அறிஞர்
அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி:
42
போராட்ட முறை
அதிர்ச்சி தரும் அமளிகள், மயிர்க்
கூச்செரியத்தக்க கிளர்ச்சிகள், மூக்கின்மீது விரல்வைத்து ஆச்சரியப்படத்
தக்கதான போராட்டங்கள் ஆகியவற்றின் மூலமாகப் பெறக் கூடியது புது வலுவைவிட,
நாட்டு மக்களிடம், குறிப்பாக இன்னும் காங்கிரசிலுள்ள திராவிட மக்களிடம்
கொள்கையைப் புகுத்துவதிலே பெறுகிற வெற்றியையே நான் பெரிதும் விரும்புகிறவன்.
அப்படிக் கூறுதலால் போரே கூடாது என்பவனல்லன்; போரில் கலந்து கொள்ளாதவன்
என்றே போர் வாடை அடிக்கும்போது புதுடில்லிக்கு உத்தியோக வேட்டைக்கு
ஓடிவிட்டவனென்ற பொருள்கொள்ளப் பொறுப்புள்ள யாரும் துணியமாட்டார்கள்.
எதையும் துணிவுடன் கூறிடும் போக்கினர் பற்றி நான் பொருட்படுத்தப்
போவதில்லை.
காங்கிரஸ்காரர் மனத்தில், வேதனை,
வெறுப்புணர்ச்சி, பகை உணர்ச்சி மூட்டிவிடக்கூடிய வகையிலே கிளர்ச்சிகள்
அமைவதை நான் இன்றல்ல, எப்போதுமே விரும்பியதில்லை; இந்த என் எண்ணத்தை
எடுத்துரைக்க என்றும் தயங்கினதுமில்லை.
ஆகஸ்ட் முதல் நாள் அய்யா அவர்கள்
சொன்னபடி கொடி கொளுத்தப்பட்டிருந்தால், நிச்சயமாக அவரைத் தூசி கூட
அணுகாது; அவரைப் பொருத்தமட்டில் எத்தகைய எதிர்ப்பும் பகையும் துரும்பு.
எனவே, அவருக்கு ஒரு சிறு குறைபாடும் ஏற்படாது. ஆனால் அன்று, மூண்டிருக்கக்கூடிய
பகை உணர்ச்சியும் வெறுப்புணர்ச்சியும் நிச்சயமாக திராவிட இயக்கத்தைப்
பல ஆண்டு காலத்துக்குப் பழிக்கும் பகைக்கும் உள்ளாக்கிவிட்டிருக்கும்.
பரவாயில்லை அவர்கள் கூறுவதிலும் நியாயம் இருக்கிறது என்று சொல்லும்
அளவுக்கு நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்கள்,
நாம் கூறும் எதையும் ஏற்றுக் கொள்ளலாகாது என்ற அளவுக்கு நம்மை விட்டு
விலகிவிடுவார்கள்.
தம்பி! ஒரு கொள்கையை அடிப்படையாக
வைத்துப் பணியாற்றும்போது நாளாக ஆக எவ்வளவுக்கெவ்வளவு ஆழமாக அந்தக்
கொள்கை சிலரிடம் பதிந்து விடுகிறது என்பது மட்டுமன்று, வெற்றிக்கு
வழி, நாளாக நாளாக எவ்வளவுக் கெவ்வளவு விரிவடைகிறது, பரவுகிறது. மாற்றரை
உற்றார் ஆக்குகிறது என்பதுதான் வெற்றிக்குப் பெரிதும் துணை செய்யும்.
இந்த முறையில்தான், நான் பலகாலமாகவே, காங்கிரஸ் கட்சியில் இன்று
உள்ள திராவிடத் தோழர்களில் - அந்தக் கட்சியாலேயே வாழ்ந்து தீரவேண்டியவர்கள்
தவிர - மிகப்பலரை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் வகையான கிளர்ச்சி
வேண்டும் என்று கூறிவருகிறேன்.
கோழைத்தனம் என்கிறார், பெரியார்.
ஏறக்குறையப் பதினைந்து ஆண்டு பயிற்சிக்குப்
பிறகும் - பெரியாரிடம்தான் - பார் தம்பி! என்னைவிட்டுக் கோழைத்தனம்
போகவில்லை என்றால், (பெரியாரே கூறுகிறார்?)
அதே முறையிலேதான், கொடிகளை எரிப்பது,
கோட்டைக் கொடிமரத்தை வெட்டிச் சாய்ப்பதும், குத்தீட்டி வீசுவதும்,
கொல்லும் வேழத்தை ஏவுவதும் - எல்லாம் சம்பவங்கள் - விடுதலைப்போரிலே
- பல நாடுகளிலே.
அந்தச் சம்பவங்கள் திட்டமிட்டு
நடைபெற்றவை அல்ல.
அந்தச் சம்பவங்களைக் கொண்டு, ஒரு
போர்முறை வகுக்கப்படுவதில்லை.
இந்த எண்ணம் எனக்கு மேலிட்டதால்,
ஆகஸ்டில் நடைபெற இருந்த அந்தக் காரியம். அவசியமற்ற பகையையும், அணைக்க
முடியாத குரோதத்தையும், போக்க முடியாத பழியையும் உண்டாக்கிவிடும்
என்று அஞ்சினேன். காரணம் எதுவாகவேனும் இருக்கட்டும், அந்தச் சம்பவம்
நடைபெறவில்லை. கடைசி நேரத்தில், கொடி கொளுத்துவதைப் பெரியார் நிறுத்திக்
கொண்டார்.
எனக்குள்ள பிரச்னை, போதுமான வாக்குறுதி
பெற்றுக் கொண்டு நிறுத்தினாரா, இல்லையா என்பதால் என் மகிழ்ச்சி,
கொடி கொளுத்துவது நிறுத்தப்பட்டது என்பதில்தான்.
பெரியாருக்கு இன்று உள்ள பெரும்
செல்வாக்கு சாமான்யமானதன்று. அதைக் குறைத்து மதிப்பிடும் கயவனல்லன்
நான் - காங்கிரசிலே உள்ளவர்களிலேயே சிலருக்கு இன்று செல்வாக்கு இருப்பதை
உதாரணமாகக் காமராஜருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதை ஒப்புக்கொள்ளும்
நான், பெரியாருக்கு உள்ள செல்வாக்கையா குறைத்து மதிப்பிடுவேன்? அவருக்கு
இன்றுள்ள செல்வாக்கும், அதனை ஈட்டிட அவர் ஆற்றியுள்ள அரும்பெரும்
பணியும் அபாரம். எதற்கும் அஞ்சுபவரல்லர். எதிர்நீச்சலில் பழகியவர்.
கொடி கோட்டை வாசலில் உள்ளதைக் கொளுத்த வேண்டுமென்றாலும், அதனால்
ஏற்படக்கூடிய ஆபத்தைப் பற்றித் துளியும் கவலைப்படமாட்டார். அது அவருக்கு
சேவையால் கிடைத்தது மட்டுமல்ல, அவருடைய சுபாவமே அத்தகையது. அந்தக்
குறுகுறுப்பான கண்களிலேயே நான் பல சமயங்களில் கோபம் கொந்தளிக்கக்
கண்டிருக்கிறேன். அடிக்கடி அலட்சியத்தைக் கொட்டக் கண்டிருக்கிறேன்.
சில வேளைகளில் பிரிவு பச்சாதாபம் தோன்றிடக் கண்டிருக்கிறேன். ஒருபோதும்
அந்தக் கண்களிலிருந்து பயம் கிளம்பக் கண்டதில்லை. நானொன்றும், தம்பி,
பத்து கெஜத் தொலைவிலே இருந்து அவரைப் பார்த்துப் பழககியவனல்லன்;
பல கோணங்களிலே இருந்து பார்த்தவன் - பல பிரச்னைகள் குறித்த அவருடைய
பிரத்யேகக் கருத்துகளை அறிந்தவன் - மேஸ்திரி வேலையல்லவா பார்த்திருக்கிறேன்?
எனவேதான், திராவிட இயக்கத்தில்
வகுக்கப்படும் போர்த்திட்டம், அவருடைய ஆற்றலை அளவுகோலாகக் கொண்டு
மட்டும் அமையக் கூடாது. எந்தக் கொள்கைக்காக இயக்கம் நடைபெறுகிறதோ,
அந்தக் கொள்கைக்குத் தீராப் பகையைத் தேடிப் பெறுவதாக இருத்தல் ஆகாது
- பரவலான அளவில் செல்வாக்குப் பெறத்தக்கதும், பகைக் கூடாரத்தில்
உள்ளவர்களின் உள்ளத்திலும் பரிவு ஊட்டக் கூடியதுமானதாகத் திட்டம்
இருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். பிரிந்த பிறகு ஏற்பட்ட பித்தமல்ல
இது, ஒன்றாக இருந்த நாள்தொட்டு எனக்குள்ள கருத்து.
துளைத்துவிட்டார்! துளைவிட்டார்!
என்று இனிப்புப் பண்டத்தைச் சப்பிக்கொண்டு களிப்புக் கூச்சலிடும்
சிறார் போல, பெரியார், கடற்கரைக் கூட்டத்திலே தி.மு.க.வையும் குறிப்பாக
என்னையும் துளைத்தெடுத்தார் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார், குத்தும்
குணாளர். அவருக்கு மகிழ்ச்சி கிடைப்பதுபற்றி எனக்கு எப்போதும் அதிர்ப்தி
இருந்ததில்லை.
நான் துளைக்கப்பட்டேன் என்று எந்தக்
கடற்கரைப் பேச்சு பற்றி அந்த நண்பர் களிப்படைகிறாரோ, அந்த கடற்கரை
மணல் அறியும், பெரியார் குறித்து இவர் கொண்டிருந்த கருத்துகளை, பழங்கதை
- பழங்கதையாகவே போகட்டும்.
என்னை ஏசட்டும், பரவாயில்லை - நான்
தாங்கிக்கொண்டு பழக்கப்பட்டுவிட்டேன்.
ஆனால் ஆகஸ்ட் நடைபெற்றிருந்தால்,
அதனால் ஏற்படக் கூடிய பகை உணர்ச்சி, திராவிடர் இயக்கத்துக்கு நிச்சயமாக
ஊறு செய்திருக்கும்.
காங்கிரஸ் வட்டாரத்திலே கிளம்பக்கூடிய
பகை உணர்ச்சியும் பொதுமக்கள் மனதிலே கிளம்பக்கூடிய அருவருப்பு உணர்ச்சியும்,
பெரியாரை அசைக்காது.
அவர் அத்தகைய விரோதப் பெருவெள்ளத்தை
எதிர்த்து நிற்க வல்லவர்.
ஆனால், அவர் விரும்புகிற கொள்கைக்காக
இருந்து பணியாற்றும் இயக்கம் இருக்கிறதே, தம்பி! திராவிட இயக்கம்,
அது விரோதப் பெருவெள்ளத்தால் மெத்தப் பாதிக்கப்பட்டு விடும்.
எனவேதான், கோழை என்றோ காட்டிக்கொடுப்பவன்
என்றோ, வஞ்சகன் என்றோ, பிஞ்சு சொத்தை என்றோ, எதைச் சொல்லி என்னை
ஏசினாலும் பரவாயில்லை, இயக்கத்துக்கு மட்டும், அதிர்ச்சி தராமலிருந்தால்
போதும் என்றும் கருதினேன்.
பெரியாருக்கு உள்ள அஞ்சாமையும்,
எதிர்நீச்சுத் தன்மையும், எத்தகைய நிலைமையையும் சமாளிக்கும் திறமையும்,
எவருடைய விரோதம் குரோதம், பகையாயினும்சரி, எத்தகைய பூசலாயினும் சரி,
அவற்றைத் துச்சமெனக் கருதிடும் நெஞ்சழுத்தமும், இயக்கத்தில் நிரம்பி,
ததும்பி இருக்கிறது என்று நான் நம்பவில்லை. பெரியாருக்கும் அந்த
நம்பிக்கை இல்லாததால் தான். அடிக்கடி அவர் இப்படிப்பட்ட சமயத்தில்,
என்னையே நம்பி இதிலே ஈடுபடுகிறேன் என்று வெளிப்படையாகவே எடுத்துக்
கூறி இருக்கிறார்.
நாம் மேற்கொண்டுள்ள நாட்டு விடுதலை
வெற்றிபெறுவதற்கும் இத்தகைய ஒப்பற்ற ஒரு தலைவரின் உள்ளத் திண்மை
மட்டும் போதாது, மேலும் மேலும் வலுவு பெற்ற வண்ணம் ஒரு கட்டுப்பாடான
இயக்கம் வளர்ந்தாகவேண்டும். அந்த வளர்ச்சியை ஆகஸ்ட் கெடுத்துவிட்டிருக்கும்
- என்பதால் தான், நான் அதை விரும்பவில்லை.
பெரியார், எப்படிப்பட்ட வெறுப்பைக்
காங்கிரஸ் வட்டாரம் வெளிப்படுத்தினாலும் தாங்கிக் கொள்ளக் கூடியவர்
- இயக்கம் தாங்கிக் கொள்ள முடியாது - இது, தம்பி! அங்கு உள்ள சிலருக்குப்
பிடிக்கவில்லை - நான் அதைக் கூறும் போது பெரியாருக்கு நான் ஏதோ ஊறு
தேடுவதாகக் கருதுகிறார்கள். அவர்பால் கொண்ட அன்பைக் காட்டிக் கொள்வதற்கு,
எளிதான, சுவையுள்ள வழி உன்னையும் என்னையும் ஏசுவது தான் என்று எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில், பெரியாருடைய
திறமையையும் அவர் பெற்றுள்ள செல்வாக்கையும் இம்மி அளவும் நான் குறைத்து
மதிப்பிடாததால்தான், அவர் தன் நிலைக்குத் தகுந்த திட்டம் தீட்டும்போது,
அது முறையன்று, இயக்கத்தின் இன்றைய நிலைமைக்குத் தக்கபடியானதும்,
அதன் எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்காத முறையிலும் திட்டம் வேண்டும்
என்று கேட்கிறேன் - ஓஹோ! நீ யார் கேட்க, என்பார்கள்!
(திராவிடநாடு - 07.08.1955
|