அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பகுதி: 41

தன் குணங்கள்
என்னிடம் சில குறைபாடுகள் உண்டு. குறைபாடுகள் என்று சம்பிரதாய முறையில் சொல்கிறேன். அதிலே ஒன்றுதான் கனவு காண்பது; மற்றொன்று மிகக் கஷ்டமான நெருக்கடியின்போது சர்வ சாதாரணமாகக் கருதிக்கொண்டு சிரித்துக கிடப்பது. இதிலே எனக்குச் சரியான ஜோடி சம்பத் தான்! பெரியாரின் சர்டிபிகேட்டை உண்டு இதற்கு.

திருச்சியிலே திராவிடர் கழக மாநில மாநாடு - அதற்காக வேலை செய்வதற்காக ஒரு மாளிகையில் தங்கியிருக்கிறோம். நானும் சம்பத்தும் - பெரியார் வேலை செய்கிறார் - விசாரப்படுகிறார் - தொல்லைப்படுகிறார். நானும் நம்பத்தும் மாடியில் ஏதேதோ பேசுகிறோம். சிரிக்கிறோம். பாடுகிறோம். (யாரும் கேட்கமாட்டார்கள் என்ற தைரியத்தில்) கவலையற்று! இந்த இரண்டு பசங்களம் சிரித்துககொண்டு இருக்கிறார்களே! துளியாவது கவலை இருக்கிறதா? ஒருபெரிய மாநாடு நடக்கவேண்டும். அது பற்றி துளியும் கவலைப்படாமல், தின்பதும், திரிவதும், ஆடுவதும், பாடுவதும், செச்சே! என்று பேசினார். அப்போது நான் செல்லப்பிள்ளை. இகழப்பட்ட போதும், பழிக்கப்பட்டபோதும், அன்பு காட்ட வேண்டியவர்கள் பகைக்கும்போதும், சிரித்துச் சோகத்தைச் சிதறடிப்பது என்முறை - மிகச் சிறியவனாக இருந்தது முதலே சம்பத்துக்கும் இது முறை. விளையாட்டுப் பிள்ளைகள் என்று இதனைக் கண்டு பெரியார் கூறுவதுண்டு. அதற்கும் நாங்கள் இருவரும் சிரித்தோம். அவரால் சகிக்கவே முடியவில்லை. எனவே டிக்கட் விற்பனை என்ற ஏற்பாட்டின்படி, சம்பத்தைக் கருவூருக்கே அனுப்பிவிட்டார்.

சிரிக்கத் தெரியாமலிருந்தால் எனக்கு பொதுவாழ்க்கையிலே ஏற்பட்ட சங்கடங்களால், பைத்தியமே பிடித்துவிட்டிருக்கும். விளையாட்டுத்தனமில்லை. அது - விசாரத்திலே மூழ்கிக் குழப்படைந்து போகாமலிருக்க, அது தகுந்த முறையாக அமைந்திருந்தது.

குறைபாடுகள் என்ற இவற்றை கருதலாம் - விவரம் கூறப்படா முன்பு.

தோழர நெடுஞ்செழியனைப் பெரியார், தமது மேற்பார்வையில் வைத்திருந்த பார்த்தார். அவரால் யார்மீதும் குற்றம் காணமுடியும். ஆனால், தோழர் நெடுஞ்செழியனிடம், அவரால் ஒரு குறைகூடக் கண்டறிந்து கூற இயலவில்லை. அத்தகைய பணியாளர் நமக்குக் கிடைத்திருக்கிறார்.

அவருக்குக் கிடைத்திருககும் கழகமோ, சாமான்யமானதன்று!

ஆங்கில ஏடு நடத்த இருமுறை அதற்கான முயற்சி எடுத்து முறிந்து போனதுமுண்டு. இப்போதும் அந்த எண்ணம் இருந்தபடிதான் இருக்கிறது. தக்க வாய்ப்பு ஏற்படவில்லை. தம்பி! நமக்கிருக்கும் குறைபாடுகள் இவை போன்றவையே தவிர, இல்லாததும் பொல்லாததுமாக நம்மைப் பற்றி இடுப்பொடிந்ததுகளும், இஞ்சிதின்றதுகளும், பேசுவதாலும் எழுதுவதாலும இல்லவே இல்லை என்பதை முதலில் மனத்தில் நன்கு பதிய வைத்துக்கொள்ள வேண்டுகிறேன். அந்தக் கட்டத்தைத் தாண்டி விட்டோம். வீசப்படிவேண்டிய பழிச்சொல் அவ்வளவும், எவ்வளவு வேகமாகவும் திறமையுடனும் வீசப்பட வேண்டுமோ அவ்விதம் வீசப்பட்டாகிவிட்டது. இப்போது கிடைப்பதெல்லாம் மறுபதிப்புகள். எளிய பதிப்புகள் - இலவச வெளியீடுகள்!! இவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய நிலையில் நாம் இல்லை.

அங்கே வெடிப்பு, இங்கே கொந்தளிப்பு, இங்கே குழப்பம், என்றெல்லாம் எழுதுகிறார்கள். படிக்கும்போது ஆத்திரமாக இருக்கிறது என்ற கூறியிருக்கிறாய். தம்பு! இதற்கு ஏன் ஆத்திரம், ஆயாசம்? நம்மைப் பற்றிய செய்திகள், பிற கட்சிக்காரர்களும் இதழ்களம் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய அளவுக்கு, நாட்டில் முக்கியத்துவம் பெற்றுவிட்டன என்பது தானே அதன் பொருள்? ஆயாசப்படுவதா!! பேதமும், பிளவும், வெடிப்பும், குழப்பமும் எற்பட்டால்தான், நமது இயக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்ற கிலி கொண்டவர்கள், இப்போது கீறலைக் கண்டு வெடிப்பு என்று கூவிக் களிப்படைகிறார்கள்! இங்கிருந்து செல்பவர்களும், இங்க இருந்துவிட்டு வந்தவர்கள் என்ற காரணத்தாலேயே வாழ்த்தும் வரவேற்பும் பெறுகிறார்கள். இந்த உபசரிப்பும் உலாவும் சில நாள்களுக்கு நடைபெறும். நமது மாஜி நண்பர்கள் என்ற முறையில் அவர்கள் எப்படியோ உன்று மகிழ்ச்சி பெறட்டும் என்பதுதான் என் எண்ணம். அவர்களை எத்தனை நாளைக்கு பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்பது தெரியாததா!! இவ்விதம் பயணம் நடத்தியவர் பலர்; அவர்களிலே யார் இன்ற உருவம் தெரியும் நிலையில் இருக்கிறார்கள்? ஆயினும் எனக்கு உண்மையில் கூறுகிறேன். நமது இயக்கத்தை விட்டு யாராவது பிரிந்து செல்கிறார்கள் என்றால், வருந்தத்தான், கூடுமான வரையில் கூடி வாழ்வதைத்ன் நான் விரும்புகிறேன். சுவரிலிருந்து சிறு ஆணி பெயர்க்கப்பட்டாலும், ஆபத்து இல்லை என்றாலும், பார்க்க நன்றாக இராது என்று எண்ணுபவன். இந்த நோக்குடனேயே நான் சிலர்வெளியேற எண்ணிய போதெல்லாம், சமரசத்திற்காக முயன்றிருக்கிறேன்.
(திராவிட நாடு தம்பிக்கு - 22.05.1955)

போராட்டம் நாம் பெற்ற தியாகத் தழும்புகளுக்கு முடியுமானால், அவை இடி இடியெனச் சிரித்து, அவர்களைப் பார்த்து ஏளனம் செய்யும்!!

தம்பி, காங்கிரஸ்காரர்கள் தண்டவாளப் பெயர்ப்பு, தபாலாபீஸ் கொளுத்துதல் போன்ற முறையில் ஆகஸ்ட் போராட்டம் நடத்தினர். 1942-இல்! நாம் கலந்து கொள்ளவில்லை. நாம் என்றால் தம்பி, நானும் நீயும் மட்டுமல்ல - தி.க., தி.மு.க. என்றுள்ள இரண்டும் ஒன்றாக இருந்ததே. அந்தக் குடும்பம் முழுதும், நாம் பயந்தாங்கொள்ளிகள், அடக்குமுறைக்குப் பயந்து ஓடிவிட்டோம், என்றா பொருள்? அந்த முறைகள் சரியல்ல அன்று மனதார நம்பினோம். வீணான கலகம் கலவரம் குழப்பம் பொருட்சேதம், இவைதான் மிச்சம் என்ற எண்ணினோம். எனவே ஒதுங்கி நின்றோம். அதுபோலத்தான் இப்போது, கொடி கொளுத்தும் பெரியார் தேசிய கொடியை கொளுத்தினார். காரியத்தில் தி.மு.க. கலந்து கொள்ளவில்லை - இது கோழைத்தனம் என்று கூறுவது எந்த வகையில் பொருந்தும்?

வேண்டுமானால், தமிழ்நாட்டு அரசியலில் இது வாடிக்கை. ஒருவர் மற்றவருடைய கருததை அறியும் அளவுக்குக்கூட பாசம், நேசம் கொள்ளாமல் ஒரு திட்டம் தீட்டிவிட்டு, அதன் காரணமாக அதிலே கலந்துகொள்ள மறப்பவர்களைக் கோழைகள் என்று ஏசுவது தமிழகத்தின் வாடிக்கை, என்று கொள்ளவேண்டியதுதான். தங்கள் ஆகஸ்டீல் சேராததற்காகக் காங்கிரஸ்காரர்கள் திராவிடரைக் கோழைகள் என்ற ஏசினர். இப்போது, நடைபெறம் கிளர்ச்சிகளில் கொடி கொளுத்துவதில் மட்டுமன்றி, எந்தப் போராட்டதிலாயினம் சரி, நாம் சேராமலிருந்தால், கோழைகள் என்று ஏசுகிறார்கள். இது பொருளுள்ளது என்று கருதமுடியுமா? நீண்ட காலமாக இருந்துவரும் வாடிக்கை - பழக்கம் என்றுதான் கொள்ளவேண்டும்.

நமக்கென்று ஒர் அமைப்பு இருக்கிறது. நாம் கூடிக் கலந்து பேசிச் சில பல கிளர்ச்சிகள் நடத்தியுமிருக்கிறோம். இனியும் கவனிக்காமல், அவரவர் தொடங்கும் கிளர்ச்சிகளில் நாம் கலந்துகொள்ள வேண்டுமென்று கூறுவதும், கலந்துகொள்ளாதபோது கண்டிப்பதும், ஏன் என்று யோசித்ததுண்டா தம்பி! நாம், அவ்வளவு அருமையாகப் பணியாற்றக் கூடிய பக்குவம், பயிற்சி திறம் படைத்தவர்கள் என்ற எண்ணம், எல்லா முகாமிலும் இருக்கிறது - எனவே எல்லாரது கண்ணும் நம்மீது விழுகிறது என்று பொருள்!
(தம்பிக்கு - 14.08.1955)

ஆமாம் தம்பி! எவ்வளவு கடுமையான கிளர்ச்சிக்கும் ஈடுகொடுக்கக் கூடியவர்கள் என்பதை மும்முனைப்போர் விட்ட நமக்கு, காங்கிரஸ் வட்டாரம் ஏவும் கண்டனக்கணை பிரமாதமானதாகத் தெரியக் காரணமில்லை. நம்மைப் புரிந்து கொள்ளாததால், காங்கிரஸ் வட்டாரம் கணை விடுகிறது. நாம் பிரிந்துவிட்டதால் குருபீடம் கணை விடுகிறது பொறுமை, அமைதி, கண்ணியம் எனும் அருங்குணங்களைப் பெறவும்; தூற்றுதலைத் தாங்கிக்கொள்ளும் மனத்திடத்தையும்; நோக்கத்தை மாற்ற முனைவோர் வீசும் நிந்தனையைப் பொருடபடுத்தலாகாது என்ற உளப்பாங்கையும் நாம் பெறவும் இப்போதும் குருபீடம் அருள்புரிகிறது!! இன்னும் நமக்கென்ன குறை!!

குருபீடம்
குருபீடத்தில் நாமெல்லாம் குற்றேவல் புரிந்துகொண்டு கேட்டறிந்த உபதேசத்தை மறறவாமல், நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.

என்னைப் பொறுத்தவரையில், தம்பி! நான் அங்கு இருந்தபோது கிடைத்த பாடத்தைவிட, அரும்பெரும் பாடத்தை, இப்போது குருபீடத்திலிருந்து பெறுகிறேன். ஏசல் கணைகள் மூலம் என் உள்ளம், தாங்கும் சக்தியை மிகத் திறம்படப் பெற்று வருகிறது. எனவேதான், என்னால் மாற்றுக் கட்சிக்கரரிடம் மனமாச்சரியம் துளியும் கொள்ளாமல் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பக்குவம் நிரம்பத் தெவைப்படும் வகையான பணியாற்றும்படி, உன்னைக் கேட்டுக்கொள்ள முடிகிறது; அண்ணனுக்குக் கிடைத்துள்ள மனப்பாங்கு, தம்பிக்கும் உண்டு என்ற நம்பிக்கையுடன்தான் இவ்விதம் கூறுகிறேன்.
(தம்பிக்கு - 03.07.1955)

செட்டிநாட்டு அரசர் இன்று காங்கிரசுக்கு ஒரு செல்லப்பிள்ளையாக இருக்கிறார். இது காங்கிரசின் வளர்ச்சியைக் காட்டும்!! தியாகத் தழும்பேற்ற காங்கிரசார்களைப் பார்த்து, கேலி பேசும் கண்களல்லவா, செட்டி சாட்டரசுக்கு இருநதிடக் காண்கிறோம். ஆளுங்கட்சிக்கு எந்நாளம் ஆதரவாளர் நாங்கள் - முன்பு வெள்ளையன் ஆண்டு வந்தான், வெண்சாமரம் வீசி நின்றோம். இடையே தமிழார்வம் ஒங்கி நின்றது, ஆட்சி தமிழரிடம் வந்து சேரும் போல் தோன்றிற்று உடனே அவர்களோடு குலவினோம். செங்கோட்டையில் காங்கிரஸ் கொடி ஏறிற்று, உடனே எங்கள் கோட்டையிலும் மூவர்ணக் கொடி ஏற்றிவிட்டோம் - எப்போதும் ஆளவந்தாரின் ஆதரவாளர் நாங்கள், என்ற தானே செட்டிநாட்டரசிரின் புன்னகை பேசுகிறது. இது காங்கிரஸ் நண்பர்களுக்குத் தெரியாதா!

கொடியைக் கரத்தில் ஏந்திக்கொண்டு, தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்று முழுக்கமிட்டுக் கொண்டு ப்யூக்கும், செவர்லேயும் இருக்க, தங்கசாலைத் தெருவிலிருந்து, கடற்கரை வரையில் நடந்து வந்தார், இன்றைய செட்டி நாட்டரசர், அன்று குமாரராஜா! நாமாவது அவரை ஓரளவுக்கு வேலை வாங்கினோம் - மணிமாடத்துக்குச் சொந்தக்காரர் அவர், எனினும் மணல்மேடுகளுக்கு இழுத்து வந்தோம்!
(தம்பிக்கு - 03.07.1955)

எப்பொருளாயினும் அப்பொருளின் மெய்ப்பெருள் கண்டறிதல் வேண்டுமெனக் கூறினார் எள்ளுவப் பெருந்தகை. எனினும், எல்லாப் பெருளிலும் பயனற்ற பகுதியை மட்டும் எண்ணிக்கையினரும் அல்லர் அவர் போன்றோர். சுளையின் சுவை அறியாது அதனை வீசி எறிந்துவிட்டுத் தோலினைச் சுவைத்திடுவோரைப் பித்தர் என்கிறோம்; தெளிந்த நீரிருக்கச் சேற்றினிலே புரண்டு மகிழ்ச்சி பெவதை எருமை என்கிறோம்; தழையும் தானியமும் இன்றி சருகாகிப்போன காகிதத்தைத் தின்று காலந்தள்ளம் பிராணிகளும் உள்ளன, கேவலம் என்கிறோம். ஆனால், மாந்தரிலேயுமன்றோ உளர், பயனற்ற பகுதியினைப் பாடுபட்டுத் தேடிப்பெற்று, பயனுள்ள பகுதியினை இழந்துவிடும் இயல்பினர்!

தலைமுடி என்ன இவ்வளவு நரைத்து விட்டதே? என்ற கேள்வியையா, முதலாவதாக முக்கியமானதாகக் கொள்வது, நீண்ட நாள்களுக்குப் பிறகு சந்திக்கம் நண்பனைப் பார்த்திடும் போது? அல்லது மிகப்பெரியவர், மிக நல்லவர் என்று கேள்விப்பட்டு ஒருவரைக் காணச் செல்லும்போது? இல்லை என்பாய். ஆனால், தம்பி! அத்தகைய இயல்புள்ளவர்கள் இருக்கின்றார்கள்.

ஆண்டு பலவற்றுக்கு முன்னே ஜனாப் ஜின்னாவைக் காணச் சென்ற என் நண்பரொருவர், அவரைப் பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி, மாதம் எத்தனை ஆயிரம் உங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. வக்கீல் தொழிலில் என்பதாகம். அந்தக் கேள்வி கேட்ட அந்த விநாடியே, என் நண்பரைப் பற்றி மிகக் குறைவான மதிப்புப்போட்டு, அவரிடம் முகம் கொடுததுப பேசுவதையும் நிறுத்திக் கொண்டார் ஜனாப் ஜின்னா.
(தம்பிக்கு 04.07.1956 - நண்பர் கே.எம்.பாலசுப்பிரமணியம்)

துறவி
தம்பி! நான் ஏட்டிலே சந்தித்த துறவியை நாட்டிலே காண விழைகிறேன். உனக்கும் அப்படித்தான் தோன்றும். தேடினால் கிடைப்பார்களா என்ற எண்ணுவதைவிட, தம்பி! நாம் அப்படிப்பட்ட துறவிகளாகிவிட வேண்டும். குடும்பம் இருக்கும் குடிகெடுக்கும் எண்ணம் இருக்காது. துணைவி இருப்பள், நமது தொண்டுக்குத் துணைபுரிய, குழந்தைகள் இருக்கும், அன்புக்கான அரிச்சுவடியை உணர்த்த, தொழிலில் ஈடுபடுவோம். வாழ்க்கை நடத்த, ஆனால் உடைமைகளுக்குக் கட்டுப்பட்டு விடாமல், தன்னலத்துக்கு ஆட்பட்டுவிடாமல், சுகபோகத்திலே, வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா, என்ற கேட்கும் ஆற்றலையும், அத்தகைய கேட்டினைக் களைந்திட அறப்போரும் நடத்திடும திறத்தினையும் பெற்று, மடம் தேடாமல், தாவடம் அணிந்த சடம் ஆகாமல், காவி தேடாமல், அதனுள் மறைந்திடும் நாமி ஆகாமல் தொண்டாற்றும் துறவியாக, மோட்ச சாம்ராஜ்யத்திலே இடம் பிடிக்க அல்லாது. நமது இதயத்திலே அன்புக்கு இடமளித்து, அறநெறியை நாட்டிலே புகுத்தி, மக்களைப் புதியதோர் இன்பம் பெறச் செய்யும் புனிதத் தொண்டாற்றும் துறவியாக வேண்டும். நாட்டிலே இத்தகைய துறவிகளே இன்று அவசர அவசரமாகத் தேவை. ஏழையின் அழுகுரலை, எளியோரின் கண்ணீரை, பதிகம் பாடிவிடுவதால் போக்கிட முடியாது. தம்பி! முடியாது. துறவிகள் வேண்டும். புதிய துறவிகள், வெள்ளை உடைபோதும், காவி தேடி அடைய வேண்டாம்.
(தம்பிக்கு - 04.09.1955)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai