நமது கட்சிக் கொடியை நாம் காப்பாற்றி வந்திருக்கிறோம். இன்றும் இனியும்கூட நமது கொடியின் கீழ் கட்டுப்பாடாக இருந்து நம் நாட்டின் விடுதலையைப் பெரியார் தலைமையில் அடைவோம் என்று கூறிக் கொடியை உயர்த்தி வைக்கிறேன்.

பெரியாரை நம் நாட்டின் சர்வாதிகாரியாக நியமிக்க வேண்டும்.

தோழர் கே.ஏ.பி.விசுவநாதன், மாநாட்டைத் திறந்து வைத்துச் சொற்பொழிவாற்றியது: கட்சித்தலைவர் பெரியார் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே, கடந்த மூன்று ஆண்டுகளாக நான் ஒதுங்கியிருந்து வந்தேன். காரணம் பெரியார் மீது விரோதம் கொண்டல்ல. கட்சியை இன்னும் பலப்படுத்த வேண்டுமென்பதே எனது அவா. ஆனால் பெரியார் அவர்கள் செய்துவரும் சேவைக்கு ஈடாக எதையும் குறிப்பிட முடியாததுதான். சர்க்கார் நம் கட்சியை மதித்து நடக்காவிடில், நாம் அவர்களுக்குச் சரியான படிப்பினையைக் கற்பிக்க வேண்டும். அவ்வித ஆற்றலுக்கு நம் கட்சியின் அமைப்பு முறை வலுப்பட வேண்டும். எனது தாழ்மையான அபிப்பிராயம் என்னவெனில், நமது தலைவர் பெரியார் அவர்களை நமது தலைவர் பெரியார் அவர்களை நமது கட்சியின் ஏன், நமது நாட்டின் விடுதலைக்கோரும் சர்வாதிகாரியாக்க வேண்டுமென்பதுதான். அவர் இடும் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும் சேர்ந்து வாழவும் நாம் தயாராயிருக்க வேண்டும். திராவிடநாட்டுப் பிரிவினையைப் பற்றிச் சிறிது ஐயப்பாடு எனக்கிருந்து வந்தது. இப்பொழுது எனக்கு அதன் அவசியம் விளங்கிவிட்டது. நம் நாட்டின் விடுதலைக்கு முட்டுக் கட்டையாயுள்ள ஆரியத்தை அறவே யொழித்து, திராவிட நாட்டுப் பிரிவினையைப் பெரியார் அவர்கள் தலைமையில் அடைந்தே தீருவோம் என்ற வீர உணர்ச்சியுடன் தொண்டு புரியுமாறு உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

வரவேற்புத் தலைவர் உரை
மாநாட்டு வரவேற்புத் தலைவர் தோழர் சீ.இரத்தினசாமி அவர்கள் யாவரையும் வரவேற்றுப் பேசுகையில், வருங்காலத்தில் நடைபெறப் போகும் திராவிடர் இன எழுச்சிப் போரில் யாவரும் கட்டுப்பாடாக உழைத்து ஆரியத்தை இந்நாட்டை விட்டு அகற்றியே தீருவார்கள் என்றும், அதற்கு உற்ற துணையாக நமக்குத் தலைமைதாங்க எல்லாவகையிலும் சிறப்புற்றோங்கும் நமது பெரியார் அவர்கள் ஒருவர் தானென்றும், இம்மாநாடு நமது இயக்க சரித்திரத்தில் குறிப்பிடத் தக்கதாகுமென்றும், மிக விளக்கமாகப் பேசி, மாநாட்டின் ஏற்பாடுகளில் தவறுகளிருப்பினும் அதையாவரும் மறந்து ஒத்துழைக்குமாறும் வேண்டினார்.


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai