அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
44
அண்ணா ஆச்சாரியார் அறிமுகம்
இருபதாண்டு காலத்திற்கு
முன்பு அன்பர் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் அவர்களும் ஒருவரையொருவர்
நேர்முகமாகக் கண்டு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது. சென்னை ஒய்.எம்.சி.ஏ.
விவாத அரங்கு ஒன்றிற்கு அன்பர் அச்சாரியார் தலைமை வகிக்க, அறிஞர்
அண்ணா அவர்கள் விவாதத்தில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்கள்.
அதுதான் இருவர்க்கிடையேயும் ஏற்பட்ட முதல் அறிமுகம் என்றாலும், அந்த
அறிமுகம் அன்பர் ஆச்சாரியாரின் நீடித்த நினைவில் பதிந்திருக்கத்
தக்கதாக அமையவில்லை.
அண்மையில், அதாவது
28.01.1956 -ல், அறிஞர் அண்ணா அவர்களும், அன்பர் ஆச்சாரியார் அவர்களும்
ஒருவரையொருவர் நேர்முகமாகக் கண்டு கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டது.
இந்த அறிமுகம் நினைவில் இருத்தத்தக்க அறிமுகமாக அமைந்தது என்னலாம்.
சென்னை தமிழ்க்கலை
மன்றத்தைச் சார்ந்த தோழர் சுப்பையா அவர்களின் தமிழகம் மாளிகையின்,
இந்தியத் துணைக்கண்டத்தின் ஆட்சி மொழிபற்றிய முடிவு எடுக்க, கூடிய
சர்வ கட்சிகளின் வட்டமேசை மாநாட்டில் ஆச்சாரியாரும், அண்ணாவும் கலந்து
கொண்டார்கள். மாநாடு முடியும்வரையில் அண்ணா அவர்களை ஆச்சாரியார்
அறிந்துகொள்ளவில்லை. யாரோ ஒருவர் என்ற முறையில்தான் அவருடன் உரையாடல்
நிகழ்த்தினார். மாநாடு முடிந்து கலைந்து போகும்போது, நண்பர் ம.பொ.சிவஞானம்
அவர்கள், அண்ணா அவர்களையும், இரா.நெடுஞ்செழியன் அவர்களையும் ஆச்சாரியார்
காதில் சொல்ல அவ்வளவு சரியாகப் படவில்லை. யாரு என்று ஆச்சாரியார்
கேட்டார். இவர்தான் அண்ணாதுரை என்று தோழர் ம.பொ.சிவஞானம் சற்று உரத்த
குரலில் கூறினார். உடனே ஆச்சாரியார் பெருவியப்புற்று, மூக்கின்மேல்
சுட்டு விரலை வைத்துக்கொண்டு, இவரா? இவரா? அண்ணாதுரை? என்று வியப்புணர்வு
தோன்றக் கேட்டார். பக்கத்திலிருந்தவர்கள் ஆமாம்! ஆமாம்! என்று கூறினார்.
மீண்டும் ஆச்சாரியார் இவரா? அண்ணாதுரையா? அண்ணாதுரை என்றார், ஒரு
பிரம்மாண்டமான, ஒரு பயங்கரமான மனிதராக இருப்பார் என்றுதான் இதுவரையில்
நான் எண்ணிக்கொண்டிருந்தேன்! என்றார்.
பிறகு தோழர் ம.பொ.சிவஞானம்
அவர்கள் நெடுஞ்செழியனைச் சுட்டிக்காட்டி, இவர்தான் நெடுஞ்செழியன்!
என்றார். ஆச்சாரியார் நிமிர்ந்து பார்த்துவிட்டு, இவர் நெடுஞ்செழியன்,
சரி! இவர் அண்ணாதுரை என்கிறீர்களே! என்று அண்ணாவைச் சுட்டிக்காட்டி
வியப்போடு சிரித்துக்கொண்டு கேட்டார். பக்கத்திலிருந்த ஒருவர், இவரைப்
படத்தில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் எவ்வளவோ வித்தியாசம்
இருக்கிறது என்றார். ஆச்சாரியார் நான் படத்தில்கூட இவரைப் பார்த்ததில்லை.
காதால்தான் இவரைப் பற்றி ரொம்ப ரொம்ப கேட்டிருக்கிறேன்! சுப்பையா
பிள்ளை போன்றவர்கள் அடிக்கடி இப்படிக் கூட்டங்கள் கூட்டினால்தானே
ஒருவரையொருவர் தெரிந்து கொள்வதற்காவது வாய்ப்பு ஏற்படுகிறது! என்றார்.
அறிஞர் அண்ணா அவர்கள்
இறுதிவரையில் புன்சிரிப்பு சிரித்துக் கொண்டே ஆச்சாரியார் முன்னிலையில்
நின்றார்கள்.
இறுதியாக அண்ணா அவர்கள்
பிறகு பார்க்கிறோம்; போய் வருகிறோம்! என்று ஆச்சாரியாரிடம் விடைபெற்றுக்கொண்டு
கிளம்பினார்கள்.
(மன்றம், நாள் 15.02.1956)
எளிய வாழ்க்கை
அறிஞர் அண்ணா அவர்கள்
பள்ளி கல்லூரி ஆகியவற்றில் படித்த அந்த நாட்களிலும் சரி, பொதுப்பணியில்
இறங்கித் தொண்டாற்றி வரும் இந்த நாட்களிலும் சரி ஆடம்பரமற்ற மிகமிக
எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்து வருபவராவார்கள்.
அறிஞர் அண்ணாவை நேரில்
காணாமல் அவரின் அறிவையும், ஆற்றலையும் மட்டும் கேள்விப்படுவோர்கள்
முதலில் அவர் ஒரு கம்பீரமான - ஆடம்பரமான - மிடுக்கான தோற்றமுடையவராக
இருப்பார் என்றுதான் தம் மனதிற்குள் எண்ணிக்கொள்வார்கள். அதற்குக்
காரணம் என்னவென்றால், அறிவும் ஆற்றலும் அற்றுக், கூழைமாட்டை, பேயத்திக்கொம்பு,
முருங்கைமிலாறு, தாழங்காய் ஆகியவற்றின் வரிசையிலே வைத்து எண்ணப்படக்கூடிய
சிலர், நாட்டுக்கான தலைவர்கள் தாமே என்று சொல்லிக்கொண்டு, ஆடம்பரமாகத்
திரிவதைப் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட மக்கள், அறிவிலும்
ஆற்றலிலும் மிக உயர்ந்து விளங்கும் அறிஞர் அண்ணா அவர்கள் மிக்க ஆடம்பரமான
தோற்றமுடையவராகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொள்வது இயல்பு
ஆகிவிட்டதே ஆகும். அப்படிப் பட்டவர்கள் அண்ணாவை நேரில் காணும்போது,
தம்முடைய எண்ணத்திற்கு நேர்மாறாக அவர் தோற்றமளிப்பதைக்கண்டு திடுக்கிட்டுத்
திகைத்து மலைத்துப் போய் நின்றுவிடுகின்றனர். ஆச்சாரியாருக்கே அந்த
நிலை ஏற்பட்டதென்றால், மற்றவர்களைப் பற்றிக் கூறவும் வேண்டுமா?
எளிமை - இனிமை - பொறுமை
- அடக்கம் ஆகியவற்றிற்கு அரசியல் உலகில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
காட்டவேண்டுமானால், அறிஞர் அண்ணாவைத்தான் குறிப்பிடவேண்டும். தலைமயிரை
வாருவதைப் பற்றியோ, ஆடம்பரமான உடைகளை உடுப்பதைப்பற்றியோ சிறுதும்
கவலைப்படாமல் விரிந்து பரந்த தலைமயிருடன், அழுக்கேறிய ஆடைகளுடன்,
காலில் செருப்பு இல்லாமல் கையில் கடிகாரம் இல்லாமல் சட்டைப்பையில்
பேனா இல்லாமல், (பெரும்பாலான நேரங்களில்) பணப்பபை(மணிபர்ஸ்) இல்லாமல்
காட்சியளிக்கும் அண்ணாவைத்தான் பெரும்பாலும் பார்க்க முடியும்.
அறிஞர் அண்ணா அவர்கள்
எளிமையாகவும் இனிமையாகவும் பழகுவதற்கேற்ற பண்புடையவர்களைத்தான் நண்பர்களாகக்
கொள்வார்களேயொழிய தரம் - தகுதி-திறமை பார்த்து நட்பு செய்துகொள்ளும்
ஆடம்பரப் பழக்கம் அவரிடம் அறவே கிடையாது.
அண்ணா அவர்கள் கல்லூரியை
விட்டு வெளியேறிய பிறகு வேலைக்கு எதற்கும் போகாமல், பொதுப்பணியில்
நாட்டம் செலுத்திக்கொண்டிருந்தபோது அவருக்கு உற்ற நண்பர்களாக உடனிருந்தவர்களில்
குறிப்பிடத் தகுந்தவர்கள் சின்னக்கண்ணு, கணேசன், இரெங்கநாதன் ஆகியோர்.
கணேசன் நாட்டு வைத்தியம் செய்து வந்தவர்; இரெங்கநாதன் இரவு பகலாக
இயக்கத் தொண்டு செய்துவந்தவர், அண்ணா உள்ளிட்ட இந்த நால்வரையும்,
சிட்டிகைப்பொடி சின்னக்கண்ணு
கட்டிமாத்திரை கணேசன்
இராப்பட்டினி இரெங்கநாதன்
அலைந்து திரிகிற அண்ணாதுரை
என்று பெத்துநாய்க்கன்பேட்டையிலுள்ள
ஏனைய நண்பர்கள் வேடிக்கையாக அழைப்பார்கள். அறிஞர் அண்ணா அவர்கள்
ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கையில் ஈடுபாடுடையவர்கள் என்பதற்கு, இந்த
நண்பர் குழாமே இனிய எடுத்துக்காட்டாகும்.
(மன்றம், நாள்: 01.03.1956)
புரட்சிக்
கவிஞருக்குப் பொன்னாடை போர்த்திய விழா
இன்றையக் காலத் தமிழக
வரலற்றில், பொன்னாடை போத்தும் விழக்கள் பலப்பல நடைபெற்று வருகின்றன.
அவற்றில் மற்றெல்லாவற்றைக் காட்டிலும் மிக எழிலுடையதாகவும், பெருமைமிக்கதாகவும்,
முதன்மை வாய்ந்ததாகவும் முக்கியம் பொருந்தியதாகவும், எல்லோராலும்
ஆதரிக்கப்பட்டதாகவும், எல்லாக் கட்சிகளாலும் போற்றப்பட்டதாகவும்
அமைந்த ஒரு பெரும் விழா புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்குப்
பொன்னாடை போர்த்திய விழாவேயாகும். அது 1946-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
அந்த விழாவினை வெற்றி கரமாக் முன்னின்று முயன்ற பெருமையெல்லாம் அறிஞர்
அண்ணா அவர்களையே சாரும்.
அந்தப் பொன்னாடை போர்த்திய
விழாவின்போது, இன்றைக்காலத் தமிழ்ப் புலவர் வேறு யாருக்கும் அளிக்காத
வகையில் புரட்சிக் கவிஞர் அவர்களுக்குப்பெரும் பொற்கிழி(பணமுடிப்பு)
ஒன்றும் அறிஞர் அண்ணா அவர்களின் பெரு முயற்சியால் அளிக்கப்பட்டது.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
அவர்கள் தமிழ்ப் பேராசிரியர் வேலையின்றும் இளைப்பாறிப் பொதுப் பணியில்
நேரடியாக இறங்கிய காலையில், அவருக்குப் பொற்கிழி வழங்க வேண்டும்
என்ற எண்ணம் நண்பர்கள் சிலர்க்கு ஏற்பட்டது. நிதி திரட்டும் முயற்சியில்
தோழர்கள் கிருட்டினராசு, செல்லப்பர், டி,என்.இராமன், ப.கண்ணன் ஆகியோர்
தீவிர திராவிடக் கழக மாநாட்டில் அந்த முயற்சிக்கு ஆதரவு தரும்வகையில்
தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது. எனினும் நிதி திரட்டும் முயற்சி
பாராட்டத்தக்க வகையில் அவ்வளவாக வெற்றிபெறவில்லை. பிறகு நீதிக்குழுவினர்
அறிஞர் அண்ணா அவர்களின் முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பபையும் நாடினர்.
அறிஞர் அண்ணா அவர்கள் புரட்சிக் கவிஞருக்குச் செய்திடும் சிறப்பு
தமிழுக்கு - தமிழகத்திற்கு - திராவிடத்திற்கு - திராவிட இயக்கத்துக்குச்
செய்திடும் சிறப்பு என்று கருதி முழுமூச்சோடு பணியாற்றத் தொடங்கினார்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள்
புரட்சிக் கவிஞருக்கு நிதி சேர்த்திடும் பணியில் இறங்கியிருந்தது
பெரியார் இராமநாமி அவர்களுக்கு விருப்பமில்லை. அந்த முயற்சியையே
வெறுத்தார். அதனால் அண்ணா அவர்களை வெறுக்கத் தலைப்பட்டார். பெரியாரின்
சினம் மூண்டு எழுந்தாலும், சீரிய பணியினைச் செய்கிறோம் கடமையைச்
செய்கிறோம் என்ற உணர்வில் அறிஞர் அண்ணா பெரியாரின் எதிர்ப்பைப் பெருட்படுத்தாமல்
பணியாற்றினார்கள். பெரியார் அவர்களுக்கு.ம் அண்ணா அவர்களுக்கும்
மாறுபாடு ஏற்படக் காரணமாக இருந்தவைகளில் புரட்சிக் கவிஞருக்கு நிதிசேர்த்த
முயற்சியும் முக்கியமான ஒன்றாகும்.
அறிஞர் அண்ணா அவர்கள்
சில தினங்களுக்குள் ஏறத்தாழ இருபத்தினான்கு ஆயிரம் ரூபாய் சேர்த்துப்
பொன்னாடை போர்த்தும் விழாவையும், பணமுடிப்பு அளித்தலையும் செய்தார்கள்.
விழா காங்கிரசு கம்யூனிஸ்ட்டு, சோசியலிசுட்டு, நீதிகட்சி, திராவிடக்
கழகம் ஆகிய பல்வேறு கட்சிகளின் ஆதரவில், பல்வேறு கட்சிக் கொடிகளுடன்,
சென்னை பச்சையப்பன் பள்ளி விளையாட்டுத் திடலில், ஒளி விளக்குகளால்
அழகுடுத்தப்பட்ட கவர்ச்சிகரமான மேடையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நாவலர் பாராதியார் அவர்கள் புரட்சிக் கவிஞருக்குபொன்னாடை போர்த்தினார்.
அறிஞர் அண்ணா அவர்கள் கவிஞருக்குப் பொற்கிழி அளித்தார்கள். தமிழகத்தின்
தலைசிறந்த எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த சொற்பொழிவாளர்கள் அத்துணைப்
பேரும் கலந்து கொண்டு புரட்சிக் கவிஞரைப் பாராட்டினார்கள்.
அறிஞர் அண்ணா அவர்கள்
முயற்சி எடுத்துக்கொண்டு வெற்றிகரமாக்கிய குறிப்பிடத்தக்க பகுதிகளில்,
புரட்சிக் கவிஞககுப் பொன்னாடை போர்த்திய விழாவும் ஒன்றாகும்.
(மன்றம், நாள்: 15.03.1956)
|