அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 43

உரையாடும் ஆற்றல் இருவரோ, மூவரோ அல்லது பலரோ ஒரிடத்தில் கூடியிருக்கும்போது, கூடியிருப்போரின் கவனத்தை ஈர்க்கும் உரையாடல்கள் நடத்தி, கூடியிருப்போரை மகிழ்வித்து, பொழுதுபோவதே தெரியாமற் செய்யும் அரும் ஆற்றல் மிகச் சிலரிடத்தே மட்டும் அமைந்திருக்கக் காண்கிறோம். அப்படிப்பட்ட பண்பும், ஆற்றலும் எவ்வளவுதான் முயன்று பார்த்தாலும் பலருக்கு வருவதேயில்லை. அறிஞர் அண்ணா அவர்கள் இயல்பாகவே மிகச்சிறந்த உரையாடற்காரர் என்பதை அவரோடு நெருங்கிப் பழகுபவர்கள் நன்கு அறிவார்கள்.

சிலர் எங்கும். எப்பொழுதும், எவரோடு கூடியிருக்கும் போது, சிறந்த உரையாடற்காரர்களாகக் காட்சியளிப்பார்கள். ஆனால் அறிஞர் அண்ணா அவர்கனோ, குறிப்பிட்ட சில நெருங்கிய நண்பர்களுடன் கூடியிருந்து உரையாடுவதைத்தான் எப்பொழுதும் விரும்புவார்கள். பலரோடு கூடியிருக்கும்படியான நிலைமை ஏற்பட்டாலும், குறிப்பிட்ட சில நெருங்கிய நண்பர்களைக் கூட்டிக்கொண்டு தனிமையான இடத்திற்குச் சென்று இருந்து உரையாடி மகிழ்வார்கள்.

அறிஞர் அண்ணாவின் உரையாடல் கேட்கக் கேட்க இனிமையாகவே இருக்கும். எவ்வளவு நேரமானாலும், மணிக்கணக்கில், நாட்க்கணக்கில் ஆனாலும், தெவிட்டவே தெவிட்டாது. அண்ணாவின் உரையாடல் கேலி கிண்டல் நிறைந்ததால், நகைச்சுவை மிக்கதாய்ச் சிறிதளவு பொழுதுபோக்கானதாகவும், பெரிதளவு பயனறிவு பயப்பதாகவும், விளங்கும்.

அண்ணாவோடு கூட இருந்து உரையாடிக் கொண்டிருக்கும்போது பொழுது போவதே தெரியாது. பசி நேரம் தவறிப்போகும். கடமைகளின் நேரங்கள் மாறிப்போகும். முறைப்படி செய்யவேண்டிய அன்றாடக் கடமைகளைப் பற்றிக் கவலைப்படாமல், உரையாடிக்கொண்டே இருப்பார்கள்.

அறிஞர் அண்ணா அவர்களுக்குப் பெரும்பாலும் பகல் நேரம் இரவாகவும், இரவு நேரம் பகலாகவும் மாறிவிடும். பகலிலே நீண்ட நேரம் உறங்கிக் கொண்டும் இருப்பார்கள். நண்பர்களைக் கூட்டிவைத்துக்கொண்டு இரவு நேரத்தில் நீண்டநேரம் உரையாடுவார்கள். சில வேளைகளில் பொழுதுகூட விடிந்துவிடும். கூடியிருக்கும் நண்பர்கள், உறக்கம் வரவர, அப்படி அப்படியே இருந்த இடத்திலேயே படுத்து உறங்கி விடுவார்கள். கடைசி ஒரு நண்பர் விழித்துக்கொண்டு இருக்கும் வரையில், அண்ணா அவர்கள் உரையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த நண்பரும் அவரையறியாமலேயே உறங்கத் தொடங்கிவிடுவாரேயானால், அண்ணா அவர்கள் வேறு வழியின்றி கண்ணை மூடிக்கொண்டு உறங்க முயலுவார்கள். அப்பொழுதும் அவருக்குத் தூக்கம் வருவதில்லை. பொழுது விடிய விடியத்தான் அண்ணா அவர்களுக்குத் தூக்கம் மெல்ல வந்துகொண்டிருக்கும்.

பேசும் ஆற்றல் எழுதும் ஆற்றலைப் போலவே உரையாடும் ஆற்றலிலும் அறிஞர் அண்ணா அவர்கள் தலை சிறந்து விளங்குபவர் ஆவார்கள்.
(மன்றம், நாள்: 15.11.1955)

சிறந்த நடிகர்
அறிஞர் அண்ணா அவர்கள் சிறந்த பேச்சாளர். எழுத்தாளர் - உரையாடற்காரர் என்று மட்டும் பேர் பெற்றவரல்லர். அவர் சிறந்த நடிகர் என்றும் பேர்பெற்றவராவார்.

அறிஞர் அண்ணா அவர்களின் நடிப்பைக் காணும் வாய்ப்பைப் பெற்ற நடிகர்களான என்.எஸ்.கிருஷணன், எம்.கே.தியாகராச பாகவதர், எம்.எம்.தண்டபாணி தேசிகர், டி.கே.சண்முகம், எம்.ஆர்.ராதா, கே.சாரங்கபாணி, கே.ஆர்.இராமசாமி, எம்.ஜி.இராமச்சந்திரன், எஸ்.எஸ்.இராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி போன்றவர்களும், பெரியார் ஈ.வெ.இராமசாமி, மணவாள ராமானுசம், டி.செங்கல்வராயன் போன்றவர்களும் பிறரும் பலபடப் பாராட்டிப் போற்றியுள்ளார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் இளம் வயதிரிருந்தே நாடகத்திலும், நடிப்பிலும் மிக்க அக்கரை கொண்டு, அவர் சிறுவயதில் உடன் பழகும் பள்ளிச் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு, மாட்டுக் கொட்டிலில் நாடகம் நடத்துவதுண்டு. எந்தத் தெருக் கூத்து ஆனாலும், எந்த நாடகம் ஆனாலும் அவற்றைப் பார்க்க அவர் தவறுவதேயில்லை. கை கால்களை ஆட்டி, ஓடியாடிக் குதித்து நடிக்கும் பழக்கத்தை அண்ணா அவர்களிடம் காண முடியாது. அண்ணாவின் கண்களும், முகமும் மட்டும்தான் நடிக்கும். சில வேளைகளில் கை அசையும். இனிமையான குரலில், தெளிவான சொற்கள், அழுகுபட வந்து விழந்துகொண்டே இருக்கும். குரலில் தேவையான அளவுக்கு ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். பேச்சு நடைகளில் பார்ப்பனீய நடை - பாகவதர் நடை - பண்டிதர் நடை - பாமரர் நடை - வேதாந்தி நடை - குருமார் நடை - அரசன் நடை - வீரன் நடை எல்லாம் அண்ணா அவர்களுக்குத் தண்ணீர்பட்ட பாடு.

நடிகனுடைய தரத்தை உயர்த்தப் படித்தவர்களும் பொது நாடக மேடையில் தோன்றலாம் என்பதையும், அரசியல் தலைவர்களாய் இருந்தாலும் நாடகம் நடிப்பது இழுக்காகாது என்பதையும் நல்ல கருத்துள்ள சீர்திருத்த நாடகங்கள் தேவை என்பதையும், தமிழகத்தில் நிலை நாட்டிய பெருமை அறிஞர் அண்ணா அவர்களுக்கே முக்கியமாக உரியதாகும்.

அறிஞர் அண்ணா அவர்கள் சந்திரோதயம் சந்திரமோகன், நீதிதேவன் மயக்கம், போர்வாள் ஆகிய நாடகங்களில் இதுவரையில் நடித்துள்ளார்கள்.
(மன்றம், நாள்: 01.02.1956)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai